சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டு, இது அமுலுக்கு வரும்போது, இதற்காக – அதாவது இவை ஒழுங்காக நடைபெற இதற்கென்றே ஒரு தனி இலாகா ஏற்படுத்தி, அதற்காக ஒரு தனி மந்திரியை யும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் மத்திய சபை யின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருக்க வேண்டியதோடு, பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ளக் கூடிய சுதந்திரமும், தன்மையுடையவராகவும் இருக்க வேண்டும். மாகாண நிர்வாக சபைகளிலும், மத்திய அரசாங்க நிர்வாக சபையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஸ்தானம் பெறத்தக்க முயற்சியும், ஏற்பாடும் செய்ய கவர்னருக்கும், கவர்னர் ஜனரலுக்கும் சட்டப்பூர்வமான வசதிகள் இருக்க வேண்டும். இந்தப்படியான ஒரு யாதாஸ்தை வட்டமேசையில் ஆஜர் செய்திருக்கின்றார்கள்.

நிற்க, மேற்கண்ட இந்த யாதாஸ்துக்கு அதாவது இந்தப்படியான சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு, வட்டமேசையாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக திரு. ராவ்சாகிப் சீனிவாசன் அவர்கள் தனது சமூகத்தாருக்கு கொடுத்த ஒரு தந்தியால் தெரிய வருகின்றது. அந்தத் தந்தியின் சாரமாவது : 1. தனித் தொகுதி மூலம் தேர்தல் நடத்துவது 2. தங்கள் சமூகத்தில் வயது வந்தவர்களுக்கு எல்லாம் ஓட்டு உரிமை அளிப்பது 3. மாகாண சட்டசபைகளில் எப்படியும் 100க்கு 15 வீதம் ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் இருப்பது 4. மந்திரி சபையில் தாழ்ந்த வகுப்பாருக்கு ஒரு ஸ்தானம் இருப்பது 5. எல்லா உத்தியோகங்களிலும் விகிதாசாரம், தங்கள் சமூகத்துக்கு உத்தியோகம் வழங்குவது ஆகிய இவைகளுக்கு விதாயங்கள் (வழிவகைகள்) ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. ஆகவே, இந்த சவுகரியங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு இன்று ஜனநாயகம் உதவி செய்ததா? தனி நாயகம் உதவி செய்ததா? என்று பார்த்தால், தனி நாயகத்தின் பெருமை விளங்காமல் போகாது.

ஆகவே, இந்த ஜனநாயகம் மனித வர்க்கத்திற்கு நியாயமான சுதந்திரத்தையும், சுவாதீனத்தை யும் கொடுக்கக் கூடியதா அல்லது அடிமைத்தனத் தையும், கெடுதியையும் கொடுக்கக்கூடியதா என்பதை யோசித்தாலும், ஜனநாயகத்தின் யோக்கியதை சுலபத்தில் விளங்காமல் போகாது. நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது, இன்று "நமது தேசம்', "நமது மதம்', "நமது சாதி' என்கின்ற தத்துவத்தின் மீதும்; "முதலில் தேசம்' என்று பலரும், "முதலில் மதம்' என்று சிலரும், "முதலில் சாதி' என்று அநேகரும் கருதியே ஜனநாயகத் திட்டம் வகுப்பதில் முனைந்திருக்கின்றார்களேயொழிய – முதலில் மனித சமூகம், பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்த நாட்டில், இன்றைய தினம், மகாத்மாக்கள் முதல் தேசிய வீரர்கள் – தொண்டர்கள் வரை, தேசாபிமானி முதல் தேசபக்தர் – தேசியவாதிகள் வரை, ஆச்சாரியார், மடாதிபதி, சுவாமிகள் முதல் அடியார் கூட்டங்கள் வரை, ஆஸ்திக பண்டிதர்கள் முதல் அவர்களது மாணவர்கள் வரை யாராவது ஒருவருக்கு இருக்கின்றதா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால், ஜனநாயகத் தத்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.

ஜனநாயகம் என்பதில், ஜனம் என்றால் மனிதர்கள் என்றும்; நாயகம் என்றால் ஆட்சித்துவம் – எஜமானத்துவம் என்றும் பொருளாகும். ஆகவே, மனித ஆட்சித்துவம் என்பது மனித தர்மத்துக்கும், மனிதத்துவத்திற்கும் பொதுவான நன்மை பயக்கும் படியானதாகவும், காப்பு அளிக்கும் படியானதாகவும் இருக்க வேண்டியதா? அல்லது "என் தேசம் காப்பாற்றப்பட்டபின்தான் மனித தர்மம்; என் மதம் காப்பாற்றப்பட்ட பின்தான் மனித தர்மம்; எனக்கு மோட்சத்தில் சரியான இடம் தேடிக்கொண்ட பின்தான் தர்மம்' என்று பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டு, மனித பொது தர்மத்தையே கவலையற்றதாகக் கொண்டால், அந்த ஜனநாயகம் மனித வர்க்க ஆட்சி ஆகுமா? அல்லது மத நாயகம் அல்லது தனிப்பட்ட மனிதனின் மோட்ச நாயக ஆட்சியாகுமா என்று பார்த்தாலும், ஜனநாயக ஆட்சியின் போலி தத்துவம் விளங்காமல் போகாது.

ஏனெனில், தேச நாயக ஆட்சியும், மத நாயக ஆட்சியும், மோட்ச நாயக ஆட்சியும், மற்ற பொதுக்காரியங்களும் ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றது. மேலும், இவைகளுக்கெல்லாம் பூரண சுதந்திரமும், பாதுகாப்பும் அளிப்பதுதான் ஜனநாயகத் தத்துவம் என்பதாக மகாத்மாக்களால்; பூரண சுயேச்சை வீரர்களால், தேசியவாதிகளால் உறுதி வாக்களிக்கப்பட்டாய் விட்டது. ஆகவே, இந்த ஜனநாயகம் மனித சமூகத்திற்கு ஆபத்தானதா அல்லது அனுகூலமானதா என்பது அறிவாளிகளுக்கு விளங்காமல் போகாது.

மக்களுக்கு உண்மையான மனித தர்ம நாயகம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால், நடுச் சமுத்திரத்தில் முழுகப் போகும் கப்பலின் நடவடிக்கையைப் பார்த்தால் தெரியவரும். அதாவது, கப்பல் முழுகும் போது கப்பல் ஓட்டும் தலைவன் ஜனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் முறையில் மனித தர்மம் விளங்குவதைக் காணலாம்.

– தொடரும்

"குடி அரசு' தலையங்கம் – 8.2.1931

Pin It