சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ, சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜனநாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்தச் சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது. இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது பல மதமாய், பல சாதியாய், பல வகுப்பாய், பல லட்சியமாய்ப் பிரிந்து, சராசரி 100க்கு 10 பேருக்குக் கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும்.
இந்திய நாட்டிலுள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டாதவர்களாக – மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக – அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக்கூடாதவர்களாக – தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோயில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ, சில பொது இடங்களில் சென்று படிக்கவோ, சில பொது இடங்களில் சென்று கூலி வேலை, உத்தியோகம் முதலியவைகள் செய்யவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டவர்களாயிருக்கிறார்கள் என்பதில் சிறிதும் ஆட்சேபனையே இல்லை என்பது உலகமறிந்த விஷயமாகும். ஒரு சமயம் 6 கோடி என்கின்ற எண்ணிக்கையில் சிறிது வித்தியாசமிருப்பதாக யாராவது சொல்லியிருக்கலாமே அல்லாமல், இந்த மாதிரி கொடுமைப்படுத்தப்பட்ட மனித சமூகம் இந்தியாவில், இந்துக்கள் என்பவர்களுக்குள் இல்லையென்று யாரும் சொன்னதேயில்லை.
ஆகவே, சற்றேறக் குறைய இந்துக்கள் என்பவர்களில் 3இல் 1 பங்கு ஜனங்கள், இந்த நிலையில் வெகுகாலமாய் இருந்து வருகின்றதையறிந்தும், இவர்களுக்கு எவ்வித விடுதலையும் இல்லாமலேயே இப்படிச் செய்யப்பட்ட கூட்டத்தாராலேயே, இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி கேட்டுக் கொண்டு வரப்படுகின்றது.
ஜனநாயக ஆட்சி ‘வழியில்' சுமார் 20, 30 வருஷ காலமாக நடக்க சந்தர்ப்பம் கிடைத்து மிக்க நெருக்கமான வழி என்பதிலாவது நடந்து வந்தும், இன்று வரை இந்தமாதிரி ஜனநாயகத் தத்துவம், இந்த 6 கோடி மக்கள் கொண்ட சமூகத்திற்கு ஒரு காரியமும் செய்ய முன்வரவேயில்லை. வேறு யாராவது அவர்களுக்கு ஏதாவது செய்வதாயிருந்தாலும் எந்தக் காரியத்திற்கும் இவர்கள் சம்மதிப்பதும் இல்லை. இவர்களை மீறி ஏதாவது சிறிது நடந்தாலும், நடப்பதாயிருந்தாலும் அது இந்திய ஜனநாயகத்தின் தத்துவத்தின் பலனாயில்லாமல், பிரிட்டிஷ் தனிநாயகத்தின் தயவால் என்றே சொல்லும்படியாகவே நடந்து வந்திருக்கின்றது – வந்து கொண்டேயிருக்கின்றது.
மற்றும், இந்தமாதிரி தாழ்த்தப்பட்டுக் கொடுமை செய்யப்பட்ட 6 கோடி சமூகமானது இன்றைய தினம் எங்காவது, ஏதாவது ஒருவித சவுகரியத்தை வழக்கத்திற்கு விரோதமாய் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப்படுமானால், அது ஜனநாயகத் தடையையும் பலத்தையும் மீறி, ஜனநாயகத்தைத் தனிநாயகம் தோற்கடித்து, ஆதிக்கம் செலுத்தியதின் பயனாய் நடக்கின்றதேயல்லாமல் வேறில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பாருக்கோ, சைவருக்கோ, சைவ வேளாளருக்கோ மற்றும் தங்களைப் ‘பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சற் சூத்திர' என்று எண்ணிக் கொண்டிருக்கும் மேல் சாதிக்கோ, இந்த வெள்ளைக்கார அரசாங்கம் ‘எமனாக'த் தோன்றியபோதிலும், மேல்கண்ட கொடுமைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமைப்படுத்தப்பட்ட 6 கோடி மக்களுக்கு, இந்த வெள்ளைக்கார அரசாங்கம் ‘சர்வதயாபரரும், காருண்ய மூர்த்தியுமான கடவுளால்' அனுப்பப்பட்டது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதில் சந்தேகமும் இல்லை, அதில் ஓர் அதிசயமும் இல்லை.
அன்றியும், இன்று, இனியும் கேட்கப்படும் ஜனநாயக சுதந்திரங்கள்கூட – மேற்கண்ட தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்ட மக்களை இனியும் தலையெடுக்க வொட்டாமல் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டுதான் கேட்கப்படுகின்றது என்பதை மறுக்கவோ, ஆட்சேபனை சொல்லவோ போதிய காரணம் கிடையாதென்றே தைரியமாய்ச் சொல்லுவோம்.
இன்று அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளில் முக்கியமானது என்னவென்றால், மற்ற மக்களைப்போல் விகிதாசாரம் தாங்கள் படிக்க முடியாதது, மற்ற மக்களைப்போல் தங்கள் விகிதாசாரம் தாங்கள் சம்பாதிக்க முடியாதது, மற்ற மக்களைப் போல் தங்கள் விகிதாசாரம் அரசியல் சுதந்திரங்களை அனுபவிக்க – உத்தியோக வகையரா பெற முடியாதது முதலியவைகளாகும். இந்த மூன்றும் எந்த ஜனநாயக ஆட்சியிலாவது, ஏதாவது ஒரு பரிகாரத்திற்கு இடம் இருக்கின்றதா என்று பார்த்தால், பரிகாரம் கேட்பதே தேசத் துரோகமாகவும், ஜனநாயகத் தத்துவத்திற்கு விரோதமாகவும் பாவிக்கப்படுகின்றது. இதைப் பற்றி யாரும், எந்த ஜனநாயகவாதியும், தேசியவாதியும் வெட்கப்படுவதுகூட கிடையாது. இந்த நிலையைப் போல ஒரு மானக்கேடான காரியம், இந்த நாட்டுக்கு வேறு ஒன்றுமே கிடையாது என்று சொல்லுவோம்.
– தொடரும்
‘குடி அரசு' தலையங்கம் – 8.2.1931