boy_620

(மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு உணவு விடுதியின் முன் தான் பிச்சையெடுத்த பிஸ்கட்டுகளுடன் ஒதுங்கி நின்று ஏக்கப் பார்வை பார்க்கும் ஒரு வீடில்லாத சிறுவன், நன்றி : அவுட்லுக்)

ஊற்றுகளின் மூலத்தைக்

காணமுடியாததைப் போலன்று

எங்கள் துயரங்களின் மூலத்தை அறிவது

குளிரூட்டும் பெட்டியில் சில்லிட்ட

ஆப்பிளின் நிறத்திலான உங்கள் கன்னங்களை

வெள்ளிக்கரண்டியில் தட்டிக் கொண்டு

காத்திருக்கிறீர்கள் தருவித்த உங்கள்

உயர்ந்தவிலை துரித உணவுக்காக

உடையற்ற உடலின்மேல் பெய்த மழையை

துடைக்க ஒரு துண்டுக்கு வக்கற்று

கிடக்கிறது எங்கள் வாழ்க்கை

பாதுகாக்கப்பட்ட உங்கள் குடிநீரிலிருந்து

நீக்கப்பட்ட கிருமிகளாய் எங்களைப்

பார்க்கும் உங்கள் விழிகளில் வழியும் அசட்டையில் தவிக்கின்றன

எங்கள் உயிர்தாங்கிகள்

சில்லறை வணிகத்தின் குச்சி அய்ஸ்களை

கொட்டிவிட்டு

வறுக்கப்பட்ட அமெரிக்கக் கோழிகளுக்காய்

தொங்கிக்கிடக்கின்றன உங்கள் நாக்குகள்

புழுதியில் படிந்தாலும்

அரிப்பிலிருந்து இம்மண்ணைக் காக்க

இருக்கின்றன எப்போதும்

எங்கள் வேர்க்கால்கள்.

Pin It