அரசு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும்போது, 20 சதவிகித பொருட்களை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் சிறு தொழில் நிறுவனங்களிலிருந்து வாங்க வேண்டும் எனும் கொள்கை அறிவிப்பை மய்ய அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. புதிய கொள்முதல் கொள்கை மூலம் மய்ய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் 358 பொருட்கள் வாங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த 20 சதவிகித கட்டாயக் கொள்முதல் கொள்கை சட்டமாக்கப்படும்.

thorat_250இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசியலில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கைக்கு நிகரானது. தனியார் துறையில் நிவாரண கொள்கை செயல்படுத்தப்படவேண்டும் என்ற முதல் கோரிக்கையை சனவரி 25, 1919 அன்று சவுத்பரோ குழு முன்பு அம்பேத்கர் வைத்தார். அந்தக் குழுவுடன் பேசும்போது, தர்பூசணி விற்றதற்காக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தீண்டத்தகாத மகர் பெண்ணின் வலிமிகுந்த கதையை குழுவிடம் எடுத்துரைத்தார். மாசுபடுத்தும் தொழில்களில் மட்டுமே ஈடுபட வேண்டிய தீண்டத்தகாதவர்கள், தர்பூசணி வியாபாரம் போன்ற தொழிலில் ஈடுபட்டது, மரபார்ந்த சட்டங்களை மீறியதாகக் கருதப்பட்டது.

வறுமையை மறுக்கும் உரிமையை தீண்டத்தகாதவர்கள் பெற, திட்டங்கள் தீட்ட 1947 இல் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வணிக நிறுவனங்களிலோ, தொழிற்சாலைகளிலோ சாதி, இன, சமூக நிலைகளில் யாரேனும் ஒதுக்கப்பட்டால் அதைக் குற்றமாகக் கருத வேண்டும் என்றார் அம்பேத்கர்.

தலித்துகளின் நிலைமை 1919 ஆம் ஆண்டிலிருந்ததைக் காட்டிலும் இன்று மாறியிருந்தாலும், சொத்துரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் விளைவு, இன்றும் தலித்துகளை தொடர்ந்து வாட்டுகிறது. இன்று தலித்துகளால் நடத்தப்படும் தனியார் தொழில் முனையங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, சுயதொழில் செய்யும் பட்டியல் சாதியினர் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 14 சதவிகிதமாகவும், நகர்ப் புறங்களில் 29 சதவிகிதமாகவும் இருக்கிறது. இது, ஆதிக்க சாதியினரிடையே முறையே 17 மற்றும் 37 சதவிகிதமாக இருக்கிறது.

2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தனியார் தொழில் முனையங்கள் குறித்த பொருளாதாரக் கணக்கெடுப்பிலும் இந் நிலையே காணப்பட்டது. நாட்டிலுள்ள மொத்த தொழில் நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் ஆதிக்க சாதியினரின் பங்கு நகர்ப் புறங்களில் முறையே 2, 6, 30 மற்றும் 61 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் முறையே 6, 10, 40 மற்றும் 45 சதவிகிதமாகவும் இருக்கிறது.

எனவே, சமமான சொத்துரிமை அளிக்கப்பட்டிருந்தாலும் தனியார் தொழில் நிறுவனங்களை நடத்துவதில் படிநிலை சமமின்மை தற்போதும் தொடர்கிறது. தனியார் தொழில் முனையங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு, அவர்களின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதைத் தவிர, பட்டியல் சாதியினரால் நடத்தப்படும் தொழில் முனையங்களுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், தயாரிப்பு மற்றும் அதன் விற்பனை சேவைகளில் உறுதியாக பாகுபாடு காட்டப்படுகிறது.

இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பால், காய்கறி போன்ற பொருட்களை விற்கும் வால்மிகி (பட்டியல் சாதியினர்) சாதியை சேர்ந்தவர்கள் தீண்டாமைக் கொடுமையால், கடும் தொழில் இழப்புகளைச் சந்திக்கின்றனர். இத்தகைய காரணங்களால்தான் அய்க்கிய முன்னணி அரசின் இந்த முடிவு – அரசுத் துறைகளின் கொள்முதலில் 20 சதவிகிதம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்க்கு ஒதுக்கீடு செய்யப்படுவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த அரசு கொள்கையும் வரையறைக்குட்பட்டதுதான். மய்ய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மய்ய அரசு நடத்தும் நிறுவனங்கள் செய்யும் கொள்முதலுக்கு மட்டுமே இக்கொள்கை பொருந்தும். இந்தியாவில் உள்ள மொத்த தொழில்முனையங்களில் அரசு நிறுவனங்கள் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே. எஞ்சியுள்ள 95 சதவிகித தனியார் நிறுவனங்களுக்கு அப்படி எந்த கட்டாயமும் இல்லை. தனியார் நிறுவனங்களும் தனியார் பெருந்தொழில் நிறுவனங்களும் உறுதியான செயல்திட்டங்களை தன்னார்வத்துடன் உருவாக்கிக் கொண்டு ஒரு நடத்தை விதியை ஏற்றுக்கொண்டுள்ளனர். தொழில்முனைவோர் வளர்ச்சியும் இத்திட்டத்தில் ஓர் அங்கமாகும். ஒதுக்கப்பட்ட இனத்தவரையும் தொழில் துறையின் பொது நீரோட்டத்தில் இணைத்து, சந்தை ஆதரவு தரவேண்டியதன் அவசியத்தை தொழில்துறை சங்கங்கள் உணர்ந்திருக்கின்றன. அதன் உறுதியான செயல்திட்ட விதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களையும் தன் உறுப்பினர் நிறுவனங்களின் கொள்வோர் கொடுப்போர் சங்கிலியில் இணத்துக்கொள்வது பற்றி பேசுகிறது.

எனினும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களோடு இணைந்து சந்தை ஆதரவு கொள்கையை உருவாக்குவதில் உறுப்பினர் நிறுவனங்களிடம் ஆதரவில்லை. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் Confederation of Indian Industry (CLL) அறிக்கையின்படி, பத்துக்கும் குறைவான நிறுவனங்களே இதற்கு ஆதரவளிக்கின்றன. CLL, Assochom, FICCI  போன்ற ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அமைப்புகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கத் தயங்குகின்றன. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு பொருட்கள் வாங்கும் தனியார் துறையினர், தங்கள் பெரும்பாலான உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, அரசின் புதிய கொள்முதல் கொள்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசின் இந்த புதிய கொள்முதல் முயற்சியை தனியார்துறை பரந்த ஆதரவு தெரிவித்து ஏற்றுக்கொள்ளுமானால், ஏழை மக்களும் இணைந்து வளர்ச்சியில் பங்கேற்பர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் செய்யும் தொழில்களில் பெரும்பாலானவை, ஏறக்குறைய 80 சதவிகிதம், சிறு குடிசைத் தொழில்களே. இதுபோன்ற சிறு தொழிலை மேற்கொண்டுள்ள ஆதிக்க சாதியினர் வெறும் 61 சதவிகிதம் மட்டுமே. குறைந்த அளவேயான முதலீடு, மரபு சார்ந்த பழைய தொழில்நுட்பம் ஆகியவற்றால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் செய்யும் தொழில்களில் லாபம் மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் அதில் ஈடுபட்டுள்ள சுயதொழிலாளர்களுக்கும், தினசரி கூலியாட்களுக்கும் வறுமை சற்று அதிகமாகவே இருக்கும். 2009 – 10ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, கிராமப்புறங்களில் சுயதொழில் செய்யும் பட்டியல் சாதியினரில் 24 சதவிகிதத்தினர் ஏழைகளாகவே இருக்கின்றனர்.

கிராமப்புறங்களில் சுயதொழில் செய்யும் ஆதிக்க சாதியினரில் ஏழைகள் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே. அதே போல நகர்ப்புறங்களில் சுயதொழில் செய்யும் பட்டியல் சாதியினரில் 35 சதவிகிதத்தினர் ஏழைகளாக இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் சுயதொழில் செய்யும் ஆதிக்க சாதியினரில் ஏழைகள் வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. சுயதொழில் செய்யும் பழங்குடியினரில் ஏழைகள் 30 சதவிகிதத்திற்கும் அதிகம். ஏழைகளுக்கு ஆதரவான வளர்ச்சிக்குத் தேவை, இந்த தொழில் முனையங்களின் உற்பத்தியும், வருவாயும் அரசு மற்றும் தனியார் துறையின் நியாயமான ஆதரவுமே, இன்றியமையாததாகும். ஒதுக்கீடு மூலம் கொள்முதலுக்கு சந்தை ஆதரவு அளிப்பது, இந்த குறைந்த உற்பத்தி கொண்ட, வறுமையில் உழலும் பிரிவினரை அதிக உற்பத்தி செய்யும் பிரிவினராக மாற்றுவதற்கான ஒரு வழி. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் ஏழை பாழைகளும் பங்கெடுக்க முடியும்.

ஆனால், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களை மய்ய விற்பனைச் சங்கிலியில் இணைப்பது என்பது, அரசின் கொள்முதல் கொள்கையை தனியார் துறையின் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றினால்தான் சாத்தியமாகும். அப்படி நடந்தால் தான் வளர்ச்சி என்பது ஏழைகளின் சார்பாகவும்; சுயதொழில் செய்வோர் மற்றும் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் முறை சாரா தொழிலாளர்களின் வறுமை குறைவதற்கு வழிவகுக்கும்.

தனியார் துறையினர் இன்னும் அதிகமாகவே செய்யலாம். மேலை நாடுகளைப் பார்த்து பாடம் படிப்பதை விடுத்து, கீழை நாடுகளிடமிருந்து, குறிப்பாக மலேசியாவில் நடந்ததைப் பார்த்து கற்றுக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். 1970களில், உறுதியான செயல் திட்டம் மூலம் 1970 இல் வெறும் 2 சதவிகிதமாக இருந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 1990 இல் 20 சதவிகிதமாக உயர்ந்தது. இருபது ஆண்டுகளில் தனியார் முதலீடுகளை ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக முறையாக மறுவிநியோகம் செய்து காட்டியது மலேசிய அரசு. வரலாற்றில் மிக நெடுங்காலமாக சொத்துரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களுக்கு, அவர்களுக்குரிய சொத்தை திருப்பித் தர நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

தமிழில் : மாணிக்கம்

இக்கட்டுரையாளர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வட்டார வளர்ச்சித் துறை மய்யத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்; இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராகவும் செயல்படுகிறார்

Pin It