தொடர்ந்து சில்லிட்டுப் பிசிறும் மழையைக் கண்டவாறே சூடாக தேநீரை அருந்தியதைப் போல இருக்கின்றன, சிவகுமார் முத்தய்யாவின் கதைகள். மழை வீசும் வாடையில் அவருடைய ஊரின் மருத நில வாசனையும், அதில் கலந்த மிளகாய்ப் பொடி தூவிய மாட்டு வடவத்தின் வாசமும் – நம்மை வந்தடைகின்றன அவர் கதைகளில். சிவகுமார் முத்தய்யாவின் கதைகளை வாசிக்கும்போது, அவரோடு உரையாடிக் கொண்டே அவர் காட்டுகின்ற கதை மாந்தர்களை ஒவ்வொருவராக சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையில் பயணித்த அனுபவத்தைப் பெறலாம். சிவகுமார் முத்தய்யாவின் "கிளிவரும்போது', "ஆற்றோர கிராமம்' என்னும் இரண்டு கதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. விவசாயக் குடிகளின் வாழ்வும் அவர்களின் உழைப்பும், வேதனையும் அவர்களுக்கு நிகழ்ந்த துரோகங்களும், இல்வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் மிகவும் உயிர்ப்போடு எடுத்தாளப்பட்டுள்ளன. விளிம்பு நிலை மக்களின் வாழ்வு சார்ந்த செய்திகளை கதையாக்குவதில் மீத்திறம் பெற்றவராக இருக்கிறார் சிவகுமார் முத்தய்யா.

sivakumar_muthiahதிருவாரூருக்கு அருகில் உள்ள தண்டலை என்னும் அழகிய கிராமம்தான் அவருடைய பூர்வீக நிலம். தற்பொழுது அது நகரமாகிக் கொண்டிருக்கிறது. வேலிகளிலும் விவசாயம் பார்த்த ஊர் அது. அவருடைய தாத்தா அந்தக் காலத்தில் சிறந்த சிலம்பாட்ட வீரராக இருந்திருக்கிறார். கட்டுடலும் மிக நீண்ட கூந்தலும் என, ஓர் ஆதித்தமிழனின் அழகியலைப் பெற்றவராக இருந்திருக்கிறார். இயக்கங்கள் இல்லாத காலத்தில் தனி மனிதராக, அவர் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

முத்தய்யா சாம்பான் என்று அழைக்கப்பட்ட அவரை அக்காலங்களில் அடியாட்களாக இருந்த தேவர்களாலும், கள்ளர்களாலும் வெல்ல முடியாமல் போயிருக்கிறது. ராமநாதபுரத்திலிருந்தெல்லாம் வந்தவர்களால் கூட, அவரைச் சண்டையில் வெல்ல முடியவில்லை! பண்ணைகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். அவருடைய வாழ்வு சிவகுமார் முத்தய்யாவுக்கு பல கோணங்களில் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதுதான் சிவகுமார் முத்தய்யா கதை எழுத வந்த கதை.

சிவகுமார் முத்தய்யாவின் தந்தையும் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர். இவர் ஊரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் வெண்மணி இருக்கிறது. அப்போது நடைபெற்ற கூலி உயர்வுப் போராட்டங்களில் எல்லாம் அவருடைய தந்தை பங்கேற்றுள் ளார். அவரும் ஒரு கதை சொல்லியாக இருந்திருக்கிறார். பண்ணைகளில் நடக்கும் கொடுமைகளை, ஒரு கதையைப் போலவே அவர் கூறுவாராம்.

"ஓடம்போக்கி' என்றொரு கதை. ஆற்றில் அதிகமாக வெள்ளம் வர கரையை அணைக்கும் வேலையை, ஊரில் இருக்கும் எல்லோரும் செய்வார்கள். பயிர்கள் எல்லாம் நாசமாகி விடும். உயிர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்பது, அவர்களின் குறிக்கோளாக இருக்கும். வேலையை துரிதப்படுத்துவதற்காக ஒருவர் பறைøய அடிக்கிறார். அவருடைய பறை இந்த மக்களைக் காக்க வேண்டும் என அதிர்கிறது. தூறல் போட்டுக் கொண்டேயிருக்க, பறையைக் காய்ச்சிகாய்ச்சி அவர் அடிப்பார். வெள்ளப் பெருக்கெடுத்து அதிகமான நீர் ஊருக்குள் வர, அனைவரும் ஓடி வந்துவிடுவார்கள். பறையடித்தவரின் பிணம் ஓரிடத்தில் கரை ஒதுங்கியிருக்கும். இக்கதையை சொல்ல வந்த சிவகுமார் முத்தய்யாவின் திறன் போற்றுதலுக்குரியது. இக்கதைக்குள் வெள்ளம் வருவதற்குள் ஒரு வாழ்க்கையை அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

சிவகுமார் முத்தய்யாவின் இன்னொரு சிறப்பு, அவர் கதைகளில் வரும் வர்ணனைகளும், அவற்றை அவர் பயன்படுத்தும் லாவகமும். “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வதிக்கரைத்திடல் சிறப்பாக எல்லோராலும் கருதப்பட்டது. இந்தத் திடலில் இலந்தை மரம், நுணாமரம், அதிகமாக இருக்கும். பனை, வேம்பு போன்றவையும் காணப்பட்ட. துளசியில் நாலைந்து வகைகூட இருந்ததாக ஞாபகம். இன்னும் மருந்து செடிகள்கூட வளர்ந்து செழித்த தோட்டமாய் இருந்தது. இலந்தை மரங்கள் ஒவ்வொன்றும் ஒருவகை.

“நத்தை காய்ச்சி, மண்ணெண்னை காய்ச்சி, நன்னி காய்ச்சி, புளிப்புக்காய்ச்சி, காரக்காய்ச்சி... இப்படி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை இப்போது நினைத்தாலும் எச்சில் சுரக்கிறது. ஊரில் இவ்வளவு மக்கள் இல்லை. ஆனால் இன்று எவ்வளவு வளர்ச்சி... எல்லாவற்றிலும் தாராளமயம் புகுந்து விளையாடுகிறது'' என அவர் தரும் தரவுகள் கதையை வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. இப்படி நிறைய இடங்களை ஒவ்வொரு கதையிலுமே நம்மால் உணர முடிகிறது.

இதை எப்படி உங்கள் கதைகளில் வைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, "நான் பார்த்ததை' உணர்ந்ததை அப்படியே அப்பட்டமாக எழுதுகிறேன். எங்கள் ஊர்களில் அடிமை வேலைகளை செய்பவர்களை "வெட்டியான்'கள் என்று அழைப்பார்கள். அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் என் கதைகளில் பதிவு செய்து இருக்கிறேன். தற்பொழுது அவர்கள் மாட்டு எலும்புகளை சேகரித்துப் பதப்படுத்தி, எப்படி விற்கிறார்கள் என்பதை ஒரு கதையில் எழுதியிருக்கிறேன் என்கிறார்.

"செரவியின் வருகை' என்றொரு கதை. செரவி என்பது ஒரு பறவை. நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் அப்பறவைகள் சனவரி மாத காலகட்டங்களில் வரும். நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாக வந்து நன்றாக வயல்களில் உட்கார்ந்து, முற்றிய நெல்மணிகளை மனிதர்கள் உருவுவதைப் போலவே உருவி எடுத்துச் சென்றுவிடும். இந்த செரவிப் பறவைகளை விரட்டுவதற்காக வயல் வெளிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் விளிம்புநிலை மக்கள், எத்தகைய இடர்ப்பாடுகளை சந்திக்கிறார்கள் என அவர்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறேன் என்கிறார் சிவகுமார் முத்தய்யா. அக்கதை வெளிவந்தபோது, அந்த ஆண்டில் வந்த சிறந்த கதை அது என்று பெரிய எழுத்தாளர்கள் சிவகுமாரைப் பாராட்டி இருக்கின்றனர்.

தலித் எழுத்தாளர், இன்னும் ஆழமான எழுத்துகளை உருவாக்க வேண்டும். அமைப்புகளிடமோ, தனி மனிதர்களிடமோ சிக்கிக் கொள்ளும் தலித் எழுத்தாளர்கள் அதற்கேற்ப எழுத வேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகின்றனர். தனி மனிதர்கள் தலித் எழுத்தாளர்களின் உழைப்பைச் சுரண்டி விடுகின்றனர். அப்படி இலக்கியச் சூழலுக்குள் சிக்கி தன்னிச்சையாக எழுதாமல், சுதந்திரமாக தலித் மக்களின் விடுதலைக்காக செயல்பட வேண்டும் எனவும் சிவகுமார் முத்தய்யா விழைகிறார்.

அவருடைய எழுத்து பற்றிய கேள்விக்கு, தன்னுடைய எழுத்து அப்பட்டமான தலித் எழுத்து என்றும், இடதுசாரி இயக்கங்களில் எழுதுபவர்கள் கூட, தங்கள் சாதிசார்ந்த எழுத்துகளையே முன் வைக்கின்றனர். அப்படியில்லாமல் சாதி ஒழிப்பிற்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்வுக்கும் தன்னுடைய எழுத்தை உருவாக்குவதாக அவர் கூறும்போது, உணர்வு பொங்கிய பெருமிதத்தை அவர் குரலில் உணர முடிந்தது!

"காணியாச்சி' கதையில் வரும் வேலு, செத்த மாட்டைத் தூக்குவதும் சாவுக்கு தப்பு அடிப்பதுமான தொழில்களை செய்யக்கூடியவன். "கிளி வரும்போது' கதையில் வரும் நாயகன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு, கல்லூரி சென்று படிப்பதற்கு வழியில்லாதவன். இத்தகைய மனிதர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் எப்போது வெல்லும் என்பதுதான் ஒவ்வொரு கதையின் கேள்வியாக இருக்கிறது.

வர்க்கரீதியான போராட்டம் இதை முறித்துப் போடுமா? சாதி ஒழிப்புப் போராட்டமும், வர்க்கப் போராட்டமும் இணையும் புள்ளி தற்காலங்களில் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு, “அப்படி ஒன்று நடப்பதற்கான சாத்தியமே இல்லை. எல்லோரும் சாதியை காப்பாற்றிக் கொள்ளத்தான் நினைக்கிறார்கள். அதற்காகவே வேலை செய்கிறார்கள். சாதியைக் கடந்து ஒன்றிணைவதில் எவருக்கும் விருப்பமில்லை. சாதி ஒழிந்தால்தான் வர்க்கப் போராட்டம் வரும். சாதி ஒழிப்புப் போராட்டம் தான் வர்க்கப் போராட்டத்தின் வித்து'' என்று அவர் அறுதியிட்டு கூறுகிறார்.

பல இலக்கிய இதழ்களில் வெளியான புதிய கதைகளை வைத்துக் கொண்டு, நூலாக வெளியிட முடியாமல் இருக்கிறார்

சிவகுமார் முத்தய்யா. தமிழ் பதிப்புச் சூழல் மிக மோசமாக இருப்பதாகவும், சாதிய மனோபாவத்தோடுதான் அவர்களும் இயங்குவதாகவும் கருதுகிறார் அவர். ஆக்கங்களைப் படிக்காமலேயே அவற்றைப் பதிப்பிக்கிறார்கள். தலித்துகள் எழுதும் ஆக்கங்களை அவர்கள் வெளியிடுவதில் அக்கறை காட்டுவதில்லை.

அதே சமயம் சிலர் வெளியிடுகிறேன் எனச் சொல்லி காலம் தாழ்த்துகின்றனர். “தனி மனிதர்கள் நடத்தும் பதிப்பகங்கள்தான்

இப்படி என்றால், இயக்கங்கள் நடத்தும் பதிப்பகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அந்த இயக்கத்திற்கு யார் பொதுச் செயலாளராக இருக்கின்றாரோ, அவர் சாதியைச் சார்ந்தவர்களின் நூல்கள் மட்டுமே அங்கு பதிப்பிக்கப்படுகின்றன. அப்புறம் இயக்கம் நடத்தி என்ன பயன் இருக்கிறது?'' என்று அவர் காட்டமாகக் கேட்பதில் நியாயம் இருக்கிறது.

தற்பொழுது 600 பக்க நாவல் ஒன்றை முடித்திருக்கும் சிவகுமார் முத்தய்யா, தொடர்ந்து எழுதுகின்ற உத்வேகத்துடனே இயங்குபவர். தன்னுடைய எழுத்துகள் ஒரே கோணத்தில் இல்லை; விளிம்பு நிலை மக்களின் வாழ்வுசார்ந்த செய்திகளையும் கதைகளாக்குவேன் என்று கூறும் சிவகுமார் முத்தய்யா, இன்னும் இன்னும் எழுதும் துணிச்சல் நிறைந்த எழுத்துக்காரர்!

– யாழன் ஆதி

சிவகுமார் முத்தய்யாவை தொடர்பு கொள்ள : 99425 89989

Pin It