டாக்டர் அம்பேத்கர் தான் வந்திறங்கியதற்கு அடுத்த நாள், சர். சாமுவேல் ஹோருக்கு மிக முக்கியமான ஒரு கடிதத்தை எழுதினார். அதில் அவர், தீர்ப்பின் 9ஆவது பத்தியின் கடைசிப் பகுதியின் பொருளைத் தெளிவுபடுத்தும்படி கேட்டிருந்தார். ஏனெனில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சில உறுப்பினர்களிடையே அது குறித்து ஓரளவு அய்யப்பாடு இருந்தது. இத்தீர்ப்பில் ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதால், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களிடம் இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் செய்வது சாத்தியமல்ல என்றும் அவர் கூறியிருந்தார். “உங்கள் பதில் வருகின்ற வரையில், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களிடமிருந்து வரும் எதிர்ப்புப் புயலை, பொது மக்கள் மத்தியில் (பகிரங்கமாக) வெடிப்பதினின்றும் தடுத்து நிறுத்துவதற்கு நான் முயல்கிறேன்'' என்று தன் கடிதத்தை முடித்திருந்தார்.

டாக்டர் அம்பேத்கர், பம்பாயிலிருந்து 1932, ஆகஸ்டு 23 அன்று, வகுப்புவாரிப் பிரச்சினை குறித்த தீர்ப்பு தொடர்பாக, பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் :

ambedkar_273_copy“வகுப்புவாரி தீர்ப்பு, எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைத்திடச் செய்யும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. வட்டமேசை மாநாட்டில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சார்பில், நானும் என்னுடைய தோழர் ராவ்பகதூர் சீனிவாசனும் முன்வைத்த அறிவிக்கைகளில், சில மாற்றங்களுக்கு நானும் தயாராகத்தானிருந்தேன். ஆனால் வகுப்புவாரித் தீர்ப்பு, மாகாண சட்டப் பேரவைகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை ஈவிரக்கமின்றி வெட்டிக் குறைத்து, மிகவும் அற்பமான அளவுக்கு சுருக்கிவிட்டது. இதன் விளைவாக, வகுப்புவாரித் தீர்ப்பு அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவத்தை மறுத்ததன் மூலம் – அவர்களுக்கு உண்மையான மனவருத்தங்களை ஏற்படுத்துகிறது.

“இப்பெரும் குறைபாட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இருப்பினும், பஞ்சாப் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை மறுக்கப்பட்டிருந்ததுதான் என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அம்மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நிலைமைகளை நான் அறிந்துள்ள நிலையில் ஒப்புநோக்கினால் – அவர்களுடைய சமூக நிலைமை, வட இந்தியாவின் பிற மாகாணங்களிலுள்ள அவர்களுடைய சக மக்களின் நிலைமையைக் காட்டிலும் – உண்மையிலே படுமோசமாக இருக்கிறது என்பதை நான் தயக்கமின்றி கூறுவேன். சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கான அவர்களுடைய கோரிக்கை மிகவும் வலுவானதாகும்.

“மிகவும் தகுதியுடைய இந்த வர்க்கத்திற்கு, அவர்களுடைய இடத்தை மறுப்பதற்கு (பறிப்பதற்கு) மாட்சிமை தாங்கிய மன்னராட்சிக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அந்த மாகாணத்தில் மிகவும் கொந்தளிப்பான மற்றும் உரக்கக் குரல் கொடுக்கின்ற பகுதிகளின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்காக இவ்வாறு இருக்கக்கூடும். இந்தியக் கிறித்துவர்களும், ஆங்கிலோ – இந்தியர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதிகூட இல்லாதவர்கள் மற்றும் சமூகக் குறைபாடுகளின் ஒரு சாயல்கூட இல்லாதவர்களுக்கு – முன்னவர்களுக்கு இரு சிறப்பு இடங்களும், பின்னவர்களுக்கு ஓரிடமும் வழங்கப்பட்டுள்ளதை உணரும்போது, இந்த அநீதி மிகவும் வெளிப்படையானதாகிறது. இந்த அநீதிகள், இப்பிரச்சினையைப் பரிசீலனை செய்யவிருக்கிற அகில இந்திய தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சம்மேளனத்தை, இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்வதினின்றும் தடுத்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன்.''

இந்தியாவுக்கு திரும்பிய காந்தி, சனவரி 4இல் கைது செய்யப்பட்டார். தீண்டத்தகாத இந்துக்களை அரசியலில் சாதி இந்துக்களுடன் சேர்த்து முடிச்சுப் போடுவதற்கான தனது போராட்டத்தை, காந்தி கைவிட்டுவிடவில்லை. மார்ச் தொடக்கத்தில் அவர், எரவாடா சிறையிலிருந்து பிரிட்டிஷ் அமைச்சரவைக்கு எழுதிய கடிதத்தில், தீண்டத்தகாத இந்துக்களை சாதி இந்துக்களிடமிருந்து பிரிப்பதை – தன் உயிருள்ளவரையிலும் எதிர்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். தீண்டத்தகாதவர்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கிய வகுப்புவாரித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு தனித்தொகுதிகள் ரத்து செய்யப்படாவிட்டால், சாகும் வரை பட்டினி கிடக்க தான் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார். இருந்தபோதிலும், கோட்பாட்டு அடிப்படையில் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டால், அதற்கு எதிராக தான் எதுவும் கூறப் போவதில்லை என்று கூறினார்.

மேலும், ஏதோ ஒரு காரணத்திற்காக, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டால், சாகும்வரை பட்டினி இருக்கப் போவதென்ற காந்தியின் முடிவை நியாயப்படுத்த முடியாது.

இது தொடர்பாக, டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார் : “தனது அச்சுறுத்தல் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை காந்தி கண்டார். பிரத மரை மத்தியஸ்தம் செய்து வைக்கும்படி கோரும் மனுவில், தானும் கையெழுத்திட்டுள்ளார் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் என்ற வகையில், தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு அவர் மறுத்துவிட்டார். பிரதமர் செய்துள்ளதை அகற்றுவதற்கு அவர் மறுத்து விட்டார். பிரதமர் செய்துள்ள ஏற்பாட்டை அவர் நீக்கத் தொடங்கியுள்ளார். வகுப்புவாரித் தீர்ப்பின் விதிகளை மாற்றுவதற்கு அவர் முதலில் முயன்றார். அதன்படி அவர் ஒரு கடிதத்தை (மேலே உள்ள பெட்டிச் செய்தி) பிரதமருக்கு அனுப்பினார்.

தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பிரச்சினை தொடர்பாக, காந்தியின் முரண்பாட்டை இக்கடிதம் மெய்ப்பிக்கிறது.

– வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)

 

என் உயிரைப் பணயம் வைத்து எதிர்க்கிறேன்”

எரவாடா மத்திய சிறை       ஆகஸ்டு 18, 1932

அன்புள்ள நண்பரே,

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதித்துவப் பிரச்சினை தொடர்பாக, மார்ச் 11இல் சர். சாமுவேல் ஹோருக்கு நான் எழுதிய கடிதத்தை அவர் உங்களுக்கும் அமைச்சரவைக்கும் காண்பித்துள்ளார் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இருக்க முடியாது. அக் கடிதத்தை இக்கடிதத்தின் ஒரு பகுதியாகக் கருதி, இதனுடன் அதை சேர்த்துப் படிக்க வேண்டும்.

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரிட்டிஷ் அரசின் முடிவை நான் படித்து, அதை அப்படியே வைத்துவிட்டேன். சர். சாமுவேல் ஹோருக்கு என்னுடைய கடிதம் மற்றும் 13.11.1931 அன்று செயின்ட் ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டின் சிறுபான்மையினர் குழு கூட்டத்தில், என்னுடைய உயிரைப் பணயம் வைத்து நான் எதிர்க்க வேண்டியுள்ளது. நான் அவ்வாறு செய்வதற்கான ஒரே வழி, எத்தகைய உணவும் உட்கொள்ளாமல் சாகும்வரை நிரந்தர பட்டினி கிடப்பதை அறிவிப்பது தான்.

உப்புடனோ, இல்லாமலோ தண்ணீரும் சோடாவும் மட்டுமே நான் குடிப்பேன். இப்பட்டினி காலகட்டத்தின்போது, பிரிட்டிஷ் அரசு, தானாகவோ – பொதுமக்கள் கருத்தின் நிர்பந்தத்தின் கீழோ தங்களது முடிவை மாற்றிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கான வகுப்புவாரித் தொகுதிகள் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, பொது வாக்குரிமையின் கீழ் – அது எவ்வளவு விரிவõனதாக இருந்தாலும் தாழ்வில்லை – தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் பொது வாக்காளர் தொகுதிமூலம் தேர்ந்தெடுக்கப்படும் முறைக்கு ஒப்புக் கொண்டால், பட்டினிப் போராட்டம் உடனே நிற்கும்.

உத்தேச பட்டினிப் போராட்டம், அடுத்த செப்டம்பர் 20 அன்று நண்பகலில் சாதாரணமாகத் தொடங்கும். இதற்கிடையில் மேலே யோசனை கூறப்பட்டுள்ள முறையில், மேற்கண்ட முடிவு மாற்றப்படுமேயானால் பட்டினிப் போராட்டம் தொடங்காது.

உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுப்பதற்காக, இக்கடிதத்தின் வாசகத்தை தந்தி மூலம் உங்களுக்கு தெரிவிக்கும்படி அதிகாரிகளை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்படியிருந்த போதிலும், இக்கடிதம் உங்களை வந்து சேர்வதற்கு நான் போதிய அவகாசமளித்திருக்கிறேன்.

இக்கடிதமும் ஏற்கனவே குறிப்பிட்ட சர். சாமுவேல் ஹோருக்கு நான் எழுதிய கடிதமும் விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொருத்தமட்டிலும், சிறை விதியை நான் கறாராகக் கடைப்பிடித்து வந்துள்ளேன். என்னுடைய விருப்பத்தையோ, இவ்விரண்டு கடிதங்களின் சாரத்தையோ – என்னுடைய சகாக்களான சர்தார் வல்லபாய் படேல் மற்றும் திரு. மகாதேவதேசாய் ஆகிய இருவரைத் தவிர, வேறு எவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால், நீங்கள் சாத்தியமாக்கினால், என்னுடைய கடிதங்களால் பொதுமக்கள் கருத்து பாதிக்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதனால்தான் அவை விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்று நான் வேண்டுகிறேன்.

நான் எடுத்துள்ள முடிவிற்காக வருந்துகிறேன். ஆனால், சமய சார்பான மனிதன் என்று நான் என்னைக் கருதிக் கொண்டிருக்கும் நிலைமையில், எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. சர். சாமுவேல் ஹோருக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி, இக்கட்டான நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, என்னை விடுதலை செய்வதென்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி முடிவு செய்வதாலும்கூட, என்னுடைய பட்டினிப் போராட்டம் நீடிக்கும். ஏனெனில், வேறு எந்த முறையிலும் அரசின் முடிவை இப்பொழுது எதிர்க்க முடியாது; மேலும், கவுரவமான முறையிலன்றி, வேறு எந்த முறையிலும் என்னுடைய விடுதலையைப் பெறுவதற்கு எனக்கு விருப்பமில்லை.

என்னுடைய மதிப்பீடு, கோணலாக இருக்கக்கூடும். மேலும், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு தனித் தொகுதிகள் தீங்கானது என்று நான் கூறுவது, முற்றிலும் தவறாகவும் இருக்கக்கூடும். அப்படியெனில், வாழ்க்கை தொடர்பான என்னுடைய தத்துவத்தின் பிற பகுதிகளில் நான் சரியாக இருந்திருக்க முடியாது. அப்படியெனில், பட்டினிப் போராட்டத்தின் மூலம் என்னுடைய மரணம் என்னுடைய தவறுக்கான ஒரு பிராயச்சித்தமாக அமையும்; மற்றும், என்னுடைய விவேகத்தில் குழந்தைத்தனமான நம்பிக்கை வைத்திருக்கிற எண்ணற்ற ஆண்கள், பெண்களின் மீதுள்ள சுமையை அகற்றுவதாகவும் அமையும். என்னுடைய மதிப்பீடு சரியாக இருந்தால், அது சரியானதுதானென்பதில் எனக்கு அய்யப்பாடு எதுவுமில்லை. உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, வெளிப்படையாகப் பெருமளவு வெற்றியுடன் நான் முயன்று வந்துள்ள வாழ்க்கை ஏற்பாடு நிறைவு பெறுவதன் பயனேயாகும்.

அன்புடன்,

உங்கள் உண்மையுள்ள நண்பன்,

எம்.கே. காந்தி

Pin It