குழந்தைகளைக் குளிப்பாட்டும் விரல்கள்
எப்போதும்
சொர்க்கத்தின் சாவிகளை
சுழற்றியபடியே இருக்கின்றன
பூத்தொடுப்பதும்
குழந்தைகளைக்
குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்.
வன்முறைக்கு பழகிய
விரல்களைக்
குழந்தைகளின் மென்தேகம்
மெல்ல மெல்ல
மிருதுவாக்கி விடுகிறது.
கூச்சத்தின்
முதல் கீற்று விழும் வேளை
மறுதலிக்கும் குழந்தைகளுக்கு
உங்கள் விரல்கள்
உடைந்த
விளையாட்டு மொம்மைகளாகின்றன
ஆற்றில் தானே
குளிக்கும் குழந்தைகள்
எந்த விரல்களையும்
யாசிப்பதில்லை
அவர்களை
தழுவிச்செல்லும்
தண்ணீர்
தூரத்தில்
துணி துவைத்து கொண்டிருக்கும்
மலடி ஒருத்தியின்
விரல்களை
குளிப்பாட்டி செல்கின்றன.


அப்பாவின் டெய்லர்

'அளவு சட்டையெல்லாம் வேண்டாம்
துணியை மட்டும்
கொடுத்துட்டு வா' - என்பார் அப்பா
காதிலிருக்கும் பேனாவால்
புதுத்துணியின் மூலையொன்றின்
கைகள் தோள்பட்டை
உடலின் அளவுகளைக்
மனப்பாடமாய் எழுதுவார்
அப்பாவின் பிரத்யேக டெய்லர்
ஆயத்த அளவுகள்
அறிமுகம் ஆகும் முன்னர்
உள் பாக்கெட் வைக்காமல்
இவர் தைத்த உடைகளை
சிறுவயதில்
அணியாமலேயே
அடம் பிடித்திருக்கிறேன் நான்
விபத்தொன்றில்
உடல் நசுங்கி அப்பா இறக்க
அடையாளம் காட்டியது
காலருக்கு பின்னிருந்த
எஸ்கே என்ற குறியீடு தான்
பெரிதாக்கப்பட்ட முகத்தையே
சில ஆண்டுகளாய்
நாங்கள் பார்த்து கொண்டியிருக்க
இன்னமும்
இவர் நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்ககூடும்
அதே நீள அகலங்களுடன் அப்பா.

- கே.ஸ்டாலின்

Pin It