காந்தியின் தீண்டாமை

“காந்தி குறித்த மீள் வாசிப்புகள் எவ்வளவு தமிழில் செய்யப்பட்டாலும், காந்தியை தலித்துகளுக்கான ஆளுமையாக ஒருபோதும் கட்டமைக்க முடியாது. ஏனென்றால், காந்தி எப்போதுமே தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. "நீங்கள் எங்களுக்கான பிரதிநிதி இல்லை' என்று வட்டமேசை மாநாட்டில் காந்தியை பார்த்து அம்பேத்கர் சொன்னதுதான் இன்றும் நிதர்சனம். "பெரிய தலைவர்களிடமோ, மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை-அம்பேத்கர்        

நா. ஜெயராமன், பக்கங்கள் : 208,  விலை : ரூ. 130, பூபாளம் புத்தகப் பண்ணை, புதுக்கோட்டை – 1, பேசி : 99438 46484

வேதமும்விஞ்ஞானமும்

“வரலாற்றியல் ஆதாரங்களோடு எஸ்.டி. விவேகி அவர்களால், "பைபிள்', "குர்ஆன்', "ரிக்' முதலான வேத வசனங்களோடு மோதவிட்டு தொகுக்கப்பட்டுள்ள நூல். ஆதி முதல் இன்று வரையில் ஏற்பட்டுள்ள வேத – அறிவியல் போராட்டங்களுக்கு ஏற்பப் பொருத்தமாகக் குறித்துத் தரப்பட்டுள்ளன! மடமைக்கும் – அறிவுடைமைக்கும் இடையே நெடுங்காலமாகத் நிகழ்ந்து வந்த பயங்கரக் கொலை பாதகக் கொடிய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை படித்தால் உள்ளம் பதைபதைக்கும்!''

எஸ்.டி. விவேகி, பக்கங்கள் : 224,   விலை : ரூ. 110,   அங்குசம், சென்னை – 600 019,  பேசி :  94443 37384

தலித் சமயம்

“மநுதர்ம சமஸ்கிருத சமயத்திலிருந்து தனித்த வேறுபட்ட சமயங்கள் தலித்துகளுக்கென்று இருந்திருக்கிறது. இப்போதும் அவை நடைமுறையில் இருக்கின்றன. சமஸ்கிருத சமயத்திற்கு முன்பு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஒரே சமூகமாக இருந்தார்கள்; ஒரே சமயத்தையே  வழிபட்டார்கள். நம் சமயம் என்பது சிறுமரபோ,  காட்டுமிராண்டி சமயமோ அன்று. மாறாக, உயரிய கோட்பாடுகளையும், கருத்துகளையும் கொண்ட சமயமாகும்.''

பரட்டை, பக்கங்கள் : 24,  நன்கொடை : ரூ. 10, பரட்டை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, சென்னை, பேசி : 99424 87859

இருளில் முளைத்த மிருகம்

“வைக்கோலைத் துளைத்து, பின் இடுப்பில் சொறுகியிருந்த பண்ணரிவாளை உருவின வேகத்தில், அவன் முதுகில் முனையால் அறுத்தாள். நெடு முதுகில் நீண்ட கோடு கிழித்து வயிற்றுப் பக்கம் இறங்கியது அரிவாள். அலறிக் கொண்டு எழுந்தான் அவன். பிடி விலகியதும் கொத்தும் நாகமாய் எழும்பி, மண்டியிட்டுக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்தாள் கரிக்காலி. சுதாரித்து நிமிர்ந்து விலக்கினான். உடம்பு வழியே வழுக்கிய கையில் விரைத்து நின்ற குறி சிக்கியது. கோர்த்து அறுத்தாள்.''

யாக்கன், பக்கங்கள் : 108,  விலை : ரூ. 50, கலகம்,      சென்னை – 600 002, பேசி : 98845 95489

தமிழ் ஆய்வா? ஆரவாரமா?

“உலக நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இயங்கி வந்த தமிழ்த் துறைகள் போதுமான நிதியுதவி இல்லாமல் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இத்துறைகளை மீண்டும் தொடங்கவும், மேலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் தொடங்கப்படவும் தேவையான நிதியுதவி வழங்கப்பட வேண்டும். வெற்று ஆரவார மாநாடுகளுக்குப் பல நூறு கோடிகளை வாரி இறைப்பதன் மூலம் தமிழ் வளராது. அந்தப் பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதே தமிழை வளர்க்கும்.''

பழ. நெடுமாறன், பக்கங்கள் : 32,  விலை : ரூ. 10, தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை – 600 087, பேசி : 044 – 23775536

அழியட்டும் ஆண்மை!

“ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில், உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. அந்த ஆண்மை, உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் "ஆண்மை' நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் "ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்மை விடுதலையில்லையென்பது உறுதி.''

பெரியார், பக்கங்கள் : 110,  விலை : ரூ. 30, பெரியார் தி.க., சென்னை – 600 014, பேசி : 044 – 30228213

Pin It