கீற்றில் தேட...

 

அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவின் அமைப்புக் கிளை திறப்பு விழா, ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டைமேடு பகுதியில் 1.11.2009 அன்று நடைபெற்றது. பட்டியல் சாதியினரில் அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட 3 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த இரு பெண்களுக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்கு பாராட்டும், உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வும் சிறப்புடன் நடைபெற்றன.

விழாவுக்கு தலைமையேற்ற அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவின் மாநிலத் தலைவர் ம. மதிவண்ணன் அமைப்புக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினார் : “இடஒதுக்கீடு மட்டுமே இந்த அமைப்பின் நோக்கமல்ல; சாதிகளற்ற சுதந்திர, சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் சமூக அமைப்பு அமையப் பாடுபடுவதே அமைப்பின் குறிக்கோள். உள்ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், தாம் மட்டும் பலனை அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அவர்கள் தங்கள் இன மக்களுக்கும் தன்னுணர்வோடு தொண்டாற்ற வேண்டும். இந்த இடஒதுக்கீடு 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதம் உயர்ந்தாலும் – நம் சமூகத்தில் வெறும் 6 சதவிகித மக்கள் பயன் பெறுவது மட்டும் போதுமானதல்ல. மீதியுள்ள 94 சதவிகித மக்களுக்கும் இந்த அமைப்பு தன் கடமையை ஆற்றும்.

“நீல நிறம் பிரிவினையற்ற, எல்லோருக்குமான, விரிந்த ஆகாயத்தையும், அம்பேத்கர் அமைத்த வண்ணத்தைக் குறிப்பதாகவும், கருமை நிறம் அறியாமை இருளைக் குறிப்பதாலும் – பெரியார் குறித்த வண்ணம் – அவ்விருளிலிருந்து புரட்சியின் விடிவெள்ளியாக, நடுவிலுள்ள சிவப்பு நட்சத்திரம் விளங்குகிறது. இந்த அமைப்பு வலுப்பெறுவதும், அதன் வாழ்வும் உங்கள் கையில்தான் உள்ளது. அமைப்பு வலுப்பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.''

அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழு கிளையினை திறந்து வைத்தும், அமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கியும் சிறப்பித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது சிறப்புரையில், அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் எந்த சாதிகளற்ற, சமத்துவ, சகோதரத்துவ சமூகத்திற்காகப் பாடுபட்டார்களோ, அந்தக் கருத்தியலையும் செயல்பாட்டினையும் கொள்கையாகக் கொண்டிருப்பதால், தங்கள் அமைப்பு "அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழு'விற்கு முழு ஒத்துழைப்பு நல்கி சமூக விடுதலைக்குப் பாடுபடும் என்றார். சாதியமைப்பில் மிகவும் ஒடுக்கப்படுவோர் அருந்ததியர்கள். அதிலும் அதிகம் ஒடுக்கப்படுவோர் அருந்ததிய இனப்பெண்கள். ஆகவே, அவர்கள் முன்னேறி வரவேண்டும். முன்கையெடுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர்களின் ஆதரவு அமைப்பிற்கு அவசியம் என்றும் அவை தான் அமைப்பை வலுவாக்கும் என்றார். இடஒதுக்கீட்டின் பலனைப் பெற்றவர்கள், அரசு ஊழியர்களானோர், தமக்கு இப்பலனை அளித்த தம் இன மக்களை திரும்பிப் பார்க்க மறுத்து, மக்களிடமிருந்து தம்மை ஒதுக்கிக் கொள்கின்றனர் என்றார்.

பேராசிரியர் நீதிச்சரண் தமது உரையில், தானும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம்தான் தற்போதைய நிலையினை அடைந்ததாகக் கூறினார். தலித் அமைப்புகள் தான் மட்டும் தனித்து நின்று போராடாமல் தங்கள் தலைமையில் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் துணை கொண்டு எதிரியை வெல்ல வேண்டும் என்றார். தானும் தலித் இன மக்களுக்கு கடமையாற்ற கடன் பட்டிருப்பதாகவும், தலித் அமைப்புகள் தங்களிடையே நிலவும் உள் முரண்பாடுகளைக் களைந்து, அம்பேத்கர் – பெரியார் கொள்கை வழியில், சாதிகளற்ற சமூகத்தை உருவாக்கப் பாடுபடுவது நம் அனைவரின் அவசியமான கடமை என்றார்.

சிறப்புரை நிகழ்த்திய அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழு அமைப்பின் மாநிலப் பொருளாளர் தமிழ் மணி, இந்து மதம் எப்படியெல்லாம் சதி செய்து, சாத்திரத்தின் பெயரால் நம்மை நாசம் செய்கிறது என்பதை விளக்கி, இந்து மதம் சிந்தனைக்கு விலங்கிட்டு நம்மை அடிமைகளாக்கியது என்றும் எடுத்துக் கூறினார். அமைப்பின் மாநிலச் செயலாளர் வீரக்குமரன், தனது உரையில் சாதிகளற்ற, சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர சமூக அமைப்பிற்காக ஜனநாயக வழியில் போராடுவதற்காக அமைப்பை வலுவாக்குவோம் என்று சூளுரைத்தார்.

– உலகு பெருவை