செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் 146 பிறந்த நாளன்று அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்பை வரவேற்று முற்போக்கு கூட்டங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு. கு. இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு. ஜி. இராமகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் திரு. இ. ஆர். கொங்கு ஈஸ்வரன் M.L.A, மனிதநேய மக்கள் கட்சியின் திரு. சுல்தான், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சி. வெண்மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு. க. சு. நாகராசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் திரு. இரா. அதியமான் அவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் திரு. இரா. அதியமான் அவர்கள் பேசியதாவது, தந்தை பெரியார் என்கிற தலைவர் ஒருவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட கூட்டம் கூட நடத்திக் கொண்டிருக்க முடியாது. இன்றைக்குத்தான் வட மாநிலங்களில் எல்லாம் அவருடைய கருத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டு "ஒ 50 வருடங்களுக்கு முன்பே இப்படி எல்லாம் கருத்து சொல்லிட்டாங்களா? பார்ப்பனரை எதிர்த்து பேசி இருக்காங்களா? பார்ப்பனர் இல்லாமல் திருமணம் நடக்கிறதா?" என்று வட மாநிலத்தவருக்கு இதெல்லாம் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. தோழர்களே தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்கள் நடத்திய இயக்கங்கள் ஏராளம் ஏராளம்.1929ஆம் ஆண்டில் தந்தை பெரியார் முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் கூட்டினார். அந்த மாநாட்டுக்கு சென்னையிலிருந்து மிகப்பெரிய ஊர்வலம் கிளம்பியது. அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் தந்தை பெரியாருக்கு துணை இருந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள் பெரியார் மட்டும்தான் அரசியல் தலைவர். தந்தை பெரியார் அந்த மாநாட்டில் அன்றைக்கு என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றினாரோ, அந்த தீர்மானங்கள் தான் ஒவ்வொன்றாக இன்றைக்கு நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை, வாக்குரிமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளுக்கும் அந்த முதல் சுய மரியாதையை மாநாட்டில் தீர்வு கிடைத்தது. இன்றைக்கு நம் மீது பிரச்சனையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒரு தலைவர் கடந்த காலங்களில் "தந்தை பெரியார் தலித் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை அவர் என்ன செய்திருக்கிறார்" என்ற வகையில் எழுதியது பேசியது நிறைய நடந்திருக்கிறது. உலகத்திலேயே எனக்கு தெரிந்து பெண்கள் உரிமைக்காக மிக அதிகமாக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் தான். உலகத்திலேயே அவருக்கு நிகராக வேறு யாரும் கிடையாது. பெரியார் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பட்டியலில் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். அப்படித்தான் நம் உரிமைகள் ஒவ்வொன்றாக நாம் பெற்றுக் கொண்டே இருந்தோம்.
அப்படிப்பட்ட தலைவருடைய பிறந்தநாளைத் தான் ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கு சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறோம். அதில் இந்த ஆண்டு மரியாதைக்குரிய சிறப்பான தலைவர்களை அழைத்து கடந்த 8ஆம் தேதியன்று வெளிவந்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த தீர்ப்பு ஒரு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட மாநிலங்களில் இந்த தீர்ப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இருந்ததாக தெரியவில்லை. அங்கே இருக்கிற பட்டியல் சாதி தலைவர்கள் மட்டும்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதை பற்றி எந்த சலசலப்பும் இல்லை. இரண்டே பேர் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று தோழர் திருமாவளவன், இன்னொருவர் தோழர் ரவிக்குமார். அவ்வளவுதான். ஏன் இங்கே தீர்ப்பு பற்றி யாரும் பேசுவதில்லை என்றால், ஒரு சமூக நீதி தீர்ப்பு வந்திருக்கிற காரணத்தினால் இங்கே மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்.
மண்டல் கமிஷன் ஏறத்தாழ 80களிலே சமர்ப்பிக்கப்பட்டது. 90களில் வி.பி. சிங் ஆட்சிக்கு வந்த பிறகு அதை நடைமுறைப்படுத்தினார். அப்போது இந்த நாட்டிலே எந்த அளவுக்கு பிரச்சனை கிளம்பியதோ, அப்படியொரு பிரச்சனையை இப்போது கிளப்ப வேண்டும் என்ற தொனியில் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்ன அந்த தீர்ப்பில் அநியாயம் நிகழ்ந்துவிட்டது? என்று யாராவது கேட்டால் அவர்கள் எல்லோருக்கும் பாடம் எடுப்பார்கள், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஒன்றும் தெரியாது, இவர்களுக்கு revision பெட்டிஷன் என்றால் என்னன்னு தெரியல, review என்றால் என்னனு தெரியல, அப்பீல் என்றால் என்னனு தெரியல என்று நினைத்து அனைவருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு மட்டும் பாடம் எடுக்கவில்லை, திமுக மேடையில் போய் திமுகவினருக்கே பாடம் எடுப்பார்கள் "அண்ணாவின் ஐம்பெரும் உறுதிமொழி என்னவென்று தெரியுமா" என்று திமுகவுக்கே பாடம் எடுப்பார்கள்.
அவர் எங்கே போனாலும் மற்றவர்களெல்லாம் மடையர்கள் அறிவில்லாதவர்கள் இவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து ஒரு கூட்டத்தில் சொல்கிறார் "எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை" என்று திருமா கூறுகிறார், ஆனால் உண்மையில் இவர்கள்தான் மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கிற பொதுவுடமை கட்சியை சேர்ந்தவர்களும் திராவிட இயக்க தலைவர்களும் இங்கிருக்கும் பல்வேறு தலைவர்களும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்து வந்திருக்கிற தீர்ப்பை ஆதரித்து பேசுகிற போது திருமா சொல்கிறார் "நீங்கல்லாம் யாரும் எனக்கு சமூகநீதி பாடம் எடுக்காதீங்க" என்று யாரை பார்த்து சொல்கிறார், கொளத்தூர் மணி அவர்களை பார்த்து சொல்கிறார், இன்னும் ஒரு படி மேலே போய் "நீ தலித் விரோதி" என்று கொளத்தூர் மணி அவர்களையும், தியாகு அவர்களையும் பார்த்து கூறுகிறார். என்ன கொடுமை இது?
தோழர்களே இந்த தீர்ப்பில் மூன்று முக்கிய விடயங்கள் வந்திருக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய உள் இட ஒதுக்கீடு செல்லும் ஒன்று, அதை கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது ரெண்டு, ஏற்கனவே இருக்கின்ற வகைப்படுத்த கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு chennaiah vs andhra pradesh ரத்து செய்யப்படுகிறது - nullified, மூன்று. இதற்கு என்ன பொருள் என்றால், இனிமேல் classification பண்ணலாம், வகைப்படுத்துதல் செய்யலாம். இன்னும் யார் யாரெல்லாம் சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கண்டுபிடித்து சரியாக தரவுகளை கொண்டுவந்து கொடுத்து அவர்களுக்கும் நீங்கள் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம். இதுதான் இந்த தீர்ப்பின் சாரம். ஆனால் இவர்கள் சொல்லுவது, தீர்ப்பில் கிரீமி லேயர் பற்றி நீதிபதிகள் பேசிவிட்டனர். பேசத்தான் செய்வார்கள். எல்லா வழக்கிலும் எல்லா தீர்ப்பில் எல்லா நீதிபதிகளும் இடையில் ஏதாவது கருத்தை பேசத்தான் செய்வார்கள். ஆனால் இவர்கள் அந்த கருத்தை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்னால் எந்த தீர்ப்பில் நீதிபதிகள் கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கிறது? நீங்க என்ன புதுசா கிளம்பி போயிருக்கிறீர்கள்?
தோழர்கள் சொன்னது போல, 2009-இல் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தொடங்கி இந்த நிமிடம் வரைக்கும் தோழர் திருமா என்ன சொல்கிறார் என்றால், "நான் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் எதிர்க்கவில்லை" என்று. இதையேதான் அவர் திரும்ப திரும்ப கூறுகிறார். ஆனால், உங்களுடைய action, உங்களுடைய நடவடிக்கை அனைத்தும் அருந்ததியருக்கு எதிராக இருக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். நான் உங்களை பார்த்து கேட்கிறேன், தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகள் நீங்கள் இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், எல்லோருக்கும் தலைவர் நான்தான் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், எல்லா விஷயத்துக்கும் நீங்கள் போராட்டம் நடத்தி இருக்கீங்க. நீங்க நடத்தாத போராட்டமே கிடையாது. எல்லா வகை பிரிவினருக்கும் நீங்க போராட்டம் நடத்தியிருக்குறீங்க, நான் கேட்கிறேன், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்து ஒரே ஒரு போராட்டமானது நீங்கள் நடத்தி இருக்கிறீர்களா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், ஏன் நடத்தவில்லை. அப்படியென்றால் ஆதரிக்கிறேன் என்பதற்கு என்ன பொருள், அது வெறும் வாய் ஜாலம், வாய் வார்த்தை. வாய் ஜாலங்களால் மக்களை அப்படியே திருப்பிக் கொண்டிருக்கிறீர்கள் "இது குடும்பங்க, குடும்பம் வேறங்க, குடும்பத்துல இருக்கிற உறுப்பினர் வேறங்க, உறுப்பினரா இருக்கிற அண்ணன் வேறங்க, தம்பி வேறங்க, ஆனால் எல்லாம் ஒன்னுங்க" இதை கேட்டால் குழப்பமாக இல்லையா? நாங்க கூட்டணியில் தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எடப்பாடியிடம் பேசுவோம் என்பது போலத்தான் இது இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆதிக்கமாக 18% இடஒதுக்கீட்டை முழுமையாக அனுபவித்துக்கொண்டு, மூன்று சதவீதம் பிரித்தவுடன் அலறுகிறீர்கள். ஏன் அலறுகிறீர்கள்? மக்கள் தொகைக்கு ஏற்ப தான் கலைஞர் பிரித்து கொடுத்தார். அதிகமாக கொடுத்து விட்டாரா? இல்லையே. எங்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் 6% கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கவில்லையே. தோழர்களே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தந்தை பெரியார் ஒரு உதாரணம் கூறுவார். ரயிலில் ஒருவன் ஏறினால் அவன் படுத்துக் கொள்வான். அடுத்த ஸ்டேஷன் வந்தால், மற்றொருவன் ஏறி அவனை எழுப்பினால் எந்திரிக்க மாட்டான், மெரட்டினால்தான் எந்திரிப்பான். அப்போதும் அவன் முழுசா எழுந்திருக்க மாட்டான். நெளிவான். அப்பவும் முழுசா இடம் கொடுக்க மாட்டான், ஒரு ஸ்டேஷனில் இருந்து இன்னொரு ஸ்டேஷன் சுகமாக படுத்து வந்ததற்கே எந்திரிக்க மாட்டேன் என்று சொன்னால், 50 ஆண்டு காலம் 18% முழுசாக அனுபவித்தது யார்? புள்ளிவிவரம் கொடுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே ஒரு vice chancellor கூட அருந்ததியர் கிடையாது, ஒரே ஒரு syndicate member கிடையாது, ஒரே ஒரு senate member கூட கிடையாது. மற்ற பிரிவினர் புள்ளிவிவரம் எடுங்கள் எவ்வளவு பேர் இருக்கிறார் என்று பாருங்கள்.
சீமான் ஒரு கூட்டத்தில் படிக்கிறார் "அண்ணன் அதியமான் கொடுத்த பட்டியல்" என்று கூறி படிக்கிறார். "SCA அருந்ததியர் 20 professor போஸ்ட், மனோன்மணியம் பல்கலைக்கழகம் 27, பாரதியார் பல்கலைக்கழகம் 20, இப்படி எல்லாமே அருந்ததியருக்கே குடுத்தா நாங்கெல்லாம் என்ன ஆவது" என்று சீமான் கூப்பாடு போடுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், அந்த பட்டியல் எல்லாமே பொய். எல்லாமே வெறும் அறிவிப்பு மட்டும் தான். ஒருவர் கூட பணியமர்த்தப்பட வில்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் 27 பேர் அறிவிக்கப்பட்டார்கள் ஒருவர் கூட பணியமர்த்தப்பட வில்லை. ஒதுக்கப்பட்டார்கள், ஓரங்கட்டப்பட்டார்கள். மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் 15 பேர் அறிவிக்கப்பட்டார்கள் ஒருவர் கூட பணியமர்த்தப்படவில்லை. அப்போ எது உண்மை, அறிவிப்பு உண்மையா? நியமிக்கப்பட்டது உண்மையா? மக்களிடம் எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு இருப்பீர்களா? நீங்கள் சொல்வதெல்லாம் மக்கள் நம்புவதற்கில்லை.
கிருஷ்ணசாமி கூறுகிறார் "அருந்ததியருக்கு 3% கொடுத்தாங்க ஏன் எங்களிடமிருந்து எடுத்து கொடுக்கிறார்கள்?" என்று கேட்கிறார். எங்களோடது என்றால் யாரு? இவரு யாரு? அப்போ நாங்க யாரு? நாங்க என்ன வானத்தில் இருந்து குதித்தோமா? நீங்க என்ன இங்கேயே உக்காந்துட்டு இருந்தீர்களா? அப்போ என்ன தனி இடஒதுக்கீடு குடுக்கணுமா? எங்கிருந்து கொடுப்பாங்க? எப்படி தருவாங்க? ஒரு பலமில்லாத ஒரு சமுதாயம், விளிம்பு நிலையில் இருக்கிற ஒரு சமுதாயம், தோழர் நாகராசன் கூறியது போல 2010 வரை பத்தாம் வகுப்பு தாண்டியவர்கள் கூட அவர் கிராமத்தில் இல்லை. இன்றைக்கும் இந்த நிலைமை கிராமங்களில் இருந்து கொண்டு வருகிறது.
இப்படி இருக்கிற சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏன் review petition போடுறீங்க? எதற்காக review petition இல் தீர்ப்புக்கு stay வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் திருமா கூறுகிறார், "அது review செய்ய வேண்டும் என்றாலே தீர்ப்பை stay பண்ணி தான் review போட முடியும்" என்று கூறுகிறார். அப்போ தீர்ப்பை stay பண்ணனும்னு உங்களுக்கு தெரியும் தானே? அப்பறம் ஏன் review போடுறீங்க?
நான் திருமாவை பார்த்து கேட்கிறேன், உங்களுக்கு எப்போதிருந்து தேசிய பார்வை வந்தது? எந்த நிமிஷம் வந்தது? எந்த நாள்ல வந்தது? எந்த வாரத்துல வந்தது? சொல்லுங்கள். நீங்கள் என்னைக்காவது தேசியம் பற்றி பேசி இருக்கிறீர்களா? நீங்கள் தமிழ் தேசிய இயக்க உணர்வாளர் ஆயிற்றே, இன்னைக்கு என்ன புதுசா தேசியம் பேசுறீங்க? என்ன காரணம்?
தெற்கு மாநிலங்களிலேயே கலைஞர் மட்டும்தான் உள் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார். கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற எந்த மாநிலங்களிலும் இல்லை. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, தெலுங்கானா மாநிலத்தில் பட்டியல் சாதிகள் sub categorisation செய்வதற்கு துணை முதல்வர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அங்கே இதே போன்ற சட்டத்தை அமல்படுத்த ஆய்வு நடந்து வருகிறது. அதே போல ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இது போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த sub categorisation மட்டும்தான் சொட்டு நீர் பாசனம் போல இப்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது. இதை பார்த்து உங்களுக்கு ஏன் பயம்?
தோழர் திருமா கூறுகிறார், வெறும் ஏழு சாதிகளுக்கு மட்டும் 3% இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டால், மீதமிருக்கிற 69 சாதிகளை என்ன செய்வது என்று கேட்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ஒரு பிரிவிலும் ஏழு ஜாதிகள் கொண்ட குழு இருக்கிறது, பறையர் பள்ளர் அருந்ததியருக்கு இருக்கிறது. மூன்று பிரிவுக்கும் 7 - 7 - 7 சாதிகள் என்றால் ஆளுக்கு மொத்தம் 21 சாதிகள் வருகின்றன, அப்படியென்றால் மீதமிருக்கின்ற 52 சாதிகளுக்கு என்ன பதில்? அவர்களுக்கும் சமூக நீதி சென்று சேர வேண்டாமா ?
நாங்கள் உள் இட ஒதுக்கீடு கேட்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எப்போதும் கூறுவது "உங்களுக்கும் கீழே சாதிகள் இருக்கிறார்கள்" என்று, அப்படியிருந்தால் எல்லாரையும் கூப்பிடுங்கள் அவர்களையும் கூப்பிடுங்கள் அவர்களுக்கும் கொடுங்கள். இந்த 18% இட ஒதுக்கீட்டையும் classify செய்யுங்கள், வகைப்படுத்துங்கள், வகைப்படுத்தி அனைவருக்கும் முறையாக கொடுங்கள். நாங்கள் அதிகமாக பெற்றிருந்தால் எங்களுக்கு கொடுக்க வேண்டாம் நிறுத்தி விடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கும் கொடுக்கக் கூடாது. தமிழக அரசுக்கு நான் கோரிக்கை வைக்கின்றேன், பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் இத்தனை வருடங்கள் எந்தெந்த பிரிவுகள் எவ்வளவு அனுபவித்திருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
சாதிவாரி socio economic கணக்கெடுப்பு வேண்டும் என்று மாநில அரசை கேட்கிறோம். ஆனால் அது ஒன்றிய அரசு எடுத்தால் தான் செல்லும். பீகார் மாநிலம் எடுத்த கணக்கெடுப்பு இதனால் தான் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டுக்கும் ஆக வேண்டுமா? எனவே சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று ஒன்றிய அரசை அனைவரும் வலியுறுத்துவோம்.
தோழர் திருமா அவர்களே நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போங்கள், நாங்கள் எளிமையானவர்கள், வலிமை அற்றவர்களாக இருந்தாலும் எங்களால் முடிந்தவரை போராடுவோம், வெற்றி பெறுவோம்.
இவ்வாறு திரு. அதியமான் அவர்கள் உரையாற்றினார்.
எழுத்தாக்கம் - தேன்மொழி