அருந்ததியர் உள் இடஒதுக்கீடு பற்றி 2020ஆம் ஆண்டு வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 2024 ஆம் ஆண்டு - அண்மையில் வந்திருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், போலி முற்போக்கு முகமூடி தலைவர்கள், போலி சமூக நீதி முகமூடி அணிந்த தலைவர்கள் ஆகிய அனைவரும் தெரிவித்த கருத்துக்கள் என்ன, அவர்களுடைய சந்தி சிரிக்கும் யோக்கியதை என்னென்ன போன்றவற்றைப் பற்றிய ஒரு அலசல் இது!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள், இத்தீர்ப்புகள் பற்றி 2020ஆம் ஆண்டும், 2024 ஆம் ஆண்டும் ஒரே அறிக்கையை தான் copy paste செய்துள்ளார். அந்த அறிக்கைகளின் படி, ராமதாஸ் அவர்கள் கூறுவதைப் பார்த்தால், 1988 ஆம் வருடம் இவர்களும் அருந்ததியர் சங்கமும் இணைந்து நடத்திய மாநாட்டில் இக்கோரிக்கை வைக்கப்பட்டதாம், அதன் பிறகு அன்றிலிருந்து இன்றுவரை முப்பது ஆண்டுகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தினமும் காலையில் எழுந்தவுடன் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடியது போல, முப்பது ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் இதேதான் வேலையாக இருந்ததாகக் கூறுவதைத் தாண்டி, ராமதாஸ் அவர்களின் அறிக்கை பற்றி கூறுவதற்கு வேறொன்றும் இல்லை!!
அதேபோல் அதிமுகவின் எடப்பாடி என்ன கூறியிருக்கிறார் என்றால், அவர் முதலமைச்சராக இருந்தபோது அவர்தான் சிறப்புமிக்க சட்ட வல்லுனர்களை இவ்வழக்கிற்காக நியமித்தாராம். அதனால் தான் இப்பேற்பட்ட சிறப்புமிக்க தீர்ப்பு வந்ததாம்!! ஆனால் உண்மையில் நடந்திருப்பது என்னவென்றால், உச்சநீதிமன்றதின் சிறப்புமிக்க வழக்கறிஞர் ஒருவரை இவ்வழக்கில் வாதாட நியமிக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் அவர்கள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்த உடனேயே எவ்வாறு சிறப்புமிக்க வழக்கறிஞர் திரு. சேகர் நாப்டே அவர்கள் தமிழக அரசின் சார்பாக நியமிக்கப்பட்டார் என்பதைத் தலைவர் அதியமான் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
சமூகத்தின் அத்துணை இழிவுகளையும் சுமக்கும் அடி மூட்டைகளில் அடி மூட்டையான அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது தனிப்பட்ட ஆதித்தமிழர் பேரவையின் முப்பது ஆண்டுகாலக் கோரிக்கை!! அக் கோரிக்கைக்காக அவர்கள், கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்தி புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள், அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்கங்களும் மிகப்பெரிய பேரணிகளும் நடத்தியிருக்கிறார்கள். இவ்வாறு பேரவையினால் தொடர்ச்சியாக கூர்மைபடுத்தப்பட்ட போராட்டத்தின் இறுதியில், சென்னையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பேரணியில் தன்னை இணைத்துக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சியின் மதிப்புமிக்க தலைவர் திரு. ந. வரதராஜன் அவர்கள் பேரவையினரை கலைஞரிடம் அழைத்துச் சென்று, பேரவையின் உள் இட ஒதுக்கீடுக் கோரிக்கையை கலைஞரிடம் எடுத்துக்கூற வழிவகை செய்தார் என்றால், அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரே ஒரு சென்னை பேரணி நடந்தவுடன் பேரவையினரை அழைத்துப் பேசி உடனே இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனே அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தாரா கலைஞர் என்பது கேள்வி? தினமும் அதிகாலையிலேயே அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடிக்கும் பழக்கம் கொண்ட கலைஞருக்கு, செய்தித்தாள்கள் மூலமாகவும் உளவுத்துறையின் மூலமாகவும் இப்படி ஓர் அமைப்பு இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து சில வருடங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது தெரியாமல் இருந்திருக்குமா?
ஆனால், 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த போதும் சரி, இப்போதைய தீர்ப்புக்குப் பிறகும் சரி, திரு. கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருக்கும் பேட்டி/கருத்து துளியும் மனசாட்சியற்றது. அதாவது இக் கோரிக்கைக்காக தொடர்ச்சியாக அனைத்து போராட்டங்களையும் பல வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் தமிழ்நாட்டில் முன்னெடுத்தது என்று சிறிதும் வாய் கூசாமல் கூறுகிறார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியையும் சேர்த்துக் கொள்கிறார். இவ்விடயத்தைப் பொறுத்தவரை இதற்குப் பெயர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அல்ல, முன்னணியில் நின்று ஒடுக்கப்பட்டவர்கள் மீது தீண்டாமையை செய்யும் அமைப்பு என்றால் அது மிகையாகாது !! ஒடுக்கப்பட்ட அருந்ததியர்கள் அவர்களுக்கான கோரிக்கையை பல வருடங்களாக முன்வைத்து இவ்வளவு போராட்டங்களை செய்த பிறகு, ஒடுக்கப்பட்ட அருந்ததியர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக ஒடுக்கப்பட்டவர்களை அங்கீகாரப்படுத்தாமல், தன்னுடைய வெற்றியாக உரிமை கொண்டாடுவது தீண்டாமை அல்லாமல் வேறென்ன?
கம்யூனிஸ்ட் கட்சிதான் இதற்காக நிறைய போராட்டங்களை முன்னெடுத்தது என்று மீண்டும் மீண்டும் கூறுவார்கள் என்றால், நீங்கள் நடத்திய அத்துணை நிகழ்வுகளுக்கும் ஆதாரங்களைக் காட்டுங்கள். நீங்கள்தான் ஆதாரங்கள், ஆவணங்கள் காட்டுவதில் புலியாயிற்றே, இது ஒரு திறந்த சவால் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அப்படி காட்ட முடியவில்லை என்றால் இனிமேல் இவ்விடயத்தில் நீங்கள் தான் முழுமையான உரிமையாளர் என்பதுபோல பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!! நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்!!
மற்றபடி இதைப் பற்றி கருத்து தெரிவித்தும், தீர்ப்புகளை வரவேற்றும் அறிக்கை வெளியிட்டுள்ள யாவரும் இதற்காக உரிமை கொண்டாடிக் கொண்டதாகத் தெரியவில்லை. அனைவரும் இத்தீர்ப்புகளை சமூகநீதி என்று வரவேற்றுப் பாராட்டியுள்ளனர் என்றாலும், இவ் வெற்றிக்கு உழைத்தவர்களை அடையாளப்படுத்தாததும், யோக்கியர் கிருஷ்ணசாமி பற்றி பேசாமல் விடுவது ஆகிய இரண்டுமே, அனைத்து அரசியல் தலைவர்களின் சாதிய மனநிலையைத்தான் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றன!! தமிழகத்தின் வேறு எந்த விடயத்தைப் பற்றி பேசினாலும் அதற்குரிய தலைவர் அல்லது அமைப்பு அல்லது அரசியல் கட்சி என்று மிகத் தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு பற்றி பேசும்பொழுதும், எழுதும்பொழுதும், கருத்து தெரிவிக்கும் போதும், விவாதிக்கும் போதும் மட்டும் அதற்குரிய ஒடுக்கப்பட்ட அமைப்பையும், அதன் ஒடுக்கப்பட்ட தலைவரையும் அடையாளப்படுத்தாமல் மிகச் சாதாரணமாக கடந்து செல்வது ஏன் என்று அனைவரின் மனசாட்சியின் நேர்நின்று நான் கேட்கிறேன்!!அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், முற்போக்கு அமைப்புகள், அதன் தலைவர்கள் உட்பட, யாரெல்லாம் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பற்றி பேசினாலோ எழுதினாலோ, ஆதித்தமிழர் பேரவையையும், அருந்ததியர்கள் தலைவர் அதியமான் அவர்களையும் பற்றி பேசவில்லையோ, அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லையோ, அவர்களை அடையாளப்படுத்தவில்லையோ என்றால், அவர்கள் அனைவரும் சாதியவாதிகளே!! சாதிவெறி, சாதி ஆதிக்க மனநிலையில் திளைப்பவர்களே !! அதே போல அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பற்றி பேசினாலே, யாரெல்லாம் யோக்கியர் கிருஷ்ணசாமி பற்றி பேசவில்லையோ, கிருஷ்ணசாமியின் சாதிவெறி/சமூக அநீதி பற்றி தோலுரிக்கவில்லையோ அவர்களுக்கும் இது பொருந்தும் !!
இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு, கொடுமை என்னவென்றால், இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அருந்ததியர் அமைப்புத் தலைவர்களும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து, நன்றி தெரிவித்தனர். அப்போது அறிவாலயத்தில் வெளியே ஒவ்வொருவரும் ஒன்றிரெண்டு நிமிடங்கள் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தனர். அப்போது ஒரு அருந்ததியர் தலைவர் வாயிலிருந்தும் கூட "இப்போது நாங்கள் பல அமைப்புகளாக இருந்தாலும், எங்கள் தலைவர் அதியமான் ஆதித்தமிழர் பேரவை தான் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு பேரணிகள், மாநாடுகள் நடத்தியது. பேரவையின் முயற்சியால்தான் இக்கோரிக்கை வெற்றி பெற்றது" என்று வரவில்லை. இப்பேற்பட்ட குறைந்தபட்ச நேர்மை கூட அங்கே பேசிய அருந்ததியர் தலைவர்களுக்கு இல்லை. இவர்களுடைய யோக்கியதையே இவ்வாறு சந்தி சிரிக்கும் போது, வேறு யாரைப் பற்றி பேசுவது? அங்கு சென்று அவர்கள் அனைவரும் போட்ட கூப்பாடு என்பது, அடுத்த தேர்தலில் நம்மை திமுக அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அமைப்புகளின் பட்டியலில் தங்களுடைய அமைப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக போட்ட கூச்சல் கூப்பாடு தானே தவிர வேறொன்றுமில்லை!! காலக்கொடுமை!!
பட்டியல் சாதிகளில் உள் ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன், துளியும் மனசாட்சி இல்லாமல் வட மாநில தலித் தலைவர்கள் எவ்வாறு 'பார்ப்பனியத்தை' உள்வாங்கி வன்மத்தைக் கக்கியுள்ளனர் என்பது பற்றியும், தமிழ்நாட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு பற்றியும், நேர்மையுடனும் அக்கறையுடனும் சில பல உண்மைகளை எடுத்துக் கூறியும், அறம் ஆசிரியர் திரு. சாவித்திரி கண்ணன் அவர்கள் அறம் வலைதளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்!! https://aramonline.in/18758/sc-internal-reservation-dalit/
இப்போது முக்கிய பகுதி. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விடயத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கலைஞர் கூட்டிய போது, அக்கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம், ஒட்டுமொத்த அருந்ததியர்களின் ஒற்றைப் பிரதிநிதியாக அக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் அதியமான் அவர்கள் பல வருடங்களாக பலமுறை பதிவு செய்துள்ளார். கூட்டத்துக்கு வந்த பிறகு "நாங்க அம்மாவிடம் கருத்து கேட்டு வந்து சொல்கிறோம்" என்று அதிமுக பிரதிநிதிகள் கூறியதும், எவ்வாறு கிருஷ்ணசாமி "இது கருப்பு தினம்" என்று கூறி வெளிநடப்பு செய்து விட்டார் என்பதும் (ஆனால் கிருஷ்ணசாமி செயல் எவ்வளவோ நேர்மை), ஆனால் எவ்வாறு திருமா அவர்கள் தன்னுடைய உரை முழுவதும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்களை அடுக்கிவிட்டு, "ஆனால் கலைஞரின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்" என்று கையெழுத்திட்டார் என்பது வரை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைப் பற்றி பேசினால் "அதியமான் திருமாவுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்" என்ற விசிகவினர் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளும் கொந்தளிக்கின்றனர். உண்மையற்ற செய்தியை கூறுவதுதான் அவதூறு. அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன நடந்ததோ அதை அப்படியே எடுத்துக் கூறுவதற்கு பெயர் உண்மையைக் கூறுவது, அவதூறு அல்ல!!
விசிகவின் ரவிக்குமார் அவர்கள் அப்போதே வெளிப்படையாக தன் தனிப்பட்ட எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேலும், ஒவ்வொரு முறையும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விடயம் மேலெழும் போதெல்லாம் புதிரை வண்ணார்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு போராடுவார். மற்ற நேரங்களில் அச்சமூகத்தினர் பற்றி வாய் திறக்க மாட்டார். இதுவரை புதிரை வண்ணார் சமூகத்துக்காக விசிக முன்னெடுத்துள்ள கோரிக்கை செயல்பாடுகள் என்ன? கூற முடியுமா? வெறுமனே அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விடயத்தை counter செய்வதற்காக இந்த யுக்தியை பல வருடங்கள் ரவிக்குமார் கையாண்டார்.
பிறகு இவையெல்லாம் நடந்து பல வருடங்கள் முடிந்த பிறகு, 2020, 2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வந்தபொழுது, திருமா அவர்கள் இரண்டு தீர்ப்புகளையும் மனதார வரவேற்றார். சரி, இப்போது இதை சமூக நீதி என்று ஏற்றுக் கொண்டார்கள் போலும் என்று நினைத்து முடிப்பதற்குள் திருமாவும், ரவிக்குமாரும் அவர்களுடைய உள்ளூர இருக்கும் மன வன்மத்தை சிறிது சிறிதாக கக்கத் துவங்கி விட்டனர். முதலில் ரவிக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் "பாட்டியல் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படக் கூடாது" என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார். மேற்கொண்டு அந்தப் பேட்டி முழுவதுமே இருதலைக் கொள்ளி பாம்பு போல, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், ஆனால் ஆதரிக்க வேண்டிய திமுக கூட்டணி கட்டாயம் ஒரு பக்கம் என்று மனுஷன் பேட்டி முழுவதும் literally தடுமாறுகிறார் (பேட்டி link கீழே).
ரவிக்குமார் பேட்டியைத் தொடர்ந்து, திருமா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், "இந்தத் தீர்ப்பு பட்டியல் சமூகத்தினர் பிரிக்கிறது" என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். கதை முடிந்து விட்டது. இந்த தீர்ப்பு இல்லாவிட்டால் மட்டும், "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ஹோ ஹோ ஹோ" என்று பட்டியல் சாதியினர் அனைவரும் கட்டிப் பிடித்து ஆடிக்கொண்டு தான் தினந்தோறும் திரிகின்றோம் பாருங்கள்!! அடடடடா அடேங்கப்பா !! சாவித்திரி கண்ணன் அவர்கள் தலைப்பிட்டதைப் போல, வட மாநில தலித் தலைவர்களைப் போலவே பார்ப்பனியத்தை உள்வாங்கி அப்படியே வன்மத்தைக் கக்குகிறார் திருமா என்று கூறுவதற்கே வருத்தமாக இருக்கின்றது...
மிக சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் பற்றிய திருமா வழங்கிய பேட்டியில் கூட, "நான் எந்த அம்பேத்கரிய தலித் அமைப்புக்கு எதிராகவும் கருத்து கூறியதில்லை" என்று கூறிவிட்டு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தலித் தலைவர்கள் பெயரையும் குறிப்பிடுகிறார், லெட்டர் pad தலித் தலைவர்கள் உட்பட, ஆனால் தப்பியும் தவறியும் கூட ஒரு சக்கிலியர் தலைவர் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இது கண்டிப்பாக அவர் கவனமாகப் பேசியதுதான். ஆனால் இதைப் பற்றி கேட்டால் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்போது நினைவுக்கு வரவில்லை அல்லது தெரியாமல் விடுபட்டு விட்டது" என்று மிகத் தெளிவாக விளக்கம் கொடுப்பார்கள்!! இதே தலைவர் திருமா அவர்கள் மக்கள் நல கூட்டணி என்ற தேர்தல் கூட்டணியை அமைத்த போது, "தலித் முதல்வர் திருமா" வாதம் முன்வைக்கப்பட்ட போது, அக்கூட்டணியில் இருந்த போலி முற்போக்கு முகமூடி சக்திகளே ஆதரிக்கவில்லை, வெட்கக்கேடு!! இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் அப்போதும் திருமா அவர்களுக்கு முன்னணியில் நின்று "தீண்டாமை" செய்தது!! ஆனால், திமுக கூட்டணியில் இருந்து கொண்டே "தலித் முதல்வர் திருமா" நோக்கத்தை வெளிப்படையாக வரவேற்று பாராட்டி வாழ்த்தி ஆதரித்தவர் ஆதித்தமிழர் பேரவை தலைவர் திரு. அதியமான் அவர்கள்!! ஏனென்றால் பேரறிவாசான் தந்தை பெரியார் அவர்களையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் நேர்மையாக உள்வாங்கியிருக்கும் ஒரே தலைவர் அதியமான் அவர்கள் மட்டுமே!! இப்போதும், உங்கள் வன்மத்தை நீங்கள் வெளிக்காட்டிய பிறகும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலித் முதல்வர் முழக்கம் தமிழகத்தில் எழுமானால், கண்களை மூடிக்கொண்டு முன்னணியில் நின்று உங்களை ஆதரிப்பவர்கள் நாங்களாகத்தான் இருப்போம், இதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம் விடுதலை சிறுத்தைகள் "தோழர்களே"!! அது எங்களுடைய பெரியாரிய அம்பேத்கரிய படிப்பினை!! ஒரு நாளும் நாங்கள் அதை விட்டுக் கொடுக்க மாட்டோம்!!
மற்றபடி அருந்ததியர் சமூக நிலை என்ன? அவர்கள் இச் சாதிய சமூகத்தில் சாதியால், வர்க்கத்தால், ஏற்றத்தாழ்வுகளால், தீண்டாமையால், ஆணவக் கொலைகளால், சக பட்டியல் சாதியினராலேயே ஆணவக் கொலை செய்யப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களாக, அடுக்கப்பட்ட மூட்டைகளிலேயே அடி மூட்டையாக நசுங்கி, ஒடுக்கப்பட்ட கடைக்கோடி சமூகம் என்பது பற்றியோ, அவர்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமக்கின்ற இழிவுகள் பற்றியோ இங்கு எவருக்கும் வகுப்புகள் தேவையில்லை!! ஆனால் ஒவ்வொரு முறையும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பற்றிய விடயம் வரும்போதெல்லாம் துளி கூட மனசாட்சி இல்லாமல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வேண்டும், சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும், data வேண்டும்" என்றெல்லாம் கூறி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியைத் தடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இந்த நாட்டில் நடக்கும் அத்துணை அட்டூழியங்களுக்கும், கொடுமைகளுக்கும், கொடூரங்களுக்கும், அநியாய அநீதிகளுக்கும் data வைத்துக் கொண்டுதான் அவற்றை அணுகுகின்றோமா? data வேண்டுமாம், மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டுமாம், சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமாம், இதெல்லாம் ஒரு பொழப்பு!! இப்பேற்பட்ட இழிநிலையில் இருக்கும் அவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் கூடத்தான் என்ன கெட்டுவிட்டது? அவர்களுக்கு அதற்கும் மேல் உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு, இன்னும் என்னென்ன சிறப்பு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமோ அவையனைத்தும் அவர்களுக்கு கொடுக்கப்படத்தான் வேண்டும்.
திருமா அவர்களைப் பற்றி இவ்வாறு எழுத வேண்டியது குறித்து உள்ளபடியே மிகுந்த மனவேதனை படுகின்றேன்... மேலும், அருந்ததியர்கள் வாக்குகளுக்காக கலைஞர் செய்தார் என்று அவரைக் கொச்சைப்படுத்துவது மிகுந்த கண்டனத்துக்குரியது ஆகும். அப்படியொன்றும் மிகப்பெரிய வாக்கு வங்கி அருந்ததியர்களுக்கு இல்லை என்பதை அனைவரும் நன்கறிவர்!!
பேரறிவாசான் தந்தை பெரியார் அவர்களை முழுமையாக உள்வாங்கிய "கலைஞர்" என்ற அரசியல் ஆளுமை மட்டும் இல்லையென்றால், ஒரு நாளும், இன்று வரையில் கூட, இனி எத்தனை ஆண்டுகள் போராடி இருந்தாலும், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்பது சாத்தியப் படுவதற்கு வாய்ப்பேயில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியும், இதை யாராலும் மறுக்க முடியாது!! பதினேழு ஆண்டுகளுக்கு முன் அப்பேற்பட்ட கோரிக்கையை புரிந்து கொள்ளுமளவுக்கு கூட யாருக்கும் இங்கே சமூகநீதிப் பார்வை இருந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட சமூகநீதிப் பார்வை கொண்ட கலைஞர், அவருடைய தனிப்பட்ட கொள்கை முடிவாக இதை உள்ளத்தில் தீர்மானித்து, இதை நிறைவேற்றியே தீர்வது என்று தீர்க்கமான மன உறுதியுடன் செயல்பட்டு, எப்பேர்ப்பட்ட நீதிமன்றங்களாலும் தகர்க்க முடியாத வண்ணம், அத்துணை சட்ட நுணுக்கங்களையும் பின்பற்றி, அவருடைய மிக மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், அவர் மருத்துவமனையில் இருந்தாலும் இக்காரியம் தடைபடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, அப்போது துணை முதல்வராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் மூலமாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிக் காட்டினார் என்றால், இதுதான் கலைஞரின் சிறப்பு வாய்ந்த வரலாற்று சாதனைகளில் முத்தாய்ப்பானது, முதன்மையானது!! எனவே இதற்கான வெற்றியைக் கொண்டாடும் உரிமை கலைஞர் தவிர, திமுக தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாக, ஆதித்தமிழச்சியாக, உண்மையும் நேர்மையுமாக பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக அரசுக்கு ஆதித்தமிழர்களின் அழுத்தமான கோரிக்கை!!
தமிழக அரசின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை பெற்றவர்களில் சில நபர்களுக்கும் பெரியார் அம்பேத்கருக்கும் துளியும் தொடர்பில்லை. ஆனால், தமிழக அரசு ஊழியராகப் பணியாற்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும், பேராசான் மார்க்ஸையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் கொள்கைபடி நின்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆதித்தமிழர் பேரவையாக செயல்பட்டு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கையைத் தொடர்ச்சியாகப் போராடி வென்றெடுத்தது மட்டுமல்ல, இழிவொழிப்பு, சாதி ஒழிப்பு தளங்களில் செயல்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஏவப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக களத்தில் போராடி, பொதுத்தளத்தில் தமிழகத்தின் அத்துணை பிரச்சனைகளிலும் பிற அமைப்புகளுடன் கட்சிகளுடன் இணைந்து போராடி, இத்தனை ஆண்டு காலம் எங்களுடைய கண்களால் நாங்கள் காணும் வாழும் பெரியாராக, வாழும் அம்பேத்கராக, ஆதித்தமிழர்களை வழிநடத்தும் ஆதித்தமிழர் பேரவையின் மதிப்புமிக்க நிறுவனர் தலைவர் திரு. அதியமான் அவர்களைத் தவிர இந்த இரு விருதுகளுக்குப் பொருத்தமான தலைவர் தமிழகத்திலேயே, இந்தியாவிலேயே கிடையாது என்பதை ஒரு சிறு நெருடல் கூட இல்லாமல் எங்களால் உரக்கக் கூற முடியும். இத்தனை ஆண்டுகளும் அவருக்கு கொடுக்கப்படாத இந்த விருதுகள், அந்த விருதுகளுக்குத் தான் பெருமை அல்ல!! ஆதித் தமிழர்களின் இம் மனக்குறையை போக்கும் வண்ணம் இந்த வருடம் இவ்விரு விருதுகளும் தலைவர் அதியமான் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அனைவர் சார்பிலும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.
சில வருடங்களுக்கான ஆவணம்/ஆதாரம் - http://www.aathithamizharperavai.com/Achievements.html
மேற்கண்ட கோரிக்கையை அப்படியே கடிதமாக, தமிழக அரசுக்கும், முதல்வரின் இல்ல முகவரிக்கும், முதல்வர் சிறப்பு கவன மின்னஞ்சலுக்கும், முரசொலிக்கும் அனுப்பவிருக்கிறேன்.
References:
https://www.etvbharat.com/ta/!state/sc-verdict-on-arundhathiyar-reservation-is-a-victor-for-tn-struggle-says-cpim-k-balakrishnan-tns24080200762 கம்யூனிஸ்ட் கட்சி கருத்து 2024
https://www.hindutamil.in/news/tamilnadu/1288734-ramadoss-welcomes-the-supreme-courts-decision-to-grant-internal-reservation-to-scheduled-castes-1.html ராமதாஸ் அறிக்கை 2024
https://www.hindutamil.in/news/tamilnadu/572002-3-internal-allocation-for-arundhati-community-welcome-by-tamil-nadu-political-party-leaders-3.html - அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து 2020
https://www.youtube.com/watch?v=xBgp2dE5Ys8 ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்களின் பேட்டி 2024
https://www.youtube.com/watch?v=bXMckernBFI திருமா - தீர்ப்பு பிளவு ஏற்படுத்தும் - தந்திடிவி பேட்டி
https://www.youtube.com/watch?v=M8lAtop2VXg விசிக ரவிக்குமார் புதியதலைமுறை பேட்டி - மாநில அரசுக்கு உரிமை கூடாது
https://www.youtube.com/watch?v=dS_8x0veOQU திருமா - ஆம்ஸ்ட்ராங் பேட்டி
https://www.scobserver.in/wp-content/uploads/2021/09/Written-Submissions-by-Sr.Advocate-Shekhar-Naphade.pdf - Senior Adv Shekhar Naphade written argument
- தேன்மொழி