இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது தலித் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்த தீர்ப்பாகும். அப்படி சட்டப்படி உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய சாரம்சமாகும்.
ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் மட்டுமே உள் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மீதி ஆறு பேரும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதில் மூன்று நீதிபதிகள் உள் இட ஒதுகீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தாலும் எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு நீதிபதி மட்டும் முதல் தலைமுறையாகப் படிக்க வருகிறவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மற்ற மூன்று நீதிபதிகள் இப்போது உள்ள நடைமுறையிலேயே உள் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆந்திர மாநில அரசு தலித்துகளுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்கியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது. அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பை தான் தற்போது செல்லாது என்று ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை திராவிடர் விடுதலைக் கழகம் முழுமனதுடன் வரவேற்கிறது.
இந்தத் தீர்ப்பில் சில முக்கிய கருத்துகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை, குடியரசுத் தலைவர் 341வது அதிகாரத்தின் படி பட்டியல் சமூக மக்களின் பட்டியலை அவர் தயாரிக்கிறார். எனவே குடியரசுத் தலைவர் தயாரிக்கிற அந்தப் பட்டியலில் கைவைக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்பதுதான் ஏற்கனவே சொல்லப்பட்ட வாதம். ஆனால் குடியரசுத் தலைவர் தயாரிக்கிற பட்டியலில் வெவ்வேறு ஜாதிப் பிரிவினரும் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறார்கள் என்பதை அந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு ஜாதிக்கு இடையிலும் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கிய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. பட்டியலில் உள்ள அனைத்து ஜாதிகளும் ஒரே தன்மையில் இல்லை. அதனால் இதனைச் சரி செய்ய வேண்டுமென்றால் மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது முதல் கருத்து.
பட்டியல் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் தனித்தன்மைகள் இருப்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது கருத்து. குடியரசுத் தலைவருக்கு பட்டியல் தயாரிக்கும் உரிமை உள்ளதே தவிர இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமை கிடையாது.
ஏற்கனவே 2005ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிமை இருக்கிறது என்ற தவறான ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தற்போது உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. உள் ஒதுக்கீடு வழங்கும் போதும் கூட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் வழங்க முடியாது எனவும், அதற்கான தரவுகள், அந்தச் சமூகத்தின் நிலைமை உள்ளிட்டவைகளைக் கணக்கில் வைத்து தான் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் 2009ஆம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக பஞ்சாப், ஆந்திரா அரியானா உள்ளிட்ட மாநிலங்களும் பட்டியல் பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு முறையை கொண்டு வந்தன. இப்போது தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் இந்த வழக்கை நடத்திவருகிறது. ஒன்றிய அரசின் சார்பிலும் நாங்கள் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உள் ஒதுக்கீடு தலித் ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்ற வாதத்தை முன்வைத்து சில தலித் அமைப்புகள் நீதிமன்றம் சென்றனர். அந்த வாதத்தைத் தற்போது உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. சமூகநீதி என்பது காலத்தின் தேவைக்கு ஏற்ப ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு.
- விடுதலை இராசேந்திரன்