கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 குறும்படங்கள் எனப்படும் இணை திரைப்படங்கள், இணையற்ற திரைப்படங்களாக மாறிவரும் காலம் இது.குறும்படங்களை உருவாக்குவதிலும் பார்ப்பதிலும் இருக்கின்ற அளவற்ற சுதந்திரமும், அப்படங்கள் கொண்டிருக்கும் கருத்தியல் குவியமும் பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்கின்றன. தமிழில் ஆவணப்படங்களாகவும், குறும்படங்களாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை வெளியாகியுள்ளன.சாதியின் கொடூரத்தையும், அதன் அடக்குமுறை வடிவங்களையும் சொல்கின்ற பல்வேறு ஆவணப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. "தீண்டத்தகாத இந்தியா', "ஒரு நதியின் மரணம்', "பீ', "ராமைய்யாவின் குடிசை' என அவற்றுள் சில உடனே நினைவிலாடுகின்றன. ஆனால் குறும்படமாக வந்தவை மிகக் குறைவுதான். "ஊடாக' "ஒரு கண் ஒரு பார்வை' என சில படங்கள்தான் நினைவுக்குத் தட்டுப்படுகின்றன. இவ்வரிசையில் அண்மையில் "நடந்த கதை' எனும் குறும்படம் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அழகிய பெரியவன் எழுதிய "குறடு' என்ற சிறுகதையை குறும்படமாக பொன். சுதா இயக்கியிருக்கிறார். இப்படத்தை "நண்பர்கள் திரைக்குழும'த்திற்காக அருள் சங்கர் தயாரித்துள்ளார். இக்குறும்படத்தின் ஒளிப்பதிவினை ராசாமதியும், படத் தொகுப்பை ஏ.எல். ரமேசும் செய்திருக்கின்றனர். இசை, மரியா மனோகர். இத்தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே திரைப்படத் துறையில் முன்னணியில் இருப்பவர்கள். இப்படத்தில் ஒலிக்கும் கதைச் சொல்லியின் குரல் அறிவுமதியுடையதாகும். உணர்வெழுச்சி மிக்க அவருடைய குரல், இப்படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. படத்தின் கதாபாத்திரங்களாக வரும் எல்லாருமே அசலான கிராமத்து மனிதர்கள்.

தமிழகத்தில் இன்றும் நிலவி வரும் சாதிய கொடுமைகளில் ஒன்றான, தலித் மக்கள் செருப்பு போடுவதற்கு இருக்கும் தடையை இக்குறும்படம் சித்தரிக்கிறது. 26.7.2009 அன்று பேரணாம்பட்டிலும், 8.8.2009 அன்று சென்னையிலும் இக்குறும்படத்தின் அறிமுக விழாக்கள் நடைபெற்றன. அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே கேளம்பாக்கம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியிலும் திரையிடல்கள் நடந்தன. மக்களிடையே பரவலாக இப்படத்தைத் திரையிடுவதற்கு தோழர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இக்குறும்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும், "இன்னும் எத்தனை காலத்துக்குதான் சாதிய கொடுமைகளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?' "செருப்பணிவதற்குத் தடை இருந்ததெல்லாம் முன்பு. இன்று அந்த நிலைமைகள் மாறிவிட்டன. எனவே, இக்காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாக இப்படம் இருக்கிறது' என்றெல்லாம் எதிர் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

சென்னையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவில் "விடுதலை' ராசேந்திரன், சிவகாமி, எஸ். ராமகிருஷ்ணன், சசி, அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். சாதி ஒழிப்புப் போரை யார் முன்னின்று நடத்த வேண்டும் என்ற விவாதம் அவ்விழாவிலே எழுந்தது. அவ்விழாவின் சுருக்கமான உரைத் தொகுப்பு :

"விடுதலை' ராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் : ""கலை நுட்பத்தையும், ஆழமான உணர்ச்சிகளையும் கொண்டு வெளிவந்துள்ள இக்குறும்படம், என்னுள்ளே மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. மக்கள் மத்தியிலும் இது தாக்கத்தை உருவாக்கும். "வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகளை என் பேரனுக்குச் சொல்ல வேண்டும்' என இப்படம் சொல்லும் செய்தி மிக முக்கியமானது. இன்றளவிலும் இந்திய கிராமங்களில் சாதிய கொடுமைகள் பரவலாக நடக்கின்றன. செருப்பு, எச்சில், துடைப்பம், துண்டு போன்றவைகளெல்லாம்கூட சாதியத்தின் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன. செருப்பு தைக்கிறவருக்கே அதை அணிய முடியாத நிலையும், பிணத்துக்கு குழி வெட்டுகிறவருக்கே அச்சுடுகாட்டில் பிணம் புதைக்க உரிமையில்லாத நிலையும் இந்தியாவில் இருக்கிறது. திண்டுக்கல், சேலம், தேனி, போன்ற இடங்களில் இரட்டைக் குவளை முறை இன்றும்கூட நிலவுகிறது. சாதித் திணிப்பில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களும், ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும் – சாதியை ஒழிப்பதற்கான போருக்கு தலைமையேற்று நடத்த முதலில் முன்வர வேண்டும். "உங்கள் தொண்டர்களை கதர் அணியச் சொன்ன நீங்கள், தீண்டாமையை ஒழிக்க பணியாற்றும்படி ஏன் வலியுறுத்தவில்லை' என்று காந்தியைப் பார்த்து அம்பேத்கர் கேட்டார். தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் தமது கட்சியில் இருக்கக் கூடாது என்று அரசியல் அமைப்புகள் அறிவிக்குமானால், சாதி பெருமளவுக்கு ஒழிந்து விடும். சாதி ஒழிப்புப் போரில் களமிறங்கிப் பணியாற்றி வரும் அழகிய பெரியவன் போன்ற இளைஞர்களை நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.''

எழுத்தாளர் ப. சிவகாமி : ""இந்தக் குறும்படத்தில் ஒரு காட்சி வருகிறது. மேல் தெருவில் காலணி அணிந்து நடப்பதற்குத் தடை செய்யும் ஆதிக்கச் சாதிக்காரர்களைப் பார்த்து கதாநாயகன் சொல்கிறான் : என்னைத் தடுப்பவர்களை நான் சுட்டு வீழ்த்துவேன் என்று. அப்போது இந்த அரங்கிலே கைத்தட்டல் எழுந்தது. அதை ஏற்கிறீர்களா? படத்தில் அதை ஏற்கிறீர்கள் என்றால், எதார்த்தத்தில் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? தலித் மக்களுக்கான விடுதலைக்குப் போராட காலங்காலமாக தலித்துகள்தான் முன்வருகிறார்கள். உண்மையில் சொல்லப் போனால், பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் தலித் விடுதலைக்குப் போராட முன்வர வேண்டும். ஆனால் இங்கு அது நடக்கவில்லை. ஒரு கையில் விஷ விதைகளையும், ஒரு கையில் விழிப்புணர்வையும் ஏந்திப் பேசும் சமூகப் புரட்சியாளர்கள்தான் உள்ளனர். அவர்கள் வெட்கமின்றி தலித் மக்களையே போராட அழைக்கின்றனர். தலித்துகளின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று செல்லி இன்று பல அமைப்புகள் இருக்கின்றன. வெளி நாடுகளில் பணம் திரட்டி,அவற்றில் பலவற்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தலித் விடுதலைக்கு யாரும் பிச்சை போட வேண்டாம்.

தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட ஆட்சி தலித் மக்களுக்காக செய்தது என்ன? நிலப் பங்கீடு உண்டா? சிறப்பு உட்கூறுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? தலித் மக்கள் வரி கட்டுவதில்லையா? ஒழுங்கான நிதிப் பங்கீடு இருக்கிறதா? சாதி நடைமுறைகளை ஒழித்தால் மட்டும் போதாது. இங்கு பொருளாதார சமத்துவமும், சமூக சமத்துவமும் வர வேண்டும்.''

இயக்குநர் சசி : ""ஒரு முழு நீள திரைப்படத்திற்குக் கூடவராத கூட்டம் இங்கு வந்திருக்கிறது. தனக்குப் பிடித்த விசயத்தை மக்களுக்குப் பிடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன். சுதா. சாதி, தீண்டாமைக் கொடுமையை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல அவர் எடுத்துக் கொண்ட முயற்சியையும், துணிச்சலையும் பாராட்ட வேண்டும். இப்படத்திற்கும், முயற்சிகளுக்கும் விதையாக இருக்கும் அழகிய பெரியவனை எல்லோரும் பாராட்ட வேண்டும்.''

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் : ""ஒரு கலைப் படைப்பு, வாசகனின் பார்வையாளனின் மனதில் உடனடியாக என்ன அதிர்வை ஏற்படுத்துகிறதோ, அதுவே அப்படைப்பின் உடனடி வெற்றி. அவ்வகையில் இப்படம் போதிய தாக்கத்தைப் பார்த்தவுடனே உருவாக்குகிறது. செருப்பு வெறும் பொருளல்ல. அது ஓர் ஆயுதம். அமெரிக்கர்கள் இன்று அதிகம் பயப்படுவது செருப்புக்குத்தான். அவுரங்கசீப்பின் செருப்பு டெல்லியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டபோது இந்திய மன்னர்கள் பலரும் பயந்து, அதை வணங்கி, தமது நாட்டையே விட்டுக் கொடுத்தனர். பாண்டிய மன்னன் ஒருவன் மாத்திரமே அதை காலில் அணிந்து கொண்டு, இன்னொரு செருப்பை எடுத்து வரச் சொல்லி வீரத்தோடு கேட்டான். செருப்பு வெறும் செருப்பல்ல; அது ஆதிக்கத்தின் குறியீடாகவும், எதிர்ப்புணர்வின் குறியீடாகவும்கூட இருக்கிறது. ஆதிக்கத்தின் பிடியில் மக்கள் படும் அவலங்களை நமது வரலாறுகளோ, பாடநூல்களோ சொல்வதில்லை. திரைப்படம் கண்டு

பிடிக்கப்பட்டபோது டால்ஸ்டாய்க்கு 81 வயது. அதன் முழுமையைப் புரியாமலேயே டால்ஸ்டாய் அன்றே சொன்னார், ""சினிமா செல்வந்தர்களின் கையில் இருக்குமானால், தனது கலைத் தன்மையை அது இழந்து விடும்'' என்று. இப்படம் அழகாகவும் நேர்த்தியாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.''

தொடர்புக்கு: பொன்.சுதா

பேசி: 94443 24316