இந்தியா ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஊழலுக்கு எதிராக பக்கம் பக்கமாக பத்திரிகைகள் எழுதிக் குவித்தாலும், ஊழல் குறைந்தபாடில்லை. ஊழல் இல்லாத ஒரு துறையே இல்லை என்ற அளவுக்கு அது நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஊழல்மயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நிர்வாகத்துறை, அரசியல் துறை என்ற அதிமுக்கியத் துறைகள் எந்தளவுக்கு ஊழல்மயமாகியுள்ளன என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், நீதித்துறையும் பத்திரிகைத் துறையும் இதே அளவுக்கு ஊழல்மயமாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக, பத்திரிகை மற்றும் ஊடகத் துறை எந்தளவுக்கு ஊழல்மயமாகி விட்டன என்பதை ஆதாரங்களுடன் "தி இந்து', "அவுட்லுக்' போன்ற ஏடுகள் அட்டைப்படக் கட்டுரைகளாகவே வெளியிட்டுள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன் அவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டவுடன் – இங்குள்ள பார்ப்பன ஏடுகளும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும், அவர் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாகவும், அதனால் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நீதிபதி பி.டி. தினகரன் நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்; இரண்டு ஆண்டுகளாக கர்நாடக மாநில தலைமை நீதிபதியாகப் பணிபுரிகிறார். அப்போதெல்லாம் அவர் மீது குற்றம் சுமத்தாத இவர்கள், அவருடைய பெயர் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டவுடனேயே அவர் மீது அவதூறுகளை வீச வேண்டிய தேவை என்ன?

இன்னும் ஒரு படி மேலே சென்று, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (பா.ஜ.க. – சி.பி.எம். உள்ளிட்ட) அவர் மீது "இம்பீச்மென்ட்' (பதவி நீக்கம் செய்யும்) தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 124 (4) பின்வருமாறு கூறுகிறது : " A Judge of the Supreme Court shall not be removed from his office except by an order of the President passed after an address by each House of Parliament supported by a majority of the total membership of that House and by a majority of not less than twothirds of the members of that House present and voting has been presented to the President in the same session for such removal on the ground of proved misbehaviour or incapacity."

ஒரு நீதிபதி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை இரு அவைகளிலும் விவாதித்து, மொத்த உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்த பின்பே, நடத்தை தவறானது என்றாலோ, லஞ்சம் வாங்கினார், ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டார் என்றோ, திறமையற்றவர் என்றோ சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருந்தால்தான் – அவரை நீக்க முடியும். ஆனால் அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே அவரை நீக்குவதற்கு இவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். மேலும், இவர் நீதிபதியான பிறகோ, தலைமை நீதிபதியான பிறகோ ஏதாவது சொத்து வாங்கி சேர்த்துள்ளாரா என்ற கேள்விக்கு, எந்த ஆதாரத்தையும் அவதூறுவாதிகளால் முன் வைக்க முடியவில்லை.

ஊழலை நாம் நியாயப்படுத்தவில்லை. நீதித்துறையும் அரசும் அதற்கான உண்மைகளைக் கண்டறியட்டும். ஆனால் அதற்கு முன்பு இவர்களே நீதிமன்றங்களாகி, தீர்ப்புகளை சொல்ல வேண்டிய தேவை என்ன? இதற்கு முன்பும் பல நீதிபதிகள் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும்; அண்மைக் காலத்தில் நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது மிகப் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருந்தபோதும் – அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்த நியாயவான்கள் வலியுறுத்தவில்லையே!

குஜராத் இனப்படுகொலைக்கு முதன்மைக் காரணமான நரேந்திர மோடி முதலமைச்சராக தொடர்ந்து நீடிக்க – இந்த சமூகமும்/பத்திரிகையும் இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது. கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று எவரும் சொல்ல முன்வரவில்லை. இன்றைக்கு சட்டமன்ற/ நாடாளுமன்ற/ அமைச்சர்களாக/ முதல்வர்களாக இருக்கக் கூடியவர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் – அவர்கள் பதவியில் நீடிக்க வாய்ப்பளிக்கப்படும்போது, நீதிபதி தினகரன் மட்டும் பதவியில் இருக்கவே கூடாது என்ற அளவுக்கு ஒரு நிர்பந்தத்தை சுமத்துவதற்கு, அவர் தலித் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இந்தியாவின் ஏற்றத் தாழ்வான – படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்புதான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. சொத்தும் அதிகாரமும் சமமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு சாதி அமைப்பே காரணமாக இருக்கிறது. ஊழலை எதிர்க்கின்ற எவரும் ஜாதியை எதிர்க்க முன்வராதது ஏன்? சாதி ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்ய முன்வராமல், அதன் வெளிப்பõடான ஊழலை மட்டும் ஒழிக்க முனைவது எந்தப் பலனையும் தராது

 

Pin It