neet scam 400நீட் தேர்வு முறைகேடு நம்ம மாவட்டத்திலிருந்து அம்பலமாகி இருக்கிறதே என்ற ஆர்வக்கோளாறில் அச்செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள விசாரணையில் இறங்கிய போதுதான் எதிர்பார்க்காத இந்த செய்தியும் கிடைத்தது.

இந்த மோசடி கசியத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில், மொத்தத்தையும் மூடி மறைப்பதற்கு தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் சில ஊடக செய்தியாளர்கள் 15 லட்சம் வரை பேரம் பேசியதாக ஒரு செய்தி அடிபட்டது. “தலைமுறை செய்தியைத் தாங்கி வரும்” ஊடகத்தின் நிருபரை நேரடியாக குற்றம் சாட்டுகிறது அந்த செய்தி! அதுவும் பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்கள் அங்கம் வகிக்கும் “தேனி மாவட்ட செய்தி” என்ற வாட்ஸ்-அப் குரூப்பிலேயே அச்செய்தி உலவுகிறது! பிற குரூப்புகளிலும் இது வேகமாகப் பரவி வருகிறது.

செய்தியை வெளியிட்டிருப்பவரும் சக நிருபர்தான் என்பதால் இது முற்றிலும் பொய்யானதாக இருக்க வாய்ப்பில்லை. இந்த பேரத்தில் மேலும் இரு செய்தி சேனல்களையும் இணைத்தே பிற நிருபர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது!

இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து மறுப்போ, எதிர்ப்போ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் ஹைலைட்! இது உண்மையா பொய்யா என அறுதியிட்டு நம்மால் கூற முடியாவிட்டாலும், இப்படி ஒரு முயற்சி நடந்துள்ளது என்ற அளவில் நிச்சயமாக நம்பலாம் என்றே தோன்றுகிறது.!

இந்த முறைகேட்டை முதன்முதலில் ஈ-மெயில் மூலம் கல்லூரிக்குத் தெரிவித்த நபர் யார்? அவருக்கு எப்படி இந்த முறைகேடு தெரிய வந்தது? அந்த நபரிடம் ஏன் இன்னும் போலீசு விசாரணையைத் தொடங்கவில்லை? ஈ-மெயில் மூலம் கிடைத்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் விசாரணை நடத்திய தகவல் எப்படி.. யாரால்.. ஊடகங்களுக்குக் கசிந்தது? இக்கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மேற்கண்ட 15 லட்சம் பேரத்திற்கும் விடை கிடைக்கும் என்கிறார்கள் சில நேர்மையான நிருபர்கள்!

“கொடுமை.. கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு இருந்துச்சு” என்பார்களே அது இதுதான் போல!

- தேனி மாறன்

Pin It