சென்ற இதழ் தொடர்ச்சி

பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் மறைவிற்குப் பிறகு 1984ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்த பெரும்பான்மையோடு காங்கிரசு ஆட்சியை ஒன்றிய அரசில் அமைத்த பிரதமர் ராஜிவ் காந்தி மீது, 1986ஆம் ஆண்டு போபர்சு பீரங்கி ஊழல் வெடித்துக் கிளம்பியது. இந்தியாவின் இளைய பிரதமர் பொருளாதாரத்தைப் புதிய பாதையில் எடுத்துச் செல்வார் என்ற பெரும் நம்பிக்கையை வைத்திருந்த ஊடகங்களுக்கும மக்களுக்கும் இது மாபெரும் அதிர்ச்சியாக முடிந்தது. காங்சிரசு அரசின் இந்த ஊழலின் பரிமாணங் கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக, எல்லா வகையிலும் தீவிர முயற்சிகளை தில்லி அதிகார வர்க்கம் மேற்கொண்டது. இந்த ஊழலில் பெரும் பங்கு வகித்த சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருங்கியவரும் இத்தாலியருமான தரகர் குவத் ரோச்சி போபர்சில் கிடைத்த லஞ்சப்பணத்தை சுவிசு வங்கியில் இரண்டு கணக்குகளைத் தொடங்கி ஏறக்குறைய 210 கோடி ஊழல் பணத்தைப் போட்டார் என்ற குற்றாச்சாட்டுகள் எழுந்தன.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவீடன் வானொலி போபர்சு பீரங்கிககளை வாங்கியதில் அரசியல்வாதிகள், இராணுவத்தினர், தரகர்கள் ஈடுபட்டு ஊழல் செய்தனர் என்று சுட்டி இதன் தொடர்பான ஆவணங்களைச் செய்திகளாக வெளியிட்டது. இந்தச் செய்திதான் இந்தியா வில் பெரும் பூகம்பமாக மாறியது. இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் இந்து நாளேட்டில் பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் வெளியிட்டுச் செய்தி ஊடகத்தின் கதாநாயகியாகவே போற்றப்பட்டார். கருவுற்ற நிலையில் இருந்த சித்ரா சுப்ரமணியம் பல அல்லல்களையும் துன்பங்களையும் இந்தச் செய்தியை வெளியிட்டதற்காகத் தான் சந்திக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். யார் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவோ மற்ற பிற காரணங்களுக்காகவோ, இந்து நாளேட்டின் அன்றைய ஆசிரியர் ஜி.கஸ்தூரி இந்து நாளேடு அடக்கி வாசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு இந்து ராம் உட்படத் துணை போயினர். இதன் காரணமாக சித்ரா சுப்ரமணியம் “இந்து”வில் இருந்து விலக நேரிட்டது.

போபர்சு பீரங்கி ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் எதிர்கட்சிகளால் எழுப்பப்பட்டன. பல முறை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த போபர்சு ஊழலைப் பற்றி ஒரு நாடாளுமன்ற கூட்டுக்குழு காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் பி.சங்கரானந்த் தலைமையில்  விசாரிக்கும் என்று, 1987 ஆகஸ்ட் மாதம் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் அறிவித்தார்.

இந்தக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் காங்கிரசு உறுப்பினர்களாக இருப்பதால் நாங்கள் இடம் பெற விரும்பவில்லை என்று, எதிர்கட்சியினர் அறிவித்த னர். 1984ஆம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றதால்  கூட்டணிக் கட்சியின் உறுப்பினராக இருந்த ஆலடி அருணாவை இக்குழுவில் நியமித்தனர். 50 முறை கூடி, இக்குழு தனது அறிக்கையை 1988 ஏப்ரலில் அளித்தது.

1987ஆம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராஜிவ் காந்திக்கும் இந்திய இராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பியது தொடர்பாக பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. இக்காலக்கட்டத்தில் கூட்டுக் குழுவின்  விசாரணை நடைபெற்ற போது அதிமுகவின் சார்பாக ஆலடி அருணா இடம் பெற்றிருந்ததால், இந்த ஊழல் பற்றி எம.ஜி.ஆர். விசாரித்துள்ளார். மறைந்த திரு.ஆலடி அருணா நாடாளுமன்றக் கூட்டுக்குழவிற்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் பல முரண்பாடுகள் உள்ளன என்று தெரிவித்து ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் எம்.ஜி.ஆரிடம் குறிப்பிட்டார். உடலநலம் பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தனது கை செய்கையின் வழியாக ராஜிவ் காந்தியை தப்பிக்கவிட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக ஆவணங்களில் குறிப்பிட்ட பல கருத்துக்களை நூறு பக்கங்கள் அளவிற்கு மேல் தனது கைகளால் குறிப்புகள் எடுத்ததாக திரு.ஆலடி அருணா இக்கட்டுரையாசிரியரிடம் குறிப்பிட்டார். இந்தக் குறிப்புகளின்படிதான் மீண்டும் இந்து நாளேடு தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக இரகசியமாக சில ஆவணங்களில் உள்ள கருத்துக்களை வெளியிட்டது. போபர்சு ஊழலை வெளிக்கொண்டு வந்த முழுப்புகழும் சித்ரா சுப்ரமணியத்தைச் சேர்ந்துவிடக்கூடாது என்ப தற்காக வெளியிட்டதாகப் பல விமர்சனங்கள் வந்தன.

போபர்சு ஒப்பந்தம் சுவீடன் நிறுவனத்திடம் இந்தியா கையொப்பமிட்டபோது. உலப் பாமே (Olof Palme) சுவிடனின் பிரதமராக இருந்தார். ஈராக்-இரான் போரின் போது இரு நாடுகளுக்கும் இராணுவத் தளவாடங்களை அனுப்புவதற்கு அனுமதி அளித்தது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.  இராணுவத் தரகர் இவரைச் சந்தித்த பிறகு, பாமே திரைப்படம் பார்த்துவிட்டு தனது மனைவியுடன் வெளிவந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது போபர்சு வழக்குடன் தொடர்புபடுத்தி அண்மையில் பல கருத்துகள் வெளிவந்துள்ளன.

போபர்சு ஊழலில் இவர் சம்பந்தப்பட்டிருந் தார் என்று அப்போது தயாரிக்கப்பட்ட இரகசிய ஆவணங் களின் குறிப்புகள் 2017இல் வெளிவந்துள்ளன. இந்திய அரசின் சார்பில் குறிப்பாக காங்கிரசு ஆட்சிக்காலத்தில் இந்த  விசாரணையை மறைப்பதற்கு கடைசிவரை ஒன்றிய அரசின் காவல் புலனாய்வு துறையின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. குத்ரோச்சியைக் கைது செய்ய முடியவில்லை. 2013 குத்ரோச்சி மறைந்துவிட்டார். இதைப் பற்றி ஒன்றிய அரசின் காவல் புலனாய்வுத் துறையில் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த பி.ஆர்.லால் ஒன்றியப் புலனாய்வு துறை யாருக்குச் சொந்தம் (Who owns CBI) என்ற தனது நூலில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். புலனாய்வுத் துறையின் உண்மைகள் சில மனிதர்களை அடையாளம் காட்டினாலும் அவர்களை  விசாரிக்கக்கூடாது.

புலனாய்வு விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் அல்லது திசையை மாற்ற வேண்டும் அல்லது நடவடிக் கைகளைக்  கைவிட வேண்டும். காலப்போக்கில்  வழக்கி னைச் சாகடித்துவிட வேண்டும் என்பதுதான் புலனாய்வுத் துறையில் எழுதப்படாத சட்டமாக உள்ளது (The unwritten rule was that certain persons were not to be touched and if the line of investigation reached them, the investigation should be diluted, diverted or dropped and scuttled in due course, p.18) என்று குறிப்பிட்டுள்ளார்.

2017 ஜனவரி 25ஆம் நாள் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு (CIA) தனது கமுக்க அறிக் கைகளைப் பொது மக்களின் பார்வைக்காக  வெளியிட்டுள்ளது. இது போன்று வெளியிடுவது அமெரிக்க அரசின் வழக்கம். 2017 அறிக்கையில், புலனாய்வு அமைப்பு, 1988இல் பிரதமர் ராஜிவ் காந்தி சுவீடனுக்குச் சென்று இந்த ஊழல் தொடர்பாக எந்தச்  செய்திகளும் அரசின் சார்பாக வெளியிடக்கூடாது என்று சுவீடன் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார். இதனை அரை மனதோடு ஏற்றுக்கொண்டு சுவீடன் அரசு இது தொடர்பான ஆவணங்களையும் செய்திகளை மறைத்து விட்டது. மேலும் இதன் தொடர்பான விசாரணையையும் நிறுத்திவிட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் போபர்சு ஊழல் உறுதியாக  நடைபெற்றது. அதற்குரிய ஊழல் பணத்தை நேரடியாகவோ மறை முகமாகவோ அரசு உயர் அதிகாரிகளிடமும் தரகர்களிடமும் அளித்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறுதான் உயர் பதவியில் இருப்பவர்கள் ஊழல்கள் பன்னாட்டு அளவிலேயே மறைக்கப்படுகிறது என்பதற்கு அண்மையில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையே சிறந்த சான்றாகும்.

ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது திரு.வி.பி.சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். நிதியமைச்சராக இருந்த நேரத்தில் வருமான வரி ஏமாற்றுதல் அந்நியச் செலாவணி மோசடி செய்தல் போன்ற நாட்டு விரோத குற்றங்களைத் தீவிரமாக ஆய்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டார். இவரின்  நூறு விழுக்காட்டு நேர்மையை ராஜிவ் காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவரைப் பாதுகாப்பு அமைச்சராக ராஜிவ் காந்தி மாற்றினார். பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது மேற்கு ஜெர்மனியிடம் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியபோது நடைபெற்ற பேரங்களில்  ஊழல்கள்  இருப்பதாகக் கண்டறிந்து, ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைக்கு  உத்தரவிட்டார். இதன் காரணமாக அவர் காங்கிரசுக் கட்சியிலிருந்தும் அமைச் சரவையிலிருந்தும் விலக நேரிட்டது.

தேசிய முன்னணி ஆட்சி அமைந்த பிறகு 1990இல் பிரதமர் வி.பி.சிங் புலனாய்வுத் துறையின்  ஆய்வில் பல திருத்தங்களும் மோசடிகளும் நடைபெற்றுள்ளதை அறிந்து மீண்டும் புதியதாக விசாரிக்க உத்தரவிட்டார். வி.பி.சிங் பிரதமராக ஓரண்டிற்கு மேல் நீடிக்க முடியாத காரணத்தினால் இந்த ஊழல் தொடர்பான  விசாரணையும் புதைக்கப்பட்டது.

1991இல் பிரதமர் நரசிம்மராவ் பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக  ஊழல்கள் நடந்தன என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால்  கூறப்பட்டது. உர ஊழல், உறுகாய் ஊழல், செயின்ட் கிட்ஸ் ஆவண மோசடி என வழக்குகள் பதியப்பட்டன. இவ்வழக்குகளில் சாமியார் சந்திராசாமி மாமாஜி என்றழைக்கப்பட்ட அகர்வால் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சுப்ரமணியசாமியும் சந்திராசாமி யும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் முக்தி மோட்சாவைப் பிளந்து தனது சிறு பான்மை அரசிற்கு  ஆதரவு தேட அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்குப் பணமளித்ததற்கான வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இருந்தும் இந்த வழக்கிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்திய ஊழல் வரலாற்றிலேயே ஒரு புதுமையான ஊழல் என்பது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பங்குச் சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா நடத்திய பெரும் பண மோசடி ஊழலாகும். 1992இல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ரூ.40 முதலீட்டில் பங்குச் சந்தை தரகராக வணிகத்தைத்  தொடங்கிய மேத்தா, சில ஆண்டுகளி லேயே 5000 கோடி அளவிற்கு ஊழலையும் பண மோசடியையும் செய்தார். அவர் செய்த பங்குச் சந்தை மோசடியில் பெரும்பாலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கள்தான் பண இழப்புக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாயின. சில பங்குச் சந்தை ஆவணங்களை வைத்துப் பெரு மளவில் கடன்களைப் பெறுவதும், பிறகு அதே சான்றி தழ்களை உயர்ந்த மதிப்பிற்கு மற்றொரு வங்கியில் காண்பித்து மீண்டும் கடன் வாங்குவதும், இதன் காரணமாக பங்குகளின் மதிப்பைப் போலியாக உயர்த் திக் காட்டுவதும் இவரின் ஊழல் ஜால வித்தைகளில் ஒன்றாகும்.

சான்றாக பங்குச் சந்தை வரலாற்றிலேயே இடம் பெறாத அளவிற்கு மும்பை பங்குச் சந்தை குறியீட்டு அளவினைப் பல்லாயிரம் அளவிற்குப் போலியாக உயர்த்தி ஒரு வியப்பை உருவாக்கினார். இவரது நிறுவனத்தில் மற்ற நிறுவனங்களின் பங்குகளை இணைத்தால் பங்குகளின் மதிப்பும் இலாபமும் பெருகும் என்று எண்ணிப் பல முக்கிய வணிக அரசியல் புள்ளிகளும் அவரது நிறுவனத்தில் பங்கு பெற்றனர். குறிப்பாக ப.சிதம்பரமும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு வேடிக்கையான நிகழ்வும் உள்ளது. அன்றைய நிதியமைச்சராக இருந்த பொருளாதார நிபுணர் என்று போற்றப்பட்ட மன்மோகன் சிங்கை ஹர்ஷத் மேத்தா சந்தித்தார். அப்போது மன்மோகன் சிங் பங்குச் சந்தையின் பங்குகளின் மதிப்பை உயர்த்தியதைப் போல இந்தியாவின்  பொருளாதாரத்தின் வளர்ச்சியை எவ்வாறு உயர்த்தலாம் என்று ஆலோசனை கேட்டார் என்பதை அன்றையச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. பங்கு சந்தை சரிவும் ஹர்ஷத் மேத்தா மோசடி வெளிவரும் காலத்தில் பிரதமர் நரசிம்மராவ்  அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாயை காங்கிரசு கட்சிக்கு நிதியாக அளித்தேன்; என்னை ஒன்றிய அரசு பாதுகாக்கும் என்று நம்புகிறேன் என்றும் மேத்தா குறிப்பிட்டார். இந்த வாக்குமூலத்தை வெளிப்படையாகவே 1993இல் ஹர்ஷத் மேத்தா வெளியிட்டார். இந்த மோசடி வழக்கில் தேசிய வங்கிகளின் பல உயர் அலுவலர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இத்தகைய பெரும் பங்குச்சந்தை மோசடியை  மேற்கொண்ட மேத்தாவிற்கு  மும்பை நீதிமன்றம் ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் 25000 தண்டத்தையும் 1999இல் அளித்தது. 2001இல் சிறையிலேயே இறந்துவிட்டார்.

ஒன்றிய அரசின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் ஐதராபாத்  நிறுவனத்திற்கு 30 கோடி மதிப்பிலான தொலைத் தொடர்பு சாதனங்களை அளிப் பதில் சலுகை அளித்து மூன்று இலட்சம் ரூபாய்  லஞ்சம் 1996இல் பெற்றார்  என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2011இல் ஐந்து ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததால் இவர் சிறையிலடைக் கப்பட்டார். விசாரணை நீதிபதி பாண்டே பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகள் நேர்மைக்கு மாறாகச் செயல் படக் கூடாது அப்படிச் செயல்பட்டால் அவர்கள் தண்ட னைக்கு உள்ளாவார்கள் என்பதை இந்த நீதிமன்றம் உறுதிபடுத்துகிறது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளார். இவரும் நீதிபதி மைக்கேல் டி.குன்காவிற்கு  முன்னோடியாகவே மிக உயர்ந்த பதவியில் இருந்த  ஒன்றிய அரசின் அமைச்சரை வயது 86 கடந்தவர் என்பதையும் பாராமல் தண்டனை அளித்தது குறிப்பிடத் தக்கது. வயது, உடல் நிலை பாதிப்புகளைக் காரணம் காட்டியும் இவரைச் சிறையில் இருந்து  விடுதலை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- தொடரும்

Pin It