இந்திய நாட்டின் விடுதலை வரலாறு ஆதிக்க சாதியினராலும், பார்ப்பனர்களாலும் எழுதப்பட்டது. விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆதிக்க சாதியினர்தான். எனவே அவர்களின் வரலாற்றினை அவர்கள் எழுதினார்கள். அவர்கள் விரும்பியதை எழுதினார்கள். இந்த வரலாறு மெருகிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றபடி இட்டுக்கட்டப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஆதிக்க வரலாறின் போலித் தன்மையை தோலுரிக்கும் வரலாறாக அம்பேத்கரின் எழுத்துகள் இருக்கின்றன; பெரியாரின் உரைகள் இருக்கின்றன.

இவர்களின் எழுத்துகளையும், கருத்துகளையும் நாம் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, இந்திய விடுதலை வரலாறை முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள முடியும். தலித்துகள் விடுதலைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் ஒரு சேர குரல் கொடுத்ததையும், காங்கிரஸ் போன்ற சாதி இந்துக்களின் நரித்தனத்தையும் அறிய முடியும். காந்தியின் சுயநலம் புரியும். நேரு போன்றோரின் பாராமுகம் தெரியவரும். இந்து தேசியத்தையும் வர்ணாசிரம தர்மத்தையும், சாதிய ஆட்சியையும் எவ்வகையிலும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பு, விடுதலைப் போராட்டத்தின் ஊடே ஆதிக்க சாதியினரிடம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
"சிப்பாய்க் கலகமென்பது வெள்ளையர்களால் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் காரணமாக "வைதிக வெறியர்' (பார்ப்பனர்)களால் பாமர மக்களைத் தூண்டிவிட்டு நடத்திய "சீர்திருத்த விரோதக் (குழப்பமே) கலகமே'யாகும் என்கிறார் பெரியார், 1857 கலகத்தை (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 843).

1857 தொடங்கி 1947 வரை நடந்தவைகளில் புறப்பார்வைக்கு தெரிந்த அன்னிய ஆதிக்க எதிர்ப்புக்கு உள்ளே ஆதிக்க விருப்பு பொதிந்திருந்தது. அன்னிய எதிர்ப்பும் ஆதிக்க விருப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இங்கே நீடித்தன. அந்த நாணயம் சுண்டி விடப்பட்டு, விரும்பும் பக்கம் விழுந்தவுடன் நாணயம் திருப்பப்படவில்லை. அன்னிய ஆதிக்கம் என்கிற காலாவதியான முகம் மாற்றப்பட்டு, மக்கள் ஜனநாயக மாற்றம் அங்கு இடம் பெறவுமில்லை; இன்னொரு முகமான ஆதிக்க விருப்பமும் ஒழியவில்லை.

விடுதலைப் போராட்டத்தின் வாயிலாக சிலரால் இந்து தேசியம் என்ற கருத்தியல் மிகவும் வெளிப்படையாக இங்கே பேசப்பட்டு வந்தது. இன்னும் சிலர் நிலவிய சாதிய கட்டமைப்பை கேள்வி கேட்கவோ, குலைக்கவோ விரும்பவில்லை. அதற்குள்ளாகவே தான் விடுதலையும் சுயராஜ்ஜியமும் உண்டு என்று நம்பினர். அம்பேத்கர் அந்த எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடியாக்கினார். அவர் எல்லா தளங்களிலும் தலித் மக்களின் விடுதலைக்கான வழிகளை உண்டுபண்ண முனைந்தார். பெரியார் சொல்வதைப் போன்ற ‘வெள்ளையரின் சீர்திருத்த' செயல்களை வரவேற்றாலும் அவர்களின் ஏகாதிபத்திய போக்கை சாடினார். இதை அவரின் சமகால தலித் தலைவர்கள் மட்டுமின்றி பெரியார் போன்ற தலைவர்களும் புரிந்து கொண்டவர்களாகவே இருந்தனர்.

28.7.1947 நாளிட்ட ‘உதய சூரியன்' இதழில் வடார்க்காடு மாவட்ட தலித் தலைவர்களில் மூத்தவரான ஜெ.ஜெ. தாஸ் இப்படி எழுதுகிறார் : ..."முதலில் ஆரியர் வந்து குடியேறி அரசியல் ஆதிக்கம் பெற்றார்கள். இரண்டாவது முகமதியர்கள் குடியேறி அரசாண்டார்கள். மூன்றாவது ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய வந்து அரசுரிமைப் பெற்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிலை நாட்டி விட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றும்போது, இரு நாடுகளாகப் பிரித்து முதல் இரண்டு அரசு புரிந்தவர்களிடம் கொடுத்து (ஆரியர் மற்றும் முகமதியர்) மூன்றாவதாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆதிக்கம் செலுத்தும் அடிப்படையில் டொமினியனாக்கி ஆதிய மக்களை அடிமைகளாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவுமே விட்டுவிட்டது பெருந்துரோக செயலாகும். இதற்கு நல்ல தீர்ப்பு இவ்வுலகம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அளிக்காமல் போகாது.
''
poster


இது அப்போதிருந்த தலித் தலைவர்களின் கருத்து நிலைப்பாட்டுக்கு ஒரு சான்று. இவ்வகையான வரலாற்றினை மறுப்பது, மறைப்பது என்கின்ற செயல்களின் மூலம் சாதிய தேசியத்தை வலியுறுத்தும் சனாதனவாதிகள், விடுதலைப் போராட்டத்தை தமக்கே உரிமையானதாக சொந்தம் கொண்டாடுகின்றனர். இதன் மூலம் மறைமுகமாக அவர்கள் தமது சாதிய அதிகாரத்தை கேள்வி கேட்க முடியாத ஏகபோகமாக ஆக்க நினைக்கிறார்கள். ஒரு மனிதன் போராடிப் பெற்ற ஒன்றை தனக்கே சொந்த மானதாகக் கருதுவது இயல்புதானே என்று நினைக்கும் பொதுப்புத்தி இதற்கு துணை போகிறது.

ஒருபுறம் இந்து தேசியம் என்று பா.ஜ.க. போன்ற இந்து அமைப்புகள் பேசுகின்றன. மறுபுறம் போலி ஜனநாயகம் பேசும் அமைப்புகளாக காங்கிரசும் பிற கட்சிகளும் இருக்கின்றன. விடுதலைக்குப் பிறகான அறுபது ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை; வெள்ளையருக்குப் பதிலாக ஆதிக்க சாதியினர் ஆளுவதைத் தவிர. தமக்கான அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள ஆதிக்க சாதியினர் நடத்திய சாதிய தேசியப் போர் குறித்த மாயையை உடைத்து இன்னும் முற்றுப் பெறாத தமக்கான விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தி, விடுதலையைப் பெற வேண்டிய பணி தலித்துகளுக்கு நிலுவையில் உள்ளது.

- நிறைவு பெறுகிறது

தலித் மக்களுக்கு எதிரான அப்பட்டமான சாதியக்குரல் ஒன்று அண்மையில் ஒலித்திருக்கிறது, சனவரி 6 ஆம் தேதி திருச்செங்கோட்டில் நடத்தப்பட்ட கொங்கு வேளாள கவுண்டர் பேரவையிலிருந்து. சுமார் ஆயிரம் சொகுசு கார்களில் பவனி வந்து இறங்கிய அப்பேரவையின் தலைவர்கள், தமது சாதிய நிலைப்பாட்டை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்: "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும். அச்சட்டத்தின் கீழ் தவறான புகார்கள் பெறப்பட்டு வழக்குகளாகப் பதியப்படுகின்றன. அப்படி தவறான புகாரினை அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி அவர்கள் அன்று நிறைவேற்றிய 10 தீர்மானங்களில் 3 தீர்மானங்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதைப் பற்றியவைதான். நாட்டில் இருக்கின்ற எல்லா சிக்கல்களுக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தான் காரணம் என்று இவர்கள் எண்ணுவார்கள் போலிருக்கிறது! அதுவும் ஒரு வகையில் உண்மைதான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சாதிக்கு எதிரான சட்டங்கள் இல்லை என்றால் சாதி வெறியர்களுக்கு சிக்கல் இல்லைதானே?! வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பல சாதிய சங்கங்களும், சாதியை மறைத்து அரசியல் நடத்துகிற அமைப்புகளும் இது போன்ற தீர்மானங்களை இதற்கு முன்னரேகூட நிறைவேற்றியிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

தலித் மக்கள் தம்மை சாதியின் கோர தாக்குதலில் இருந்து சட்டப்படி காத்துக் கொள்வதற்கு, இன்று இருக்கும் மிகச் சிறந்த சட்டம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இது 1989இல் கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மிகவும் குறைந்த அளவில்தான் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. துருபிடித்த வாள் போல அது உறையிலேயே கிடக்கிறது. வாளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்காதபடி நடந்து கொள்வதை விட்டு, வாளை குற்றம் சாட்டுவதில் என்ன பயன் இருக்கப் போகிறது! ஆனால் சாதி இந்துக்கள் அப்படிதான் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
நான் முன்பு பணியாற்றிய ஒரு நிறுவனத்தின் தலைவர் ஒருவர் ஒருமுறை என்னை அழைத்து கேட்டார் : "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தலித் அல்லாதவர் பயன்படுத்த முடியுமா? அதை சொல்லி என்னை ஒருவர் மிரட்டுகிறார்'' நான் அவரிடம் அழுத்தமாகச் சொன்னேன். "நிச்சயம் முடியாது.''
என்னிடம் அப்படி வினவிய நிறுவனத் தலைவர் ஒரு சாதியமைப்பின் தலைவராக இருந்தவர். மிகக் கவனமாகப் பார்த்தால் சாதிய உள்நோக்கம் கொண்டவர்களுக்கும் சாதிய மீறலை நிகழ்த்துகிறவர்களுக்கும்தான் அச்சட்டம் அச்சத்தைத் தருகிறது. கள் ளன் காவலரை கண்டு பயப்படுவது போல!

தமிழ் நாடு மட்டுமல்ல, நாடு முழுக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு சட்டமேயாகும். தமிழகத்தில் 2001இல் 684 வழக்குகளும், 2002இல் 688 வழக்குகளும், 2003இல் 762 வழக்குகளும், 2004இல் 685 வழக்குகளும்தான் அச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன. இப்படி பதியப்படும் பல வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதில்லை.

காவல் துறையினரின் சாதிய மனோபாவம், வழக்கறிஞர்களின் ஆதிக்கச் சிந்தனை, அரசியல் தலையீடு ஆகியவற்றால் வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. 2000த்தில் இச்சட்டத்தின் கீழ் பதிவான 996 வழக்குகளில் தண்டனை பெற்றோர் 3 பேர் மட்டுமே; 165 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; சுமார் 516 வழக்குகள் நிலுவையிலேயே உள்ளன. இச்சட்டம் செயல்படுத்தப்படும் அழகு இதுதான்! இச்சட்டம் மிகச் சரியாக பயன்படுத்தப்படுவதற்கும், தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் காவல் துறைதான் முழு பொறுப்பு வகிக்கிறது.

பெரும்பாலான காவலர்களுக்கு இச்சட்டப் பிரிவுகள் பற்றி ஒன்றுமே தெரியாது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி பிணையில் எளிதாக வெளியே வர முடியாது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. குற்றவாளிகள் வெளியே வந்து விடுகின்றனர். இச்சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் அதுவும் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை.

இச்சட்டம் வேண்டாம் என்று கூறும் அமைப்புகள், இதை சரியாகப் பயன்படுத்தச் சொல்லி காவல் துறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக நிற்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகள், இச்சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்த உதவுவதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அல்லது இச்சட்டம் தேவையில்லாத ஒன்றாக மாறுவதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கெல்லாம் இங்கே யாருக்காவது திராணி இருக்கிறதா என்ன? கேடயத்தையும் வாளையும் கீழே போட்டுவிடு. நான் உன்னுடன் போர் புரிய விரும்புகிறேன் என்றால், யாராவது சிரிக்க மாட்டார்களா?
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நினைத்தால் அப்படித்தான் இருக்கிறது.

J.J.Dass

கடந்த இரு இதழ்களாக ‘தலித் முரசு' பொருளாதார நெருக்கடியின் காரணமாக தம் வாசகர்களிடம் நிதி கேட்டு கோரிக்கை விடுத்துக் கொண்டேயிருக்கிறது.

‘முடிவை நோக்கி', ‘முதலுதவி தேவை' என்றெல்லாம் முறையீடுகள் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை! தீவிர வாசகர்கள் பலர் இந்த இதழுக்கு இருக்கிறார்கள். வயது முதிர்ந்த பல தலைவர்கள் முதல் இளமை யும் துடிப்பும் உடையவர்கள் வரை அவ்வாசகர்களில் அடக்கம். ‘தலித் முரசு' வாசகர்களில் பலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். அரசின் உயர் பதவிகளிலும், அரசியல் இயக்கங்களின் தலைமைப் பொறுப்பிலும்கூட இருக்கின்றார்கள். மனித உரிமைப் போராளிகளாகவும், வெளிநாடுகளில் வாழ்வோராக வும் இருக்கின்றனர். ஊடகம் மற்றும் திரைப்படத் துறையிலும் இருக்கின்றனர்.

பல்வேறு நிலையிலிருப்போர் படிப்பதால் இந்த அறிவிப்பு நிச்சயம் பாதிப்பை உருவாக்கும்; பல மட்டங்களிலிருந்தும் கரங்கள் நீளும் என்ற நம்பிக்கை இருந்தது. கரங்களும் நீண்டன. நீண்ட கரங்களெல்லாம் வறிய கரங்கள். உழைத்து காய்த்த கரங்கள். அன்பும் பரிவும் கசியும் கரங்கள். செல்வம் படைத்தோரின் கரங்களோ, அதிகாரத்தில் இருப்போரின் கரங்களோ இல்லை அவை. மனமிருப்போரிடம் பணமில்லை; பணமிருப்போரிடம் மனமில்லை என்பது மேலுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

தலித் மக்கள் எதற்கெல்லாம் முதன்மையான இடம் தருகிறார்கள்? உணவு, உடை, ஆடம்பரம், பொழுதுபோக்கு, பக்தி இவற்றுக்குத்தான். தாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாத ஒரு போலி விடுதலைச் சூழலில் அவர்கள் வாழ்கிறார்கள்.
எனவேதான் தமது விடுதலைக்கான செயல்பாடுகளுக்கு அவர்கள் பங்களிப்பதில்லை. அமைப்பு, இயக்கம், போராட்டம் ஆகியவற்றின் இன்றியமையாமை தெரியவில்லை. கருத்தியலை உருவாக்கி அதை ஆயுதமாக மாற்றுகிற உலைக்களமாம் பத்திரிகைகள் குறித்து அக்கறையில்லை. தலித்துகளுக்கு பத்திரிகை எவ்வளவு அவசியம் என்பதை அம்பேத்கர் வலியுறுத்திச் சொல்கிறார். தமக்கான கருத்தினை உருவாக்கிப் பரப்ப இதழ்கள் அவசியம் என்பது அவர் கருத்து.

அம்பேத்கர் காலத்துக்கும் முன்னரே இந்த நூற்றாண்டின் நுழைவாசலிலேயே பத்திரிகைகளுடன் நின்றவர்கள் தலித்துகள். வரலாறுகள் இதை நமக்குச் சொல்கின்றன. அவற்றுள் முதன்மையானவைகளாக ‘தமிழனை'யும் ‘பறையனை'யும் இன்று நாம் பெருமைக்காக சொல்லிக் கொள்கிறோம். சிறுமைகள் அப்படி அப்படியே நிலைத்திருக்க, பெருமைகளை மட்டும் சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது? ‘பறையனு'க்கும், ‘தமிழனு'க்கும் எவ்விதத்திலும் பங்களித்திராத பெரும்பான்மையான தலித் மக்கள் கூட்டம், அவற்றை உரிமை கொண்டாடுவதில் முண்டியடிப்பது வேடிக்கையன்றி வேறென்ன? இதே வரலாறு இன்றும் பின்னோக்கித் திரும்புகிறது. இன்று வெளிரும் பல தலித் இதழ்களுக்கும் சற்றேரக்குறைய நிலை இதுதான்.

அவற்றுள் பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வெளிவந்து வரலாற்றுத் தடம் பதித்திருக்கிற ‘தலித் முரசு'வின் நிலையோ மேலும் அவலத்துக்குரியது. பொருளாதாரப் பின்புலம் இன்றி, எந்த அரசியல் அமைப்புகளின் சார்பும் இன்றி கொள்கை, உழைப்பு, உண்மை ஆகியவற்றை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு அது வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தலித்துகளில் கால்பாகம் பேர் வாங்கினாலும்கூட தலித் இதழ்கள் பல லட்சம் பிரதிகள் போகும். ஆனால் நிலைமைதான் என்ன? சில ஆயிரம் பிரதிகள். பல ஆயிரம் சிக்கல்கள் என்பதுதான் நிலை.

மதப் பீடங்களுக்கு நிதி குவிகிறது. எங்கள் மாவட்டத்தில் வேலூருக்கு அருகில் உள்ள மலைக்கோடி கிராமத்தில் தங்கத்தாலேயே ஒரு கோயில் போர்த்தப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 300 கோடிகளுக்கும் மேலிருக்கும். ‘கடத்து இதை' (Pas in on) என்ற பெயருடன் நடைபெற்ற கிறித்துவ பரப்பு பணிக்கு சிலர் தமது சொத்துக்களை விற்றுகூட நிதி அளித்தார்கள். திரைப்படம், குடி, நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் இவற்றுக்கெல்லாம் வாரிவாரி செலவழிக்கப்படுகிறது. மது விற்பனையில் தமிழகம் நாட்டிலேயே 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பகட்டுகளுக்கு இடையில் கருத்தியலுக்காகப் போராடும் ‘தலித் முரசு' போன்ற இதழ்கள் விழித்தபடி நிற்கின்றன. சிந்திக்க விடாத சூழலை பாதுகாப்பதே மலிவு அரசியலின் நோக்கம், ஆதிக்க அரசின் நோக்கம், சனாதன தர்மத்தின் நோக்கம். இவற்றுக்கு எதிராக நிற்பது சவாலானதொரு வேலை. ஆனாலும் அது ஒரு வரலாற்றுக் கடமை. இவ்வகையான பணிகளுக்கு தலித் மக்கள் கரம் கொடுக்கிறபோதுதான் விடுதலை மெய்ப்படும்.

வேலூர் மாவட்டத்தை மய்யப்படுத்தி 1941 முதல் வெளிவரத் தொடங்கிய ‘உதயசூரியன்' இதழுக்கு நிதி அளிக்கக் கோரி வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையை அண்மையில் பார்க்க நேர்ந்தது. ஒரே குரல், ஒரே வேண்டுகோள், ஒரே பொருள், ஒரே நிலை! காலம் மட்டுமே வேறு. தலித்துகள் தமது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உண்மைதானா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கான சூழல் தற்போது அதிகரித்து உள்ளது.

நமது சென்னை மாகாணஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு ஆதி திராவிடர்களிருந்தும், நம்முடைய அபிப்பிராயத்தையும், குறைபாடுகளையும் காருண்ய கவர்ண்மெண்டாருக்கும் பொது ஜனங்களுக்கும் எடுத்துரைக்க பத்திரிகை இல்லாமலிருப்பதே - நம்முடைய முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரு மாதாந்திர பத்திரிகையாவது அவசியம்...

இதை உணர்ந்தே இரண்டு மூன்று ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்தும் அவர்கள் கவனிக்கவில்லை. ஆதலால் எங்களுடைய நோக்கத்தை தங்களுடைய ஆதரவின் பேரில் பொறுப்பை ஏற்று ‘உதய சூரியன்' என்ற மாதாந்திர பத்திரிகையை நடத்த முன் வந்திருக்கிறோம். ஆகையால் தங்களாலியன்ற பொருளுதவியையும், சந்தாவையும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும். 1941 ஜனவரி முதல் தேதியில் ‘உதய சூரியன்' மாதாந்திர பத்திரிகை புறப்படும்.

- 1941 முதல் வெளிவந்த "உதய சூரியன்' இதழுக்கான வேண்டுகோள்
Pin It