உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நம் வாழ்வின் பல தளங்களிலும் விரவிக் கிடக்கின்றன. அது எல்லைகளின்றி வெளியெங்கும் நிரம்பி வழிகிறது. ஒருபுறம் நீதித்துறை தன்னை யாரும் களங்கப்படுத்த, கேள்விக்குட்படுத்த முடியாத புனிதக் கூடமாக மாறிவருகிறது. மறுபுறம் பல முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சீர்த்திருத்தங்கள் தேவை என கோரி வருகின்றனர். சீர்திருத்தங்களுக்கு உட்படாவிட்டால் இந்தத் துறை தன் செல்வாக்கை இழந்துவிடும். நாட்டில் 20 சதவிகித நீதிபதிகள் ஊழல் செய்வதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே சுட்டிக் காட்டியுள்ளார்.

Teesta
இன்றளவும் தலைமை நீதிபதியின் ஒப்புதலின்றி எந்த நீதிபதியின் மீதும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய இயலாது. அண்மைக் காலமாக, பலரும் நீதித்துறையை கண்காணிக்க ஓர் உயர்மட்டக் குழு தேவை என்றும் அதில் குடிமை சமூகத்தைச் சார்ந்த பொதுவானவர்களும் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் மற்றும் அவரது இரு மகன்கள் அடித்த கூத்துகள் இந்தத் துறையைப் பற்றி ஒரு சிறு கீற்றே. தோண்டினாச்ல் பெரும் அவதூறுகள் கிட்டும். இந்தச் சூழலில் பிப்ரவரி 2008 இன் மூன்றாவது வாரத்தில் அரங்கேறிய ஒருநிகழ்வு கவனத்திற்குரியது.

2002 இல் கோத்ராவில் மோடியும் அவரது பரிவாரங்களும் அரசு உதவியுடன் நிகழ்த்திய இனப்படுகொலையை திட்டமிட்டு வழி நடத்தியவர்கள், ஆயுதங்களுடன் கொலை வெறியில் பிணங்களை குவித்தவர்கள் என அனைவரும் குஜராத்தில் பூரண கும்ப மரியாதையுடன் சுதந்திரமாக உலவுகின்றனர். இதில் எவரும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அக்டோபர் மாதத்தில் இந்த கொலையாளிகள், இவர்களை வழிநடத்தியவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் மணிக்கணக்கில் ‘தெகல்கா' நடத்திய புலனாய்வில் 2002 இனப்படுகொலையை திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் விவரித்தனர்.

இந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு அந்த இனப்படுகொலையில் வெட்டி துண்டாடப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியின் மனைவி உடனே உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரைத் தொடர்ந்து நாடு முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், முன்னாள் நீதிபதிகள், மதச்சார்பற்ற ஆர்வலர்கள் என ஏராளமானோர் 2007 டிசம்பரில் கோத்ரா வழக்குகளில் ‘தெகல்கா’ புலனாய்வின் தரவுகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இத்தனை மாதங்களாக அந்த கோப்புகளின் திசையில் நீதித்துறையின் கண்கள் திரும்பவே இல்லை. கொலையாளிகள் அரசு பாதுகாப்புடன் சொகுசாக உலவுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இந்த இனப்படுகொலையில் முன்னணியில் நின்றவர் பாபு பஜ்ரங்கி. வாஜ்பாய் ஓய்வாக இருக்கும் பொழுது ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள குஜராத் விருந்தினர் மாளிகையில் தங்கி கவிதை எழுதுவது வழக்கம். அவர் கவிதை எழுதிய அதே அறையில் தான் நரேந்திர மோடி பாபு பஜ்ரங்கியை குஜராத் அரசு விருந்தினருக்குரிய மரியாதையுடன் வரவேற்றார். வாஜ்பாய் கவிதை எழுதிய அறையில், பாபு பஜ்ரங்கி கத்தியை தீட்டினார். அது சரி எல்லாம் சங்பரிவாரத்தை முன்னகர்த்தத் தானே!

கொலைகாரர்கள் இப்படி உலவ, அந்த இனப்படுகொலைக்குத் தொடர்பில்லாத 84 முஸ்லிம்கள், கடந்த 6 ஆண்டுகளாகத் தங்கள் வாழ்க்கையை சிறைச்சாலையில் தொலைத்து வருகின்றனர். அதுவும் இவர்கள் அனைவரும் ‘பொடா' சட்டத்தின் இரும்புப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக இவர்களுக்கு மட்டுமின்றி, கோத்ரா தொடர்புடைய எல்லா வழக்குகளுக்கும் தீஸ்தா செடல்வõட் மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்தவர்களே வாதாடி வருகின்றனர்.

பொடா மறு ஆய்வுக்குழு இந்த சட்டத்தையும் அதன் பெயரில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளையும் ஆய்வு செய்து தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கை, கோத்ராவில் கைது செய்யப்பட்ட 84 நபர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உறுதியாகத் தெரிவிக்கிறது. அதன் பின்னர் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஆறு முறை பிணை கோரும் மனுவை இந்த 84 பேர் அளித்துள்ளனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

பிப்ரவரி 19 அன்று உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முன்பு இந்த 84 பேர் சார்பாக ஆஜரானார் தீஸ்தா செடல்வாட். ‘இந்த 84 பேர் சார்பாக தீஸ்தா ஆஜரானால் என்னால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது' என்றார் தலைமை நீதிபதி. இந்த செயல் பலரையும் பெரும் கவலைக்கு உட்படுத்தியுள்ளது. இப்படி ஒரு வழக்கறிஞர் மீது நீதிபதி வெறுப்பை உமிழ்வது சரிதானா? தீஸ்தாவின் குற்றம் தான் என்ன என்பது போன்று ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தான் இதை வெளிப்படையாகக் கண்டித்த முதல் நபர். இப்படி யாரையும் நீங்கள் வேறுபடுத்தவோ, ஓரங்கட்டவோ இயலாது என்றார் அவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கோபத்திற்கு என்ன காரணம்? அண்மையில் தீஸ்தா செடல்வாட் எழுதிய கட்டுரை ஒன்று மலையாள வார ஏடான "மாத்ருபூமி'யில் வெளியானது. ‘வெட்கம்... வெட்கம்.... நகைப்புக்குரிய நீதித்துறை' என்ற தலைப்பில் தீஸ்தா எழுதிய கட்டுரை தான் தலைமை நீதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்தக் கட்டுரையில் தீஸ்தா 84 முஸ்லிம்களின் நிலையும் அவர்கள் விஷயத்தில் நீதிமன்றம் செயல்படும் விதம் குறித்தும் எழுதியிருந்தார். ‘பொடா' மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பெயரில் வைகோ மற்றும் பலர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பொழுது, அது ஏன் இந்த கோத்ரா தொடர்புடைய 84 முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்று அவர் கேட்டிருந்தார்.

கடந்த ஆண்டு முழுவதும் ஆறு முறை இந்த முஸ்லிம்களின் பிணை மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாதது குறித்தும் விமர்சித்து எழுதியிருந்தார் தீஸ்தா. நீதிமன்றத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகக் கருதாமல் புனித கட்டுமானமாகக் கருதும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. தீஸ்தா எழுதிய கட்டுரையின் நோக்கம் தவறானது என்றார் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். மேலும் கணினியின் மூலம் தான் வழக்குகள் தேதியிடப்படுகிறது என்கிறார் அவர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது ‘பொடா', ‘தடா' எனப்பல்வேறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்ட முறை மீது அமைதி காக்கிறது நீதிமன்றம். இத்தகைய நடைமுறைகள் நீதிமன்றத்தின் மீது வெகுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யாதா?

தீஸ்தாவின் செயல்பாடுகள் இல்லாதிருந்தால், பெஸ்ட் பேக்கரி வழக்கின் நிலை என்னவாக இருந்திருக்கும்? பில்கிஸ் பானு வழக்கு நாட்டின் கவனத்தைப் பெற்றிருக்குமா? இதே நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் தீஸ்தாவின் கட்டுரைகளை விரிவாக மேற்கோள் காட்டியதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். வழக்கறிஞராகத் தனது பணியை சுருக்கிக் கொள்ளாமல் அவர் நீதி சார்ந்த போராளியாக வாழ்ந்து வருகிறார். மதச்சார்பின்மை சார்ந்த தளங்களில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

1962 இல் தத்துவத்துறையில் தனது முதுகலைப்பட்டத்தைப் பெற்ற தீஸ்தா, பத்திரிகைத் துறையில் நுழைந்தார். ‘தி டெய்லி', ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்களில் பணிபுரிந்தார். பின்பு ‘பிசினஸ் இந்தியா'வில் சில காலம் இருந்தார். தீஸ்தாவின் தந்தை அதுல் செடல்வாட் மும்பை நகரத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்; அம்மா சிதா கிராமப்புறக் கைவினைக் கலைஞர். தந்தையின் உதவியுடன் சட்டம் பயின்றார். இடதுசாரியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் தீஸ்தா, ‘கம்யூனலிசம் காம்பட்' பத்திரிகையை தனது கணவர் ஜாவேத் ஆனந்துடன் இணைந்து நடத்தி வருகிறார். 1999இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய நாளிதழ்கள் சங் பரிவாரத்தை அம்பலப்படுத்தும் விளம்பரங்களை தீஸ்தா வெளியிட்டு, மதச்சார்ப்பற்ற செயல்வீரர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பெஸ்ட் பேக்கரி வழக்கில் அவருடைய செயல்பாட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தேசிய அளவில் தீஸ்தாவை கவுரவித்தது. மகாராட்டிரா மாநிலத்தின் பொது வெளியில் செயல்பட்டமைக்கு மய்ய அரசு 2007 ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கியது. 1997இல் நாடு முழுவதிலும் உள்ள பாடப்புத்தகங்களில் குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய மத வெறுப்பை விதைக்கும் பகுதிகளை இனம் காணுவதற்கான தேடல் என்கிற வரலாற்று மீட்டுருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்ணியம், தலித் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக செயல்பட்டு வருகிறார்.

பிப்ரவரி 28, 2008 அன்று தீஸ்தாவின் செயல்பாடுகளில் மிக முக்கிய நடவடிக்கை அரங்கேறியது. கோத்ரா நிகழ்வு களைத் தொடர்ந்து நடைபெற்ற இனப்படுகொலையின் பொழுது, "குல்பர்க்' குடியிருப்புகளின் மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அந்தக் குடியிருப்பில் மட்டும் 70 சடலங்கள் சிதறிக் கிடந்தன. அந்த குல்பர்க் குடியிருப்பில் இன்று வரை எவரும் குடியமர்த்தப்படவில்லை. ஆண்டுதோறும் அங்கு பலியானவர்களின் நினைவாக வழிபாட்டுக் கூடங்கள் நடத்தப்பட்டன.

அந்த மொத்த குடியிருப்பையும் மலிவு விலையில் வாங்கிட அகமதாபாத்தைச் சேர்ந்த இந்து மத பிரமுகர்கள் மற்றும் பா.ஜ.க. அரசியல்வாதிகள் முயன்றனர். இதை எதிர்த்து கடுமையாகப் போராடி வந்த தீஸ்தா, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று குல்பர்க் குடியிருப்பை எதிர்ப்பின் அருங்காட்சியமாக அறிவித்தார். இந்த அருங்காட்சியகம் அந்த சிதிலங்களைப் பாதுகாக்கும். மதசார்பின்மைக்கான நூலகம், ஆய்வகம், ஆவணப்படங்கள், செயல்பாட்டுக்கான நடவடிக்கை மய்யம் எனப் பல்வேறு இயக்க செயல்பாடுகள் புரியும் தளமாக அது உருமாற்றப்பட்டுள்ளது.

‘தெகல்கா' ஆசிரியர் தருண் தேஜ்பால் கூறுவது போல, “இந்தியாவில் நாம் எங்கும் நம் மூர்க்கத்தை உருவகப்படுத்திப் பேணுவதில்லை. அதனால்தான் அதைக் கண்டு திடுக்கிடவோ, பயங்கொள்ளவோ இயலவில்லை.'' இந்த வாசகங்களுக்கேற்பவே குல்பர்க் குடியிருப்பு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் சங்பரிவாரத்தின் ரத்த வெறி பிடித்த கரங்கள் தீட்டிய வெளியை நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். நாம் செயல்பட வேண்டிய திசைவழியை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இயக்கவாதிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் ஆண்டு தோறும் சென்று தங்கள் பயணத்தின் ஊக்கத்தைப் பெறும் வாய்ப்பாக - மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்கள் நிகழ்ந்த இடங்கள், நினைவுச் சின்னங்களாக இனி உருமாற்றப்பட வேண்டும். 200 ஆண்டு கால சுதந்திரப் போராட்டத்தின் செயல்தளங்களில் நமக்குப் போதுமான நினைவுச் சின்னங்கள் இல்லை. அதுவே நம் சுதந்திரத்தின் மதிப்பு தெரியாமல் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

யார் இந்த தீஸ்தா என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதிக்கு, தீஸ்தாவின் செயல்பாடுகள் எப்படி தெரியாமல் போனது என்பது வியப்பூட்டுகிறது. பரத நாட்டிய அரங்கேற்றங்கள், புத்தக வெளியீடுகள், நூலக விழாக்கள், விழிப்புணர்வு முகாம்கள் என நாள்தோறும் சென்று அலுத்துப்போன நீதிபதிகளை, இனி ஆண்டு தோறும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட தீஸ்தா அழைப்பு விடுக்க வேண்டும்.

கரி படிந்த இந்த அறைகளின் தரையில் சிதறிக் கிடக்கும் சாம்பலிலிருந்து நாம் தெளிந்த புரிதலைப் பெறுவோம்.
Pin It