உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளது.

“கடந்த 4 ஆண்டுகளாகவே நீதித்துறை செயல்படும் விதம் வேதனை அளிக்கிறது. மற்றவர்களால் பிளாக் மெயில் செய்யப்படும் நிலைக்கு நீதிபதிகள் ஆளாகியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் நாம் நீடிக்க முடியாது. நெருப்புடன் விளையாட வேண்டாம் எனப் பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டிப் படைக்கலாம் என நினைக்கிறார்களா? இதில் முடிவுக்கு வர வேண்டும்”.

- இவ்வாறு உச்ச நீதிமன்றம் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

உத்தவ்சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தலைமை நீதிபதியை நீக்கத் தன்னிடம் ரூ.1.5 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அம்பானி நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், “அவர் நேரில் வரத் தேவயில்லை” என நீதிமன்ற ஆணையை மாற்றித் தபன்குமார் சக்கரவர்த்தி, மானவ் குமார் ஆகிய இரு நீதிமன்றப் பணியாளர்கள் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது நீதிமன்றத்தின் கண்டனம் எவ்வளவு நியாயமானது என்று தெரிய வருகிறது.

தனித்துவத்தோடு செயல்பட வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியப் புலனாய்வு அமைப்பு, தேர்தல் ஆணையம் போன்றவைகளை மத்திய ஆளும் பாஜக அரசு எப்படித் தன் கைப்பாவைகளாக மாற்றி ஆட்டிப்படைக்கிறதோ, அப்படியே உச்ச நீதிமன்றத்தையும் தன் கைப்பாவையாக மாற்றத்துடிக்கிறது என்பதை உச்சநீதி மன்றக் கண்டனம் நாட்டுக்கு உணர்த்துகிறது.

முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ராவைப் போல தற்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாயை நினைத்து விட்டது மத்திய அரசு.

நாட்டுமக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் நீதிமன்றத்தில் கைவைக்க நினைக்கும் பாஜக மோடி அரசின் நோக்கம் என்ன என்பதும் நாட்டுக்குப் புரிந்து விட்டது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ராமராஜ்ஜியம், அது சர்வாதிகாரம் என்பதற்கான அறிகுறி இது.

ஹிட்லர், முசோலினி, போன்ற நாசிசப், பாசிசவாதிகளை விடக் கூடுதலாக ஆர்.எஸ்.எஸ்- பாஜக பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான குரலே இந்த நீதிமன்றக் கண்டனம்.

Pin It