மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கான நீட் என்னும் நுழைவுத் தேர்வு, அனிதா உள்ளிட்ட நம் பிள்ளைகள் பலரின் உயிர்களை எடுத்துச் சென்றுவிட்டது. தமிழ்நாட்டிற்கு அத்தேர்வு வேண்டாம் என்ற நம் குரலை இன்றுவரையில் ஒன்றிய அரசு உள்வாங்கிக் கொள்ளவில்லை.
புதிதாய்ப் பொறுப்பேற்றிருக்கும் இன்றைய தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து விலக்குக் கோருவதற்கானச் சரியான நடைமுறையை இப்போது கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த போதும் அக்கோரிக்கையை நம் முதல்வர் முன்வைத்தார்.
அதனைத் தாண்டி நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு இப்போது அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் செயல்பாட்டிற்குத் தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு பாஜக வின் பொறுப்பாளர்களில் ஒருவரான கரு. நாகராஜன் நீதிமன்றம் சென்றுள்ளார். இப்படி ஒரு குழுவை அமைப்பதற்கு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளீர்களா என்று உயர்நீதிமன்றம் கேட்கிறது.
அந்தக் குழு நீட் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான குழு அன்று. நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கான குழு மட்டுமே. அதனை அறிந்து கொள்வதற்குக் கூட ஓர் அரசுக்கு உரிமை இல்லையெனில், இது என்ன ஜனநாயக நாடு?
இந்த நிலையில் இது குறித்துக் கலந்துரையாடுவதற்காகத் திராவிடர் கழகம் 01.07.2021 அன்று காலை, சென்னை, பெரியார் திடலில், சமூகநீதிச் சிந்தனையாளர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டியது.
அதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் பலரும் பங்கேற்றனர்.
பாஜக தொடர்ந்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வாதிடும், தமிழக அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகளும் அவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக (impleading) அன்று முடிவெடுத்தன.
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கோருவது கூட இடைக்காலத் தீர்வுதான். 1976 ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு (concurrent list) எடுத்துச் செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநில அரசின் பட்டியலுக்கு மீட்டு வருவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
இந்நிலையில், பாஜக நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள சில வரிகளையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டித்துள்ளது. மனுவில், "நீட் தேர்வு இல்லையென்றால், சாதாரண, மிகச் சாதாரண அறிவுள்ளவர்கள் கூட மருத்துவர்கள் ஆகிவிடுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவில் எது பேரறிவு, எது சாதாரண அறிவு என்பதைப் பாஜகதான் விளக்க வேண்டும். வேதாகம அறிவுதான் பெரிய அறிவு என்றும், உழைக்கும் மக்களின் அறிவு சாதாரண அறிவு என்றும் பாஜக கருதுகின்றது போலும். இந்த வரிகளுக்குள் ஒரு பார்ப்பனிய ஆணவம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
மீண்டும் ஒரு சாராருக்கு மட்டுமே கல்வி, அரசின் உயர் பதவிகள் அனைத்தும் உரியன என்பதை நிலைநாட்டவே இம்முயற்சிகள் நடக்கின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.
சனாதனக் கருத்தியலை இம்மண்ணில் மீண்டும் நிறுவிட, திராவிடக் கருத்தியல் தடையாக இருக்கிறதே என்ற ஆதங்கமும், திமு கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதே என்ற கவலையும் அவர்களை ஆட்டிப் படைப்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
என்ன செய்வது... நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அவர்ளின் தோல்வி தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது!
- சுப.வீரபாண்டியன்