முழு மலத்தையும் சோற்றில் மறைப்பது

Indian railway
கடந்த ஆண்டு, கையால் மலமள்ளுவதைத் தடுக்கும் தேசிய ஆணையத்தின் முன்பு, கையால் மலமள்ளுவதைத் தடுப்பதாக உறுதியளித்த ரயில்வே நிர்வாகம், அதை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை. தென்னிந்திய ரயில்வேயில் 38,747 பேர் மலமள்ளுகின்றனர். அதில் 4,000 பேர் சென்னையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு குறைந்த பட்சம் கையுறைகள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு துடைப்பத்தையும், இரும்புத்தகடுகளையும் கொண்டே இவர்கள் மலமள்ளுகிறார்கள். ஒரு நடைபாதையை தூய்மைப்படுத்த 4 பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இச்செய்தியை 'டைம்ஸ் ஆப் இந்தியா' (8.5.08) புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த போதிலும், தெற்கு ரயில்வே அலுவலர் பொன்னுச்சாமி, "கையால் மலம் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. மலத்தை அள்ளும் பணியாளர்கள் எங்களிடம் இல்லை. ஆனால் இருப்புப்பாதையையும் நடை பாதையையும் தூய்மைப்படுத்துவோர்தான் எங்களிடம் உள்ளனர்'' என்று முழு மலத்தையும் சோற்றில் மறைக்கிறார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ரயில்வே நிலையங்களுக்குச் செல்வோர், இருப்புப் பாதையை சற்று கூர்ந்து கவனித்தாலே போதும். கையால் மலமள்ளும் கொடுமையைப் பார்க்க முடியும். சரி, பார்த்தால் மட்டும் போதுமா?

தமிழ் இணைக்கும்; தம்ளர் இணைக்க மறுக்கும்!

திருநெல்வேலியிலுள்ள ஒரு குக்கிராமம் அய்யப்புரம். இங்கு 120 தலித் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள நான்கு தேநீர்க் கடைகளிலும் தலித்துகளுக்கு பிளாஸ்டிக் தம்ளர்களிலும், எவர்சில்வர் தம்ளர்களிலும் தான் தேநீர் கொடுக்கப்படுகிறது. சாதி இந்துக்களுக்கு வழங்கப்படுவது போல, கண்ணாடி தம்ளர்களில் வழங்கப்படுவதில்லை.அதுமட்டுமல்ல, இங்குள்ள ஒரு தலித் இரண்டு ரூபாய் கொடுத்து தேநீர் குடித்துவிட்டு போய் விட முடியாது. அவர்கள் இந்தக் கடைகளில் கீழே அமர்ந்துதான் தேநீர் குடிக்கவேண்டும்; குடித்த பிறகு அந்த தம்ளரைக் கழுவி வைத்துவிட்டுத்தான் போக வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்பிய சில இளைஞர்களுக்கு இக்கடைகளில் தேநீர் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு கேள்வி எழுப்புகிறவர்கள், தங்கள் வீடுகளிலிருந்துதான் தம்ளர் எடுத்துவர வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதைக்கண்டித்து 20.4.08 அன்று இளைஞர் குழு ஒன்று தென்காசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. இதற்குப் பிறகு இவ்விளைஞர்கள் சாதி இந்துக்களால் கடுமையாக மிரட்டப்படுகின்றனர் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 29.4.08). இரட்டை தம்ளர் உடைப்பு முதல் பல்வேறு தீண்டாமை ஒழிப்பு செயல்பாடுகள் நடைபெற்றாலும், இப்பிரச்சனை முடிவின்றி தொடர்கிறது. இருப்பினும், இந்து அமைப்புக்குள் இருந்து கொண்டு, இக்கொடுமையை எதிர்த்துப் போராடிக் கொண்டே (வாழ்நாள் முழுவதும்) இருக்க வேண்டும் என்கின்றனர், அம்பேத்கரியலை ஏற்க மறுப்பவர்கள்.

‘யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க'

தலித் முதல்வர் மாயாவதி ஆட்சி புரியும் உத்திரப்பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இம்மாநிலத்தில் இயங்கும் ‘டைனமிக் செயற்குழு' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கு எதிராக இரண்டு குற்றங்கள் நடைபெறுகின்றன. வழக்கம் போல் அங்கும் முதல்வர் பொறுப்பில் இயங்கும் காவல் துறை, இது குறித்த வழக்குகளைப் பதிவு செய்ய மறுக்கிறது.

உத்திரப்பிரதேசத்திலுள்ள மதுரா மாவட்டத்தின் கரோலி கிராமத்தில், ஆறு வயது தலித் குழந்தையை ஒரு சாதி இந்து இளைஞன் நெருப்பில் தள்ளியதால், அக்குழந்தை கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது (‘தி இந்து' 1.5.08). அச்சிறுமி செய்த குற்றம் (சாதி இந்துக்களுக்கான) பொதுப்பாதையில், ‘அத்துமீறி' நடந்தது தான். அதே போல, எட்டலா மாவட்டத்தில் உள்ள சந்தன்புர்வா கிராமத்தில் 22 வயது தலித், அவர் வேலை செய்த கடைக்காரருக்கு 10 ரூபாய் கொடுக்கத் தவறியதால் நெருப்பில் தள்ளப்பட்டு 70 சதவித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் (‘தி இந்து' 1.5.08 ).

சமூக ஜனநாயகத்தை செப்பனிடாமல் வெறும் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதில் தீவிரம் காட்டும் தலித் ஆர்வலர்கள், அதிகாரத்தின் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதி அமைப்பைத் தகர்க்கும் அதிகாரம், வரலாற்றில் இதுவரை இருந்த எந்த ஆட்சிக்கு தான் இருந்திருக்கிறது?

தீண்ட மறுக்கும் கல்வி

தமிழ்நாட்டில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினரின் படிப்பறிவு 2001 ஆம் ஆண்டு கணக்குப்படி குறைவாக உள்ளது.அவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டும் இந்நிலையே தொடர்கிறது என்று மார்ச் 31, 2007 நிதி தணிக்கை அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு தலைமை கணக்காளர் எஸ்.முருகய்யா, "தலித் மாணவர்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி விழுக்காடு, மாநில தேர்ச்சி விழுக்காட்டினைவிட குறைவாக உள்ளது. 2002 முதல் 2006 வரை அவர்களின் தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

இதற்கான காரணங்களையும் அவரே பட்டியலிட்டுள்ளார்: தலித், பழங்குடி மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் காலதாமதமாகத் தொடங்கப்படுகின்றன. அவர்களுக்கான பள்ளிகளிலும் விடுதிகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. கல்வி உதவித்தொகை மற்றும் பிற பயன்பெறும் திட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியமாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்கான நிதியை அந்தந்த மாவட்டங்களுக்கான அதிகாரிகளிடம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வேறு துறையினராக இருப்பதால், இத்துறையில் திட்டங்களை மிகக்குறைந்த அளவிலேயே நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த அறிக்கை, அரசின் உடனடி கவனத்திற்கும், செயல்பாட்டிற்கும்உதவும் என்றும் முருகய்யா கூறியுள்ளார். நமக்கு நம்பிக்கையில்லை.

மரண தண்டனை ஒழிப்புக்கு இந்திய மக்கள் ஆதரவு!

மரண தண்டனையை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று உலக அளவில் இடையறாது பிரச்சாரம் செய்து வரும் ‘அம்னஸ்டி இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு, இந்தியாவும் அதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நீதிமன்றத் தீர்ப்புகளை ஆய்வு செய்து 2.5.08 அன்று தில்லியில் ‘அம்னஸ்டி' வெளியிட்டுள்ளது: "இந்தியாவில் 2006 மற்றும் 2007 இல் மட்டும் 140 பேருக்கு மரண தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2005 இல் மட்டும் 273 பேர் மரண தண்டனைப்பிடியில் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆய்வுசெய்யப்பட்ட 700 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான வழக்குகளில், பன்னாட்டு சட்டங்களை நீதி மன்றங்கள் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளன. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்ற கூற்றிலும் உண்மையில்லை. அதற்கு மாறாக, மரண தண்டனை தான்தோன்றித்தனமாகவும், மிகவும் தவறாகவும், வரையறையின்றியும் வழங்கப்படுகிறது. எனவே இந்தத்தீர்ப்புகளை ஆய்வு செய்யும் போது, இந்த அமைப்பு முறையே கடும் குறைபாடுள்ளது என்பது தெரிய வருகிறது. 2004இல் ஒரே ஒருவருக்கு தான் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, கடந்த 10 ஆண்டுகளில் யாருக்கும் மரணதண்டனை வழங்கப்படவில்லை. இந்திய மக்கள் மரண தண்டனையின்றி வாழவே விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.''

அமெரிக்காவில் மரண தண்டனை எப்படி, யாருக்கு வழங்கப்படுகிறது என்று இதே போன்றதொரு ஆய்வை மேற்கொண்ட ‘அம்னஸ்டி' மூன்று முக்கிய உண்மைகளைக் கண்டறிந்தது:

1.பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வாதாட திறமையான வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள இயலாததால், அத்தகையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. 2.நீதிபதிகளுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்கள் காரணமாக மரண தண்டனை வழங்கப்படுகின்றன 3. கருப்பர்கள் என்பதாலேயே மரண தண்டனை வழங்கப்படுகின்றது. ஜாதிய இந்திய சூழலுக்கும் இவ்வுண்மை அப்படியே பொருந்தி வரும். எனவே, மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க இந்திய அரசும் சமூகமும் முன்வருவதே சாலச் சிறந்தது.
Pin It