இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம்.
3, 4 வாரங்களுக்கு முன் நாம் “இனியாவது புத்திவருமா” என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென் னையில் ஒய். எம்.சி.எ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கையானது நமக்கு சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. அதாவது,
பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புருத்திப் பேசி இருக்கின்றார்கள்.
அவர்கள் பேசியிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில், மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாசமில்லை என்பதும், ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்கள் அநுபவிப்பதென்பது சர்வ சுதந்திரமாய் இருக்க வேண்டும் என்பதும், இதைப் பற்றி இதுவரை யாரும் எவ்வித கிளற்சியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும், கணவன் அயோக்கியனாக இருந் தாலும், கெட்ட வியாதிக்காரனாய் இருந்தாலும் மனைவிகள் அவனை விட்டு விலகி வாழலாம் என்றும்,
இப்படி விலகி வாழ்ந்தாலும் புருஷன் ஜீவனாம்சமும் அவன் சொத்தில் பாத்தியதையும் இருக்க வேண்டும் என்றும் விதவைகள் மறு மணம் செய்து கொண்டாலும் முதல் புருஷன் சொத்தில் பங்கு பெற பாத்தியம் இருக்க வேண்டுமென்றும் உபந்நியாசகராகிய திரு. நாராயண குரூப் அவர்கள் பேசி இருக்கிறார்.
அக் கூட்டத்திற்கு தலைமை வகித்த திரு. டி. ஆர். வெங்கிட ராம சாஸ்திரியார் என்பவர் மாஜி அட்வொகேட் ஜனரலும் சென்னை அரசாங்க மாஜி சட்ட மெம்பரும் ஆவார்.
இவரும் இந்தியாவில் எல்லா ஜாதி மதஸ்தர்களுக்கும் பொதுவாக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று பேசியிருப்பதோடு சீர்திருத்த விஷயத்தில் முஸ்லீம்கள் ஒத்து வர மாட்டார்கள் என்று பயப்படுவதாகவும் அதற்காதாரமாய் சாரதா சட்டத்தைப் பற்றிய முஸ்லீம்களின் ஆnக்ஷபனையையும் எடுத்துக் காட்டிவிட்டு, மேலும் பெண்கள் இப்போது ஆண்களைப் போலவே எல்லா வழிகளிலும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு, அவர்களுக்கு சகல உரிமையும் கொடுக்க வேண்டும் என்பதை மனப் பூர்வமாய் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட அவர் பேசி இருப்பதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் “ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பெரியோர்கள் செய்த ஏற்பாடு என்பதற்காக கண் மூடித்தனமாய் ஒன்றை பின்பற்ற வேண்டு மென்பது அறிவுடைமையாகாது” என்பதும் இந்த நாகரீக காலத்தில் அதாவது 20 வது நூற்றாண்டில் இருந்து கொண்டு 13 வது நூற்றாண்டு கதைகளைப் பற்றி பேசி அவற்றை மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக்குவது மிகவும் பரிகசிக்கத் தக்கதாகுமென்று பேசியிருப்பதுமாகும்.
இதை மற்றப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத பழமை விரும்பிகளும் கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம். பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல வென்றும் அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாய் இருக்கத் தகுந்தவர்கள் என்றும் நாம் முதலில் தீர்மானம் செய்து கொண்டோமேயானால் பிறகு மேல் கண்ட சீர்திருத்த விஷயங்களும் மற்றும் ஒழுக்க சம்மந்தமான தென்றும் கட்டுப்பாட்டுக்காக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொள்கைகளின் யோக்கியதைகள் எல்லாம் தானாகவே விளங்கி விடும்.
அந்த எண்ணம் ஆண்களுக்குச் சரியாக உண்டாகாததினாலேயே பெண்கள் சுதந்திரம் என்னும் விஷயங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் பெண்களுக்குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள்.
உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்பட வேண்டுமானால் வாழ்வில் அதாவது ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில் இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரேமாதிரியான ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும் அது சம்பந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக் கொண்டாலொழிய உண்மையான சுதந்திரம் ஏற்படவே முடியாது.
மக்கள் மனதிலும் “இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரக்ஷணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கின்றார்கள்” என்கின்ற உணர்ச்சி அடி யோடு மாறியுமாக வேண்டும். அந்த வுணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்கே பெரிதும் முதலில் மாற வேண்டியதாக இருக்கின்றது.
ஏனெனில் அவர்களை அழுத்தி அடிமைப் படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலார்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக் கொள்ளும்படி செய்து விட்டது. ஆதலால் அது முதலில் மாற வேண்டியது அவசியமாகின்றது.
ஆகவே அவர்களது சுதந்திரத்திற்கு சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும் பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும் பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப் படுத்துகின்றோம்.
தவிர பெண்களை ஆண்கள் எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் இந்த சந்தர்ப்பத்திலேயே குறிப்பிட விரும்புகின்றோம்.
அதாவது மலையாள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்களில் ஆண்கள் குடும்பத்தில் மூத்தவர் யாரோ அவர் மாத்திரமே தங்கள் ஜாதியில் அதாவது நம்பூதிரி ஜாதியிலேயே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்ற ஆண்கள் வேறு ஜாதியில் அதாவது நாயர் ஜாதியில் உள்ள பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப்படி வைத்துக் கொள்வதிலும் நாயர் பெண்கள் வயிற்றிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அக் குழந்தைகளைக் கொடுத்த நம்பூதிரியின் சொத்தில் பங்கு இல்லை என்றும் ஒரு கொள்கை இன்றும் இருந்து வருவதுடன் இதை நாயர் பெண்களும் ஆண்களும் ஒரு பெருமையாகவும் கருதி வருகிறார்கள்.
இதனால் நம்பூதிரி வகுப்புப் பெண்கள் அநேகர் 40, 50 வருஷம் வரையில் கூட கல்யாணமில்லாமல் பேருக்கு மாத்திரம் சாகும்போது ஒரு நம்பூதிரிப் பார்ப்பனக் கிழவனால் தாலிகட்டச் செய்து விடுவதும் மற்றும் இதற்காகவே ஒரு கிழவனுக்கு 6, 7 மனைவிகளைக் கட்டுவதும் வழக்கமாயிருந்து வருகின்றது.
இந்தக் கொடுமையை உணர்ந்த நம்பூதிரி வாலிபர்கள் தங்கள் சமூகத்தின் காட்டு மிராண்டித்தனமான இக் கொள்கைகளை அழிக்கத் தோன்றி இப்போது எவ்வளவோ தாராள நோக்கங்களுடன் வெளிக்கிளம்பி விட்டார்கள். இவைகளில் ஒன்றாகத்தான் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூல் அணிவது முட்டாள்த்தனமென்றும் அவற்றை கழற்றி நெருப்பில் போட்டு கொளுத்த வேண்டும் என்றும் தீர்மானம் செய்து அவ்வாரே பலர் கழற்றி நெருப்பில் கொளுத்தியும் விட்டார்கள்.
பலர் தலையில் உள்ள முன் குடுமிகளை எல்லாம் சிறைத்து விட்டு கிராப் செய்து கொண்டார்கள். இப்போது தம்பியாய் இருக்கின்றவர்களும் கல்யாணமும் செய்து கொண்டார்கள்.
இந்தக் கல்யாணக் கொள்கை விஷயத்தில் நாம் முக்கியமாய் மகிழ்ச்சியடையும் விஷயம் ஒன்றேயாகும். அதாவது நம்பூதிரிப் பெண்கள் 40, 50 வருஷம் வரை பலர் புருஷனில்லாமல் இருக்கும் கொடுமைகள் ஒருவாறு ஒழியும் என்பதேயாகும்.
நம்பூதிரி ஆண்கள் கல்யாணமில்லாமல் இருக்கவேண்டும் என்றும் பெண்ஆசை இருந்தால் நாயர் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்றும் செய்து கொண்ட கட்டுப் பாடுகளைப் போலவே நம்பூதிரிப் பெண்களிலும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள் வேறு ஏதாவது ஒரு வகுப்பு ஆண்களை சம்மந்தக்காரனாக நாயகனாக வைத்துக் கொள்ளலாம் என்பதாக ஒரு திட்டம் செய்து கொண்டிருப்பார்களானால் அந்த வகுப்புப் பெண்களுக்குக் கஷ்டமே இருந்திருக்காது.
அப்படிக்கில்லாமல் தங்கள் வகுப்பு பெண்களை வீட்டில் கல்யாணமில்லாமல் அடைத்து வைத்து விட்டு வேறு வகுப்புப் பெண்களை வைப்பாட்டிகளாக அனுபவித்துக் கொண்டு இருப்பதானதும் மிகவும் கொடுமையான காரியம் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமையை ஒழிக்க நம்பூதிரி வாலிபர்கள் முயற்சித்தால் அதற்கு இடையூறாக நாயர் கனவான் பிரவேசித்து அந்த வாலிபரை பகிஷ்காரம் செய்வது என்பது மிகவும் மானக்கேடான காரியமாகும்.
சுயமரியாதை அற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள் என்று அந்த ஜாதியைப் பற்றி நம்பூதிரி வாலிப சங்கத்தார் வெளியிட்ட சுற்று அறிக்கையில் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமானது என்றே சொல்லுவோம். ஆகவே பழமையின் பேரால் பெண்களை வெகு காலமாகக் கொடுமைப்படுத்தி வந்த காரியங்கள் இப்போது திடீர் திடீரென்று அழியும் படியாக ஆங்காங்கு முயற்சிகள் அதுவும் காரியத்தில் நடைபெறுவதை இந்த இரண்டொரு வருஷங்களாகத் தான் பார்க்க முடிகின்றன. இவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளை மக்கள் எவ்வளவு கேவலமாகவும், அலட்சியமாகவும் கருதக் காலம் வந்து விட்டது என்பதை நினைக்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஹைகோர்ட்டில் நடந்த ஒரு அரசியல் சம்மந்தமான வழக்கில் பழமை விரும்பியான ஒரு வருணாசிரமப் பார்ப்பனர் அதாவது திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் என்பவர் “சில காலிகள் நாளைய தினம் பூணூல் போடக்கூடாது என்று சொன்னால் அதற்கும் கட்டுப்படுவதா?” என்று பேசி இருக்கிறார். இதை ஒரு தேசீயவாதியும் கண்டிக்கவே இல்லை.
இந்த திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் அவர்கள் மலையாளத்தில் பூணூலைக் கழட்டி நெருப்பில் போட்டு கொளுத்திய நம்பூதிரி பார்ப்பனர்களை என்ன செய்தார் என்றும் அந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கூட்டத்தில் பூணூல் போடுவது முட்டாள்தனமென்று தீர்மானித்த தீர்மானத்தை பற்றி என்ன செய்தார் என்றும் கேழ்க்கின்றோம்.
அறிவு விஷயத்தில் உலகம் போகும் முற்போக்கை கவனிக்காமல் தங்களுடைய சுயநலத்தையே பிரதானமாய்க் கொண்டு பழைய கந்தல்களை புரட்டிக் கொண்டு கசுமாலங்களைக் கழுவி விட்டுகொண்டே இருந்தால் அதை இனி யார் மதிப்பார்கள் என்பதை இந்த கூட்டத்தின் சுயநல ஆத்திரமானது அவர்களை அறிய முடியாமல் செய்து கொண்டே வருகின்றன.
ஆகவே இனி பொது நல சேவைக்காரர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களும் அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிய திட்டத்தை மாத்திரம் போட்டுக் கொண்டிருக்கும் யோசனையை விட்டுவிட்டு சமூக வாழ்க்கை நிர்வாக சம்மந்தமான விஷயத்திலும் அவசியமான திட்டங்களைப் போட வேண்டிய காலம் வந்திருப்பதை கவனிக்க விரும்புகின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.10.1930)