காந்தி பகிஷ்காரக் கிளர்ச்சிகளைப் பற்றி குற்றமாகவும், பரிகாசமாக வும் பாமர ஜனங்களை நினைக்கச் செய்ய, பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுப்பாடாக சூட்சி செய்கின்றன.
இதற்கு ஆதாரமாக அவைகள் எழுதிக் காட்டும் ஒரே ஆதாரம் என்னவென்றால் காந்தியை சனாதன தர்மிகளும் பகிஷ்கரிக்கிறார்கள். அரசாங்கத்தாரும் பகிஷ்கரிக்கிறார்கள். அதுபோலவேதான் சுயமரியாதைக்காரர்களும் பகிஷ்கரிக்கிறார்கள் என்று பல்லவி ஆரம்பித்து மூன்று பேரையும் ஒன்றாக்கி இவைகள் ஏதோ சுயநலம் என்றும் வைத்து பிரமாதமான பொதுநலத்துக்கு விரோதமாய் ஏதோ பெரிய அக்கிரமம் செய்கிறார்கள் என்று படும்படியாக எழுதி வருகிறார்கள். இதுபரம்பரை வழக்கம்போல் பார்ப்பன தந்திரமே ஒழிய வேறில்லை என்பதை பார்ப்பனரை அறிந்தவர்கள் யாவரும் அறிவார்கள். ஆங்கிலோ இந்திய சர்க்கார் காந்தி விஜயத்திற்கு அனுகூலமாகச் சகல ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள் என்பதை ஜனங்களுக்குத் தெரியாது என்று கருதி இப்படி எழுதுகின்றனபோலும். சர்க்காரார், சர்க்கார் அதிகாரிகளை மாத்திரம் அதில் கலந்துகொள்ள வேண்டாமென்று சொல்லுகின்றார்களே யொழிய ஜனங்கள் காந்தியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இது சர்க்காரின் தந்திரமேயாகும்.
காந்தியார் பிரிட்டிஷ் சர்க்காருக்கு இதுவரை யாதொரு கெடுதியையும் உண்டாக்கி விடவில்லை; உண்டாக்க நினைத்ததும் இல்லை. அன்றியும் அவர் இச் சர்க்காரை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர். அதோடு மாத்திர மல்லாமல் சர்க்காரின் ஒற்றரும் ஆவார். இதை முன் எத்தனையோ தடவை நாம் எழுதி வந்திருக்கிறோம்.
தோழர் காந்திக்கு எவ்வளவு விளம்பரம் கொடுத்து அவரை எவ்வளவு பெரிய தேசபக்தராக்க வேண்டுமோ அவ்வளவுக்கு அவரை உயர்த்தி உலக மதிப்பேற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
காந்தியார் இல்லாமல் இருந்திருப்பாரானால் 5, 6 வருடங்களுக்கு முன்பாகவே பாமரமக்களுக்கு ஓரளவாவது ஆதிக்கம் வர மார்க்கம் ஏற்பட்டிருக்கும். அப்படிக்கில்லாமல் முதலாளிமார்களுக்குத் தாசராய் இருந்து முதலாளிமார்கள் ஆதிக்கம் ஒரு சிறிதும் குறையாமல் இருக்கத்தக்க வண்ணம் ஒப்பந்தம் பேசிக்கொண்டு அதற்குத் தகுந்தபடியே பேசியும், எழுதியும் வந்ததின் பயன் எல்லாம் சர்க்காருக்கு அனுகூலமாகி சர்க்காருக்குப் பலமும் ஏற்பட்டு விட்டது. இந்தக் காரணங்களாலேயேதான் காந்தியாருக்குச் சர்க்கார் இவ்வளவு மதிப்பும், தனி மரியாதையும் கொடுத்து வருகிறார்கள்.
“தோழர் காந்தியுடன் சர்க்கார் நல்ல சமயத்தில் ராஜி செய்து கொள்ள மறுத்து விட்டார்கள்” என்று பல தேசீயப் பத்திரிக்கைகள் சர்க்காரை குறைகூறி பிதற்றுகின்றன. அது உண்மையறியச் சக்தியற்ற தன்மையேயாகும். அல்லது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் சூட்சியாகும். சர்க்காருக்கு டெல்லி ஒப்பந்தம் போல் காந்தியாரிடம் ஒரு பயனற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு அதனால் காந்திக்கும் வெற்றி ஏற்பட்டது என்கின்ற பெயர் உண்டாவதற்கும் இடம் கொடுத்து தேச பக்தர்களையும், தேசீயப் பத்திரிக்கைகளையும் “காந்திக்கு ஜே” என்று கூப்பாடு போட்டு “காந்தி வெற்றி பெற்றார் சர்க்கார் தோல்வி யடைந்தார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்ய சர்க்காருக்குத் தெரியாமல் போகவில்லை.
ராஜி பேச ஒப்புக்கொள்வதால் காந்தியார் ஏதோ பெரிய பெரிய பிரச்சினைகளை வற்புறுத்தி சர்க்காருக்கு ஆபத்து வரும்படியான திட்டங்களைக் கொண்டு வந்து போட்டு கஷ்டப்படுத்துவார் என்கின்ற பயம் சர்க்காருக்கு ஏற்பட்டு அதனால் ராஜியை மறுத்தார்கள் என்று புத்தி உள்ளவர்கள் சொல்லிவிட முடியாது. ஏனெனில் பாமர மக்களின் நன்மைக்கும் சுதந்திரத்திற்கும், காந்தி கொள்கைக்கும் வெகு வித்தியாசம் உண்டு என்பது சர்க்காருக்கு நன்றாய் தெரியும். ஆனால் வேறு காரணம் என்ன என்று கேட்கலாம். அக்காரணம் என்னவென்றால் காந்தியாரிடம் பேசிச் செய்து கொள்ளும் ராஜியானது பொது ஜனங்களால் ஒப்புக்கொள்ளப்படுமா? காந்தியாருக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா? காந்தியின் பிரதிநிதித்துவத்தை எல்லா ஜனங்களும் ஏற்றுக் கொள்ளுவார்களா? என்கின்ற பயமும் சந்தேகமுமேயாகும்.
ஏனெனில் காந்தி - இர்வின் ஒப்பந்தமே சந்தி சிரித்து விட்டது. அதை காந்தி ஒப்புக் கொண்டதாலேயே வாலிப உலகில் காந்தியாரின் பெருமை மிக மிகக் குறையத் தலைப்பட்டு விட்டது. தோழர்கள் ஜவகர்லால் நேருவும், போசும் மற்றும் பலரும் அப்பொழுதே ஆnக்ஷபித்து விட்டுப் பிறகு காந்தியாரின் செல்வாக்குக் குறைந்து விடுமே என்பதற்காக காந்தியாரின் தனி நலத்தை உத்தேசித்து ஒப்புக் கொண்டவர்கள் போல நடித்தார்கள். ஆதலால் அது போலவே இந்த ராஜியும் ஆகிவிடும் என்கின்ற பயத்தினாலேயே சர்க்கார் ஒரு ராஜி பேச்சு நாடகம் நடிக்க காந்தியாருக்கு இடம் கொடுக்கவில்லையே தவிர வேறில்லை.
அதுபோலவே தான் வருணாச்சிரம சனாதன தர்மிகளும் காந்தியார் வார்த்தையைத் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்பட்ட மக்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல தந்திரங்கள் செய்வதில் காந்தியாரை எதிர்ப்பதாகவோ, பகிஷ்கரிப்பதாகவோ வேஷம் போடுவதும் ஒன்றாகுமே தவிர வேறில்லை. இதன் உண்மையை அறிய வேண்டுமானால் 18-12-33ந்தேதி “சுதேசமித்திரன்” 3-வது பக்கம் 4-வது கலம் “காந்தியாரின் சென்னை விஜயம்” என்ற தலைப்பில் காந்தி விஜய நிகழ்ச்சிக் குறிப்பு விவரத்தில் காந்தியாரை சனாதனப் பிரமுகர்கள் அழைத்திருப்பதையும் காந்தியார் ஒப்புக் கொண்டால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வதையும் பற்றிய ஒரு அறிக்கை இருப்பதையும் காணலாம். ஆனால் இந்த அறிக்கைக்கு “காந்திஜீக்கு அறைகூவல்” என்ற தலைப்பெயர் கொடுத்திருப்பது மாத்திரம் பார்ப்பன சூழ்ச்சியாகும். ஏனெனில் மற்றவர்கள் இந்த ரகசியத்தை அறிந்து விடுவார்கள் என்ற பயத்தினாலேயாகும். இவ்வறிக்கையில் பல சனாதன பிரமுகர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதோடு ஒரு சங்கராச்சாரியாரும் விஜயம் செய்வார் என்றும் கண்டிருக்கிறது.
ஆகவே இந்த சூழ்ச்சிகள் எல்லாம் யாரை ஏமாற்றுவதற்கு என்பதை யாரும் சுலபமாய் உணரலாம்.
மேலும் காந்தி நிதிக்குப் பணம் கொடுத்திருப்பவர்களையும், காந்தி விஜயத்தை நடத்தி நிர்வாகம் செய்கின்றவர்களையும் யார் என்று பார்த்தால் இவை பார்ப்பன ஏற்பாடா? இல்லையா? என்றும் தெரிந்து கொள்ளலாம். இதை பற்றிமுன் ஒரு தடவையும் எழுதியிருந்தோம். ஆனாலும் மற்றொரு தரமும் ஞாபகப்படுத்துகிறோம்.
நிற்க, காந்தி பண்டுக்கு சனாதன தர்மிகள் பலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள். கோவிலுக்குள் தீண்டப்படாதவர்களை விட சம்மதிக்காதவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். வருணாச்சிரம தர்மிகள் பணம் கொடுத்தி ருக்கிறார்கள்.
ஆனால் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பகிஷ்கரிக்கிறார்கள். காந்தியாரைத் தங்களுக்காக ஒன்றும் பேச வேண்டாம் என்கிறார்கள். பார்ப்பனரல்லாதாரில் பெரும்பான்மையோர் சிறப்பாக பாமர மக்களும் பகிஷ்கரிக்கிறார்கள். இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று கேட்கின்றோம். இவைகள் ஒரு புறமிருக்கட்டும்.
இன்னும் இப்பார்ப்பனப் பத்திரிக்கைகாரர்களை ஒன்று கேட்கின்றோம். இவர்கள் சூழ்ச்சியில்லாதவர்களாகவும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் பாடுபடும் வஞ்ககர்களல்லாதவர்களாகவும், உண்மையை மறைத்துப் பொய்யை உண்மையாய்க் காட்டும் இயல்பு இல்லாதவர்களாகவும், நாணயமான பொது நோக்குடையவர்களாகவும் இருப்பார்களானால் இப்போதாவது இது சம்மந்தமான நமது கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு காந்தி பகிஷ்காரத்தைக் கண்டிக்கட்டும், நமக்கு ஆnக்ஷபணையில்லை.
அக்கேள்விகளாவன:-
காந்தியார் வருணாச்சிரமவாதியா அல்லவா?
அவர் வருணாச்சிரமப் பிரசாரம் செய்கிறாரா இல்லையா ?
காந்தியார் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு முக்கிய பிரிவு இருக்க வேண்டும்” என்று சொல்வதுடன்,
“சூத்திரன், முதல் மூன்று வருணத்தாருக்கும் கீழாகவும், அவர்களுக்குத் தொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறாரா இல்லையா?
“பிராமணன், பின் மூன்று வருணத்தாருக்கும் மேலானவன், மேலான தொழிலையே செய்ய வேண்டியவன்” என்று தொழில் முறைகளையும் பிரித்துக் காட்டி இருக்கிறாரா இல்லையா?
பிறவியில் ஜாதிப் பாகுபாடுகள் இருக்க வேண்டும்” என்று சொல்லுகின்றாரா இல்லையா?
தீண்டப்படாதவர்களுக்குத் தோல் பதனிடும் துர்நாற்றம் நிறைந்த வேலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரா இல்லையா?
“சூத்திரர்கள் தொழிலாளிகள் பணம் சேர்க்கக் கூடாது” என்று சொல்லுகிறாரா இல்லையா?
வருண பேதம் நிறைந்ததும் ஜாதிக் கொடுமைகள் உள்ளதுமான புராணங்களை, ஆட்சிகளைப் புத்துயிரளித்து நிலை நிறுத்தப் பாடுபடுகிறாரா இல்லையா?
“தீண்டாதவர்களைச் சூத்திரர்களுடன் சேர்க்க வேண்டும்” என்று சொல்லுகிறாரா இல்லையா?
இவைகளில் ஏதாவது வர்ணாச்சிரம தர்மத்துக்கோ, சனாதன தர்மத்துக்கோ, பார்ப்பனீயத்துக்கோ விரோதமென்று சொல்ல முடியுமா? என்பனவாகியவைகளை தங்கள் பத்திரிகைகளில் எடுத்துப் போட்டு அதற்கு நேர் நேராகப் பதில் எழுதி பகிஷ்காரக்காரர்களைக் கண்டித்தால் அது மனிதத் தன்மையையும், வீரமும் ஆண்மையும் பொருந்திய காரியமாகும். அப்படிக்கில்லாமல் அயோக்கியத்தனமாய், இழிதன்மையாய், சூட்சியாய், பித்தலாட்டமாய் பாமர ஜனங்களை ஏய்க்கக் கருதி விஷமப் பிரசாரம் செய்வது என்பது மிக மிகக் கேவலமானது என்பதோடு இத்தகைய பிரசாரத்தை எதிர்த்து அடக்க வேண்டியது மனிதத் தன்மையுள்ளவர்களின் கடமையாகும். மற்றொரு விஷயமும் நாம் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
அதாவது பார்ப்பனரல்லாதாரில் சிலர் இக்கூட்டத்தாருடன் கலந்து கொண்டிருப்பதால் பார்ப்பனர்கள் ஆணவமாய் “இந்தப் பகிஷ்காரம் வெற்றி பெறப் போவதில்லை. .இதனால் வரவேற்பு அதிகப்படும்” என்று கூற இடமேற்படுகின்றது. இந்த ஆணவம் பார்ப்பனருக்கு இன்று நேற்றல்ல, வெகுகாலமாக இருந்து வருவது நமக்குத் தெரியும். உதாரணமாக தர்மபுரியில் டாக்டர்.பி.வரதராஜுலு அவர்கள் தலைமையில் 1922-ல் கூடிய தாலூக்கா கான்பரன்சில் பார்ப்பன சூட்சியைப் பற்றி தலைமை உரையில் நாயுடு அவர்கள் மிக வன்மையாய் கண்டித்துப் பேசி சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருடன் இனி ஒத்து தேச சேவை செய்ய முடியாது என்று சொன்னதோடு பார்ப்பனர்களின் தேச சேவை என்பதெல்லாம் பார்ப்பன சமூக ஆதிக்கத்திற்கேற்ற சுயநல சேவையே ஒழிய வேறில்லை என்று இதை நம்பிப் பார்ப்பனரல்லாதார் சிலர் ஏமாந்து வருகிறார்கள் என்றும் சொன்னார். அதற்குத் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரே பதில்தான் சொன்னார்கள். அதாவது,
புத்தர் தொல்லை, முஹம்மதியர் ஆட்சிகாலத் தொல்லை முதலிய எத்தனையோ தொல்லைகளைச் சமாளித்து வந்த பார்ப்பனர்கள் இதற்கெல்லாமா பயந்துவிடப் போகிறார்கள். பார்ப்பனருக்கு விரோதமாக இதுவரையும் ஒரு காரியமும் எவரும் சாதித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் நீங்களும் சொல்லிவிட்டுப் போங்கள் என்று சொன்னார்.
அதுபோலவே 1922-ல் திருப்பூரில் தோழர் வாசுதேவய்யரவர்கள் தலைமையில் நடந்த மாகாண மகாநாட்டின்போது கோயில் பிரவேசத் தீர்மானத்தைப் பற்றித் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசிய சந்தர்ப்பத்தில் ஜாதிக் கொடுமையுள்ள இராமாயணத்தை சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொன்ன சமயம் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் இது ஒன்றும் ஆகக் கூடிய காரியம் அல்லவென்றும் வீணாய்ப் பெயரைக் கெடுத்துக் கொள்வதை விட வேறு பயன் கிடைக்கப் போவதில்லை என்றும் சொன்னதோடு அன்று இரவு நடந்த மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசி தேர்தலில் தோழர் ஈ.வெ.ராமசாமியுடன் தோழர் டி. ஆதிநாராயண செட்டியார் போட்டி போட்டதில் தோழர் ஆதிநாராயண செட்டியாருக்கு 23 ஓட்டுகளும் தோழர் ராமசாமிக்கு 94 ஓட்டுகளும் கிடைத்தபொழுது தோழர் ராஜகோபாலாச்சாரியார் தோழர் ராமசாமியைப் பார்த்து “நீங்கள் இராமாயணத்தின்மீது பாயாதிருந்திருந்தால் உங்களுக்கு இன்னும் ஒரு 10, 15 ஓட்டுகள் கிடைத்திருக்கலாம்” என்றும் பாராட்டிப் பேசினார்.
இந்த விபரங்கள் 1926-27 “குடி அரசு” மலர்களில் காணலாம்.
ஆதலால் பார்ப்பனர்களுக்கு இப்போது இருக்கும் அகங்காரம் எல்லாம் “இது ஜெயிக்காது” இதைப் போல் எத்தனையோ பெயரைப் பார்த்தாய் விட்டது” என்கிற அகம்பாவமே ஆகும்.
பார்ப்பனர்களுக்கு எதுவரையில் இந்த அகங்காரமும், ஆணவமும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பெரும்பான்மை மக்களுக்கு மனிதத் தன்மையும், சுயமரியாதை உணர்ச்சியும் வரும்வரை இப்படித்தான் பேசுவார்கள். ஆனாலும் ஒரு அளவுக்குப் பார்ப்பனரல்லாதார் வெற்றிபெற்று விட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். அதற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் ஒரு காரியத்தில் பார்க்கலாம். அதாவது இன்று காந்தியாரைப்போல் எந்த ஒரு பார்ப்பனரையாவது அல்லது எந்த ஒரு சங்கராச்சாரியாரையாவது பொதுக்கூட்டம் போட்டு வீதியில் நின்று காந்தியார் சொல்வது போல் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கின்ற நான்கு வருணம் இருக்க வேண்டும். சூத்திரன் முதல் மூன்று வருணத்தாருக்கு சேவை செய்ய வேண்டும். ராமராஜ்யம் வேண்டும், சூத்திரர்களும், தீண்டாதவர்களும் தான் ஒன்றாக வேண்டும், மற்ற வருணத்தாருடன் அவர்கள் கலக்கக் கூடாது” என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியுமா? என்று பார்த்தால் அப்போது தெரியும் பார்ப்பனரல்லாதார் வெற்றிக்கு உள்ள பலமும் காந்தி கொள்கைக்கு உள்ள பலமும் என்று சொல்லுவோம்.
எனவே விபீஷணனை ஆழ்வாராக்கி ராஜ்ய பட்டம் கொடுத்து ராவணனைக் கொன்றதாக உள்ள கதையைப்போல் ஏதோ ஒரு வக்கீல் ஆசாமியைப் பிடித்து அவரை மகாத்மாவாக்கி அவருக்கு இந்திய ஜனப் பிரதிநிதித்துவம் என்பதில் சர்வாதிகாரியாக்கி பார்ப்பனரல்லாத சமூக சுயமரியாதைப் புனருத்தாரணத்தைக் கொல்லச் செய்யும் சூழ்ச்சியின் தன்மையைப் பிறர் அறிந்து கொண்டார்களே என்று வெட்கப்படாமல் பகிஷ்காரம் ஜெயிக்காது என்று வீரம் பேசுவதில் எவ்வளவு வெட்கங் கெட்டதனமும், சொரணையற்ற ஆணவமும் இருக்கின்றது என்று யோசித்தும் பார்க்க விரும்புகிறோம்.
காந்தியாருக்குச் சில முனிசிபாலிட்டிகள் வரவேற்புக் கொடுக்கின்றனவாம். முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டுகள் யோக்கியதை நாம் அறியாததல்ல.
சங்கராச்சாரிக்கு வரவேற்பு கொடுத்த முனிசிபாலிட்டி அவரது தாசருக்கு வரவேற்புக் கொடுப்பதில் அதிசயம் கண்டுபிடிக்க வேண்டியதே யில்லை. சங்கராச்சாரி சேவையைவிட, பார்ப்பனருக்கு காந்தியார் சேவை குறைந்ததல்ல. ஆதலால் பார்ப்பன ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட- பயந்த முனிசிபாலிட்டிகளும், போர்டுகளும் வரவேற்பு அளிக்கத்தான் செய்கின்றன. எப்படியாவது முனிசிபாலிட்டிகளிலும், போர்டுகளிலும் தங்க ளுக்குப் பெருமையும், சுயநலமும் இருக்க வழி வேண்டும் என்கின்ற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் கொண்டவர்களுக்கு இடமில்லாமலே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
வைசிராயுக்கும், கவர்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் வரவேற்பு ஒரு புறமும், “அப்பதவிகளை ஒழிக்க வேண்டுமென்னும் தேசபக்தர்களுக்கு” ஒரு புறமும், சனாதனதர்மிகளுக்கும் சங்கராச்சாரிக்கும் ஒரு புறமும், “சீர்திருத்தவாதிகளுக்கு” ஒரு புறமும், இவர்கள் இத்தனை பேர்களது கொள்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்கின்றதான சுயமரியாதைக் காரர்களுக்கு ஒரு புறமும் வரவேற்பளித்து தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்திலிருப்பவர்கள். ஏனென்றால் ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனீயமும், பணக்காரத்தன்மையுமே கொண்டவர்கள் தான் 100க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். ஆதலால் இவ்வரவேற்புகளால் காந்தியாருக்கு பெருமையும் வெற்றியும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லுவதெல்லாம் வெறும் வெளிமயக்கேயன்றி வேறல்ல.
ஆதலால் காந்தி பகிஷ்காரத்தைக் கண்டிப்பவர்கள் யோக்கியமும் நேர்மையும் உள்ளவர்களாகவும், சூக்ஷியும் இழி தன்மையும் இல்லாதவர்களாகவும் இருந்தால் நாம் எந்த எந்தக் காரணத்தைக் காட்டி பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அந்தக் காரணங்களை எடுத்துக் கூறி அவைகள் தப்பு என்பதாகக் காட்டிய பிறகு கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
(புரட்சி - தலையங்கம் - 24.12.1933)