இந்தியாவைப் பொருத்த அளவில்,இடஒதுக்கீடு என்றழைக்கப்படும் சமூகநீதிக் கொள்கைக்குத் தமிழகமே முன்னோடி என்று கூறப்படுகிறது. பெரியார் தலைமையில் அன்றைய தமிழகத்தில் நடத்தப்பெற்ற தொடர் போராட்டங்களின் வெற்றிதான் வகுப்புரிமை வரலாறு என்பது, பரவலாக அறியப்பட்ட செய்தியே. பெரியாரின் இடஒதுக்கீட்டு கோரிக்கை ‘பார்ப்பனரல்லாதார்' என்ற பொது அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதாகவும் நாம் அறிகிறோம். அந்த வகையில், சமூகநீதி என்பது பார்ப்பனரல்லாதோர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கான வகுப்புரிமை என்றாலும்கூட, அது பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டோரல்லாதாரின் உரிமைக் கோரிக்கையாகவே பின்னர் வடிவம் பெற்றது. தாழ்த்தப்பட்டோருக்கான வகுப்புரிமை குறித்து அதற்கு முன்னரே 1891லேயே பண்டிதர் அயோத்திதாசர், ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கும் அமைப்பாக விளங்கிய காங்கிரஸ் கட்சியின் ‘சென்னை மகாஜன சபை'க்கு வைத்த 10 கோரிக்கைகளில், தாழ்த்தப்பட்டோருக்கான சமூக நீதி குறித்து 6 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது..

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சமத்துவம் பெற ஏதுவாகப் பல்வேறு அரசமைப்புச் சட்ட உரிமைகளை சிறப்பாக இடம்பெறச் செய்தார். சாதியும் -தீண்டாமையும் இந்த நாட்டில் ஒழியும்வரை, இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியபோதும், காங்கிரஸ் கட்சியிலிருந்த தலித் உறுப்பினர்களே அதை எதிர்த்தனர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு, தொகுதி 37, பக்கம் 547) அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து பத்தாண்டுகள் வரையே இந்த உரிமைகள் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இப்பிரிவினர் முதல் பத்தாண்டுகளில் அடைந்த பொருளாதார, அரசியல், சமூக சமத்துவம் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூட முடியாதபடி மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததால், இந்தச் சிறப்பு உரிமைகள் -ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நீட்டிக்கப்பட்டு வரப்படுகிறது. தலித்துகள் சமத்துவம் பெற வேண்டும் என்பதைவிட, தலித்துகளை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கும்/நடத்தும் அரசியல் கட்சிகளின் நோக்கம் காரணமாகவே இந்த நீட்டிப்பு தொடர்கிறது என்பது இதன் பின்னுள்ள அரசியல்.

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர் அரசுகள் எவ்வாறு பார்ப்பனர் சார்புநிலை எடுத்தனவோ, அதேபோல் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை அமைந்த மய்ய, மாநில அரசுகள், பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக் காப்பவையாகவே அமைந்துள்ளன. ஆனால், அதற்காக தலித் அமைப்புகளும், சமூக நீதி ஆர்வலர்களும் சோர்ந்து போவதில்லை. அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான், தமிழகத்தில் அண்மையில் நடைபெறவுள்ள கல்லூரி விரிவுரையாளர் நியமனத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றக் கோரி -"தலித் முரசு'ம் பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களும் தொடுத்த பொது நல வழக்குகள் வெற்றி பெற்றுள்ளதாகும்.

ஏற்கனவே ‘தலித் முரசு' நவம்பர் 2007 இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் இங்கே நினைவு கூரத்தக்கவை. எனினும், இந்தப் பொதுநல வழக்குகளின் பின்னணி குறித்து மேலும் சில தகவல்களை இங்கே காணலாம். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கானப் பணியிடங்கள் 19 சதவிகிதமாகும். ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி மய்ய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக இந்த விழுக்காட்டிற்கான பணிநியமனங்களைச் செய்வதில்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அனைத்து அரசுகளின் செயல்பாடும் ஒரே மாதிரியாகவே அமைகின்றன. இதன் மூலம் அரசுப் பணியிடங்களில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. தலித் இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும்கூட அரசுகள் இவ்விஷயத்தில் தலித்துகளுக்கான உரிமையை மறுப்பதற்காகவே, மெத்தனப் போக்கைக் கையாளுகின்றன. ஒரு சில நேர்வுகளில், நீதிமன்றத் தலையீட்டால் மட்டுமே இந்த மெத்தனத்தின் ஒரு சிறு பகுதியையே போக்க முடிகிறது.

இவ்வாறே கடந்த 1999 ஆம் ஆண்டில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டு, தமிழக அரசுப் பணியில் நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிற்கு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், ‘1.4.89 முதல் இவ்வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிரப்பப்படாத பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட முடியாது என்றும், குறிப்பிட்ட துறைகளில் போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லாதபோது, அனைத்துப் பணியிடங்களையும் விகிதாசாரப்படி நிரப்பி விடுவதாகவும்’ உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உத்தரவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டது. இந்த உத்தரவு 14.1.2000 அன்று வழங்கப்பட்டிருந்த போதிலும், எட்டாம் ஆண்டை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழக அரசின் உயர் கல்வித் துறை 14.12.98 அன்று வெளியிட்ட அரசாணையின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் 595 பின்னடைவுப் பணியிடங்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கானது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும், அவற்றில் 100 பணியிடங்களை மட்டுமே நிரப்ப அந்த அரசாணையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 73 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 522 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இவை தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000 ஆம் ஆண்டு அளித்த உறுதிமொழியின்படி 5 ஆண்டுகளில், அதாவது 2005க்குள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், 18.9.2006 அன்று வெளியிடப்பட்ட அரசு விளம்பரத்தில் 1000 விரிவுரையாளர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தலித்துகளுக்கான பின்னடை வுப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, 2001இல் அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றாமல், இந்த நேரடிப் பணி நியமனங்களை செய்ய தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது என ‘தலித் முரசு' தொடர்ந்த பொதுநல வழக்கில் கோரப்பட்டது.

இதற்கிடையில், 522 பின்னடைவுப் பணியிடங்களில் 300அய் மட்டும் தற்போது நிரப்புவதாகவும், மீதமுள்ள 222 பணியிடங்களை நிரப்ப காலவரையறை விதிக்காமல் தள்ளிப் போடுவதாகவும் தமிழக அரசு 5.7.2007 அன்று வெளியிட்ட அரசாணையை நீக்கி, 522 பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பக்கோரி பேராசிரியர் அய். இளங்கோவன் மற்றுமொரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்குரைஞர் 222 பணியிடங்களை ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நிரப்பிவிடுவதாகக் கூறினார். ஆனால், ஏற்கனவே நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கும் கூடுதலாக 3 ஆண்டுகள் கழிந்த பிறகும் பணியிடங்கள் நிரப்புவதை, இவ்வாறு தொடர்ந்து தள்ளிப்போட அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், இரண்டு மாத காலத்திற்குள் 522 பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பிட தனியாக விளம்பரம் வெளியிட்டு, நியமனங்களை இயன்ற வரை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என 19.11.2007 அன்று உத்தரவிட்டுள்ளனர். இது, தமிழக அரசு 1999 இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி குறிப்பிட்டிருந்த 17, 314 பின்னடைவுப் பணியிடங்களின் ஒரு பகுதியே.

இவ்வாறு போராடிப் பெறப்படும் அரசுப் பணியிடங்களில் அமரும் சமூக நீதிப் பயனாளிகள், தாம் அப்பணியிடங்களில் அமர்ந்தவுடன் தங்கள் பணியிடங்களைப் ‘பதவி'களாகக் கருதுவது மிகவும் வேதனைக்குரியது. பதவிகளில் அமர்ந்த பின்னர், தாம் பிறந்த சமூகத்தைப் பற்றி அக்கறைப்படுபவர்களும், அதற்குத் தாம் செய்ய வேண்டிய பதிலுதவியைச் செய்பவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவே. இந்தப் பதவிகளைப் பெறக் காரணமாக இருந்த சமூகத்திற்கு மறுபலன் தர வேண்டியது -ஒவ்வொரு சமூக நீதிப் பயனாளியின் கடமையாகும்.

அந்த வகையில் பரந்துபட்ட தளத்தில் செயல்பட, டாக்டர் அம்பேத்கர் பல திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருடைய நூல் தொகுப்பின் தொகுதி 36 இல் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டு மெனத் தெளிவாக வரையறுத்து, அவற்றிற்குரிய சட்டவிதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். இந்நிறுவனங்களும் அமைப்புகளும் தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் எனப் பல தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீடு தற்போது அரசுப் பணி மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படும் அமெரிக்காவின் ஆலோசனையின்படி -தனியார்மயமாக்கல், வளரும் நாடுகளை கண்மூடித்தனமாக அந்நாடுகளின் அரசுகளைத் தலையாட்டி பொம்மைகளாக்கி, நவீனச்சுரண்டல் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. இச்சூழலை போதுமான அளவிற்குப் புரிந்து கொண்டு எதிர்வினையாற்றும் வகையில் தலித் அரசு ஊழியர் அமைப்புகள் செயல்படுவதில்லை என்பது கவலைக்குரியது. எண்ணிக்கையில் பெருமளவு தலித் ஊழியர்களைக் கொண்ட ரயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்புத் துறை, பாரத மிகு மின் நிறுவனம் போன்ற அமைப்புகளில் பணியாற்றுவோர் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில், இடஒதுக்கீடு என்பது வருங்காலத் தலைமுறையினருக்கு எட்டாக்கனியாகிவிடும்.

இருப்பினும், ஒரு சில உணர்வுள்ள தனிநபர்களின் முன் முயற்சியின் காரணமாக, சில சமூக நலன் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், அது குறிப்பிடத்தக்க அளவிலோ, பெரிய அளவிலோ முன்னெடுக்கப்படவில்லை. 1956 வரை அம்பேத்கர் தொடங்கி வழிநடத்திய இயக்கங்களை ஆய்ந்தால், இது குறித்துப் பல செய்திகளை சேகரிக்க முடியும். அதை விடுத்து -உட்சாதி வேறுபாடுகளைப் பெரிதாக்கி, தனிநபர் துதிபாடும் கூட்டத்தை உருவாக்குவது, சமூகத்திற்கே பெரும் இழப்பாக அமைகிறது.

ஒவ்வொரு சமூக நீதிப் பயனாளியும்தான் பெற்ற சமூக நீதியைப் பிறருக்கும் கிடைக்கச் செய்ய அயராது சிந்தித்து, முனைப்புடன் செயல்பட வேண்டும். தான் அறிந்த தலித் மாணவருக்கு கல்வியாண்டுதோறும் புத்தகங்கள் போன்ற கல்விக் கருவிகள் வாங்க பொருளாதார ரீதியாக உதவலாம். இயன்றால், கல்விக் கட்டணமும் செலுத்தலாம். அதேபோல், தங்கள் வட்டத்தில் ஒரு குழுவை அமைத்து வசதி குறைவான தலித் மாணவர்களுக்கு கல்வி தொடர்புடைய திறமைகளில், போட்டித் தேர்வுகள் எழுதுதல் போன்றவற்றில் தனிப்பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யலாம்.

மேலும் வாய்ப்பு இருந்தால், கல்வி அறக்கட்டளைகள் தொடங்கி பள்ளிகள், கல்லூரிகள் மற்ற கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தலாம். இதுவே சமூக நீதி பெற்ற ஒவ்வொருவரும் சமூக நீதி வேண்டுவோருக்கு செய்யக் கூடியதாகும். இல்லையெனில், டாக்டர் அம்பேத்கர் தன் இறுதி நாட்களில், “படித்தவர்கள் என்னை வஞ்சித்து விட்டார்கள்” என்று பகிர்ந்து கொண்ட வேதனையை உண்மையாக்கியதாக அமைந்துவிடும்.

-சு.சத்தியச்சந்திரன்
Pin It