பார்ப்பனர்கள் தமது வாயின் மூலம் வலிமையானவர்கள்; ராஜனீயர்களின் (சத்திரியர்கள்) வலிமையோ அவர்கள் கரங்களில் இருக்கிறது. இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு (வைசிய, சூத்திரர்) மேலாக வாழ்வர் என்று இந்து வேதங்கள் வரையறுப்பதை மீறாத வகையிலேயே அரசு பற்றிய கருத்துகள் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த நால்வர்ணக் கோட்பாட்டை உறுதியாக நம்புகிற, அதைப் பாதுகாக்க நினைக்கிற மனிதர்களின் கூட்டமாகவே காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் இருந்ததை, அம்பேத்கர் மிகத் தெளிவாக தமது நூல்களில் நிரூபிக்கிறார். இவர்களின் அமைப்புகள் கோரிப் பெறும் விடுதலைக்குப் பிறகான நாட்டில் மீண்டும் சாதிய அரச கோட்பாடே நிலைப்படுத்தப்படும். இதற்கு மாற்றாக அம் பேத்கரால் முன்வைக்கப்பட்டதே ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைகளையும் விடுதலை யையும் அளித்திடும் சமூக ஜனநாயகம்.

மக்களாட்சியின் ஆணிவேர்க் கருத்தான சமத்துவத்தை ஏற்காத வகுப்பாரின் வசம் இந்தியத் தன்னாட்சி அரசை நம்பி ஒப்படைத்தல் இயலாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பாகுபாட்டு உணர்வில் ஊறித் திளைத்துத் தாமே உயர்ந்தவர்கள் என்று வாழும் இவர்களது கையில் எளிய பொதுமக்களின் வாழ்வு நலன்கள் பாதுகாப்பாக இருக்க இயலாது. ஒவ்வொரு தனித்தனி மனிதரின் மதிப்பையும் தனித்தனியே உணர்ந்து மதித்தல், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கைதான் உண்டு என்பதை உணர்ந்து, அவ்வாழ்க்கையில் அவன் தனது தகுதிகளுக்கேற்ப உச்சகட்ட உயர்வை அடைய அனைத்து வாய்ப்புகளையும் அளித்தல் ஆகியவையே -நிகழ்கால மக்களாட்சி அரசின் கோட்பாடுகளாகும். இந்திய மேல்தட்டு வகுப்பு மக்களின் சிந்தையிலோ, செயலிலோ, மெய்ப்பொருளிலோ இவ்வடிப்படைக் கோட்பாடுகள் கிஞ்சித்தும் இடம் பெறவில்லை என்பதுதான் அம்பேத்கரின் கருத்து.

இந்தியாவில் அரசு என்னும் கோட்பாடு -சாதிய அடிப்படையையும், தெய்வீகத் தன்மையையும் கொண்டது. இந்துக்கள் ஆண்டபோதும், முகமதியர் ஆண்டபோதும் அரசு பற்றிய கோட்பாடு முடியாட்சிக் கோட்பாடாகவேதான் இருந்து வந்தது. அரசன் இல்லாத நிலையில் மக்கள் அழிவுப் பாதையில் சென்று விடுவர். எனவே, அவர்களை அடக்கி ஆளவும், அமைதியை நிலைநாட்டவும் அரசன் தேவை என்கின்றன இந்து புராண நூல்கள். இஸ்லாமும் இதே வகையான தனது கருத்தினைக் கொண்டிருக்கிறது. "அரசன் ஆண்டவனிடத்திலிருந்து வந்த ஒளி விளக்கு' என்கிறார் அபுல் பாசல் என்கிற அறிஞர்.

இந்தியாவை ஆண்ட மன்னர்களும் அவர் தம் வம்சங்களும் எப்போதுமே உயர்குடி பிறப்பு என்றும், தெய்வீகத் தன்மை கொண்ட வம்சம் என்றும்தான் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். இதற்கென அவர்களின் வரலாறுகளும்கூட மாற்றி எழுதப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அளவில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, காஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பல்லவ மரபைக் கூறலாம். பல்லவர்களின் மரபு பற்றி பல கருத்துகள் உண்டு. அதில் முதலாவது கருத்து, அவர்கள் வடக்கிலிருந்து வந்த பார்த்தியன் பழங்குடியினர் என்பதாகும். இவர்கள் ஒரு வகையான நாடோடி வாழ்வினை மேற்கொண்டவர்கள்.இந்த கருத்தினை அடியோடு புரட்டி -வேறு ஒரு கருத்து பல்லவர் வம்சம் பற்றி சில வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்டது. அக்கருத்தின்படி, பல்லவ மரபினைத் தோற்றுவித்தவர்கள் முதலில் பார்ப்பனர்களாக இருந்து பின்னர் ஆயுதமேந்தி சத்திரியர்களாக மாறியவர்கள். எனவே, பல்லவர்களை "பிரம்ம சத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்கிறது அக்கருத்து. மிகக் கடைசியாக அண்மையில் வெளிவந்திருக்கும் "வன்னியர் வரலாறு' எனும் நூல், பல்லவர்களை வன்னியர்கள் என்று சொல்கிறது. இப்படி இந்தியாவில் அரசு பற்றிய கருத்துகள் எப்படிப் பார்த்தாலும் பார்ப்பன, சத்திரிய நிலைகளையே வந்து அடைந்து விடுகின்றன.

அரசு பற்றிய கருத்தோட்டம், இந்து நம்பிக்கைகளின்படி சாதியப் படிநிலைப்படுத்தப்பட்ட சனாதன கருத்தோட்டமாகவே இருக்கிறது. உலகத்தில் அரசன் இல்லாமல் போனால், பலமுள்ளவனிடத்தில் பலமில்லாதவர்கள் பயத்தினால் அழிந்து போவார்கள். ஆகையால் இவ்வுலகம் எல்லாம் அழியாமல் இருக்கும் பொருட்டு சாமியானவர் அரசனை உண்டு பண்ணினார். இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் இவர்கள் அம்சங்களினாலேயே அரசன் உண்டாக்கப்பட்டான் என்கிறது மநுதர்ம சாத்திரம். இக்கருத்தில் உலகின் அய்ந்து பொறிகளுடன் அரசனை இந்துக் கருத்தியல் பிணைக்கிறது. அதன்படி, எவ்வாறு இந்த அய்ந்து பூதங்கள் இல்லையெனில், உலகில் உயிர்களின் வாழ்வு இல் லையோ அப்படியே அரசன் இல்லையெனில், மனித வாழ்வும் இல்லை என்றாகிறது. இவ்வகையான கருத்து மிக ஆழமாக இந்திய சாதிய மனங்களில் இருத்தப்பட்டிருக்கிறது.

Ambedkar
இக்கருத்தோடு மேலும் தந்திரமாக இந்து கருத்தியல் பிறிதொன்றை உருவாக்கியிருக்கிறது. அது, பார்ப்பன -சத்திரிய கூட்டு எனும் தந்திரம். பார்ப்பனர்களுக்கு எப்போதும் அக்கிரமம் செய்து துன்பப்படுத்துகிற சத்திரியனை பார்ப்பனனே சாபத்தினாலோ, மரண ஓமத்தினாலோ அடக்குகிறவனாக இருக்க வேண்டும். ஏனெனில், சத்திரியன் பார்ப்பனரிடத்திலிருந்து உண்டானவன் என்று மநுதர்மம் கூறுகிறது. இக்கருத்து, இக்கூட்டுச் சதியை நமக்கு தெளிவாக அம்பலப்படுத்தி விடுகிறது. இச்சதிக்கு நாம் ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்தியாவை பார்ப்பனர்களும், சத்திரியர்களுமே ஆண்டிருக்கிறார்கள்; ஆண்டு வருகிறார்கள். நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இவ்விரு வர்க்கமும் நாணயமற்ற செயல்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் கூட்டு, அரசியலில் மட்டுமின்றி எல்லா ஆதிக்க மட்டங்களிலும் தொடர்கிறது. சத்திரியன் ஆயுதம் தரித்து உலகாள்வதே சிறந்தது. பார்ப்பனன் ஓதுவதும் ஓதுவிப்பதுமே சிறந்தது என்பது இங்கிருக்கிற சனாதன மரபு. இந்த கூட்டுச் சதியின் மூலம் பார்ப்பனர்களும், சத்திரியர்களான ஆளும் வர்க்கமும் -தமது ஆதிக்கத்துக்கு ஒருபோதும் ஊறு வராதபடி பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டு இந்தியாவிலே உடைபட்டது அன்னிய படையெடுப்புகளின்போதுதான். அப்போதும்கூட சத்திரியர்களும், பார்ப்பனர்களும் இங்கே அவர்களை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றிக் கொண்டவர்களுடன் ஏதோ ஒரு வகையில் உறவினைப் பேணிக் கொண்டேதான் வந்தனர். தேவையேற்பட்டால் தமது அரச உரிமையையும், ஆதிக்க நிலையையும் மீட்டுக் கொள்ள தமக்குக் கீழான மக்களைத் திரட்டிப் போராடினர். இவ்வகையான போராட்டம்தான் விடுதலைப் போராட்டமும்கூட.

அதன் போராட்டக் குழுக்கள், அணிகள் அனைத்திலும் பார்ப்பனர்களும், சத்திரியர்களும் மட்டுமே முன்னணியில் இருந்ததை நாம் கவனமாக ஆராய்ந்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி இருந்த பார்ப்பன ஆதிக்க சாதி தலைமைக்கு விடுதலைப் போராட்டம் பற்றிய எந்தவித தத்துவார்த்தப் புரிதலும் இல்லை. அன்னியன் வந்து ஆளக்கூடாது என்பதைத் தவிர, வேறு எந்த எதிர்ப்பும் இல்லை. "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில், அன்னியன் வந்து புகல் என்ன நீதி' என்ற பாரதியின் பாடல் வரிகளை ஆதிக்க சாதியினரின் மனநிலைக்கு ஆதாரமாகக் கொள்ள முடியும். இவர்களுக்கு உள்நாட்டில் இருக்கும் எந்த இழிமைகளும் உறைக்கவேயில்லை. இது ஒரு ஆதிக்க மனநிலை மட்டுமன்று, மூடத்தனமான மூர்க்க மனநிலையும்கூட. ஆணாதிக்க வெறி யுடன் தன் மனைவியை அடிப்பவனிடம் ஏன் அடிக்கிறாய் என கேட்கும்போதோ, பெண்ணுரிமை கருத்துகளை ஒருவர் விளக்கும்போதோ, “என் மனைவியை நான் அடிப்பேன், நீ யார் கேட்பதற்கு?” என்பான் அவன். அதேபோலதான் இதுவும் இருந்தது. ஆமாம், சாதி இருக்கிறது. பெண்ணடிமைத்தனம் இருக்கிறது. மூடப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அதனால் என்ன? நீ எங்களை ஆளாதே. நாங்கள் எல்லாவற்றை யும் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள் இந்த ஆதிக்க சாதி தலைவர்கள்.

1933 இல் "இந்தியன் பிரஸ்' இதழில் எங்கே (போகிறது) இந்தியா? எனும் தலைப்பில் நேரு எழுதியுள்ள கட்டுரை, இதை மிகத் தெளிவாக்கி விடுகிறது. “எந்த வகுப்பினரின் சுதந்திரத்துக்காக நாம் போராடுகிறோம்? விவசாயிகள், உழைப்பாளிகள், சிறு குழுக்கள், நில உடைமையாளர்கள், கைவினைஞர்கள், தொழிற்சாலை முதலாளிகள், வட்டிக்கடை நடத்துவோர் இவர்களில் யாருடைய விடுதலைக்காகப் போராடுகிறோம்? யாருடைய பக்கம் நிற்கப் போகிறோம்? தெளிவாகச் சொல்வதெனில், இருக்கின்ற நிலை அப்படியே தொடரட்டும். விடுதலைக்குப் பிறகு இவைகளுக்கு விடை காணலாம்” என்கிறார் நேரு. அவர் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டதாலோ என்னவோ அவரின் பட்டியலில் தலித்துகள் வருவதில்லை. இவர்களின் பார்வையில் "இருக்கின்ற நிலை' இருந்தபடியே இருக்கட்டும் என்ற வலுவான கருத்து கெட்டித்தட்டியிருந்தது.

இதனுடன் அரசு, ஆளும் வர்க்க நிலை, ஆதிக்க உரிமை ஆகிய ஏகபோகங்களுக்கான வெறியும் இருந்தது. இந்த சித்தாந்தங்களின் நாகரிகப் பூச்சாக விடுதலைக் கருத்தியல் உருவாக்கப்பட்டிருந்து. விடுதலைப் போராட்டத்தின் பிற்பகுதியில் -1856 தொடங்கி 1947 வரையிலான நூறாண்டுகளின் இறுதிப்பகுதியில் -இந்த விடுதலைக் கருத்தியல் புத்தாக்கம் பெற்றது. அந்த புதுக் கருத்தையும், பொருளையும் விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கியவர் வேறு எந்தத் தலைவருமல்ல. அவர் பாபாசõகேப் அம்பேத்கர்தான். இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்குதல் என்ற முடிவினை வெள்ளையர் எடுக்கும்வரை, சாதி இந்து தலைவர்களுக்கு சிக்கல் ஏதுமில்லை. அந்த முடிவிற்குப் பிறகு அம்பேத்கர் தன்னுடைய அறிவாற்றலால் விடுதலைப் போராட்டத்தின் உள்ளடக்கத்தை, ஜனநாயகத்தன்மை கொண்டதாக மாற்றினார். இந்தப் புதிய உள்ளடக்கம் அவர்களை கலக்கமடையச் செய்தது. அவர்கள் தலித்துகளை குழப்பவும், போலி யாக நடிக்கவும் முற்பட்டனர். இதில் முன்னின்றவர் காந்தி ஆவார்.

வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் ஊடாகவே கிடைத்த நவீன கல்வியை பெற்ற ஆதிக்க சாதியினர் சிலர், ஏற்கனவே சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், அவர்களின் சீர்திருத்தம் இந்து மத சீர்த்திருத்தமாக, சாதி சீர்த்திருத்தமாகத்தான் இருந்தது. இது உளுத்துப் போனவைகளின் மீது வண்ணம் பூசுவதை ஒத்திருந்தது. தமது வர்ணாசிரமத்தின் உயர் வர்ணத்தைதான் இப்படிப் பகட்டாக அவர்கள் பூசினர். காந்தி அவர்களில் முதன்மை வண்ணப் பூச்சாளராக நின்றார். அம்பேத்கர் இந்த வர்ணத்தை வெளுத்துத் துவைத்தார். பூனா ஒப்பந்தம் மூலம் தலித் மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த பிறகு, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக காந்தி 11.2.1933 அன்று "அரிஜன்' இதழைத் தொடங்கினார். அதில் அம்பேத்கரின் வாழ்த்துச் செய்தியையும் கேட்டிருந்தார்.

“சாதி அமைப்பின் உற்பத்திதான் சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் தீண்டத்தகாதவன். சாதிகள் இருக்கும்வரை, ஒதுக்கப்பட்டவர்களும் இருப்பார்கள். சாதியை நிர்மூலமாக்காமல் வேறு எதுவும் ஒதுக்கப்பட்டவர்களை விடுதலை பெறச் செய்யாது. இந்த வெறுக்கத்தக்க -அருவருப்பான மய்யக் கருத்தியலை ஒழித்தாலொழிய, வரப்போகின்ற போராட்டத்திலிருந்து இந்துக்களைப் பாதுகாக்கவோ, அவர்களின் உயிர் வாழ்தலை உறுதி செய்யவோ முடியாது” என்று தன் செய்தியை ‘அரிஜன்’ இதழுக்கு அனுப்பி தன் எச்சரிக்கையையும் பதிவு செய்திருந்தார் அம்பேத்கர். இதற்கு அவ்விதழிலேயே விடை எழுதிய காந்தி, சாதி வெறுக்கத்தக்கதோ, அருவருப்பானதோ அல்ல. அதில் எந்த பாவமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

Gandhi
காந்தியின் இந்த வகையான கருத்து நிலையின் உச்சம், அவர் கையாளுவதாக அறிவித்த அகிம்சை (சத்தியாகிரகம்) எனும் விடுதலைப் போராட்டக் கொள்கை. (ஆனால் அகிம்சை போராட்டமாக விடுதலைப் போராட்டம் முழுமையாக இல்லை) ஆயுதப் போராட்டத்தை தந்திரமாக தடுத்ததின் மூலம் காந்தி ஒரு பெரும் புரட்சியை தவிர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்று தலித் பார்வையில் அகிம்சையை கட்டுடைக்கிறபோது பல புதிய செய்திகள் தெரிய வருகின்றன. ஆயுதப் போராட்டத்தைத் தடுத்ததின் மூலம் தலித்துகள் ஆயுதம் ஏந்துவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. காலங்காலமாக ஆயுதம் ஏந்தும் உரிமை மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்கு இப்போராட்டத்தின் மூலம் அவ்வுரிமை கிடைத்திருக்குமானால், அவர்கள் வெள்ளையனையும் தாக்கியிருப்பார்கள். சாதி இந்துவையும் தாக்கியிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் முடிவு வேறுவகையானதாக இருந்திருக்கும் ஆனால் அகிம்சையின் குவிமய்யம், ஒரே திசையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. மேலும் காலங்காலமாக ஆயுதம் தரித்து வந்த ஆதிக்க சாதியினருக்கு அடுத்த ஆட்சிக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் அது இளைப்பாறுதலாகவும் ஆனது.-வளரும்

திசம்பர் மாதத்தின் முதல் வாரம், மழையும் குளிரும் நிறைந்த நாட்களுடன் தொடங்கியது. ஓயாமல் சிணுங்கி நச்சரிக்கும் மழையின் நடுவிலேயே தலித் எழுச்சி கலை விழா, திருவண்ணாமலையில் நடைபெற்றது. தலித் மக்கள் மன்றம் சார்பில் தோழர் ரொசாரியோ அவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் தொடக்கத்தில் அடித்த பறையொலிக்கு நடுங்கி மழை குறுக்கே வரவில்லை. அழைப்பிதழில் போட்டிருந்தபடி விடிய விடிய நடந்தது விழா.

விழாவில் பேசிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்கத் தோழர் தமிழினியன் கொடுத்த நூலான "புத்தர் ஓர் இந்துவா?' கைகளில் இருந்தது. "பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை'யின் செயலாளர் வழக்குரைஞர் சு. சத்தியச் சந்திரன் மொழிபெயர்த்த நூல் அது. டாக்டர் சுரேந்திர அஜ்நாத் என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலின் தமிழாக்கம்.
பேருந்தில் என் அருகில் உட்கார்ந்து பயணம் செய்த "சாமி' ஒன்று இந்த நூலையும் என்னையும் பார்த்துக் கொண்டே வந்தது! வழியிலேயே ஏதோ ஓர் ஊரில் "அது' இறங்க எழுந்தபோது, அந்த நூலை "சாமி'யிடம் கொடுத்துவிட்டேன். புத்தரின் கருத்துகள் நிச்சயம் "அதை' "மனிதனா'க்கிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு அப்போது எழுந்தது.

Budha
புத்தரை உள்வாங்கிச் செறிக்கும் பொருட்டு ‘இந்து’ என்றும், ‘கிருஷ்ணனின் ஓர் அவதாரம்’ என்றும் நெடுங்காலமாக பார்ப்பனியம் பொய்ப் பரப்புரையை செய்து வருகிறது. ஆனால் புத்தரோ, இந்து மதத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக இருக்கிறார். அவரை இந்து மத பார்ப்பனியக் கருத்தியல் ஒருபோதும் உள்வாங்கிச் செறிக்க முடியாது. இந்த பொய்ப் பரப்புரையையே தலைப்பாகக் கொண்டு சுரேந்திர அஜ்நாத் இச்சிறு நூலை எழுதியுள்ளார். சிறு நூலாக இது இருப்பினும் பவுத்தம் பற்றிய முழுமையான புரிதலை தரக்கூடிய நிறைவான நூலாகவும் அமைந்திருக்கிறது. பவுத்தம் குறித்து வினாக்களை எழுப்புகிறவர்களுக்கும், பவுத்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இந்த நூலை தரலாம். இந்து மதம் என்பது என்ன? அதன் அடிப்படைகளாகக் கருதப்படுகின்ற வேதங்கள், பசு வழிபாடு, சாதிய அமைப்பு, மறுபிறப்பு (ஏழு பிறவிகள்), கடவுள், சிலை வழிபாடு, அவதாரங்கள் ஆகியவை கொண்டிருக்கும் அடிப்படைகள் என்ன? அவை பவுத்தத்துடன் எப்படி முரண்படுகின்றன என்று விவரிக்கிறார்.

திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்று பொருள்படும் பாரசீகச் சொல்தான் ‘இந்து’ என்பது. இந்தச் சொல், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இல்லாமல்தான் இருந்தது. வெள்ளையர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் இங்கே வந்தபோது இந்தச் சொல் அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. இந்து மதத் தலைவர்களும், சாதி இந்து தலைவர்களும் இந்து என்ற சொல்லுக்கு வரையறகைளை அளித்தனர். இந்த வரையறை இன்றுவரையிலும்கூட புதிய உட்சேர்க்கைகளோடு தொடர்கிறது.

“ஓர் இந்து என்பவன் வன்முறையைத் தவிர்க்கிறவன். வேதங்களையும், பசுவையும், சிலைகளையும் வழிபடுகிறவன். வர்ணாசிரம -சாதி கடமையை நிறைவேற்றுகிறவன். தவத்தினால் பாவத்தையும், ஆயுதங்களால் எதிரியையும் அழிப்பவன். மறுபிறப்பை நம்புகிறவன். ஆரியம் தவிர மற்ற கொள்கைகளைப் பாவமெனக் கருதுபவன். வர்ணாசிரமத்தை நம்புகிறவன்” என்று அவர்களால் அளிக்கப்படும் வரையறைகள், இந்து மதத்தின் பகுத்தறிவுக்கு எதிரான தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதில் முரண்பாடுகளும் உண்டு. இந்து என்பவன் வன்முறையைத் தவிர்ப்பவன் என்று மேருதந்த்ர பிரகாசமும், எதிரிகளை தன் ஆயுதங்களால் அழிப்பவன் என்று பரிசத் ஹரனும் கூறுகின்றன. இதில் இரண்டாவது நூல் கூறுவதுபோல, இந்து என்பவன் வன்முறையைத் தவிர்ப்பவன் அல்லன் என்பதே வரலாறும், நடப்பு நிகழ்வுகளும் நமக்குக் காட்டும் உண்மை.

சாதிய கட்டுமானங்களை மீறும் தலித்துகள் கொல்லப்படுவதும், இனப் பெருமையைக் காப்பாற்ற பெண்களைக் கொல்வதும், மூடநம்பிக்கைகளுக்காக நரபலியிடுவதும், வேற்று மதத்தினரை கழுவேற்றியதும், முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றதும், கொல்வதும் இந்துக்களன்றி வேறொருவரும் இல்லை. உண்மையில் இந்துக்களைப் போல கொடூரமானவர்களும், இந்து மதத்தைப் போன்ற வன்முறை மதமும் உலகில் வேறெங்கும் இல்லை. இந்த மதத்தின் சிமிழுக்குள் அகிம்சை எனும் கொல்லாமையை போதித்த புத்தரை அடைப்பது நகைப்புக்குரியது.

இந்து மதத்தின் அத்தனை அடிப்படைகளுக்கும் புத்தர் விடைகளை வைத்திருக்கிறார். புத்தர் வேதங்களின் புனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். முரண்பாடுகளின் மூட்டையே வேதங்கள் என்கிறார். புத்தர் கொல்லாமையை போதித்தாலும் பசு இறைச்சியை தவறாகக் கருதவில்லை. கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும், யாகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் விலங்குகள் கொல்லப்படுவதை புத்தர் எதிர்த்தார். அவர் காலத்தில் பசு இறைச்சியை உண்டு, பார்ப்பனர்களே யாகங்களை நடத்தி ஆயிரக்கணக்கான பசுக்களை கொன்று தின்றனர். “ஓ பார்ப்பனனே! கம்பத்திற்கு மரங்களை வெட்டுவதில்லை, தர்ப்பைப் புல்லை அறுப்பதில்லை. அடிமைகளை விடுவிப்பதில்லை, ஆடு, கோழி, எருதுகளை பலியிடுவதில்லை. போயும் போயும் பசுதானா யாகத்திற்கும், தின்பதற்கும் உங்களுக்கு கிடைத்தது?” என்கிறார் புத்தர். அவரின் போதனையைக் கேட்டு பசே நதி மன்னன் யாகத்திற்காக கட்டி வைத்திருந்த 700 எருதுகள், 700 விடை எருதுகள், 700 இளங்கிடாக்கள், 700 வெள்ளாடுகள், 700 செம்மறி ஆடுகள் ஆகியவற்றை அவிழ்த்து விட்டு விடுகிறான்.

புத்தரின் சாதி எதிர்ப்பு கடுமையானது. அவருடைய சங்கத்தில் எல்லா சாதியினரும் இருந்தனர். குறிப்பாக பெண்கள் இருந்தனர். பெண்களுக்கு அவர் சங்கத்தில் இடம் அளிக்கவில்லை என்ற தவறான குறிப்புகளை இன்றும் சில பாடநூல்கள் கொண்டுள்ளன. பிரக்ரதி, அம்பபாலி, காபா, புண்ணா, புண்ணிக்கா, சுமங்கலமாதா, சுபா என்று பல பெண்கள் அவரின் சங்கத்தில் சேர்ந்தனர். சுனிதா, சதி, நந்தா போன்றோர் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவர்கள்; புத்தரின் சங்கத்தில் இணைந்து இருந்தவர்கள்.

புத்தரின் கடவுள் மறுப்பும், சிலை வழிபாட்டு மறுப்பும், அவதாரங்கள் மீதான விமர்சனமும் பகுத்தறிவுக்கு உட்பட்டவைகளாகத் திகழ்கின்றன. அம்பேத்கர் பவுத்தத்தை மறு கண்டுபிடிப்பும், புத்தாக்கமும் செய்கிறார். அம்பேத்கர் இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்கும் ஒப்புமை செய்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். “புத்தரும் அவரின் நெறியின் எதிர்காலமும்” என்ற கட்டுரையில், இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்கும் உள்ள பெரும் வேறுபாட்டை அம்பேத்கர் தெளிவாக விளக்குகிறார்.

"பவுத்தத்தில் கடவுள் இல்லை. கடவுளின் இடத்தில் ஒழுக்கம் இருக்கிறது. ஒரு மதத்தின் அடிப்படை சாரமாக ஒழுக்கத்தை வைத்தவர், உலகிலேயே முதன்முதலாக புத்தரே' என்பது அம்பேத்கரின் கருத்து. இந்து மதம் சமத்துவத்தை கற்பிக்கவில்லை. அதில் சமத்துவமே இல்லை. அம்பேத்கரின் வரையறைகளின் படி, மதம் என்றால் அதற்கு மூன்று அடிப்படைக் கொள்கைகள் இருக்க வேண்டும்.

1. மதம் அறிவியலோடு பொருந்துவதாய் இருக்க வேண்டும் 2. ஒழுக்கத்தை தன் அடிப்படையாகவும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை தனது கொள்கைகளாகவும் கொண்டிருக்க வேண்டும் 3. வறுமையை நியாயப்படுத்தவோ, புனிதப்படுத்தவோ கூடாது. இந்த வரையறையில் ஒன்றுகூட இந்து மதத்துக்குப் பொருந்தாது.

ஆனால் பவுத்தம் இவற்றையே தனது அடிப்படையாக வலியுறுத்துகிறது. புத்தர் இவற்றை போதித்திருக்கிறார். “மனித இனம் இதுவரையில் சிந்தியுள்ள கண்ணீர் கடல் நீரின் அளவைக் காட்டிலும் அதிகம்” என்கிறார் புத்தர். மனிதர்களின் மீதான பரிவும் அன்புமே அவரிடம் பெருகிக் கிடக்கிறது. அவர் போதித்த அய்ந்து ஒழுக்கங்களான கொல்லாமை, களவு செய்யாமை, முறையற்ற காமம் கொள்ளாமை, பொய் சொல்லாமை, மது அருந்தாமை ஆகியவற்றிலிருந்து இதை அறியலாம். அவர் வலி யுறுத்திய எண் வகை கடமைகளான சரியான புரிதல்கள், சரியான நோக்கம், சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியான வாழ்வியல் முறை, சரியான முனைவு, சரியõன ஓர்மை, சரியõன மனக்குவிப்பு ஆகியவற்றைப் பின்பற்றினால் உலகம் மிகச் சரியாகிவிடும்.

மிகச் சிறந்த கருத்துகளை உள்ளடக்கியிருக்கும் சுரேந்திர அஜ்நாத்தின் நூல் ஓர் அறை கூவலோடு முடிகிறது. "புத்தரை ஓர் இந்துவாகக் கூறிகொள்வதற்குப் பதில் அவர்கள் (இந்துக்கள்) தங்களை பவுத்தர்களாக மாற்றிக் கொள்வதே -நல்லவற்றை அடைவதற்கு சரியான பாதையாகும்.' இந்த கருத்தினை சாதி இந்துக்களும், தம்மை போலியாக இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் தலித்துகளும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

Pin It