ஆலமரத்துக்குப் பல வேர்கள் தேவைப்படுவது போல, உள்ளாட்சி அமைப்புகள் கிளைகளாக உள்ளன. வேர்கள், கிளைகள் தங்களின் கடமையை ஆற்றுவதால் மரம் செழிக்கிறது, தழைக்கிறது. காய், கனி கிடைக்கிறது. பயிரிட்டவர்களுக்குப் பயன் விளைகிறது. வேர்கள் கோபித்தால் அடிமரம் நிலைக்காது. வேர்களின் கோபத்துக்கு ஆளாகாமல், உங்கள் ஆசையை விரைவில் நிறைவு செய்வோம்’ என்று மார்ச் 17 அன்று, தமிழக அரசின் சார்பில் நடத்தப் பட்ட உள்ளாட்சித் தலைவர்கள் கருத்தரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி முழங்கினார். மேலும், காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஈரடுக்கு முறையை கொண்டு வரப்போவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9,000 கோடி நிதி ஒதுக்கப் போவதாகவும் முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையும் தாண்டி உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். எல்லா அறிவிப்புகளுமே கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்புகள் எதுவுமே மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காச்சியேந்தலைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, தலித்துகளுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது; தீண்டாமைக் கொடுமையிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டார்கள் என்று கண்துடைப்பு நாடகங்களை ஆளும் கட்சி அரங்கேற்றியது. ஆனால், தலித்துகள் தலைவர்களாக இருக்கக்கூடிய பஞ்சாயத்துகளில் அவர்கள் சொல்லொணா அவமரியாதைகளை சந்தித்து, எந்தவித அதிகாரமும் இன்றி, கேள்வி எதுவும் கேட்காமல் காசோலையில் கையெழுத்து மட்டுமே போடுபவர்களாக, தங்களுக்குரிய நாற்காலியில் உட்காரக்கூட முடியாமல், அலுவலகத்திற்கு உள்ளே வர முடியாமல், பஞ்சாயத்து உதவியாளருக்கும், துணைத் தலைவருக்கும் எடுபிடி செய்பவர்களாக - நாள்தோறும் சாவை எதிர்நோக்கி இருக்கின்றனர். எதிர்த்துக் கேட்டால் கொலை செய்யப்படுவோம் என்று பயந்து, சொந்த மண்ணைவிட்டு வேறு ஊர்களில் புலம்பெயர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் உண்டு. எந்த நேரமும் தாங்கள் கொல்லப்படலாம், தங்கள் குடும்பங்கள் அச்சுறுத்தப்படலாம் என்று நடைபிணங்களாகவே தலைவர்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனையோ தலித் மக்களை காவு வாங்கிய நெல்லை மண் - மீண்டும் தொடர்ந்து காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு மாதத்திற்குள் இரண்டு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சாதி இந்துக்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்திற்காக 22.11.2006 அன்று நக்கலமுத்தன்பட்டி பஞ்சயாத்து தலைவர் ப. ஜக்கன் துணைத் தலைவர் ரெஜினாமேரி உதவியோடு கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டு மாதங்களிலேயே குருவி குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதன் கிணறு பஞ்சாயத்து தலைவர் சேர்வாரன் 19.2.2007 அன்று அதிகாலையில், அதே கிராமத்தின் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பஞ்சாயத்து தலைவரான பிறகும்கூட சேர்வாரன், பஞ்சாயத்து அலுவலகத்தைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்யும் துப்புரவுப் பணி யாளராகவே இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வட்டார ஊராட்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தபோது, சனவரி மாதம் நடந்த கூட்டத்தில்தான் ஒரே ஒருமுறை மட்டும் அவர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேட்காமல் முடிவெடுப்பதால் உதவி தலைவரும், அவருடைய கணவரும், ‘ஏண்டா சக்கிலியப் பயலே உனக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணுமோ, நீ கையெழுத்துப் போட்டாதான் நாங்க வேலை செய்யணுமா, இருலே உன்ன என்ன செய்யறேன்னு பாரு’ என்று தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார். ‘எந்த நேரமும் ஆபத்து வரலாம், எந்த நேரமும் என்னைக் கொன்னாலும், கொன்னுருவாங்கன்னு’ தன் மனைவி மற்றும் மகளிடம் கூறியுள்ளார் சேர்வாரன். அது அப்படியே நடந்தேறியது.

இந்தப் படுகொலைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு, தலித் விடுதலைக்கான அமைப்பு ஆகியவை சார்பாக வழக்கறிஞர் கமலா கஸ்தூரி, கிருஷ்ணவேணி, பரதன், முத்துமாரி ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழு - "சேர்வாரன் மரணம் இயற்கையல்ல, திட்டமிட்ட படுகொலைதான்' என்று கூறியுள்ளது. 30.3.2007 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த உண்மையறியும் குழுவினர் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இதோடு உயிருக்கு உத்திரவாதமின்றி, பயம் கலந்த முகத்தோடு தாங்கள் நடத்தப் படுகின்ற நிலையைப் பகிர்ந்து கொண்ட தேவர்குளம் பஞ்சாயத்து தலைவர் ச. தங்கவேலு அவர்களையும், நவநீத கிருஷ்ணபுரம் பஞ்சாயத்து தலைவர் சூ. குருசாமி அவர்களையும் - ‘தலித் முரசு' சார்பில் சந்தித்தபோது, தங்களுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டனர் :

‘திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பஞ்சாயத்துத் தலைவரா நான் இருக்கேன். தலைவரு ஆவதற்கு முன்னாடி கூலி வேல செஞ்சிட்டு சந்தோசமா இருந்தேன். ஆனதற்குப் பிறகு எப்ப சாவேன்னு பயத்தோட வாழ்ந்துகிட்டிருக்கேன். செல்லச்சாமி ரெட்டியாருதான் உதவி தலைவரு, வெள்ளத்துரை ரெட்டியாருதான் கிளார்க். இவங்க பக்கத்துல நின்னு பேசவே முடியாது. தூரமாகத்தான் நிக்கனும். எந்த மீட்டிங் நடந்தாலும் எனக்கு சொல்ல மாட்டாங்க. எனக்கு படிப்பறிவு கிடையாது. ஆனா, கிளார்க் கையெழுத்து மட்டும் போட கூப்பிடுவாரு. வார்டு மெம்பரு, உதவித் தலைவரு, கிளார்க் எல்லாரும் ஏலே தங்கவேலு, இங்க வா, போன்னுதான் கூப்பிடுவாங்க. ஆபிசுல ஒரு ஓரத்துலதான் உட்காரச் சொல்லுவாங்க. நான் பிரசிடெண்ட் ஆகி 6 மாசத்துல, 2 தடவ தான் சேர்ல உக்காந்திருக்கேன். அதுவும் அதிகாரிக வந்தப்பதான். செக்ல கையெழுத்துப் போடும்போது மட்டும்தான் கிளார்க் பேசுவாரு. என்ன, ஏதுன்னு கேட்டா கோபப்படுற மாதிரி பேசுவாரு. அதனால நான் எதுவும் கேட்குறதில்ல. நக்கலமுத்தன்பட்டி தலைவரு ஜக்கனும், மருதன் கிணறு தலைவரு சேர்வாரனும் இறந்த பிறகு ரொம்ப பயமா இருக்கு. 12 அருந்ததிய தலைவர்கள்ள இரண்டு பேர் போயிட்டாங்க. இன்னும் பத்து பேரு இருக்கோம். யாருக்கு எப்ப நாள் குறிச்சிருக்காங்கன்னு தெரியாது.’

‘எம் பேரு குருசாமி. நான் நவநீத கிருஷ்ணபுரம் பஞ்சாயத்து தலைவரா இருக்கேன். நான் ஒன்பதுவரைக்கும் படிச்சிருக்கேன். நான் பொம்மைதான். எனக்கு எந்த பவரும் கிடையாது. எல்லாமே உதவி தலைவருக்கும், கிளார்க்குக்கும்தான். நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. மரியாதைங்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. ஆபிசு சாவி கிளார்க்கிட்டதான் இருக்கும். இன்னொரு சாவி எங்கன்னு கேட்டா, ஒரு சாவிதான்னு சொல்வாரு. ஆபிச கிளார்க் திறக்க மாட்டாரு. நான் தான் ஆபிச திறக்கனும். ஆனா, சாவிக்காக கிளார்க் வீட்டு வாசல்ல காத்துக் கிடக்கனும். அவரு வீட்டு வேலையை முடிச்ச பிறகுதான் எடுத்துத் தருவாரு.

எனக்கு ஆபிசு செட்டப்பே இல்ல. நான் என்ன சொன்னாலும் எடுபடாது. என் ஆபிசுல ஒரு சேர், பழைய டேபிள், அது போக ரூம்ல பழைய டியூப் லைட்கள், வேஸ்ட் பேப்பர்கள், பிளாஸ்டிக், இரும்பு பொருள்கள்தான் இருக்கும். அங்கதான் உட்காரனும். பீரோ, நல்ல சேர், டேபிள் எல்லாமே கிளார்க், உதவி தலைவர் ரூம்லதான். கையெழுத்துப் போட மட்டும்தான் கூப்பிடுவாங்க. அதுவும் தீர்மான நோட்டுல பேசப்பட்டது எதுவும் எழுதாம, இடைவெளி விட்டுதான் கையெழுத்துப் போடச் சொல்வாங்க. ஏன் எழுதலன்னு கேட்டா, உன் சொத்த ஒன்னும் அபகரிக்க மாட்டோம், கையெழுத்துப் போடுன்னு சொல்வாங்க. நம்ம எதுவும் கேட்க முடியாது. கேட்டா உசுரோட இருக்க முடியாது.

உதவித் தலைவரும், கிளார்க்கும் வந்து நம்ம ஊரு மயான கரைக்கு ரோடு போடனுமின்னு சொல்லி, செக்குல கையெழுத்துப் போடச் சொன்னாங்க. நானும் கையெழுத்துப் போட்டேன். ஆனா கடைசியில ரெட்டியார் மயானக் கரைக்கு 2 கி.மீ. தூரம் ரோடு போட்டாங்க. அதிலிருந்து அரை கி.மீ. தூரம் இருக்கிற அருந்ததியர் மயானக் கரைக்கு ரோடு போடல. கேட்டா ஓடையில இறங்கி போய் எரிங்கன்னு சொல்லிட்டாரு. திடீரென்று கிளார்க் ஒரு நாள் 500 ரூபாவுக்கு கையெழுத்து போடச் சொன்னாரு. என்ன என்று கேட்டா, பழைய பிரசிடெண்டுக்கு சம்பள பாக்கின்னு சொன்னாரு. ஆனா அதுல 470 ரூபாய் பில்லத்தான் வச்சாரு. இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாது.

எனக்கு நவநீத கிருஷ்ணபுரத்துலேயே வீடு வாசல் இருக்கு. ஆனா, நக்கலமுத்தன்பட்டி ஜக்கன் சாரும், மருதன் கிணறு சேர்வாரன் சாரும் அடிச்சு கொல்லப்பட்டதற்கு அப்புறம் இங்க இருக்க முடியல. 15 கி.மீ. தூரத்துல இருக்குற பாவூர் சத்திரத்துல குடியிருக்கேன். சொந்த ஊருல இருக்க பயமா இருக்கு. கடந்த 26 ஆம் தேதி 10 அருந்ததிய பஞ்சாயத்து தலைவர்கள் சேர்ந்து கலெக்டரிடம் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்தோம். ஆனா, இன்னைக்கு காலையில ராமலிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர மேல்சாதிக்காரங்க அடிச்சிருக்காங்க. இன்னும் நவநீதகிருஷ்ணபுரத்துல ரெண்டு டம்ளர் முறை இருக்கத்தான் செய்யுது. நான் பஞ்சாயத்து தலைவரா ஆகி ஒண்ணும் கேட்க முடியலை. எப்ப என்ன நடக்குமின்னு பயந்துகிட்டிருக்கோம்.’
Pin It