tamil classகாலனி அரசில் 1921இல் ஆர்.வேங்கடரத்தினம் தலைமையில் அமைந்த குழு ஆங்கிலம், வட்டார மொழி இவையிரண்டில், பயிற்றுமொழியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பள்ளி நிருவாகத்தினருக்கு விட்டுவிட வேண்டும். ஆனால் பள்ளிகளில் பாடங்கள் ஆங்கிலம், வட்டார மொழி ஆகிய இரண்டின் மூலமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

1924இல் திரு.சத்தியமூர்த்தி உயர்நிலைப் பள்ளிகளில் வட்டார மொழிகள் கட்டாயப் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என்று சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் மாவட்ட உயர்நிலைக் கல்விக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டது. ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதனால் 1925இல் கல்வி இயக்குநர் சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக் குழுவோடு இணைந்து ஒரு அறிக்கை தயாரித்தார். இந்த அறிக்கை “உயர்நிலைப் பள்ளிகள் பயிற்று மொழியாக ஆங்கிலத்தையோ, வட்டார மொழியையோ தெரிவு செய்து கொள்ளலாம்” என்று கூறியது. ஆகையால் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி மிக மெதுவாகவே நடந்தது.

1937 வரை இம்முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதைப் பயிற்றுமொழியின் கொள்கையை மதிப்பீடு செய்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 1930களில் மொத்தம் இருந்த முந்நூறு பள்ளிகளில் 155 பள்ளிகளில்தான் தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்பட்டது. வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக, சமரசப் போக்கை இங்கிலாந்து அரசு மேற்கொண்டதின் பேரில் 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய சட்டத்தின்படி கல்வி, பல்கலைக்கழக நிருவாகம் மாநில அரசின் கைக்கு வந்தது.

ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் - தமிழ் வளர உதவியது

ஆக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் 1937இல் அன்றைய சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது அரசு வெளியிட்ட ஆணை தாய்மொழி வழிக் கல்விக்குப் புது வளர்ச்சியைக் கொடுத்தது. அந்த ஆணை “இதுவரை தாய்மொழி வழிக் கல்வியை மேற்கொள்ளாத பள்ளிகள் இனிக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். முதலில் நான்காம் படிவத்தில் தொடங்கித் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளிக் கல்வி முழுவதும் செயற்படுத்தப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில்தான் 1939இல் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் தமிழை உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக்கினார். இதன் விளைவாக 1941இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிப் பள்ளி இறுதித் தேர்வினை எழுதினார்கள் (எஸ்.எஸ்.எல்.சி).

1939ஆம் ஆண்டின் இறுதியிலே காங்கிரஸ்காரர்கள் ஆட்சிப் பொறுப்பைத் துறந்து வெளியேறிய பின்னர் சுமார் ஆறு ஆண்டுகாலம் ஆங்கிலேயர் மூவர் கொண்ட ஆலோசகர் ஆட்சி நடைபெற்றது. அந்தக் காலத்தில் திரும்பவும் ஆங்கிலமே உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் 1939 செப்டம்பரில் தொடங்கியது. இந்தியர்களைக் கேட்காமலே அவர்கள் இசைவு இன்றியே இந்தியாவைப் போரில் ஈடுபட வைத்ததால் இராஜாஜி அமைச்சரவை பதவி விலகியது. ஆளுநரின் ஆணையின் பேரில் இந்தி நுழைப்புத் திட்டம் கைவிடப்பட்டது. 1942 சென்னை ஆட்சியின் அறிக்கையின்படி முன்னூற்றுத் தொண்ணூற்று நான்கு பள்ளிகள் மொழியில்லாத பாடங்களை, வட்டார மொழிகளில் கற்பித்தன.

1946 சூன் 6ஆம் நாளிட்ட அரசாணைப்படி ஆங்கிலம் இரண்டாம் மொழியாக ஆகியது. இதற்கு முன் ஆங்கிலம் முதல் மொழியாகவும் வட்டார மொழிகள் இரண்டாம் மொழியாகவும் இருந்தன. ஆக 1946ஆம் ஆண்டு சூன் 5ஆம் தேதி தமிழ் முதல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் மாற்றப்பட்டதால் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் மொழியாக இருந்தபோது தொடக்கக் கல்வியிலிருந்து கற்பிக்கப்பட்டு வந்தது. 1948ஆம் ஆண்டு ஆணைப்படி ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது.

தமிழக ஆட்சிமொழி, பயிற்றுமொழி - காமராஜ் இந்திய அரசு ஆட்சி மொழி ஆணையத்திற்கு அறிவிப்பு

இதற்குப் பிறகு தமிழ்வழிக் கல்வியைப் பற்றி ஓர் ஆய்வு 1956ஆம் ஆண்டு நடைபெற்று அக்குழு தன் அறிக்கையில் தமிழ்வழிக் கல்வி ஆய்வு நிலையைக் கடந்துவிட்டது. கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு முழுமையாக மாற்றுவதற்குச் சிறிது காலமாகும். தமிழ் பயிற்றுமொழி ஆகியபோதிலும் கூட அறிவியல் தொழில்நுட்பம் போன்ற தொழில்சார் அறிவைப் பெறுவதற்கு வாய்ப்பாக ஆங்கிலத்தின் தேவை தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கும் என்று கூறியது. அண்மைக் காலங்களில் ஏற்பட்ட ஆங்கில அறிவைப் பெறுவதில் ஏற்பட்ட சரிவை, வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும் அல்லது முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியது. 1957க்குப் பிறகு தமிழ் வழிக் கல்வியில் தளர்ச்சி நிலை காணப்பட்டது. அதன் பிறகு இன்று வரை இது நீடித்து ஆங்கில வழிக் கல்வியின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்திய அரசு 7.6.1955இல் ஆட்சி மொழி ஆணையம் அமைத்தது. இதன் தலைவர் பி.ஜி.கெர், பி.சுப்பராயன் உட்பட 20 பேர் உறுப்பினர்கள். இந்தக் குழுவிற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜ் அனுப்பிய அறிக்கை,

“சென்னை மாநிலத்தில் தமிழே அரசியல் மொழியாக இருக்க வேண்டும். எல்லாக் கட்டங்களிலும் தமிழே பாடம் நடத்தும் மொழியாக இருக்க வேண்டும். இந்தி மொழியை எந்தக் கட்டத்திலும் கட்டாயமாக ஆக்க இயலாது. அது விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படலாம். மைய அரசின் அலுவல்களுக்குச் சென்னைப் பகுதியினர் தமிழில் எழுத அனுமதித்தல் வேண்டும்” என்று கூறியது.

மேலும் கீழ்க்காணும் கருத்துக்களையும் அரசு அறிவித்தது. சென்னை மாநிலத்தில் தமிழ்மொழிதான் எல்லா வேலைகட்கும் முதல் மொழியாக இருக்க வேண்டும். தமிழைக் கற்கும் மொழியாக்குவதில் சிறிது காலமாகுமானால், 1965ஆம் ஆண்டை இதற்கு இறுதிக் காலம் கெடுவாகக் கொள்ள வேண்டும். ஆனால் 1965க்கு முன்பே தமிழைக் கற்பிக்கும் மொழியாக்க வேண்டும் என்று அறிவித்தது.

இத்துடன் சென்னை அரசு தன் இரண்டாவது குறிப்பில் தங்கள் சில பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு வந்த பாராளுமன்றக் குழுவிடம், என்றாவது ஒரு காலத்தில் இந்த மாநிலத்திலுள்ள பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒன்றில், ஆங்கிலம் போதனா மொழியாக இல்லாமல் போகுமேயானால் அந்த இடம் தமிழ் மொழிக்குக் கிடைக்குமே தவிர இந்திக்குக் கிடைக்காது என்று இந்த அரசு திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது என்றும் தெரிவித்தது.

கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கலாம் என்ற தமிழக அரசு 1959இல் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை 1937இல் பள்ளிகளில் பயிற்சி மொழி பற்றிய ஆணை போன்ற திட்டவட்டமானதாக இல்லை. கலைத்துறைப் பாடங்களை விரும்பினால் தமிழில் நடத்தலாம். ஆங்கிலமும் பயிற்று மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதைக் கொண்டு வந்தபோது பல தடைகளை எழுப்பினர். நூல்கள் இல்லையே என்றனர். தரம் கெட்டுப் போகும் என்றனர். இவற்றையெல்லாம் கேட்ட அரசு தன் ஆணையில் சில நெளிவு சுழிவுகளையும் நுழைக்க வேண்டியதாயிற்று. கல்லூரிகளில் கலைத்துறைப் பாடங்களை விரும்பினால் தமிழில் கற்பிக்கலாம் என்று அதற்காகக் கற்போர்க்கும், கற்பிப்போர்க்கும் சில சலுகைகள் தரப்படும் என்றும் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1937இல் சென்னை மாநிலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழி பேசுவோர் இருந்தனர். பயிற்றுமொழி பற்றிய ஆணை பிறப்பிக்கப்பட்ட பொழுது மற்ற மொழியினர் ஏற்றுக் கொண்ட காரணத்தால், தமிழர்களும் மறுப்புக் கூறாமல் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நாட்டுப் பற்றும் ஓர் காரணமாக இருந்தது. 1959இல் நிலைமையே வேறு. சென்னை மாநிலத்தில் தமிழ் ஒன்றே வட்டாரமொழி.

1959 முதல் தமிழகத்தின் கல்லூரிகளில் கலைத்துறைப் பாடங்கள் தமிழில்தான் பயிற்றுவிக்கப்படும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்ததால் இன்று அறிவியலும் அந்த நிலையை எட்டி இருக்கும். சட்டத்தாலும், ஐயுறவாலும் அதனைச் செய்யத் தவறிய காரணத்தால் இடர்பாடுகள் ஏற்பட்டன. தமிழில் பயின்றால் தரம் கெட்டுப் போய்விடும். தமிழில் பாடநூல்கள் இல்லை. அறிவியல் மற்றும் கலைத்துறைப் பாடங்களைத் தமிழில் எழுதக் கலைச் சொற்கள் இல்லை. இவற்றைக் கூறியே மக்களை அச்சத்திற்கும், அவலத்திற்கும் ஆளாக்கினர்.

இதற்கு உண்மையான காரணம் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந்ததுதான். அது அவர்கட்கு ஓர் நல்ல அடிப்படையாயிற்று. இதனைக் கண்ட வல்லவர்களின் உள்ளத்தில் அச்சமும் வஞ்சனையும் உருவாயின. எனவே 1959இல் அரசு ஆணையைக் கண்டு குறை கூறினர். 1959இல் அரசு ஆணையை எதிர்த்தவர்களின் ஆசைக்கு இணங்க மழலையர் பள்ளிகளில் 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பயிற்று மொழி ஆனது.

கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழி

1959ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணையை நிறைவேற்ற கோவை அரசினர் கல்லூரி முன்னோடிக் கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடத் திட்டத்தை அமுல்படுத்த ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி தமிழ்க் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைகளுக்கு மாநிலக் கல்வி அறிவுரைக் குழுவும் ஆதரவும் அளித்ததன் பொருட்டு 1963-64இல் பயிற்றுமொழி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று ஆணை வந்தது. மேலும் 1948லேயே துணைவேந்தர்களின் கல்விக்குழு பல்கலைக்கழக அளவில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மாற்றுவது வரும் 5 ஆண்டுகளுக்குள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும் உயர்கல்வி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு தொடக்கத்தில் இல்லை.

கல்லூரிகளில் பாடநூல்கள் இல்லை என்ற நிலையைக் களைய 1959இல் கல்லூரித் தமிழ் கல்விக் குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, பின் 1962இல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (Tamil Nadu Text Book Society) தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் புதுமுக வகுப்பு இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நூல்களை வெளியிட்டது. இவற்றுள் 416 நூல்கள் கலைப் பாடத்திற்கும் 418 நூல்கள் அறிவியல் பாடத்திற்கும் உரியவை. ஆனால் 1962இல் சட்டசபை விவாதத்தில் தமிழ்வழி பயில மாணவர்களிடையே ஆர்வமில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது. 1962இல் இடைநிலைக் கல்வியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க 65 பள்ளிகளுக்கு இசைவளிக்கப்பட்டது. அதன் வெளிப்பாடு 1962க்குப் பின்னர் மிகுதியாயிற்று. 1965க்குப் பின்னர் அதன் உத்வேகம் மிக மிக அதிகமாயிற்று.

பொதுமக்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஆங்கில வழிக் கல்வியில் இருந்த ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழிப் பிரிவுகளை அதிகமாக்க அரசு முடிவு செய்தது. 1967இல் நடந்த மாநிலக் கல்வித்துறை மாநாட்டில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வட்ட தலைநகரங்களில் ஆங்கில வழிப் பள்ளிகளில் பிரிவுகளைக் கூடுதலாக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

அன்றைய அரசு அரசாங்க உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் 100 கூடுதலாகத் தொடங்குவதற்கு அனுமதியளித்தது. பிறகு 1968-69இல் மாற்றுப் பயிற்று மொழியாக அறிவியல் பாடங்களுக்குத் தமிழ் அறிமுகப் படுத்தப்பட்டது.

1969 சூன் தமிழ்ப் பயிற்று மொழியை மிகுவிக்கும் வகையில் தமிழக அரசுக் கல்லூரிகளில் மேலும் சில பாடங்களைத் தமிழ்வழிக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆங்கில வழிப் பிரிவுகள் சிலவும் கூட தமிழ்வழிப் பிரிவுகளாக மாற்றப்பட்டன. இது தமிழ்த் திணிப்பு எனப்பட்டது. இதைக் காரணம் காட்டியே தமிழகத்தில் ஆங்கிலம் சார்பாக ஓர் இயக்கம் உருவெடுத்தது.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது

1970இல் கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மொழித் திட்டத்தை விரிவுபடுத்தும் ஆணையைச் சிண்டிகேட் காங்கிரஸ்காரர்களும், டாக்டர் எ.லெட்சுமணசாமி முதலியார் போன்றவர்களும் எதிர்த்தனர். மதுரையில் இவ்வாணையை எதிர்த்து மாநாடு நடந்தது. மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய முதல்வர் கருணாநிதி கொடும்பாவியைக் கொளுத்தினர். வேலை வாய்ப்பு இவ்வாணையால் பறிபோகும் எனக் கூறினர். இந்தப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லி கலைஞர் விடுத்த வேண்டுகோள்,

பொதுவான வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தமிழ்ப் பயிற்று மொழியுடன் முடிச்சு போடாதீர் - கலைஞர்

“நான் எந்த மாணவர்களுக்காக இந்தியை எதிர்த்துப் பலமுறை சிறை சென்றேனோ, எந்த மாணவர்களுக்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்பே “தமிழ் மாணவர் மன்றம்” தொடங்கினேனோ, எந்த மாணவர்களின் பெயரால் பாளையங்கோட்டைச் சிறையில் பாதுகாப்பு கைதியாகத் தனிமைச் சிறைவாசம் செய்தேனோ அந்த மாணவர்களின் அடுத்த வரிசையினர் என் கொடும்பாவிக்கும் கொள்ளி வைப்பதென்றால், அது மகிழ்ச்சியோடு தாங்கக்கூடிய ஒன்றுதானே, பொதுவாகவே இருக்கிற வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பயிற்றுமொழிப் பிரச்சினையையும் ஒன்றாக்கி முடிபோடுகிற பேச்சுக்கள் வெறும் அரசியல் லாபத்திற்காகப் பேசப்படுபவை என்பதை மாணவ நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று உரைத்தார்.

இந்த நிலையில் அன்றைய கல்விக் கொள்கை நிலைப்பாட்டைக் கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர், மேலவையில் நிகழ்த்திய வரலாறு சிறப்புமிக்கதொரு தமிழ்ப் பயிற்று மொழி ஆதரவுக்கான உரை கவனத்திற்குரியது.

1970 தமிழ்ப் பயிற்று மொழி ஆணை எதிர்ப்புக்கு - கல்வியமைச்சர் அறிக்கை,“பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுமொழி சம்பந்தமான அரசாங்க நிலையினை இந்த அவையில் எடுத்து வைக்க இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தாய்மொழியே பயிற்சி மொழியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற உணர்வு கடந்த முப்பதாண்டு காலமாகக் குறிப்பாகச் சுதந்திரம் அடைந்த பிறகு அதிகரித்து வந்துள்ளது.

நம் மாநிலத்தில் 1939 முதற்கொண்டே கல்வித் துறையில் எடுக்கப்பட்ட முற்போக்கு நடவடிக்கை மூலம் நமது மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழியே பயிற்சி மொழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை நல்ல முறையில் செயல்பட்டு வந்த செழுமையான பலனையும் தந்துள்ளது” என்று கல்வியமைச்சர் தான் அறிக்கையில் கூறினார்.

இதே காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் டாக்டர் ஏ.லெட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் உள்பட பலர் ஆங்கிலப் பாதுகாப்பு மாநாடு நடத்தினர். அம்மாநாட்டில் ஆங்கிலம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை விளக்கத்தினை முன்னிறுத்தினர். இதன் காரணமாக ஆங்கிலம் வாழ்க, தமிழ் ஒழிக என்று கூறுமளவுக்கு மாநிலம் முழுவதும் போராட்டம் தொடர்வதைக் கண்டு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் கலைஞரிடம் சிறிது காலம் தமிழ்ப் பயிற்று மொழி ஆணையை நிறுத்தி வைக்கக் கோரினர் என்பது சரித்திரம். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதான் இந்திய அரசு மாநில அரசிடம் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. இந்த மாற்றம் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்தது. இதன் பிறகு தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகள், கேந்திரவித்யாலயா பள்ளிகள் நூற்றுக் கணக்கில் தோன்றி ஆங்கிலவழிக் கல்விக்கு அடிகோல, தமிழ் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்தது. ஏனெனில் அரசு 1972இல் முதல் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்குப் பயிற்றுமொழியாக 7 மொழிகள் அறிவிக்கப்பட்டன. இவ்வாணைப்படி தமிழையும் படிக்கலாம். ஆனால் ஆங்கிலம் கட்டாயம்.

ஆங்கில வழிப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடியதன், காரணமாகவும் பயிற்றுமொழிக் கொள்கை காரணமாகவும் 1969ஆம் ஆண்டு மட்டும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இடம் பிடிப்பதற்கான எண்ணிக்கை 20 முதல் 25 விழுக்காடு வரை கூடியதாகத் தெரிகிறது. சென்னை நகரத்தில் மட்டும் 120 பள்ளிகள் இருந்தன. இவற்றுள் பெரும்பாலானவை நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஆங்கில வழிப் பிரிவுகளைக் கொண்டிருந்தன. இப்பள்ளிகளில் சேர்ப்பதற்குரிய இடங்களைப் போல மூன்று நான்கு மடங்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றன. நகரத்திலிருந்த 300 ஆங்கில வழி மழலையர் பள்ளிகளிலிருந்து ஆங்கில வழி இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்கள் கல்லூரியை எட்டும் பொழுது ஆங்கிலவழிக் கல்வியை நாடினர் என்பது நடைமுறையானது.

தமிழ்வழிக் கல்விக்கு இவர்கள் ஆதரவு தராதவர்களாயினர். இதன் காரணமாகக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி மூலம் படிப்பவருக்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி படிக்க பணம் கொடுக்கப்பட்டது. மாணவரும் பெற்றோரும் தானாக வந்து தமிழ்ப் பயிற்று மொழியை ஆதரிக்கவில்லை.

1971ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கல்லூரிகளில் தமிழ்வழிப் பயில மாணவர்களை ஈர்க்கும் வகையில் ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றைத் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலை, இளமறிவியல் பட்டங்களைத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 180 பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இது 1971-72ஆம் ஆண்டிலிருந்து அரசுக் கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளில் தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கும் இவ்வுதவித் தொகை வழங்கப்பட்டது.

இது போலவே புதுமுக வகுப்பு பயிலும் மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டோராக இருப்பின் தமிழில் பாடநூல்கள் வாங்குவதற்கு வாய்ப்பாக ரூபாய் 80 புத்தகப் படியாகத் தரப்பட்டது. இக்காலத்தில் நடைபெற்ற இளமறிவியல் பட்ட வகுப்புகள் தனியார் கல்லூரிகளில் ஆங்கில வழியிலேயே நடைபெற்றன. அரசுக் கல்லூரிகள் கூட இருமொழிகளிலும் கற்பித்தன. தமிழ்வழிக் கல்வி ஆணைக்கு எதிர்ப்பு 1970இல் வந்தபொழுது அதனைக் கலைஞர் திரும்பப் பெற்றுக் கொண்டு அதனால் ஏற்பட்ட வருத்தத்தை 1975இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய பட்டமளிப்பு விழாவில்,

“தமிழில் கற்றால் புத்துலகத்தோடு போட்டி போடும் புதிய வரலாறு எழுத இயலும் பத்தாண்டுகட்கு முன்பே தமிழால் முடியும் என்று உறுதி தோன்றியது. முயற்சி அரும்பியது. தமிழைப் பயிற்று மொழியாக்கும் நிலையை முழுமையாக்கிட ஏழாண்டுகளுக்கு முன்பு சூளுரை மேற்கொண்டோம் பயன் யாது? “பயிற்று மொழி உணர்வைக் கெடுக்க, வயிற்றுமொழி உணர்வு” தூண்டிவிட்டது தமிழ், சோறிடாதோ? சோம்பிக் கிடக்குமோ? சோறும் தரும், சுயமரியாதையும் தரும் என்று எடுத்து வைத்த சான்றுகள் விழலுக்கிறைத்த நீராயிற்று. வெண்ணிலா, காட்டில் காய்ந்த கதையாயிற்று விறுவிறுப்பான வேலை நிறுத்த நடவடிக்கைகள், மாணவர்களின் உணர்ச்சியைத் தட்டிவிட்ட எழுப்பப் பெற்ற, கிளர்ச்சியை விளக்கப் பெறுவதற்கான அமைதியான தன்மையைத் திரைபோட்டு மறைத்ததால் தமிழ் பயிற்றுமொழித் திட்டம் தயங்கி நின்றது” என்று கூறினார்.

தமிழ் பயிற்று மொழிக்குத் தடை - விளை என்ன

அறிவியல் கலைகள் பற்றிய பாடங்களைப் பள்ளிகளில் போதிக்கத் தொடங்கியபோது ஆங்கிலத்திற்குப் பதிலாகத் தமிழைப் பயிற்சி மொழியாக்கி இருந்தால் இதற்குள் அறிவியல் சொற்கள் தமிழிலும் (கொள்ளை பல நிலைகளில் கொள்ளையாகக்) குவிந்திருக்கலாம். இதேபோல் பாடப் புத்தகங்கள் மட்டுமே அல்லாமல் தகவல் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்படவில்லை என்று இராது. தமிழைப் பயிற்சி மொழியாக்கி இருந்தாலும் அதுவும் நடந்திருக்கலாம்.

டாக்டர். சு.நரேந்திரன்

Pin It