பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம் - அன்பு உள்ளம்“ என்று தொடங்கும் அந்தக் கவிதையைத் தமிழ்நாட்டில் யார் மறப்பார்? 49 ஆண்டுகளுக்கு முன், பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, வானொலியில் கலைஞர் பாடிய கவிதை அது! இன்றும் பலபேர் வரி மாறாமல் அந்தக் கவிதை முழுவதையும் மனப்பாடமாகச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அண்ணா மறைந்தாலும், அந்தக் கவிதை வாழ்ந்து கொண்டிருக்கிறது!

karunanidhi and stalin

இனி ஒரு எழுத்து அப்படித் தமிழ்நாட்டிற்குக் கிடைக்குமா என்றுதான் கருதியிருந்தோம். கிடைத்துவிட்டது! அண்ணாவின் மரணத்தில் அனைவரையும் உலுக்கிய அந்தக் கவிதை போல, கலைஞரின் மரணத்தில் காவியமாய் ஒரு கடிதம் வந்திருக்கிறது. “ஒரே ஒரு முறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா?” என்ற கேள்வியோடு தொடங்கும் அந்த மடலை, நம் அன்புத் தளபதி, கலைஞர் இறந்த நாளில் வெளியிட்டுள்ளார்.

இரண்டு எழுத்துகளுக்கும் இடையில், ஒற்றுமையும், முரணும் ஊடாடிச் செல்கின்றன. இருவர் எழுத்திலும் காணப்படும் பாச உணர்ச்சி ஓர் அரிய ஒற்றுமை எனில், உறவு சொல்லி அழைப்பதில், இரண்டுக்கும் இடையே எத்தனை முரண்!

“எல்லோரும் ஒரே வயிற்றில் பிறந்தால் தாய் வயிறு தாங்காது என்பதால்தான், தனித்தனியாய்ப் பிறந்து வந்துள்ளோம்“ என்பார் அண்ணா. ஆம், திமு கழகத்தினர் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் இல்லை. ஆனால் அனைவரையும் தம்பி என்று அன்பொழுக அழைத்தார் அண்ணா. கட்சியின் தொண்டர்களும் அவரைத் தலைவரே என்று அழைக்காமல், “அண்ணா, அண்ணா” என்றே அழைத்தனர்.

இந்த உறவைத் தன் கவிதையில் கலைஞர் குறிப்பிட்டிருப்பார்.

“தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்

 நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்

 மனிதரென்பார், மாணிக்கமென்பார்

 மாநிலத்து அமைச்சரென்பார்”

அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர், நெஞ்சத்து அன்பாலே “அண்ணா” என்பார் என்று கலைஞர் குறிப்பிடுவார். உடன்பிறக்கவில்லை என்றாலும், உடன்பிறந்த பாசத்துடன் அண்ணா என்று அழைத்த காலம் அன்று!

இப்போது உண்மையான உறவிருந்தும், பெற்ற மகன் தன் தந்தையை அப்பா என்று அழைக்காமல், “தலைவர்” என்று அழைத்து வந்தது ஏன்?

நம் தளபதி, தலைவர் கலைஞர் அவர்களைப் பொது இடங்களிலும், கட்சிக் கூட்டங்களிலும் அப்பா என்றே அழைத்திருந்தால், அது வெறும் குடும்ப உறவாக மட்டுமே இருந்திருக்கும், கொள்கை உறவாக மலர்ந்திருக்காது! தொண்டர்களுக்கும் அது ஊக்கம் தந்திருக்காது. அதனால்தான் அவர் ‘தலைவர்’ என்றே தலைவரை அழைத்ததை நாம் பார்த்தோம்.

ஆனாலும் அவர் உள்மனத்தில் இப்படி ஓர் ஏக்கம் இருந்திருக்கிறது என்பதைக் கழக உடன்பிறப்புகளே இப்போதுதான் அறிந்திருப்பர்.

“நான் உங்களைத் தலைவரே தலைவரே

என உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.

அதனால்

இப்போது ஒரே ஒரு முறை

“அப்பா” என்று

அழைத்துக் கொள்ளட்டுமா

தலைவரே”

என்னும் தளபதியின் வரிகளைப் படித்தபோது, கண் கலங்காத கட்சித் தொண்டரே இல்லை எனலாம்.

தலைவர் கலைஞர் அண்ணாவிடம் கேட்ட இரவல் இதயமும், தளபதி நம் தலைவரிடம் கேட்ட உறவின் உருக்கமும் காலத்தை வென்று நிற்கும்!

இப்போது ஒன்றை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இறுதி நாளில், ஒருமுறையாவது அப்பா என்று அழைத்தீர்களா, தளபதி?

Pin It