ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டால் அன்றைக்கு அதுதான் தொலைக்காட்சிகளில் விவாதம். கருணாநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை சொன்னால் அதுதான் அடுத்தநாள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி, அடுத்த இரண்டு நாட்களுக்கு விவாதப்பொருள். Influential leadership personality ஆக இருந்தார்கள். ஆனால், மக்களும், அ.தி.மு.க.வினரும் கூட எப்பொழுது ஆட்சியைக் கலைப்பீர்கள் என்று ஸ்டாலினைக் கேட்கும் நிலையில் இருக்கிறார். இவர் செயல் தலைவர் அல்ல, செயல் படாத தலைவர்!.

mk stalin 200கருணாநிதி செய்த தவறுகளில் ஒன்று, கடைசிவரை ஸ்டாலினை தன்னுடைய இடுப்பிலே தூக்கி வைத்திருந்ததுதான். குழந்தைக்கு புட்டிப் பால் குடுப்பது போல கொடுத்து வளர்த்து விட்டார். இறக்கிவிட்டவுடன் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. செய்தியாளர்களிடத்தில் பேசும் பொழுது "ஆக... ஆக..." என்று மட்டும் கண்டிப்பாக பேசிவிடுவார்.

கருணாநிதி தான் நடமாடும் வரை பீனிக்ஸ் பறவை போல் இருந்தார். அரசியலில் தான் இயங்கும் வரை தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தார். வெள்ளை உடை அணிந்து வலம் வந்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்று கனா காண்கிறார் ஸ்டாலின். கடைசிவரை அந்த நாற்காலி எட்டாக் கனியாகிவிடும் போலிருக்கிறது. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான் மீதேன் முதல் ஹைடிரோகார்பன் திட்டம் வரை கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கதது.

சென்ற ஆட்சியில் கருணாநிதியின் குடும்பத்தினராலும், தி.மு.க., அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ஜெயலலிதா காவல் துறையில் ஒரு தனி பிரிவு ஒன்றை நிறுவினார் என்று சொன்னால், நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

பழம் கனிந்து பாலில் விழும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். பழம் கனிந்து அணில்கள் கொத்தி தின்றுக் கொண்டு இருக்கின்றன. இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிரார். கருணாநிதி மட்டும் நடமாடும் நிலையில் இருந்திருந்தால் ஆட்சியை எப்பொழுதோ கலைத்து இருப்பார் என்று அ.தி.மு.க.வினரே சொல்லுகிறார்கள்.

நாங்கள் கொல்லைப்புற அரசியல் செய்யமாட்டோம் என்று ஸ்டாலின் பேசுவது, மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தி.மு.க.வின் மீது நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. சாக்கடையின் நடுவில் நின்று கொண்டு, அகர்பத்தியைக் கொளுத்தி 'நாங்கள் புனிதமானவர்கள், எங்களைச் சுற்றி வாசம் அடிக்கிறது' என்று சொன்னால் எவ்வளவு அபத்தம்? நொண்டி குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு என்பது போல சமாளித்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதியின் திறமையில் ஒரு சதவீதம் கூட இவருக்கு இல்லை என்பதுதான் எதார்த்தம். கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது தானே? செய்... அல்லது செத்து மடி என்பது அன்றைய முழக்கமாக இருந்தது. செய்... முடியும் வரை செய் என்பதே இன்றைய இயக்கம். இந்த கேவலமான ஆட்சியில், தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், எதிர்க்கட்சி என்ன செய்து கொண்டி இருக்கிறது என்பதுதான் மக்களிடத்தில் நிலவும் குழப்பம்.

வாரிசு அரசியலை உற்பத்தி செய்வதற்கு தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று சொன்னவரின் வாரிசுதான் இவர். இவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியதாக இருக்கிறதா இல்லையா? அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள், முடிந்த வரையில் ஊழல் செய்து மொத்தமாக சுருட்டிவிடுவார்கள். ஆனாலும் நாம் அமைதியாக இருந்து விட்டு அரியணை ஏறிவிடலாம் என்று எண்ணுவது, குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்.

எண்பத்து ஒன்பது வயக்காட்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு, நூற்று முப்பது கொத்தடிமைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று கண்டுகொள்ளும்போது அறிவாளியாகிவிடுகிறான். தேங்கிக் கிடக்கும் தண்ணீர் கெட்டுப் போய்விடும் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன?

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It