தெற்கு ஆனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இங்குள்ள தலித் மக்களுக்கு எரிக்க சுடுகாடு இல்லை. எனவே 8.1.2008 அன்று குருசாமி என்பவர் இறந்த பின்பு அனைத்து சாதியினருக்கும் பொதுவான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று கட்டப்பட்ட சுடுகாட்டில் எரிக்க கூடாது என்று ஆதிக்க சாதியினர் மிரட்டி ஓடையில் எரிக்க வைத்தனர். மேலும் மக்களை ஊரை விட்டு விரட்டுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும், ஊர்க் கூட்டம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், அதற்கான வழக்கு செலவுகளை ஆதிக்க சாதிகளின் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 500 வீதம் வரி விதித்துள்ளனர். இதையறிந்து 14.1.08 அன்று காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில் ஏழு பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என தலித் இயக்கனர்ங்களை ஒருங்கிணைத்து ‘புரட்சிப் புலிகள்’ தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தியது. மேலும் இந்த தீண்டாமைக் கொடுமை ‘தலித் முரசில்’ வெளிவந்தது. இதுபோன்ற எதிர்வினைகள் ஆதிக்க சாதியினரை மேலும் கோபமடையச் செய்தன.

15.3.2008 அன்று அய்யனார் என்பவரின் குழந்தை மாரியம்மாள் (3) மீது சுடலை ஆசாரி இருச்சக்கர வண்டியை வைத்து மோதி உள்ளார். மேலும் புரட்சிப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் தேவர் சாதியை சார்ந்த துரைராஜ் என்பவர் மாட்டு சாணி, கழிநீர் போன்றவற்றை கொட்டி வந்துள்ளார். கழிவுகளை மாற்று இடத்தில் போடச் சொல்லி கேட்டதற்கு அப்படி தாண்டா போடுவேன் என்று சொல்லி துரைராஜ், அவரது மகன்கள், மற்றும் ஏற்கனவே புகாரில் கூறியிருந்த குற்றவாளிகள் 150 பேர் கொண்ட குழு கொடிய ஆயுதங்களோடு தலித் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தப் பகுதியில் சமூக விழிப்புணர்வை உருவாக்கி வரும் முத்துக்கிருஷ்ணனை சரமாரியாக தலையில் அருவாளால் வெட்டி அடித்து வீசினர். அய்யனார் என்பவரின் காலை உடைத்து விட்டனர். காளி முத்து, குருசாமி, போன்றோரை அடித்து தலை, முதுகு என வெட்டி சாய்த்தனர். ஓட்டு வீடுகளின் கூரைகள் சராமாரியாக அடித்து நொறுக்கப்பட்டன. கண்ணில் தென்பட்டவர்களையும், ஓடுபவர்களையும் பிடித்து அரிவாளால் வெட்டியும், பெண்களை மானபங்கப்படுத்தினர்.

வீடுகளுக்குள் புகுந்து சைக்கிள், பீரோ, நாற்காலிகள், உணவு பாத்திரங்கள் சுக்கு நூறாக நொறுக்கப்பட்டன. பீரோவில் இருந்த பணம், நகைகள் சூறையாடப்பட்டன. இவ்வளவு தாக்குதல் நடந்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியை சுற்றியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அருந்ததியர் ஜனநாயக முன்னனி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை போன்ற இயக்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தன.

வன்கொடுமை நிகழுகின்ற பகுதிகளில் சமாதானம் செய்கின்ற கட்டப்பஞ்சாயத்து வேலையை காவல்துறை செய்ய முயற்சித்து அதில் தோல்வியுற்று குற்றவாளிகளை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17.3.2008 அன்று சிவகாசியில் குற்றவாளிகளை கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய மறியலில் ஈடுபட்டது. உடனே காவல்துறை கண்காணிப்பாளர் சாகுல் அமீது குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்வோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பொய் வழக்கு 11 மீது போடப்பட்டதை நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார்.

ஒருபுறம் வன்கொடுமைகளுக்கெதிராக தலித் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, சாதிவெறிபிடித்த அமைப்புகளான தேவர் பேரவை, கம்மா மகாஜன சங்கம், நாயுடு மகாஜன சங்கம், கவுரவ் நாயுடு சங்கம், விஸ்வகர்ம சங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு சங்கம் போன்றவை 24.03.08 அன்று சிவகாசியில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் ஊர் திரும்பவில்லை. வேறு ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். உடைக்கப்பட்ட வீடுகளும், உடைமைகளும் சரி செய்யப்படவில்லை. 12 மாணவர்களின் கல்வி பாதியிலேயே நின்று போய்விட்டது. இதுபோன்ற வன்கொடுமைகள் நாள்தோறும் நிகழ்த்தப்படுகின்றன. இருப்பினும் வாழ்ந்தால் சுயமரியாதையோடு வாழ்வோம் இல்லையேல் சுயமரியாதைக்காய் மரணத்தை முத்தமிடுவோம் என இன்றைய தலைமுறை சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடி வருகிறது.
Pin It