தங்களின் இளமைக் காலம் பற்றி சொல்லுங்கள்...

என் இளமைக் காலம் பேரணாம்பட்டிலும், ஆம்பூரிலுமாகக் கழிந்தன. இந்த இரண்டு ஊர்களும் 
தமிழகத்தின் வட Azhakiya Periyavan மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டத்தில் இருப்பவை. அப்பா சின்னதுரை கடும் உழைப்பாளி. அவர் சின்ன வயதில் ஆண்டையிரிடம் வேலை செய்திருக்கிறார். மாடுகளை மேய்ப்பதற்கும், வயல் வேலைகளைப் பார்ப்பதற்கும் தினம் அவர் அதிகாலமே போய்விட வேண்டும். இல்லையென்றால் ஆண்டையும், அவருடைய ஆட்களும் வந்து என் அப்பாவை அடித்து இழுத்துப் போவார்களாம். அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பா இதுபற்றிப் பேசியதில்லை.

அவர் இளைஞரான பின்பு ஆண்டை வேலைக்குப் போவதை விட்டுவிட்டு, பீடி சுற்றும் வேலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார். பிறகு தோல் பதனிடும் வேலை. இடுப்பில் சணல் துண்டைக் கட்டிக் கொண்டு, வெற்றுடம்போடு, தோல் ஊற வைக்கப்பட்டத் தொட்டிகளில் இறங்கி அவைகளை அலசி எடுத்துப்போட வேண்டும். சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் டப்பட்டபோது அந்த வேலையும் அவருக்குப் போனது. இப்போது மறுபடியும் பீடி சுற்றுதல். சளைக்காமல் இன்றும்கூட பீடிகளைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அம்மா கிரேஸ் கமலம் அப்பாவைப் போலவேதான். வீட்டு வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு, பீடி இலைகளை வெட்டுவார்கள். பீடி இலை வெட்டுவது என்பது, ஒரு நச்சு பிடித்த வேலை. அறுந்து வராமல் மாலை வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்தச் சூழலில் நான் இருந்தால் படிக்க மாட்டேன், நாலெழுத்து படிக்கக் கற்றுக் கொண்டால், அரசாங்க வேலைக்குப் போகலாம் என்றெல்லாம் அம்மா நினைத்துக்கொண்டு ஆம்பூரில் உள்ள பாட்டி வீட்டில் என்னை விட்டுவிட்டார்கள். வயசான பாட்டியோடு, மாமாக்களின் வீடுகளில் வளர்ந்தேன். எங்கள் ஊரின் பாலாற்றங்கரையில் பாட்டிக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் பாட்டி கீரைகளைப் பயிர் செய்வாள். ஊரிலிருந்தெல்லாம் ஓடிவந்து ஆற்றில் விழும் சாக்கடையைத்தான் கீரைகளுக்குப் பாய்ச்சுவோம். அந்தக் கீரைகளை விற்றுதான் எனக்குச் சோறு போட்டாள் பாட்டி.

பெருங்குடிகாரராக இருந்த ஒரு மாமாவின் வீட்டில் சில ஆண்டுகள் இருந்தபோது கிண்டலுக்கும், கேலிக்கும், வேறு சில கொடுமைகளுக்கும் நான் உள்ளானேன். இது, கடும் மன உளைச்சலை எனக்குத் தந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு வருவதற்குள் மூன்று பள்ளிகள் மாறினேன். பள்ளிப் படிப்பின்போது இரண்டு ஆண்டுகள் ஒரு கிறித்துவ விடுதியிலும், கல்லூரிப் படிப்பின்போது மூன்று ஆண்டுகளை ஆதிதிராவிடர் நில விடுதியிலும் கழித்தேன். இளைமைக் காலம் முழுக்க வறுமை தொடர்ந்து வந்தது. சிறு வயதில் வீட்டைப் பிரிந்த ஏக்கம் என்னிடம் அதிகமாய் இருந்தது. கல்லூரி முடித்து திரும்பியபோது, ஊர் எனக்கு அன்னியமாய்த் தெரிந்தது. உறவினர்களும், ஊராரும் வேற்றாள்களாய்த் தெரிந்தனர். இந்த உணர்வு மறைந்து இயல்பு நிலைக்கு வர பல காலம் ஆனது.

இலக்கியத்தின்பால் தாங்கள் ஈர்க்கப்படக் காரணம் என்ன?

என் குடும்ப மரபும், எனக்கு அமைந்த சூழலும்தான் என்னை இலக்கியத்தில் ஆர்வம் கொள்ளச் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். என் இரண்டு தாத்தாக்களில் ஒருவர் பாடகர் என்றும், ஒருவர் கூத்துக்காரர் என்றும் பெயரெடுத்தவர்கள். அப்பாவைப் பெற்ற தாத்தா நிறைய கூத்து பற்றிய நூல்களை வைத்து படித்துக் கொண்டிருப்பார். அவரை எல்லோரும் "வாத்தியார்' என்றுதான் அழைப்பார்கள். கூத்து நாடகங்களையும், வீர விளையாட்டுகளையும் கற்றுத் தருகின்ற ஒருவரைத்தான் எங்கள் ஊரில் அப்படி அழைப்பார்கள். இன்னொரு தாத்தா தனிப்பாடல்களையும், சித்தர் பாடல்களையும், சிற்றிலக்கியப் பாடல்களையும் பாடுவதில் வல்லவர். ஆதிக்க சாதிக்கார வாத்தியார் ஒருவரிடம் போட்டியிட்டு பாடி வென்றதோடு, அய்ந்து ரூபாயை பரிசாகப் பெற்றிருக்கிறார். இது என் மரபு எனில் நான் வளர்ந்த சூழலும்கூட, புத்தகங்கள், இலக்கியம் என்றே அமைந்துவிட்டது.

பாட்டி வீட்டில் ஒரு மாமாவின் சேகரிப்பில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவர் அறுபதுகளின் இடைப்பகுதியில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தத்துவம் படித்தவர். மரபுக் கவிதைகளையும், சிறு கதைகளையும், கிறித்துவப் பாடல்களையும் அவர் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்களைப் பராமரிப்பது என் விருப்பமான வேலையாகும். அப்போது நூல்களைப் படிப்பது, பயன்படுத்துவது என்ற பழக்கம் உருவானது.

ஆம்பூர் தேவலாபுரம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே "காமிக்ஸ்' படிக்கின்ற ஆர்வம் இருந்தது. வீர தீர சாகசக் கதைகளையும், மந்திரத் தந்திரக் கதைகளையும் அப்போது வெறியுடன் படித்தேன். ஏசுதாஸ் என்கிற நண்பன்தான் அப்போது அதுபோன்ற புத்தகங்களை நிறைய வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பான். பள்ளியிலே பாடம் நடக்காத நேரங்கள், விளையாட அனுமதிக்கிற நேரங்கள் எல்லாவற்றிலும் இந்தக் கதைகளைப் படிப்பதுதான் ஒரே வேலை. தாழ்வுணர்ச்சியும், கூச்சம் நிரம்பியிருந்ததால் விளையாட்டுகள் மீது ஆர்வம் போனதில்லை. பள்ளியில் தமிழ் ஆசியராக இருந்த சுப்பிரமணி அய்யா, விடுமுறைக் காலங்களில் எந்த நூல்களைப் படித்தீர்கள் என்று கேட்பார். அவருக்குப் பதில் சொல்லிப் பாராட்டுப் பெற வேண்டும் என்பதற்காகப் படிப்பேன். இப்படிதான் வாசிப்பதில் ஆர்வம் உண்டானது. சிறு வயதிலேயே கதைகளை எழுதிப் பார்க்க வேண்டுமென நினைப்பேன். எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை எனக்கு அப்போதே இருந்தது.

நீங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?

தேவநேயப் பாவாணர் அவர்கள் சிறிது காலம் பணியாற்றிய ஆம்பூர் கன்கார்டியா பள்ளியில், மேல்நிலை வகுப்பில் படித்தபோது என் முதல் சிறுகதையை எழுதினேன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு கதைகளை இன்று அனுப்பினால், நாளையே போட்டுவிடுவார்கள் என்ற நினைப்பு எனக்கு இருந்தது! அந்தக் கதையை "குமுதம்' இதழுக்கு அனுப்பியிருந்தேன். அது பிரசுரமாகவில்லை. கல்லூரி முடிப்பதற்குள் ஒன்றிரண்டு சிறுகதைகளை எழுதியிருந்தேன். அவை எதுவும் பிரசுரமாகவில்லை. கவிதைகளையும் அதே காலங்களில்தான் எழுதினேன். வேலூர் ஊரிசு கல்லூரி ஆண்டு மலரில் என் கட்டுரை ஒன்று முதன் முதலாகப் பிரசுரமானது. மூன்றாம் ஆண்டு இறுதியில், கல்லூரி முத்தமிழ் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றேன். மிகுந்த தயக்கங்களும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த எனக்கு நான் பரிசு வாங்கிய நிகழ்வு நம்பிக்கையை அளித்தது. கல்லூரி முடித்த மறு ஆண்டே (1989) என் முதல் சிறுகதை மாவட்ட அளவில் வெளிவந்த ஒரு பத்திரிகையிலும், முதல் கவிதை "அரும்பு' இதழிலும் வெளியானது.

தமிழ்ச் சூழலில் ஒரு தலித் எழுத்தாளர் எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது?

தமிழ்ச் சமூகத்தில் ஒரு தலித் எழுத்தாளன் முதலில் எதிர்கொள்வது அடையாளச் சிக்கலைத்தான். விடுதலையை விரும்பும் கலக மனோபாவத்துடன் அவர்கள் பூணும் தலித் என்ற அடையாள மொழி, ஒரு முள்கிரீடமாக அவர்கள் மீதே இருத்தப்படுகிறது. சமூகத்தின் பொதுப் புத்தியிலும், ஆழ்மனங்களிலும் புரையோடி இருக்கும் சாதியத்தை தலித் எழுத்தாளர்கள் தம் எழுத்தின் வழியே வெளிக் கொணர்கையில் வெறுப்பையும், எதிர்ப்பையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் தலித்துகளிடமிருந்தே கூட இவ்வகையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தம் அடையாளத்தை மறைத்துக் கொண்டு, நிலவும் சாதிய சமூகத்துக்கு ஏற்றபடி நெகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளத் தொடங்கும் தலித்துகள், “எதுக்கு இதையெல்லாம் எழுதறீங்க? நாமே நம்மைப் பத்தி இப்படி எழுதிக்கிறது அசிங்கம்'' என்கிறார்கள்.

Azhakiya Periyavan
தலித் அல்லாதார் பெரும்பாலும், தலித் பிரதிகளை ஒரு துவேஷமாகப் புரிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாகவே நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தலித் அல்லாத என் நண்பர்கள் யாரும் என் படைப்புகள் குறித்துப் பேச முன் வருவதில்லை. அவர்களிடம் எப்போதும் ஒரு மவுனம் இருக்கும். இது, பெரும்பாலும் பல கட்டங்களிலும் தலித்துகளுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் மவுனம்தான். “இந்த சாதி அம்சத்தை மட்டும் எழுதாம விட்டுட்டீங்கன்னா நல்லா வருவீங்க'' என்று எனக்கு புத்தி சொல்பவர்கள், அவர்களில் நிறைய இருக்கிறார்கள். தானும், தன் சமூகம் பட்ட அவமானங்களை எழுத்தில் முன்வைக்க தலித் எழுத்தாளர்களுக்கு அதிக துணிச்சல் வேண்டியிருக்கிறது.

சாதியையும் அதன் கொடுமைகளையும் விமர்சித்து எழுதப்படும் படைப்புகள் முகச் சுளிப்புக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. அவை மீது திறந்த மனதுடனான, விரிவான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் எழுதுவது; உயர்ந்த அம்சங்களைப் பற்றி எழுதுவதுதான் இலக்கியம் என்ற மனோபாவம் தொடர்வதே இதற்குக் காரணம். "சாதிய ஆதிக்க மரபுகளை எழுதுவதுதான் இலக்கியம்; எதிர் மரபுகளை எழுத்தில் கொண்டு வருவது இலக்கியமாகாது. அவை வெறும் குப்பைகள்' என்ற மரபு வழிப்பட்ட ஆதிக்கச் சிந்தனை, தமிழ் இலக்கிய உலகில் இன்றும் நிறைந்திருக்கிறது. இதன் காரணமாக, தலித் படைப்புகள் மறைமுகமான ஒதுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தலித் எழுத்தாளர்களுக்கு எழுத்தில் உள்ள மற்றொரு சவால், தமது எழுத்தின் தன்மையை கவனத்தில் கொள்வது. சாதியக் கொடுமைகளைத் தமது படைப்புகளில் லகுவாகவும், நேர்த்தியுடனும், எழுத்துக்குய அம்சங்களோடும் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லையேல் பிரச்சார தொனியில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் அவர்களின் படைப்புகள் ஒதுக்கப்பட்டு விடுகின்றன. தலித் படைப்புகளுக்கே உரிய தனி அழகியலை இங்கு யாரும் புரிந்து கொள்ளவோ, கணக்கில் கொள்ளவோ தயாரில்லை. எனவே, ஏற்கனவே நிலவும் இலக்கியப் பார்வையை தலித் படைப்புகளின் மீது பொருத்தி மதிப்பீடுகளை செய்கின்றனர்.

இப்போது இன்னொரு வகையான வசதியும் ஏற்பட்டுவிட்டது. தலித் படைப்புகளை ஒரு ஒதுக்கீட்டுக்குள் அடைத்து விடுகிறார்கள். தலித் எழுத்தாளர்களில் பலரும் தமது தரமான படைப்புகளின் ஊடேதான் படைப்பாளிகளாக நிற்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் முழுமையில், தனித்த கூறுகளுடன், ஓர் அங்கமாகத்தான் தலித் இலக்கியம் விளங்குகிறது. இந்த அம்சம் இங்கு மறுக்கப்படுகிறது. நவீன கவிதை, நவீன கதை என்கிற ஒன்று சாதியச் சிக்கலையோ, மண் சார்ந்த அடையாளத்தையோ, பெண்ணியச் சிக்கலையோ பேசாத ஒன்றாகத்தான் இருக்கும் என்ற இலக்கியப் பொதுப்புத்தி இங்கே நிலவுகிறது. இதனால் வெளிப்படையான அடையாளத்தைப் பூண்டு வரும் படைப்புகளின் "வெளி' சுருக்கப்படுகிறது. அவைகளுக்கான உரிய கவனிப்பும், அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகின்றன. வெகுசன இதழ்களிலும், ஊடகங்களிலும் தலித் எழுத்தாளர்களுக்கான இடம் மிக மிகக் குறைவுதான். வெளிப்படையான சாதி ஆதிக்க அடையாளத்துடன் பிற எழுத்தாளர்கள் பேசினாலோ, எழுதினாலோ அதை வெளியிட அவை தயங்குவதில்லை. ஆனால், ஒரு தலித் எழுத்தாளன் படைப்பு என்று வருகிறபோது மட்டும் சாதி அடையாளம் அவர்களுக்கு ஒரு தடையாகப்படுகிறது.

தலித் எழுத்தாளருக்கு இங்கு இருக்கும் மற்றொரு சவால், தமது எழுத்துகளை நூலாக்குவது. நூல்கள் பதிப்பிக்கப்படுவது பெருகியிருந்தாலும், இன்னும் பல தலித் எழுத்தாளர்களுக்குப் பதிப்பு வாய்ப்புகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

- பேட்டி தொடரும்
-நேர்காணல்: டி.டி. ராமகிருஷ்ணன்

Pin It