உங்களுக்கான உணவு உருவாக்கப்படுகிறது
எங்கள் கைகளின் தசைநார்களால்

நீங்கள் செல்வதெல்லாம் எங்கள் எலும்புகளை
அடுக்கி சமனாக்கப்பட்ட சாலைகள்

உங்கள் சுவர்களில் கசியும்
ஈரத்தில் தெரியும் எங்கள் வியர்வைத் துளிகள்

அழுக்கு நீக்கிய உங்கள் உடைகளில் படிந்திருக்கும்
எங்கள் கைரேகைகளை பார்க்க முடியாது உங்களால்

உங்களின் கடவுளர்க்கே மழையடிக்காமல்
தடுப்பது எங்கள் கைவேய்ந்த கூரைகள்தான்

Anti reservation agitationஉங்கள் சுத்தங்களால் அசுத்தங்களானோம்

இழிவு சுமத்தப்பட்ட எங்கள் தொழில்களால்
மிளிர்கின்றது உங்கள் வாழ்க்கை

இன்றளவும் கனறும்
ஜாதி மதம் வறுமை வன்முறை முதலாளித்துவம்
உங்கள் திறமைகளின் மநுதர்மம்

எங்களுக்கெதிரான உங்கள் போராட்டத்தில்
வெளிப்படுவது
அசிங்கப்படுத்தப்பட்ட எங்கள் தொழில்கள் மட்டுமல்ல
அறிவின் மூலக்கூறுகள் ஏதுமற்ற உங்கள் மூளையும்கூட

-யாழன் ஆதி
Pin It