"அகில இந்திய பட்டியல் இனக் கூட்டமைப்பின் செயற்குழு, கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வியை மறந்துவிடவில்லை. இத்தோல்வியால் இச்செயற்குழு சோர்வடைந்துவிடவில்லை. இத்தகைய தோல்விகள் சாதாரணமானதே. ஓர் அரசியல் கட்சி, மக்களைக் கற்பிக்கவும், கிளர்ந்தெழுந்து போராடவும், அவர்களை ஒன்றிணைக்கவுமே இருக்கிறதே ஒழிய தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மட்டுமே அது நடத்தப்படுவதில்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காணாதவரை, ‘பட்டியல் இனக் கூட்டமைப்பை'க் கலைக்க முடியாது.'' - டாக்டர் அம்பேத்கர்

‘தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம்' அண்மையில் ஏற்பட்ட தற்காலிக அரசியல் நெருக்கடியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாறு அறிவித்தனர். அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்ல முற்படாத தொரு சூழலில், ஒரு தலித் கட்சி மட்டும் இப்படிச் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன? மக்கள் நலனில் அக்கறையுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

திராவிடக் கட்சிகளுக்குரிய கொள்கைக் கோட்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, வர்ணாசிரமக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, ‘தீண்டத்தகாத கட்சி என்று எதுவுமில்லை' என்று முழங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் தீண்ட மறுத்தது ஏன்? அக்கூட்டணியில் இருக்கும் வேறு எந்தக் கட்சிகளும், இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் வெட்கக் கேடானது. இந்த அநீதி குறித்து மறந்தும் வாய் திறக்காத ‘தீக்கதிர்' ஏடு, பார்ப்பன ‘தினமலர்' போல செய்தி வெளியிடுகிறது : ‘விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க. அணியில் ‘செட்டிலானது''. இவர்கள் ஜெயலலிதாவுடன் இணைந்தால் அது கூட்டணி; தலித் இயக்கம் இணைந்தால் மட்டும் அது ‘செட்டில்மெண்ட்'. பூணூல்களின் புதிய இலக்கணம் இது. ஏகாதிபத்திய எதிர்ப்பைச் சுரண்டிப் பார்த்தால், அதிலும் ஜாதியம் ஜொலிப்பதை என்னவென்று சொல்வது!

2004 ஆம் ஆண்டில், பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து, தமிழ்த் தேசிய உருவாக்கம் குறித்து முழங்கியபோது, ‘முரண்படும் தேசியம்' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். தற்பொழுது அந்த முரண்பாடுதான் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கவும், தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், தமிழ்ப் பெயர்களைச் சூட்டவும், குஷ்புவுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியும், பிற தமிழ்த் தேசிய அமைப்புகளும், சிறுத்தைகளுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் அடிநாதமான கொள்கையான ‘அடித்தட்டு மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும்' என்பதை வலியுறுத்தியதும் முரண்பட்டு அவர்களை எதிர்த்திசை நோக்கித் தள்ளி விட்டனரே! இது கடைந்தெடுத்த தீண்டாமை அன்றி வேறென்ன?

பொதுவான எல்லா பிரச்சினைகளிலும் இணையத் தயாராக இருப்பவர்கள், சாதி ஒழிப்புக்கும் அதிகாரப் பங்கீட்டுக்கும் தயாராக இருக்கும்போதுதான் தமிழ்த் தேசியக் கோட்பாடு முழுமை பெறும். இல்லை எனில், அது சாதித் தேசியமாக, தமிழ்த் தேசியக் கருத்தியலை கருவறுக்கும். ‘எங்கே போனார்கள் தமிழ்த் தேசியவாதிகள்?' சேரி மக்கள் கேட்கிறார்கள். இதற்கு நியாயமான பதில் சொல்ல வேண்டிய தமிழ்த் தேசியவாதிகள், கருணாநிதியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது.

அறிவுஜீவிகளின் எகத்தாளத்தை எதைக் கொண்டும் கட்டுப்படுத்த முடியாது. திருமாவளவனை எப்போது பழி வாங்கலாம் என்று காத்துக் கிடந்தவர்களுக்கு, தற்காலிகமாக ஓர் வாய்ப்பு கிடைத்தது. ‘தலித் அரசியல் இனி உயிர் பிழைக்காது என அவர்கள் கொக்கரிக்கிறார்கள். தேர்தல் அரசியலை மட்டுமே ஒட்டுமொத்த தலித் அரசியலாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள், வேறு எப்படி சிந்திப்பார்கள்? சமூகத் தளங்களில் நிலவும் சாதிக் கொடுமைகளைக் கண்டு முகிழ்த்தெழுந்த தலித் இயக்கத்தின் தேவை சாதி ஒழியும் வரை இருக்கவே செய்யும். தலித் விடுதலை அரசியலின் ஒரு பகுதியே தேர்தல் அரசியல். அத்தளத்தில் பங்காற்றுபவர்கள், தேர்தல் அரசியலுக்குரிய சமரசங்களுடனேயே செயல்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதை பூதாகரமாக்கி ஒட்டுமொத்த சாதி ஒழிப்பு அரசியலையே கொச்சைப்படுத்துவது, சாதியத்திற்கு ஆதரவாகவே முடியும்.

ஒரு தலித் இயக்கத்திற்கு, தேர்தலைப் புறக்கணித்தாக வேண்டிய சூழல் எழுவது இயல்புதான். ஏனெனில், இந்து சமூக வாழ்வியலில் தீண்டாமை, எந்நேரம் தீப்பற்றக் கூடிய ஆபத்து உள்ளது. அரசியல் களத்திலும் அது தலித்துகளை வழிமறிக்கும். சமூகப் புரட்சியைக் கையிலெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தை அது நம்மீது திணிக்கும். ஏனெனில், ‘தலித் அரசியல்' என்று சொல்லப்படும் சாதி ஒழிப்பு அரசியல், ‘தேர்தல் அரசியல்' என்று சொல்லப்படும் சாதிய, மதவாத அரசியலுக்கு நேர் எதிரானது.

- தலித் முரசு ஆசிரியர் குழு
Pin It