War Ship

இரவு பகலாக அந்தக் கப்பலின் மீது விமானங்கள் இறங்குவதும், அங்கிருந்து ஏதோ சரக்குகளைச் சுமந்து புறப்படுவதுமாக இருந்தது. மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டனர் அந்தக் கப்பலின் மாலுமிகளும், அதிகாரிகளும். அவர்கள் நாட்டு  விமானங்கள் மட்டுமின்றி, அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல நாடுகளைச் சேர்ந்த விமானங்களும் அந்தக் கப்பலின் மீது வந்தமர்ந்து கிளம்பியது. அந்தக் கப்பல் ஏறக்குறைய 50 விமானங்கள் நிறுத்தும் அளவுக்குப் பரப்பளவு கொண்டது. இந்த நடவடிக்கையின் பொழுது, அது அரேபிய வளைகுடாப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் திணறும் அரேபிய சகாராப் பாலைப் பகுதி மக்களுக்கு அந்த விமானங்கள் உணவு தானியங்களை ஏற்றிச் சென்றதா? நைரோபி, சோமாலியா நிலப்பரப்பு மக்கள் தங்குவதற்கான துரித இருப்பிடங்கள் அமைப்பதற்கான தளவாடங்களை ஏற்றிச் சென்றதா? இல்லை, ஏதேனும் ஓர் ஆப்பிரிக்க நாட்டில் திடீரெனப் பரவத் தொடங்கிய கொள்ளை நோயைத் தடுப்பதற்கானத் தடுப்பூசி மருந்துகளை ஏற்றிச் செல்லப்பட்டனவா? இப்படியாக நம் எண்ணங்கள் பல தடங்களில் ஓட, மீண்டும் மீண்டும் அதற்கான பதில் ‘இல்லை' என்ற ஒற்றைச் சொல் மட்டுமே!

பிறகு அப்படி என்ன மனிதகுல சேவையை அந்த நடவடிக்கை செய்தது? ஜெர்மனியை முற்றாகத் தாக்கி அதைச் செயலிழக்கச் செய்திடவேண்டும்; வரலாற்றில் மீண்டும் அந்த நாடு தலை தூக்கியதாகப் பதிவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற வன்மம் தலைக்கேறிய பிரான்சின் பிரதமர் ஜார்ஜஸ் கிளெமென்சியேயின் (Georges clemen, 1841 - 1929) பெயர் சூட்டப்பட்ட பிரான்ஸ் கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் கிளெமென்சியே. வளைகுடாப் போரில் அமெரிக்காவுக்கு நேசக்கரம் நீட்டி, மனம் திறந்து உதவிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ்.

பத்து லட்சம் மைல்களுக்கு மேல் பயணித்துள்ள கிளெமென்சியே, உலகின் எல்லா பெருங்கடல்களையும் 50 முறை வலம்
வந்துள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கப்பல் ஓய்வு பெற்றது. போர் முடிந்த பிறகு 1997 வாக்கில் அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் விமானங்களைக் கையாளுவதற்கான வசதிகள் படைத்த புதிய கப்பல் வரவழைக்கப்பட்டவுடன், கிளெமென்சியே செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருக்கும் ஆபத்தான நச்சுத் தன்மையுடைய கழிவுகளை, எப்படிப் பாதுகாப்பாகக் கையாளுவது என்ற நேர்மையான செயல்முறைகளைப் பற்றி யோசிக்காமல், யார் தலையில் அந்தக் கப்பலைக் கட்டலாம் என்று திட்டம் தீட்டியது பிரான்ஸ் அரசு.

மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை, அவர்களின் குப்பைத் தொட்டியாக இருக்கவே இருக்கின்றன மூன்றாம் உலக நாடுகள். எல்லா வசதிகளையும் பணக்கார நாடுகள் அனுபவிக்க, அதன் அவலத்தை ஏழை நாடுகள் சுமக்க வேண்டுமாம்! நம் ஊரை, நாட்டை அவர்களைப் போலவே தூய்மையாக வைத்திருக்க நமக்கு உரிமை இல்லையா? மேலை நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காகப் போராடினால், அது அங்கு நாட்டுப் பற்றாகக் கருதப்படுகிறது. நம் நாட்டில் அப்படிப் போராடுவோர், ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்' என முத்திரை குத்தப்படுகின்றனர்.

கிளெமென்சியே செயலிழந்தால் நமக்கென்ன கவலை? அந்தக் கப்பல் முதலில் துருக்கிக்கும், அடுத்து கிரீஸ் நாட்டுக்கும்
Broken Ship
அனுப்பப்பட்டது. விழித்துக் கொண்ட அந்த நாட்டு மக்களும், அரசாங்கங்களும், தங்கள் கரைகளை கிளெமென்சியே நெருங்க விடாமல் திருப்பி அனுப்பினர். காரணம், அந்தக் கப்பலில் உள்ள ஏராளமான நச்சுக் கழிவுகள்தான். கிளெமென்சியேவில் ஆஸ்பெஸ்ட்டாஸ், பயன்படுத்தப்பட்ட பெயிண்ட், பழைய நெகிழி, அமோனியா பேட்டரிகள் உள்ளன. இதில் ஆஸ்பெஸ்ட்டாஸ் மிகவும் ஆபத்தான நிலையில் அந்தக் கப்பல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இந்தக் கழிவுகள் சூழலை மாசுபடுத்துவது மட்டுமின்றி, பல நிரந்தர பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

இதுபோன்ற தீவிர நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக, உலக நாடுகள் ஒன்றுகூடி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் ‘பேசல் ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் அல்லது அவர்களின் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை, அந்த நாட்டு எல்லைக்குள்ளேயே கையாள வேண்டும். இதைக் கையாள பல அறிவியல் பூர்வமான நடைமுறைகளும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நச்சுக் கழிவுகளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கு பேசல் ஒப்பந்தப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கிளெமென்சியேவை பனாமா நாட்டு நிறுவனமான எஸ்.டி.அய்.சி. விலைக்கு வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் கிளெமென்சியேவை இந்தியாவிலுள்ள குஜராத் கடற்கரையிலுள்ள ‘அளங்'கில் வைத்து உடைக்கத் திட்டமிட்டுள்ளது. கிளெமென்சியேவை 10 லட்சம் யூரோக்களுக்கு எஸ்.டி.அய்.சி. வாங்கியுள்ளது. இந்தக் கப்பலை உடைத்தால் 80 லட்சம் யூரோக்களுக்கு மேல் லாபம் கிடைக்கும்.

.
கப்பல் உடைக்கும் தொழில் இந்தியா, பங்களாதேசம் மற்றும் சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் வெகுவாக வளர்ந்து வருகிறது. ஆனால், மனிதர்கள் பணிபுரியக் கூடிய சூழல், இந்தக் கப்பல் உடைக்கும் தொழிலில் இல்லை. இங்கிலாந்தில் தொழிற்சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட தொடக்க காலங்களில் (20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி), அங்கு கப்பல் உடைப்புப் பணிகள் நடைபெற்றன. அந்தத் தொழிலைப் பற்றி புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் தனது குறிப்பொன்றில் இவ்வாறாகப் பதிவு செய்திருக்கிறார்: ‘ஏழைகள் இங்கு பணிபுரிவது, அவர்களின் வாழ்வின் கோரங்கள் நிறைந்த, அவலங்களின் உச்சம். இவர்களின் ரத்தங்களிலிருந்து ஊற்றெடுக்கிறது கப்பல் உடைக்கும் தொழிலின் பூதாகர லாபங்கள். வறுமையில் உழலும் மனிதர்கள் வேறு பிழைப்பின்றி மரணம் தங்களைத் தழுவாமல் இருக்க, இந்தச் சூழ்நிலைகளில் பணிபுரிகிறார்கள். இந்த வறுமை மட்டுமே இந்தத் தொழில் நிலைப்பதற்கான அடிப்படை.''
பல வெளிநாட்டுப் பொறியாளர்கள் ‘அளங்' கப்பல் உடைக்கும் தளத்தைப் பார்த்துவிட்டு, அங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை; அங்கு நச்சுக் கழிவுகளை நீக்க முடியாது என்ற தங்களின் அறிக்கைகளை விரிவாக அளித்துள்ளனர்.

ஆஸ்பெஸ்ட்டாசின் கேடுகள்

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆஸ்பெஸ்ட்டாசின் பயன்பாடு தொடங்கியது. மேற்கத்திய நாடுகள், அய்.நா. சபை, சர்வதேச தொழிலாளர் ஆணையம் உட்பட ஏராளமான அமைப்புகள் இதன் தீமைகள் குறித்து தொடர்ந்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றன. 1970லிருந்து பல நாடுகள் இதனைத் தடை செய்து வருகின்றன. ஆஸ்பெஸ்ட்டாஸ் இழைகளை சுவாசித்தால் உருவாகும் நோய்களின் பட்டியலும், இது குணப்படுத்த முடியாத நோய் என்பது பற்றிய தகவல்களும், புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு சமமாய் உலகம் முமுழுவதும் செய்யப்படுகின்றன. ‘தொழில்சார் நோய்கள் கூட்டமைப்பு' இந்தியாவில் ஆஸ்பெஸ்ட்டாஸ் பயன்பாட்டைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், நடைமுறையில் நம் அரசாங்கம் தொகுப்பு வீடுகளுக்கு ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றது. கிராமத்தின் பள்ளிக் கூடங்கள், சத்துணவுக் கூடங்கள், பஞ்சாலைகள் என தமிழகத்தில் எத்திசையில் பயணித்தாலும் ஆஸ்பெஸ்ட்டாஸ் விரவிக் கிடக்கிறது.


‘நான் கப்பலின் அதிகப்படியான வெப்பம் உள்ள பகுதிகளில் பணிபுரிந்துள்ளேன். வெப்பம் 300 முதல் 400 வரையிலான நீராவி எந்திரங்களை இயக்கும் பொறுப்பு என்னுடையது. என்ஜினிலும், வெப்ப நிர்மாணம் ஆகியவற்றிலும் பணிபுரிந்தேன். இங்குதான் கப்பலில் அதிகப்படியான ஆஸ்பெஸ்ட்டாஸ் இருந்தது. ஆனால், அவர்கள் கப்பலில் ஆஸ்பெஸ்ட்டாஸ் இல்லை என்று எப்படிக் கூற முடியும்? கப்பற்படை அப்படி பொறுப்பற்று பதிலளித்ததில், எனக்கு வியப்பில்லை. எனக்கு கிளெமென்சியேவை என் சட்டைப் பையைப் போல நன்கு தெரியும். கப்பலில் இப்பொழுது 45 டன் ஆஸ்பெஸ்ட்டாஸ் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் அரசாங்கம் கூறிவருவது சுத்தப்பொய்'' இப்படி ரத்த சாட்சியம் அளிப்பவர், எட்டியென் லீ குயில்சர். இவர் ஆஸ்பெஸ்ட்டாஸ் நோயாளிகள் சங்கத்தின் பிரடன் கிளைத் தலைவர்.

Broken ship
62 வயதாகும் இவர், மிகவும் முதிர்ந்த முகத்தோற்றத்துடன் காணப்படுகிறார். தனது 55ஆவது வயதில்தான் தனக்கிருக்கும் நோயை அவர் அறிந்து கொண்டார். அது, சிகிச்சை அளிக்க முடியாத உடலை அரிக்கும் நோய்; மெல்ல மெல்ல நுரையீரலில் ஆஸ்பெஸ்ட்டாஸ் இழைகள் படிந்து நுரையீரல் புற்றுநோய்க்கு அழைத்துச் செல்லும். 1999 இல் இவ்வமைப்புத் தொடங்கப்பட்டு, இப்பொழுது இதில் 1200 உறுப்பினர் உள்ளனர். இதில் 1150 பேர் கடும் நோயுடையோர். இவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக, என் வாழ்வின் கடைசி நிமிடங்களைச் செலவிடுகிறேன் என்கிறார் எட்டியென்.

1970களில் ஆஸ்பெஸ்ட்டாசின் தீமைகளை உலகமே அறிந்தபொழுதும், அதை 1977இல்தான் பிரான்ஸ் அரசு தடை செய்தது. பிரான்சில் 2015இல் ஒரு லட்சம் பேர் ஆஸ்பெஸ்ட்டாசால் மரணம் அடைவார்கள். அரசாங்கம் முன்பே எச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இவற்றைத் தவிர்த்திருக்கலாம். புகையிலைத் தொழில்களுக்கு அடுத்தபடியாக, ஆஸ்பெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள்தான் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வருகிறது.

பிரான்ஸ் உட்பட 26 நாடுகளில் ஆஸ்பெஸ்ட்டாஸ் தடை செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலை ஏன் பிரான்சில் வைத்து உடைக்கக் கூடாது? ‘அளங்' ஏன் கப்பல் உடைக்கும் தளமாக இல்லாமல், கப்பல் கட்டுமானத் தளமாக மாற்றம் பெறக் கூடாது? நாம் இன்னொருவரின் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா? உலகக் கப்பல்களின் இறுதிச் சடங்குகளை நிகழ்த்தும் இடமா இந்தியா?'' இப்படிப் பல கேள்விகளை உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜி. தியாகராஜன் முன்வைக்கிறார். அந்தக் கப்பலை இந்தியக் கடற்கரையிலிருந்து 220 மைல்தூரம் வரை நீளும் நமது வர்த்தக எல்லைக்குள் நுழைய விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

கிளெமென்சியே எப்படி பிரான்ஸ் அரசாங்கத்தின் சொத்தோ, அதுபோலவே அந்த விஷக்கழிவுகளும் அவர்களுக்குதான் சொந்தம். அந்தக் கழிவுகளை இந்திய மண்ணில் புதைக்க அனுமதிப்பது அநியாயமானது. இந்தியாவில் கப்பல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்படாதவர்களாக, மிகவும் மலிவான ஊதியத்திற்கு அமர்த்தப்படுபவர்களாக அவர்களின் உழைப்பை பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய முதலாளிகளும் திருடுகின்றனர்'' என்கிறார் சி.அய்.டி.யு. வின் தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே. கங்கு.

பிரேசில், கனடா, கஜகஸ்தான், போலந்து, வட அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை இந்தியா தொடர்ந்து குவித்து வருகிறது. 70க்கும் மேற்பட்ட கழிவுப் பொருட்களைப் பல லட்சம் டன்கள் நம் மண்ணில் இறக்குமதி செய்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா தனது 10 சதவிகித மழைக் காடுகளை இழந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கம் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு, ஒற்றைப் பணப்பயிர்கள் கோலோச்சுகின்றன. நம் நீர் நிலைகள் நெகிழிப் பைகளால் மூச்சுத் திணறுகின்றன. நாம் உண்ணும் காய்கறிகள், வரலாறு காணாத அளவுக்கு பூச்சிக் கொல்லிகளைத் தங்களுள் உறிஞ்சி வைத்துள்ளன. சுற்றுப்புறச் சூழல் சமச்சீர் நிலையைக் குலைக்கக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான திட்டங்களை, எந்தக் கூச்சமும் இன்றி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு.

1990
களிலிருந்து உலகமயத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, தொடர்ந்து நம் நாட்டில் பல கேலிக்கூத்துகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நம் நீர் நிலைகள் மாசுபடுவது, இயற்கை வளங்கள் தங்கு தடையற்றுக் கொள்ளை போவது, நம் கண் முன்னால் காடுகள் அழிக்கப்படுவது இவையெல்லாம் தினசரி செய்திகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நம் வாழ்க்கை முறை, நுகர்வு முறைகூட மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நம் விழுமியங்கள் மாற்றப்படுகின்றன. தனி நபர்களை ஒவ்வொரு நொடியும் ஊடகங்கள் மூளைச் சலவை செய்து கொண்டேயிருக்கின்றன. உலகின் கழிவுக் கிடங்காக நம் நாட்டை வேகமாக மாற்றி வருகிறோம். குறுகிய கால நலன்களின் அடிப்படையில் இல்லாமல், நீண்ட கால பாதிப்புகளையும் கணக்கில் கொண்டுதான் நம் திட்டமிடல்கள் இருக்க வேண்டும்.

கடலிலும், நிலத்திலும், கப்பலிலிருந்தும் வெளியேறும் கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாக நிறுத்தினாலும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு அந்த நச்சுத் தன்மை படிந்திருக்கும். ஆழ்ந்து கவலை கொள்ளத்தக்க தகவல் இது. சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வற்ற மந்தைத்தனம் நம் மனங்களில் படர்ந்துள்ளது. இந்த நிலை உருவானதற்கு நம் கல்விக் கூடங்களும், ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். உலகமே தங்கள் நிலப்பரப்புகளைப் பாதுகாக்க முனைப்போடு செயல்படும் நேரத்தில், நம் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கிளெமென்சியேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

Agitationநம்பிக்கை அளிக்கும் வகையில் பல சுற்றுப்புறச் சூழல் குழுக்கள், தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இப்பொழுது பலர் ஆதரவு தெரிவித்து களம் இறங்கியுள்ளனர். இந்தியாவில் நடந்து வரும் இந்த எதிர்ப்புகளைக் கணக்கில் கொண்டு பிரான்ஸ் அரசாங்கம், முதல் முறையாக அதன் நிலையில் சிறிய மாற்றத்தை அறிவித்துள்ளது. கிளெமென்சியேவிலிருந்து வெளியேறும் ஆஸ்பெஸ்ட்டாசை, தனது நாட்டிற்கே எடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டது. கப்பலிலிருந்து வெளியேறும் மொத்த அளவு ஆஸ்பெஸ்ட்டாசையும் பிரான்ஸ் அரசு திருப்பி எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்க வேண்டும் பிரான்ஸ் அரசு.

பிப்ரவரி 13 ஆம் தேதி நாடே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்துக் கிடந்தது. ஆனால், பிப்ரவரி 12 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரான்ஸ் அரசு கப்பலில் உள்ள பொருட்கள் பற்றிய பட்டியலை ஒப்படைக்கவில்லை. கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் அதிருப்திப்படவில்லை என அறிவித்தது உச்ச நீதிமன்ற பென்ச். ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரிகள் நால்வர் கொண்ட குழுவை பரிந்துரை செய்ய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த நால்வர் கொண்ட குழு என்ன செய்யப் போகிறது என்று பார்த்தால், இவர்கள் இனிமேல்தான் அந்தக் கப்பலுக்குச் சென்று பட்டியலைத் தயாரிக்க விருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தை பிரான்ஸ் அரசாங்கத்தின் குமாஸ்தாக்களாக மாற்றியுள்ளார்கள். நாடே கவலையில் ஆழ்ந்திருக்கும் ஆபத்து குறித்து எழுதவும் விவாதிக்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசயத், கபாடியா தடை விதித்துள்ளனர். சர்ச்சைக்குரிய நேரங்களில் பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுமென்றால், இது யாருக்கான ஜனநாயகம்?

கடந்த ஆண்டு இதே போல் விஷமேறியக் கப்பல், டென்மார்க்கிலிருந்து இந்தியா வந்தது. இரு நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதே போல் கப்பல் அரபிக் கடலில் காத்துக் கிடந்தது. டென்மார்க் அரசாங்கம் தன் தவறை உணர்ந்து கப்பலைத் திருப்பி தங்கள் நாட்டிற்கே எடுத்துச் செல்ல முடிவெடுத்தது. ஆனால், நம் உச்ச நீதிமன்றம் அந்தக் கப்பல் அளங்'கில் உடைக்கப்படலாம் எனத் தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் இது எந்த நாட்டு நீதிமன்றம் என்ற குழப்பத்தையும் அது ஏற்படுத்தியது.

கிளெமென்சியே அளங்'கிலிருந்து 220 மைல் தூரத்தில் காத்து நிற்கிறது. அந்தக் கப்பலின் நுழைவாயிலில் ஒரு எச்சரிக்கைப் பலகை தொங்குகிறது. அதிலுள்ள வாசகம் இப்படிச் சொல்கிறது :

கட்டுமானத் தளம் பொதுமக்களுக்கு அனுமதியில்லை ஆஸ்பெஸ்ட்டாஸ் விஷமேறியக் கப்பல்.''



கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் நிலை

ஊட்டக் குறைபாடுள்ள மிகவும் மெலிந்த உருவங்கள்தான் தங்கள் கைகளில் கற்காலத்தின் ஆயுதங்கள் போல் வழக்கொழிந்த கருவிகளோடு பணிபுரிகிறார்கள் குடல் குமுறுகிற, நாற்றமெடுக்கும் அந்தத் தளங்களில், நீண்ட நேரம் நிற்கவே முடியாது. அங்குள்ள காற்று ஆஸ்பெஸ்ட்டாஸ் இழைகளும், துருக்கலந்த தூசும் நிறைந்தது. கப்பல் உடைக்கும் தளங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்தத் தொழில் புற்றுநோயை இணைப்பாக அளிக்கிறது.

வரைமுறைகளற்று கப்பலின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து தொழிலாளர்கள் கப்பலை கிழித்து எறிகிறார்கள். இப்படி ஒரு திட்டமில்லாமல் அறிவியல் பூர்வமற்று கப்பல் உடைக்கப்படுவதால், எந்நேரம் எந்தத் தளம் பிய்த்துக் கொண்டு கீழே விழும் என எவருக்கும் தெரியாது. யாரின் தலை, யாரின் உடல் எப்போது பதம் பார்க்கப்படும் என்பது நிச்சயமற்றது. உயரமான தளங்களிலிருந்து திடீரென அவர்கள் விழுகிறார்கள். அவர்களின் உடல் காற்றில் மிதந்து இரும்புக் கம்பிகளின் குவியலுக்குள் சிக்கிக் கொள்கிறது. கை, கால்கள் முறிவது, முடமாய்ப் போவது, உயிரற்றுப் போவது இவைகளெல்லாம் தினசரி அலுவலின் ஒரு பகுதி. இதையெல்லாம் நீங்களோ, உங்களைச் சுற்றி பணிபுரிபவர்களோ பிரச்சனைகளாக்க இயலாது. இதையெல்லாம் கடந்து கப்பல் உடைக்கும் தளங்களில் நீங்கள் தொடர்ந்து எட்டு ஆண்டுகள்கூட பணிபுரிய இயலாது. அதற்குள் மரணம் உங்களை ஏதேனும் ஒரு வழியில் தனதாக்கிக் கொள்ளும்.

அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நான்கில் ஒருவருக்குப் புற்றுநோய் உள்ளது. எலும்பு முறிவு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு நாற்பது முதல் அய்ம்பது நோயாளிகள் வரை உறுதியாகக் கிடைக்கின்றனர். 1982இல் நாள் ஒன்றுக்கு சம்பளம் 25 ரூபாயாக இருந்தது. தற்பொழுது 8 மணிநேர வேலைக்கு ஊதியம் அறுபது ரூபாயாகக் கொடுக்கப்படுகிறது. கூடுதல் ஒரு மணி நேர வேலைக்குப் பத்து ரூபாய் கிடைக்கிறது. வயிற்றைக் கழுவக்கூட போதாத ஊதியம். அடிப்படை ஊதிய விகிதங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவிகள், வீட்டு வசதி, குடிநீர், பாதுகாப்பு உடைகள், கண்ணாடிகள், கையுறைகள், கனத்த பூட்ஸ்கள் இதையெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள் கப்பலை விலைக்கு வாங்கிய முதலாளிகள். முற்றிலும் முறைசாரா தொழிலாக ஒருங்கிணைக்கப்படாமல் திணறுகிறது இந்தத் துறை.

பீகார், ஒரிசா மற்றும் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து பஞ்சம் பிழைக்க அங்கு நாடோடிகளாய்ச் சென்றவர்கள்தான் இங்கு பணிபுரிபவர்களில் பெரும் பகுதியினர் ஆவர்.

-அ.முத்துக்கிருஷ்ணன்

Pin It