அலை அடிக்கும் பெருங்கடலை
Srilankan Tamil refugeesகடந்த பிறகும்
கடக்க முடியவில்லை துயரத்தை
அகதி என்னும் சொல்லில்

வெளிறிய வான்வெளி எங்கும்
புதைந்திருக்கின்றன ஓலங்கள்
இரவில் அவை ஆந்தைகளின்
குரல்களாய் அலறுகின்றன

போர்க்காலத்தில் தொலைத்த குழந்தையென
அனாதையாய்க் கிடக்கிறது ரத்தம்
தும்பை மலர்களில் தெளித்த
அதன் வாடை
விடாமல் துரத்துகிறது

கரைமீண்ட உடல்கள் எங்கும்
யுத்தக் கொடூரங்கள்
நரம்புகளை நடுங்க வைக்கின்றன

இழந்த மண்ணில் புதைந்த கண்களை
பிடுங்கிவர முடியாமல்
வெற்று திசையெங்கும் வெறிக்கும் வாழ்வில்
தோன்றுகிறது
போரற்ற ஓர் உலகம்
எல்லைகளற்ற மனித சமூகம்

-யாழன் ஆதி
Pin It