ஆண்டகுடி. இது, திருவையாற்றிற்குப் பக்கத்தில் உள்ள சிறிய கிராமம். இதற்கு முன் இந்த ஊரை யார் ஆண்டார்களோ? இப்பொழுது அதை ஆள்வது, அங்குள்ள வன்னியர் பெரும்பான்மைதான். இன்னமும் ஆண்டை, அடிமைத்தனம் ஒழிக்கப்படாத ஊரில், நாடெங்கும் இருக்கும் இரட்டைக் குவளை போல் அங்கு இன்னும் இரண்டு இடு காடுகள்தான். சாகும் போதும் தனித் தனியேதான் சொர்க்கத்திற்குப் போக வேண்டுமாம். இது, சாமி போட்ட உத்தரவு!

Advocate Chandru
சர்வே எண் 340/9 - தலித்துகளுக்கு. சர்வே எண் 316/1 - அது சாதி இந்துக்களுக்கு. சர்வே சுவர்கள் போட்ட உத்தரவை யாரும் மீற முடியுமா?

மீறினார்கள் தலித்துகள். 20.11.1995 அன்று தலித் தோழர் தியாகராஜன் இறந்து போனார். இறந்தவர் உடலை சாதி இந்து தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது. தலித் இடுகாட்டில் தான் புதைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதையும் மீறி இறப்பிலாவது ஒன்றாக உறங்கலாம் என்று கருதிய தலித் தோழர்கள், ஊர் வழியே வலம் வந்து சர்வே எண் 316/1க்கு எதிரே உள்ள பொது இடத்தில் அடக்கம் செய்தனர்.

வீறுகொண்டு எழுந்த வீர வன்னியர்கள் - காவல், வருவாய்த் துறை அதிகாரிகளுக்குப் புகார் செய்து பலனில்லாது, திருவையாற்றில் உள்ள "முன்சீப் கோர்ட்'டின் கதவுகளைத் தட்டினர். அசல் வழக்கு 353/1992 என்று தாக்கல் செய்யப்பட்ட வியாஜ்ஜியத்தை, "முன்சீப்'பும் எந்திர கதியில் அனுமதித்து, தலித்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். "முன்சீப் கோர்ட்'டில் தாக்கல் செய்த பிராதில் யார் வாதி, யார் எதிர்வாதி?

வாதியாக தேவேந்திரன் என்பவர் தன்னையும், கிராமத்தில் உள்ள அனைத்து சாதி இந்துக்களையும் வாதியாகவும், ராஜேந்திரன் என்ற தலித் தோழரையும், அனைத்து தலித்துகளையும் பிரதிவாதியாகவும் காட்டினார். சாதி இந்துக்கள் ஒரு புறமும், சாதியும் மறுக்கப்பட்ட தலித்துகள் மறுபுறமும். வாய்தாவுக்கு வாய்தா ஊரே திரண்டுபோய் நீதிமன்ற வாசலில் குடி கிடந்தது. கிராமத்தில் கொஞ்ச நஞ்ச அமைதியும் குலைந்து அரைக்காணியாய் அறுவடை செய்த பயிர்கள் வக்கீல் "பீசாக' கரைந்தது.

அப்படியொரு வழக்கு போட முடியுமா? "முன்சீப் கோர்ட்' (விசாரிக்க முடியுமா?) மூலம் இரட்டை இடுகாடுகள் தொடர முடியுமா?

அண்ணல் அம்பேத்கர் சிற்பியாகச் செதுக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவில், தீண்டாமை எவ்வித வடிவத்திலும் ஒழிக்கப்பட்டுள்ளதே! 1955 ஆம் ஆண்டு குடிமை உரிமைச் சட்டத்தின் (Protection of Civil Rights Act 1955) 4ஆவது பிரிவில், இடுகாட்டில் தீண்டாமையை எவரேனும் கடைப்பிடித்தால், அதற்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 13 ஆவது பிரிவில், எந்த சிவில் கோர்ட்டும் அச்சட்டத்திற்கு விரோதமாக, எந்த சிவில் வழக்கையும் எடுத்துக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து நடத்தவோ கூடாது என்று போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் கவனிக்கவில்லையா? அல்லது அதற்கு அச்சட்டங்களின் தாக்கம் பதிவாகவில்லையா?

இக்கேள்விகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விடிவு கிடைத்தது. தலித் தோழர் ராஜேந்திரன், உயர் நீதிமன்றத்தின் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் சட்டப் பிரிவு 227 இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "மாவட்ட முன்சீப் இரண்டு இடுகாடுகள் தொடர விழையும் வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தவறு' என்றும், "இதனைத் தொடர்ந்து நடத்துவதை ரத்து செய்ய வேண்டும்' என்றும் விளம்பினார்.

26.7.1996 அன்று அளிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பில், 1955 ஆம் ஆண்டு குடிமை உரிமைச் சட்டம் 13 இன் கீழ் இப்படிப்பட்ட சிவில் வழக்குகளை விசாரிக்கத் தடை இருக்கும் போது, மாவட்ட முன்சீப் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தது தவறு என்றும், அவ்வழக்கை மேலும் நடத்துவது சட்ட விரோதம் என்றும் அவ்வழக்கை வழக்குப் பட்டியலில் இருந்து நீக்கி, வழக்குக் கட்டு வீசியெறியப்பட்டது. இது போன்று தமிழகத்தில் எந்தவொரு சிவில் நீதிமன்றங்களும் வழக்குகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அத்தீர்ப்பின் நகல் எல்லா மாவட்ட முன்சீப்களுக்கும், உயர் நீதிமன்றப் பதிவாளர் மூலம் அதிகாரப் பூர்வமாக அனுப்பப்பட்டது.

இரட்டைச் சுடுகாடுகளுக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டை. தலித் தோழர் தியாகராஜனுக்கு நமது வீர வணக்கம். பல்வேறு இடர்களுக்கிடையே நீதிமன்றப் படியேறி சாதனை படைத்த தலித் தோழர் ப. ராஜேந்திரனுக்கு நமது பாராட்டுகள்.

தென்னகத்தின் மேற்கே பச்சை அரணாகப் பல நூறு மைல்கள் படர்ந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. கோவைக்கருகே உள்ள தொடர் நீலமலை. காலனி ஆதிக்கத்தில் வெள்ளை முதலாளிகளால் தொடரப்பட்ட தோட்டத் தொழில். தேயிலைத் தோட்ட வயலில் குறைந்த கூலிக்கு ஆள் பிடித்து வரப்பட்ட தென் தமிழ் மாவட்டங்கள். சொந்த ஊரிலேயே மாற்றான் ஆகிப்போன தலித்துகளுக்கு தனி வீடு, கை நிறைய சம்பளம் என்று காலனிகளை காலியாக்கி தோட்டத்தினூடே குடியமர்த்தப்பட்டனர்.

மாட்டுக் கொட்டகை, குதிரை லாயங்களை விட கேவலமாகக் கட்டப்பட்டத் தொடர் வீடுகள். கடுங்குளிரில் தொழிலாளர்கள் நிரந்தர சிறைவாசிகளாக்கப்பட்டனர். அமைப்பு ரீதியாக ஒன்று சேர்ந்து நடத்திய கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது தோட்டத் தொழிலாளர் சட்டம். அச்சட்டத்திலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக இருப்பிட வசதி செய்து தர உத்தரவிடப்பட்டது.

அப்படிப்பட்ட வீடுகளின் தரத்தினை கவனிக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனை மேற்பார்வை செய்ய தோட்ட நிறுவனங்களுக்கு ஓர் ஆய்வாளர் பதவியும் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட பதவியிலிருந்த ஆய்வாளர்கள் பலர், தங்களது சொந்தத் தோட்டத்தில் பணப்பயிர் செய்து நல்ல சம்சாயானார்களே ஒழிய, தோட்டத் தொழிலாளர்களின் வாட்டத்தைப் போக்க, அவர்கள் நாட்டம் ஏதும் காட்டவில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சரியான முறையில் தனது நாவலில் பதிவு செய்துள்ளார், திண்டுக்கல் தோழர் டி. செல்வராஜ். அவரது இரண்டாம் நாவல் "தேநீர்', ஒரு சிறந்த படைப்பு. ஆனால், அந்த தலித் எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியே.

நீண்டு இருக்கும் நீல மலையில் ஹுலிக்கல் என்றொரு சிறிய பஞ்சாயத்து. அதன் முழுவதும் சுற்றிப் படர்ந்துள்ளது "பென்காம் எஸ்டேட்'. தோட்டத் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகமே வீடுகள் வழங்க வேண்டும் என்பது, எஸ்டேட் தொழிலாளர் சட்டத்தின் கட்டளை. அவையெல்லாம் லைன் வீடுகள். ஒரு சிறிய ஹால், ஒரு சிறிய அறை மற்றும் சமையல் அறை உள்ள தகரம் அல்லது ஓடுகள் பதித்த வீடுகள். நெல்லை, கோவை மாவட்டங்களிலிருந்து தங்களது ஓலை பொந்துகளில் இருந்து வயிற்றுப் பிழைப்பிற்குப் புலம் பெயர்ந்த பாட்டாளிக் குடும்பங்களுக்கு, அவ்வீடுகளே மாளிகைகள் ஆயின.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டி. அவரது மனைவி சின்ன பார்வதி. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வீடு "இ16' இலக்கமிட்டது. 1993 இல் ஓய்வு பெற்றார் துரைபாண்டி; 1995 இல் ஓய்வு பெற்றார் சின்ன பார்வதி. ஆனால், அதே எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தார். அவர்களது ஒரே மகள் சண்முகத்தாய். தனக்குத் திருமணம் வேண்டாமென்றும், தனது வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வதே தனது முழுகடமை என்றும் எண்ணிய அந்தத் தியாக உருவத்திற்கு ஒரு சோதனை வந்தது.

அவர் வேலை பார்த்த பென்காம் எஸ்டேட் நிர்வாகம், அவரது வீட்டைக் காலி செய்து வேறொரு வீட்டின் ஒரு பகுதியில் குடியிருக்க உத்தரவு போட்டது. தோட்டத் தொழிலாளர் சட்டத்தைக் காட்டி, திருமணமாகாத பெண்களுக்கு வீட்டின் ஒரு பகுதியில் தான் இடம் ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டது. மாநில அரசின் தோட்ட ஆய்வாளரும் கை விரித்து விட்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சண்முகத்தாய். திருமணமாகாத ஆண் தொழிலாளி பெற்றோருடன் இருந்தால் முழு வீடு. ஆனால், திருமணமாகாத பெண் தொழிலாளி பெற்றோருடன் இருந்தால் அரை வீடு என்ற மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்டார்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் பெண் என்ற ஒரே காரணத்தால், எந்த சட்டம் பாரபட்சம் காட்ட முடியாது என்ற அடிப்படையில் அந்த வழக்குத் தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அந்தச் சட்டம் சரியானதே என்று வாதாடியது, விந்தையிலும் விந்தை! தவமாய் தவமிருந்து தன்னைப் பெற்ற வயதான தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றும் பொறுப்பு ஒரு பெண்ணுக்கு மட்டும் கிடையாதா என்று வாதாடினார் சண்முகத்தாய். பல கட்டங்களில் நிர்வாகம் அவர் வாங்கிய இடைக்காலத் தடை உத்தரவை உடைக்க, "டிவிஷன் பெஞ்'சில் அப்பீல் செய்து தோல்வி கண்டது. 1996 இல் தொடர்ந்த அவ்வழக்கிற்கு 2005 இல் இறுதித் தீர்ப்பு வந்தது.

1951 இல் நாடாளுமன்றம் இயற்றிய தோட்டத் தொழிலாளர் சட்டத்தில், மணமாகாத பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சென்னை உயர் நீதிமன்றம் களைந்தெறிந்தது. மணமாகாத ஆண் தொழிலாளிக்குரிய எல்லா சலுகைகளும், உரிமைகளும் மணமாகாத பெண் தொழிலாளிக்கும் உண்டு என்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. பத்தாண்டுகள் உருக்கு போன்ற உறுதியுடன் போராடிய தலித் தோழியர் சண்முகத்தாய், உண்மையில் தவமாய் தவமிருந்து பெறப்பட்டவர்தான்.
Pin It