கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Periyar

அய்க்கோர்ட் நீதிப்போக்கே இவ்வாறு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற அடிப்படையே தப்பாக இருப்பதுதான். இந்த நீதிபதிகள் எல்லாம் யார்? அத்தனை பேரும் வக்கீலாக இருந்து, வக்கீல் தொழிலில் பயிற்சி பெற்றுத் தேறிவந்தவர்கள். வக்கீல் வேலை என்பது என்ன? பொய்யை மெய்யாக்கி, மெய்யைப் பொய்யாக்கி, பணம் கொடுத்தவனுக்கு அனுகூலமாகத் தனது மனசாட்சி அறியப் பித்தலாட்டமாக வாழ்க்கை நடத்துவதும், பணம், பெருமை, கெட்டிக்காரத்தனம் மூலம் சம்பாதிப்பதும்தானே வக்கீல் வேலை என்பது? அதில் தேர்ச்சி பெற்றவர்தானே ஜட்ஜ் ஆகிறார்.

எவனாவது நீதிமான், நேர்மைவான், அநியாயத்துக்கு - பொய்க்கு - பித்தலாட்டத்திற்கு பயப்படுகிறவர் இவர்களில் யாராவது ஜட்ஜாக இருந்தால்தானே உண்மை நீதி கிடைக்கும்? ஆனால், இங்கே இந்நிலையோடு கூடவே பார்ப்பான் கிட்டேயே எல்லா ஆதிக்கமும் இருந்து வருகின்றன. வக்கீலாக இருந்துதான் சப்மாஜிஸ்திரேட், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜு, அய்கோர்ட் ஜட்ஜு, சீப் ஜட்ஜு என்று வருகிறார்கள். காசு கொடுத்தவர்களுக்காக வாதாடி மனசாட்சியைப் பழக்கிய வக்கீல்கள் இருந்தால், இவர்கள் நீதிபதியாய் இருந்தாலும் தங்கள் சுயகுணம் எப்படி மாறும்? ஆதலால்தான் ஜட்ஜ்கள் அடிப்படையே மோசம் என்று நான் சொல்கிறேன். சட்டத்தில் இவர்களை யோக்கியர்கள் - நீதிபதிகள் என்று கருத வேண்டும் என்று எழுதிக் கொண்டால், இவர்களிடம் எளிதில் மாற்றம் காண முடியுமா?

இன்றைக்கு நாட்டில் உள்ள அரசியல்வாதிகளால் நடத்தப் பெற்று வரும் இன்றைய சர்க்காருக்கு, உண்மையிலேயே நாணயமான கவலை, நாட்டு மக்கள் நலத்திலே அக்கறை இருக்குமானால், ஏதோ போக்கிரித்தனமாகக் கள்ளுக்கடை கூடாது, சூதாடக் கூடாது, தேவடியாள் கூடாது என்று சட்டம் போடுவதை விட்டுவிட்டு, இந்த வக்கீல்கள் ஸ்தாபனத்தை (Bar council) அல்லவா முதலாவது ஒழிக்க வேண்டும்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் உடைச்சதுக்காக ஓர் ஆள் என் மீது வழக்குப் போட்டார். அது முதலிலே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு. அதற்குப் பிறகு அப்பீலில் மேல்முறையீட்டில் சப்ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு, அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளி விட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு. அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 34 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதி விட்டானே!

இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது; அதனால் நீதி முறைக்கேட்டிற்கு இடம் இருக்கிறது. காரணம், நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

இந்த நாட்டுக்கு (தமிழகத்துக்கு) நீதிபதிகளாக இருப்பவர்களை, எதற்காக டெல்லியில் இருக்கிற ‘பிரசிடெண்டு' நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்? நாம் எதற்காக டெல்லிக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? பொதுவான பாதுகாப்பு, படை - அதுக்காக அவருக்கு அதிகாரம் என்றாலாவது ஓரளவு அர்த்தம் இருக்க முடியும். இந்த அதிகாரங்களை அங்கே கொடுத்துவிட்டு, நாம் பார்ப்பானிடம் சிக்கிக் கொண்டு எதற்காக அவஸ்தைப்பட வேணும்? ரொம்பக் கஷ்டப்பட்டுப் பெரிய கிளர்ச்சி பண்ணினால்தானே, நாம் இதிலிருந்து விடுபட முடியும்.

ஓர் அய்க்கோர்ட் ஜட்ஜ் என்றால், அவர் தீர்ப்பு எழுதுவதன் மூலம்தான் நம்மவர்களுக்குக் கேடு விளைவிக்க முடியும் என்பது அல்ல; இன்னும் பல வழிகளில் செய்ய முடியும். கீழே இருக்கிற நீதித் துறையில் (Subordinate Judges) உள்ள அத்தனை அதிகாரிகள், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், சப்மாஜிஸ்திரேட் முதலிய பல உத்தியோகத்திலுள்ளவர்களின் வேலையைப் பற்றி விமர்சனம் செய்து தூக்கியும் விடலாம் - கீழே அழுத்தியும் விடமுடியும். தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக்கட்டி விடுவதற்கு முழுவாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஜட்ஜுக்கும் ஒவ்வொரு ஜில்லா என்று பிரித்துக் கொடுத்து, அந்த ஜில்லாவில் உள்ள நீதித் துறை அதிகாரிகளின் குடுமிகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பான் கையில் தமிழன் குடுமி சிக்கினால் அவ்வளவு தான். அவன் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட முடியும்.

பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இப்போது நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தின் ஓர் அம்சம்தான் இந்த நிகழ்ச்சிகள் என்பதை, நம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி இருந்தபோதிலும், நாம் இந்த மாதிரி நீதிப்போக்கின் கொடுமையைக் கண்டிக்காமல் இருந்துவிட முடியாது. ஆகவே விளைவு என்னவானாலும் சந்தோஷத்தோடு அதை ஏற்பது என்ற முடிவோடு, இந்தக் கேட்டைக் கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும்.

23.10.1960 அன்று திருச்சியில் ஆற்றிய உரை