எனது நெறி தூய்மையானது. உயர்ந்தோர், தாழ்ந்தோர்; உடையார், இல்லார் என்ற பாகுபாடு அதற்குக் கிடையாது. எனது அற ஆறு நல்ல நீரைப் போன்றது. அந்நீர், ஆண்டான் - அடிமை வேறுபாடின்றி அனைவரையும் தூய்மையாக்கும். எனது நெறி தீயைப் போன்றது. எல்லாக் கேடுகளையும் பெரியதானாலும் சரி, சிறியதானாலும் சரி, எரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆண் - பெண்; பெரியவர் - சிறியவர்; வலியோர் - எளியர் என்ற பாகுபாட்டுக்கு அதில் இடமே இல்லை. எனது நெறி அனைவரையும் சமமாகக் கருதுகிறது என்றார் புத்தர்.

Buddha
புத்தர் தாம் நிறுவிய சங்கம் இயங்க, எண்ணங்களின் தேரோட்டத்தில், நல்ல நடத்தையைக் கொண்டுதான் தன் சக்கரத்தின் ஆரக்கால்களை அமைத்தார். நீதி, நிதானம் என்ற ஒரே அளவில் அதை அமைத்தார். அமைதியை சக்கரத்தின் குடமாக்கி, அறிவுடைமை என்ற கட்டால் சக்கரத்திற்கு கட்டுப் போட்டார். வாய்மை என்ற அச்சை அக்குடத்திலே மாட்டினார். இவ்வாறாக அமைந்த அற ஆழியைத்தான் ஏறத்தாழ 50 ஆண்டுகள் உருட்டி சமுதாயத்தை அறிவு வழிக்கு - ஆக்க வழிக்கு - அமைதி வழிக்கு திசை திருப்பினார். மானுடத்தில் வீழ்த்தப்பட்ட மக்களின் பாடுகளைக் கருத்தில் கொண்டு, வெகுமக்களுக்குத் தொண்டு செய்ய முன் முயற்சியைத் தொடங்கியவர் புத்தரே ஆவார். மனித வரலாற்றில் ஒப்பீட்டு அளவில் சமூக நிறுவன அமைப்பு புத்தருக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதே இல்லை.

அனைத்து உயிர்களும், ஊர்களும் எனக்குச் சொந்தம். எனது அறநெறியை அனைவரிடமும் உபதேசம் செய்து, அதற்கு வெற்றி கிட்டும் வரை நான் இறக்க மாட்டேன் என்றே புத்தர் சூளுரைத்தார். தனது கொள்கைகளை மக்களிடம் நேரில் சென்று எடுத்துச் செல்ல தன் கால்களை மட்டுமே நம்பிய முதல் மனிதரும் கடைசி மனிதரும் அவரே. புத்தரைப் போல் நடந்தவர்கள் எவருமில்லை. என்னுடைய சங்கத்தில் ஆயிரக்கணக்கில் சமணாக்கள் (தொண்டர்கள்) உள்ளனர். அவர்களில் உயர்ந்து ததும்பியவர்களுமில்லை; தாழ்ந்து வறண்டவர்களுமில்லை என்றார் புத்தர். அமைப்பு குறித்த தரச் சான்றிதழை வேறெந்த அமைப்பும் வரலாற்றில் பெற்றதில்லை.

‘‘கடலுக்கு ஒரே தன்மையான குணம் உண்டு. அதுதான் உப்பு கரிப்பு. அதைப் போல என்னுடைய அறநெறிக்கும், அறவழி சங்கத்திற்கும் ஒரே குணம்தான் உண்டு. அதுதான் சிந்தித்துச் செயல்படும் குணம்'' என்றார் புத்தர். புத்தர், கூட்டுச் சிந்தனை - கூட்டுத் தலைமை - கூட்டுச் செயல்பாடு இவைகளையே முன்வைத்தார். தலைவர் என்பவர் மக்களிடையே இருந்து, மக்களுக்காக உருவாக வேண்டும். அத்தகைய தலைவரே மக்களோடு அய்க்கியப்படுவார்; மக்களுக்காகப் போராடுவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர்தான் தலைவர்; வரலாற்றை வழி நடத்துபவர் அவர்தான். மக்கள் வெறும் பார்வையாளர்களே என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, புத்தர் தன் சங்கத்தை நடத்தவில்லை. தனிமனிதராக ஒரு முடிவுக்கு, தீர்மானத்திற்கு வர முடியாது. உண்மையான நெறிகள் நீண்டு நிலைத்திருக்க முடியாது. தனி மனிதர் ஆளுகை மட்டுமே இருந்தால் பழைய பாதைக்கே மாறிவிடக் கூடும். எனவே, சமூக மாற்றத்திற்கு அனைவரும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும், ஒருவர் சிந்தனையை மற்றவர் பங்கிட்டுக் கொள்ளவும் வாய்ப்புக்கு இடமிருக்கும் என்றார் புத்தர்.

தலைவரால் எதுவும் முடியும், தலைவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும். அவர் சொல்வதை அப்படியே ஏற்று நடக்க வேண்டும். அதைப் பற்றிய விமர்சனம் செய்யக் கூடாது. ஏனென்றால், தலைவர் அறிவாளி. எப்படி ஓர் ஆண்டையின் ஆணையை ஓர் அடிமை ஏற்றுக்கொள்ளும் தகுதி பெற்றவரோ அது மாதிரி. இப்படியான தலைவர் - தொண்டர் உறவை புத்தர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புத்தர், தன் சங்கத்திற்கு வாரிசுகளை நியமிக்க மறுத்து விட்டார். தத்துவத்திற்கு தத்துவம்தான் வாரிசாக இருக்க முடியுமே தவிர, தலைவரோ தலைவரின் வழித்தோன்றல்களாக அறிவித்துக் கொண்டவர்களோ இருக்க முடியாது. ஒரு கொள்கை, தன்னுடைய சிறப்பில், மக்களுக்கு நலம் தரும் விதத்தில் நிலைபெற வேண்டுமேயொழிய, தலைவரின் விருப்பு வெறுப்பால், அதிகாரத்தால் அல்ல என்றார். ஒவ்வொரு முறையும் தன் தத்துவத்தை நிலைநிறுத்த அதை உருவாக்கியவர் என்ற முறையில் தன் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதைக்கூட புத்தர் கண்டித்தார்.

இவ்வுலகமே நமக்குரியது. இதில் தனி நபருக்கென ஒரு குழுவிற்கான ஏதுமில்லை. எதுவும் எவருக்குமானது. நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். இடையில் தனி மரியாதைக்கும், தனிச் சொத்துரிமைக்கும் எவருக்கும் இடமில்லை என்றார். புத்தர், தன் போதனைகளை குறைவற்றது என்று உரிமை கொண்டாடியதில்லை. அவர் உரிமை கொண்டாடியதெல்லாம் தான் புரிந்து கொண்ட வரையில், சகமனிதர்களுக்குப் புரிய வைத்த வரையில் விடுதலைக்கான உண்மையான தத்துவம் தன் கொள்கைகளே என்பதுதான்.

உயிர்கள் யாவும் இன்பத்தை விழைகின்றன; துன்பத்தை வெறுக்கின்றன என்பதை புத்தர் வலியுறுத்தினார். அரசின் நிபந்தனையானது, மக்கள் அனைவருக்கும் உரிய கவனிப்பும் பாதுகாப்புமே என்றார். அரசின் கடமை மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பளிப்பது அதன் தலையாய கடமை என்று வரையறுத்தார். நேர்மையான அரசு முறைமையும், அனைத்து மக்களின் நலவாழ்வும் ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும் என்றார்.

ஓர் உண்மையான நாட்டில் பசி தீர்க்கப்பட வேண்டும் என்பது, புத்தரின் முதல் வேண்டுகோள் ஆகும். பசித்திருக்கும் மனிதரிடத்தில் எவ்வித அறிவுரை யும் அளிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்த்தினார் புத்தர். அலவி என்னுமிடத்தில் ஒரு வறிய மனிதர் மிகுந்த பசியால் களைப்படைந்தபோதும், அவர் தம்ம போதனையை செவிமடுக்க வந்தார். புத்தர் அவருக்கு உணவளிக்கக் கூறி, அவர் பசி தணிந்த பின்னரே அவருக்கு தம்மத்தைப் போதித்தார். எந்த மனிதருக்கும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய நான்கு அடிப்படைத் தேவைகள் இன்றியமையாதவை என்று கோரிக்கை விடுத்த புத்தர் - உணவு உடலை வளர்க்க, உடை மானத்தைக் காக்க, இருப்பிடம் உடலைக் காக்க, மருத்துவம் நோயை விரட்ட என்றார். பசியே பெரும் பிணி; உடல் நலமே பெரும் வரவு என்பது புத்தரின் முதன்மையான முழக்கமாகும்.

பிணியுற்றோர் நன்கு கவனிக்கப்பட வேண்டும். பிணியுற்றோரைக் கவனித்துக் கொள்ளல் மிகவும் போற்றத்தக்கது - நற்செயல்களில் பெரியதெனக் கருதப்படுவதாகும். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் நெஞ்சில் நிறுத்தத்தக்க வண்ணம் புத்தர் உரைத்தார்: ‘‘எவரொருவர் பிணியுற்றோரைப் பேணுகிறாரோ அவரே என்னை மதிக்கிறவர் ஆவார்.'' புத்தர், சகமனிதர்களுக்குப் பயன்படும் மனிதர்களை சிறப்பான மனிதர்களாக அறிவிப்பு செய்தார். உணவளிப்பவர் எவரோ அவரையே மனிதத்திற்கு பலமளிப்பவராகவும், உடையளிப்பவர் எவரோ அவரையே மனிதத்திற்கு அழகளிப்பவராகவும், வீடளிப்பவர் எவரோ அவரையே அனைத்தும் அளிப்பவராகவும் வகைப்படுத்தினார். இந்த வகைப்பாடுகளின் நீட்சியாகவே ஆட்சியாளர்களை, அரசுகளை கருதினார்.

புத்தர் ஆட்சியாளர்களுக்குரிய பத்து நன்னெறிகளாக 1. ஈகை 2. ஒழுக்கம் 3. தியாகம் 4. நேர்மை 5. இரக்கம் 6. நன்னடத்தை 7. வெறுப்பின்மை 8. அகிம்சை 9. பொறையுடைமை 10. நட்புடைமை ஆகியவற்றைப் பொருத்தினார். அடிக்கடி முறையாகக் கூடிப் பேசுதலையும், ஒற்றுமையாய்க் கூடி, ஒற்றுமையாய் எழுந்து, ஒற்றுமையாய் செயல்படுதலையும், மூத்தோரின் அறிவுரைகளுக்கு தலை சாய்ப்பதையும், பெண்களை மதித்து நன்னெறி நடத்தைகள் கொள்வதையும், உண்மையான சமூக மனிதரை ஆதரிக்கவும், போற்றவும், பாதுகாக்கவும் கேட்டுக் கொண்டார்.

பேராசை, வெறுப்பு, தற்பெருமை ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட வன்முறையின் பாற்பட்ட போர், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஒரு நாடு குழப்பத்திற்காட்பட்டு விடாமல் கவனம் கொள்வது, ஆட்சியாளரின் தனிப் பெரும் கடமையாகும் என்றார். இழிவு, ஏழ்மை அதிகரிக்குமாயின் தாழ்த்துதல், திருடுதல் தோன்றிப் பரவும். ஆயுதச் சேகரிப்பு அதிகரிக்கும். மோதல்கள் நேரும். கொலைகள் நிகழும். பொய்கள் உரைக்கப்படும். சட்டமும் ஒழுங்கும் கெட்டு, மனித மதிப்புகள் குறைபட்டு விடும் என்று ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். புத்தர், நல்ல அரசுக்கானப் பரிந்துரைகளை வழங்கிய வண்ணமிருந்தார். ஆட்சியாளர் மக்களிடமிருந்தே அதிகாரம் பெறுகிறவராவார். மக்களின் ஒப்புதலின் பேரிலேயே ஆட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவது சிறப்பாகும். ஆட்சி புரிவதில் வழிகாட்டும் கொள்கையாயிருக்கத் தக்கது நேர்மையாகும் என்றார் புத்தர்.

ஒரு நாட்டின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அது ஆட்சியாளரைப் பொறுத்ததேயாகும் என்பது புத்தரின் முடிவு. ‘‘ஒரு நாட்டின் ஆட்சியாளர் நீதிமானாகவும், நல்லோராகவும் இருப்பாராயின், அமைச்சர்களும் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பர். அமைச்சர்கள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பின், உயர் அதிகாரிகள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் ஆவர். உயர் அதிகாரிகள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பின், தொடக்க நிலை அலுவலர்கள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் ஆவர் என்பது புத்தரின் கணிப்பாகும். ஆட்சியாளர்கள் கற்றோராகவும், அறிவுடையோராகவும், ஆற்றல் உடையோராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஈகையுடையோராய், கனிவாய்ப் பேசுவோ ராய், பயன்மிக்க செயலுடையோராய், நடுநிலையுடையோராய் இருக்க வேண்டும் என்பது புத்தரின் விருப்பமாகும்.

ஆட்சியாளர் ஊழலுடையவராய் இருப்பின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழலுடையவர் ஆவர். மக்கள் வன்முறையாளராகவும், மூர்க்கர்களாகவும் ஆகி நாடு சீரழியும் என்பது, புத்தர் ஆட்சியாளருக்கு விடுத்த எச்சரிக்கையாகும். ஒரு நல்ல ஆட்சியாளர், ஒரு நல்ல அரசு மக்களுக்கு இகழப்படாதிருக்கும் இன்பத்தையும், பொருளாதார வெற்றியெனும் இன்பத்தையும் உடைமைகளை அனுபவிக்கும் இன்பத்தையும், கடனில்லாதிருக்கும் இன்பத்தையும் அளிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மதிப்பீட்டில் தான் புத்தர் ஆட்சியாளர்களை, அரசுகளை அங்கீகாரம் செய்பவராக இருந்தார்.

தொடரும்
Pin It