தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்' என்பது அடிப்படையான ஒரு நீதிநெறி. வாச்சாத்தி வழக்கைப் பொருத்தவரையில், 29.9.11 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்துள்ள நீதி ஓரளவே எனினும் வரவேற்கத்தக்கது. இடைப்பட்ட இந்த 19 ஆண்டு காலத்தில், வாச்சாத்தி மக்கள் நீதிகேட்டு முன்னெடுத்த போராட்டங்கள் எண்ணிலடங்கா.
வாச்சாத்தி வன்கொடுமையை வெளிஉலகத்திற்கு கொண்டுவந்தது முதல் இன்றுவரையிலும் அம்மக்களை பல்வேறு இடையூறுகள், இன்னல்கள், தடைகள் ஆகியவற்றைத் தகர்த்தெறிய முழு உறுதுணையாகவும் வழிகாட்டுதலாகவும் இருந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும், அதன் பொறுப்பாளர்களான டில்லிபாபு (தற்போதைய அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), பெ. சண்முகம், (தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்), அண்ணாமலை (அரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோரும் பாராட்டுதல்களுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.
1968இல் கீழ்வெண்மணியில் 44 தலித்துகளின் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), கீழ்வெண்மணியைவிட கூடுதலான, நீண்ட, ஒருங்கிணைந்த இடைவிடாத முயற்சிகளின் பலனே இந்தத் தீர்ப்பு. இதே ஊக்கமும், சட்டப் போராட்டப் பங்கேற்பும் இருந்திருந்தால், கீழ்வெண்மணிப் படுகொலைகளின் ஆணிவேரான கோபாலகிருஷ்ண (நாயுடு) சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் விடுதலை பெற்றிருந்திருக்க முடியாமல் போயிருக்கும்.
வாச்சாத்தியைப் பொருத்தவரை, இந்நாட்டில் ஒவ்வொரு வன்கொடுமை வழக்கும் எதிர்கொள்கிற அத்தனைத் தடைகளையும் சந்தித்திருக்கிறது. இதில் கூடுதலாக, கட்சி பேதமின்றி – அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தத்தம் ஆட்சிக் காலத்தின்போது குற்றவாளிகளைப் பாதுகாத்தும், பாதிக்கப்பட்டவர்களைப் பழித்தும் வந்திருக்கின்றன. ஆனால், இவர்களை பாதிக்கப்பட்ட மக்கள் கடும் நெஞ்சுரத்துடனும், விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டு, இன்று நீதியின் ஒரு துளியைப் பெற்றிருக்கிறார்கள்.
திட்டமிட்ட குற்றம் எதுவும் அக்குற்றத்தைத் தடுக்க வேண்டிய கடமையுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி நடைபெற வாய்ப்பே இல்லை. இதைப்புரிந்து கொள்ள எவ்விதப் புலனாய்வும் தேவையில்லை. வனப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்லவே. சந்தனக் கடத்தலை வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளையெல்லாம் கடந்து அரசியல்வாதிகளின் ஊக்கத்துடனும், அவர்களுக்குப் பங்கு வழங்கி மட்டுமே செய்யமுடியும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
எனினும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவார கிராமமான வாச்சாத்தி பழங்குடியின மக்கள் (மலையாளிகள் – மலையாள மொழி பேசுபவர்கள் அல்லர்; மலையில் வசிப்பவர்கள் என்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகின்றனர்) காடுகளில் கிடைக்கும் சிறு பொருட்களைச் சேகரித்து அதன்மூலம் வருவாய் ஈட்டுபவர்களே தவிர, சந்தனக் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களல்லர். ஒரு சிலர் சந்தனக் கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் கூலிக்காக சுமைதூக்கும் வேலையைச் செய்திருக்கலாம். சந்தனக் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டிருந்தால் – அவர்கள் ஒழுகும் குடிசையிலும், அடுத்த வேளைக் கஞ்சிக்காகவும் கூலி வேலை செய்ய வேண்டி இருந்திருக்காது என்ற அடிப்படையை உணர முடியும்.
ஆனால், சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டிய வனத்துறை, உண்மையான குற்றவாளிகளுடன் கூட்டணியில் சேர்ந்து கொண்டு, சட்டத்தின் கண்களை ஏமாற்ற ஒன்றுமறியா மக்களைப் பிடித்து "சந்தனக் கடத்தல்' என்று பொய்வழக்குப் போடுவது – கேள்விக்கப்பாற்பட்டு அரசு ஏற்றுக் கொள்ளும் விஷயமாகி விட்டது. இதைத் தான் 1992இல் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு செய்ய முனைந்தது.
1992ஆம் ஆண்டு சூன் மாதம் 20 அன்று, வனத்துறை அதிகாரிகள் சிலர் வாச்சாத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சந்தனக் கடத்தல் தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டனர். சிங்காரவேலு என்ற துணை வனக்காப்பாளர் தலைமையிலான அக்குழு, வரட்டாறு என்னும் ஆற்றுப்படுகையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டையைக் கைப்பற்றியபோது, அங்கே அருகிலிருந்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சின்னப்பெருமாள் என்பவரை விசாரிக்க, அவர் தனக்கொன்றும் தெரியாது என்று கூறியிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்து சின்ன ப்பெருமாளை, செல்வராஜ் என்ற வனத்துறை ஊழியர் கடுமையாகத் தாக்க, சின்னப்பெருமாளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்குமிடையேயான தள்ளுமுள்ளுவில் செல்வராஜிற்கு சிறுகாயம் (மருத்துவச் சான்றிதழின்படி, வலது பின்மண்டையில் 2து2து2 செ.மீ. அளவிலான கிழிந்த காயம் – நீதிமன்றத்தீர்ப்பு, பக்கம்: 109) ஏற்பட்டுள்ளது. எனினும், காயம்பட்ட செல்வராஜூக்கு முதலுதவி செய்த கிராம மக்கள், ஒரு மாட்டுவண்டியை ஏற்பாடு செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது நடந்ததும், மதிய வேளையில், 80 பெண் காவலர்கள் உள்ளிட்ட 300 வனத்துறை – காவல்துறையினர் சில வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேடுதல் வேட்டைக்கு வாச்சாத்தி வந்திறங்கியிருக்கின்றனர். கிராம மக்களில் ஒரு சிலர் மலைப்பகுதிகளில் ஓடிஓளிந்து கொண்டனர். மற்றவர்களைத் தடிகளால் கொடூரமாகத் தாக்கிய காவல் மற்றும் வனத்துறையினர், வீடுகளை உடைத்துத் திறந்து, பணத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன், இயன்றவரை குடிசைகளையும், வீடுகளையும், அவற்றிலிருந்த மற்ற பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
பின்னர், அப்படை கிராம மக்கள் அனைவரையும் ஆடுமாடுகளை விரட்டிக் குவிப்பதுபோல் அங்கிருந்த ஓர் ஆலமரத்தினடியில் திரளாக நிறுத்தியிருக்கிறது. கிராம மக்களிலிருந்து 18 இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்த வனத்துறையினர், கைப்பற்றப்பட்ட சந்தனக் கட்டைகளை வண்டியிலேற்ற வேண்டும் என்றுகூறி, அவர்களை வற்றிப்போன ஆற்றுப்படுகைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இத்துடன் நில்லாது, வாச்சாத்தியைச் சேர்ந்த 217 நபர்களை அரூரிலுள்ள வனச் சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த 217 நபர்களில் 94 பேர் பெண்கள்; 28 பேர் குழந்தைகள். இரவு முழுவதும் சட்டத்திற்குப் புறம்பாக காவலில் வைக்கப்பட்ட இம்மக்கள், அங்கும் கொடுந்தாக்குலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மறுநாள் 21.06.1992 அன்றும் வாச்சாத்தி வந்த கூட்டு நடவடிக்கைப் படை, சந்தனக் கட்டைகள் பறிமுதலைத் தொடர்ந்திருக்கிறது. அவர்களின் கூற்றுப்படி, 40 டன் அளவு சந்தனக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டாலும், ஒருவரும் அன்று கைது செய்யப்படவில்லை. மீண்டும் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கைப் படையினர் வீடுகளைச் சேதப்படுத்தியிருக்கின்றனர்; விலையுயர்ந்த பொருட்களையும், ஆடுகளையும் கவர்ந்து சென்றிருக்கின்றனர்.
ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டவர்களில் 76 பெண்கள் மீதும், 15 ஆண்கள் மீதும் "சந்தனக் கட்டைகளைப் பதுக்கிவைத்த குற்றம்' என்று இரு பொய்வழக்குகளும், மேலும் 14 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டக் குற்றப்பிரிவுகளின் கீழ் ஒரு பொய் வழக்கும் புனைந்து, அனைவரையும் சிறையிலடைத்தனர். இரண்டு மாதங்கள் கழித்து, 27.08.1992 அன்றுதான் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.
அரூர் காவல் நிலையத்தில் இந்த வன்கொடுமை குறித்து வாச்சாத்தி மக்கள் கொடுத்த புகார் ஏற்கப்படவில்லை. இக்கொடுமை குறித்து 1992 சூலையில் தகவலறிந்த தமிழ்நாடு பழங்குடியினர் நலச் சங்கத்தின் தலைவர் பாஷா ஜான், பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர், இக்கிராமத்திற்கு 14.07.1992 அன்று சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டு மனமுடைந்திருந்த
மக்களைச் சந்தித்து அவர்களைத் தேற்றி ஊக்கமளித்ததுடன், அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அக்குழுவினர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் அன்றே மனு அளித்தனர். பின்னர், 18.7.1992 அன்று சி.பி.எம்.இன் மாநிலச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ஏ. நல்லசிவன், அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவிடம் மனு ஒன்றை அளித்தார்.
தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு உரிய நீதி கிடைக்காது என்று வாச்சாத்தி மக்கள் முதலில் கருதியதுபோலவே, இச்செய்தி வெளிவந்ததும், தமிழக அரசு அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும், 300 குடும்பங்களாக வாழும் வாச்சாத்தி மக்கள் அனைவரும் சந்தனக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டனவென்றும், அப்போது வாச்சாத்தி மக்கள் வனத்துறை அதிகாரிகளைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், முதல்வரின் ஆட்சியில் சந்தனக் கடத்தல் தடுப்பில் வரலாறு படைக்கப்பட்டு வருகிறது என்றும், வாச்சாத்தி நடவடிக்கை அதனை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அடியென்றும், இவற்றைப் புரிந்து கொள்ளாமல், நல்லசிவன் விடுத்த அறிக்கை அடிப்படையற்றது என்றும் – அப்போதைய வனத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் நீண்ட அறிக்கையை வெளியிட்டு, இவ்வன்கொடுமையை மறைக்க முயன்றார்.
அரசே இந்நிலைப்பாட்டை எடுத்த பின்னர், காவல்துறை மட்டுமென்ன அதை மீறியா செயல்பட்டுவிடும்? அதுவும் தனது இழுத்தடிப்பு வேலையை தொடர்ந்தது. 26.07.1992 அன்றே தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனக்குக் கிடைக்கப்பெற்ற மனு குறித்து வாச்சாத்தி சென்று அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்ட போதும், ஒரு மாதத்திற்கு பின்னரே வருவாய் கோட்டாட்சியர் வாச்சாத்தி சென்றிருக்கிறார். 10.08.1992 அன்று அவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த அறிக்கையில், "பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு நம்பமுடியாததெனவும், வன, காவல்துறையினர் மீது பழிபோட கிராம மக்களே தங்கள் வீடுகளை சேதப்படுத்திக் கொண்டனர்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி, 22.9.1992 அன்றுதான் அரூர் காவல்நிலையம் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. அரசின் (ஆளுங்கட்சியின் என்று வாசிக்கவும்) அனைத்து ஆணைகளையும் (சட்டபூர்வமற்ற ஆணைகள் முதலில்) செயல்படுத்தும் துறைகளான காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியோர் மீது புகார் என்றால், எந்த அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்? இந்த எழுதப்படாத விதியின்படி, வாச்சாத்தி வன்கொடுமைப் புகாரும் அதே நிலையை எதிர்கொண்டது.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை நடுவண் புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரி 30.07.1992 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனு, "அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்' என்றும், "இது பொது நல வழக்காக ஏற்கப்படத் தகுதியற்றதென்றும்' கூறி நிராகரிக்கப்பட்டது. 3.9.1992 அன்று நல்லசிவன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட்மனுவின் பேரில், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பவும், அம்மனுவை இயன்ற விரைவில் விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்கட்டமாக, வாச்சாத்தி கிராமத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் குழுவின் இயக்குநர், வாச்சாத்தி சென்று விசாரணை செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், 4.11.1992 அன்று இடைக்கால ஆணை வழங்கியது. இடைக்கால ஆணையின்படி, பின்னர் 15 புதிய வீடுகளும் அரசின் தொகுப்பு வீடுகள் திட்டத்தின்படி கட்டித் தரப்பட்டன.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால ஆணைப்படி, வாச்சாத்தி சென்று மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்ட பி.பானுமதி, தனது அறிக்கையில், வாச்சாத்தி மக்கள் புகாரில் தெரிவித்துள்ள வன்கொடுமை உண்மையிலேயே நடைபெற்றுள்ளது என்றும், அவர்களது ஏழ்மையான வாழ்நிலையைக் கொண்டே அவர்கள் சந்தனக் கடத்தல்காரர்கள் அல்லவென்பதைத் தெரிந்து கொள்ளலாமென்றும், அவர்களது புகாரைப் பெற்றபின்பும் – மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் வாச்சாத்திக்கு ஒருமுறைகூட செல்லவில்லையென்றும், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அப்போதும் சிறையில் இருப்பதாகவும், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போதும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு, உண்மையை மூடிமறைத்து குற்றவாளிகளைக் (அரசு ஊழியர் என்பதாலும்) காப்பாற்ற முனையும் வகையில் அமைந்திருந்தது. மேலும், வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் புதுப்புது பதில் மனுவை அரசுத் தரப்பு தாக்கல் செய்து சம்பவத்தை மறுத்தது. இறுதியில், வழக்கின் சூழல் மற்றும் தன்மையை சீர்தூக்கிப் பார்த்த உயர்நீதிமன்றம், 24.02.1995 அன்று வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றல் செய்து ஆணையிட்டது.
இந்த ஆணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் சென்னை உயர்நீதிமன்றத்தால் 23.03.1995 அன்று, “இவ்வாறு ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று மாநில அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மாநில அரசுடனோ, மாநில காவல்துறையுடனோ தொடர்பற்ற சி.பி.அய்., இவ்வழக்கின் புலன் விசாரணையை செய்வது பொருத்தமாகவும் அவசியமாகவும் உள்ளது' 'எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் உண்மைக்கு அணைபோடும் முயற்சி, உச்சநீதிமன்றத்திலும் எடுபடாமல் போனது. 24.03.1995 அன்று தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
காலதாமதமாகத் தொடங்கிய சி.பி.அய்.யின் புலன்விசாரணை நேர்மையாக இருந்தாலும்கூட, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மாநில அரசின் அதிகாரிகள் அதிலும் சிலர் உயர்ந்த பதவிலியிருப்பவர்கள் என்ற காரணத்தால், மாநில அரசு எந்திரம் நான்கு முறை தடை மேல் தடைகளை முன்னிறுத்தியது. ஒரு குற்றவியல் வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு நடத்தக்கூட சி.பி.அய்.க்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை. பின்னர் சி.பி.அய். புலன்விசாரணை அதிகாரியான எஸ்.ஜெகந்நாதன், துணைக் காவல் கண்காணிப்பாளரின் சீரிய முயற்சியால் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெறப்பட்டு, அடையாள அணிவகுப்பு உட்பட அனைத்தும் சிறப்பாக முடிவடைந்து 23.04.1996 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில், வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என மூன்று துறைகளையும் சேர்ந்த 269 அதிகாரிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 143, 147, 149, 323, 427, 201 மற்றும் 203 மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989இன் சட்டப்பிரிவுகள் 3(1)(திடிடிடி), 3(1)(டிடிடி), 3(1)(தி), 3(2)(டி), 3(2)(திடி), 3(2)(தி) மற்றும் பிரிவு 4 ஆகியவற்றின்படியும் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் நால்வர் இந்திய வனப்பணி (ஐஊகு) அதிகாரிகள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 244 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு 10.10.1996 அன்று விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
வழக்கு விசாரணையும் அவ்வளவு வேகமாக நடைபெற்றுவிடாதபடி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு உறுதி செய்துகொண்டது. அதிக எண்ணிக்கையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதால், ஒருவர் மாற்றி ஒருவர் நீதிமன்ற வருகையைத் தவிர்த்து வழக்கை ஆறப்போட்டு சாகடிக்க முயன்றனர். ஆனால், இவ்வழக்கு நிலுவையிலிருந்த போது குற்றம்சாட்டப்பட்ட 269 நபர்களில் 54 பேர் இறந்தே போயினர்.
இதற்கிடையில், இவ்வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989இன்படியான குற்றப்பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதால், இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 14இல் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கவேண்டும் என்றும், அரசுத் தரப்பு வழக்கை நடத்த இச்சட்டப்பிரிவு 15இல் கூறப்பட்டுள்ளபடி, சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் நியமிக்கப்பட்ட வேண்டுமென்றும் கோரி ஒரு நீதிப்பேராணை மனு 30.01.2001 அன்று, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவ்வாறே உயர் நீதிமன்றமும் 27.06.2002 அன்று ஆணையிட்டது.
அதேபோல், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி தீருதவி வழங்கக் கோரி 2002 ஏப்ரல் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதும், 2007ஆம் ஆண்டு சூலை மாதத்தில்தான் தீருதவியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. கூடுதல் எண்ணிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த காரணத்தால், அவர்களனைவரும் விசாரணையில் பங்கெடுக்க ஏதுவாக, புதிய நீதிமன்ற அறையும் கட்டி முடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கை காலதாமதம் செய்யும் தொடர்முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்களில் எழுவர் உயர் நீதிமன்றத்தை அணுகி, இவ்வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று மனு செய்தனர். வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதால், இம்மனு தேவையற்றது என்று கூறி 24.06.2011 அன்று மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கை இழுத்தடிக்க முயன்றதற்காக எழுவரும் தலா பத்தாயிரம் ரூபாய் செலவினமாகச் செலுத்த வேண்டுமென்றும், வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தி முடிக்க வேண்டுமென்றும் விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.
இத்தனைத் தடைகளுக்குப் பிறகே விசாரணை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை 29.09.2011 அன்று வழங்கியுள்ளது. ஒரு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்திருப்பது, இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்பதுதான் வாச்சாத்தி வழக்கின் தனிச்சிறப்பு. மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள் என்ற தனிச் சிறப்புக்கும் உரியது வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பு. அரசு, அரசு எந்திரங்கள் ஏற்படுத்திய தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளதற்கு, வழக்கின் உண்மைத் தன்மை மட்டும் காரணமல்ல; வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் இறுதிவரை உறுதியாக இருந்ததும்; இத்தனை ஆண்டுகாலமாக அவர்களுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டுதலையும் வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யும்தான் காரணம் என்பதை இங்கு குறிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.
எந்த ஒரு சமூகப் போராட்டமும் சட்டரீதியாக வழி நடத்தப்படவில்லை என்றால், அது விழலுக்கு இறைத்த நீராகவே அமைந்துவிடும். நியாயமான போராட்டமும் சட்டப்புறம்பானதொரு செயலாக மாறி, பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படும் ஆபத்துண்டு. வாச்சாத்தி வழக்கைப் பொருத்தவரையில், தொடர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரா. வைகை, மூத்த வழக்குரைஞர் என்.ஜி. ஆர்.பிரசாத், வழக்குரைஞர்கள், ஜி.சம்கிராஜ் மற்றும் இளங்கோ ஆகியோர் மிகச் சிறப்பான வகையில் பணியாற்றியுள்ளதால் – போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாகின்றனர். விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கை நடத்திய சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் கே. ஜெயபாலனும் சிறப்புக்குரியவரே.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற நபர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். பெரும்பாலானவர்களின் தண்டனைக்காலம் 3 ஆண்டுகளுக்கும் குறைவாக வழங்கப்பட்டிருப்பதால், வழமையான முறையில் விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை, உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே அடிப்படையில், 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளுக்கும்கூட தண்டனை நிறுத்தி வைக்கப்படும்.
விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நிலைக்கச் செய்ய வேண்டுமெனில், உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களை – பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் வாதிட வேண்டியது அவசியம். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995இன்படியே, இத்தகைய கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மேற்சொன்ன விதிகளில் ஒரு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் விரும்பினால், வன்கொடுமை வழக்கை நடத்த பாதிக்கப்பட்ட நபர் – பெயர்பெற்ற மூத்த வழக்குரைஞரை சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞராக நியமனம் செய்யலாம் என்று விதி 4(5) கூறுகிறது. இதனடிப்படையில், மேலவளவு, சென்னகரம்பட்டி, திண்ணியம் போன்ற வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் விரும்பிய பெயர் பெற்ற மூத்த வழக்குரைஞர்கள், சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வழக்குகளில் மேற்சொன்ன வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த விதியைப் பயன்படுத்தி, மேல்முறையீட்டு மனுக்களிலும் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞரை வாச்சாத்தி வழக்கிலும் நியமனம் செய்யக் கோர முடியும்.
இவ்வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றம்வரை சென்று குற்றவாளிகளுக்கு சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத்தர, அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒத்துழைப்பது மட்டுமே – வாச்சாத்தி போன்ற வன்கொடுமைகளின் முடிவுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.