கோயில்களைக் கட்டி காசு வசூல் செய்யும் நபர்கள் எப்போதும் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்தான் கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டடங்களேயாகும். ஆகவே, சாலைகளில் திடீரென்று ஆங்காங்கே முளைத்துள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத கோயில்களை இடிக்க உத்தரவிட்டனர்.

கோயில்களை இடித்தால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்யுமாறு அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்தனர்.

அந்த இரத்து உத்தரவை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கோயில்கள் இடம் பெறக் கூடாது என்றும், மத்திய அரசு, எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்தவிதமான வழிபாட்டுத் தலமும் இடம் பெறாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் யாராவது ஒருவர் கோயில் கட்டினால் அதை அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மத்திய அரசின் கருத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், மத்திய அரசு இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயலும் என்று உறுதியளித்தார்.

மீண்டும் அந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது சட்ட விரோத வழிபாட்டுத் தலங்களை இடித்து அகற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பு கூறினர். இந்தத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமல் மாநில அரசுகள் அலட்சியப்படுத்தி விட்டன என்று கூறி, சத்தீஸ்கர் மாநில அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபால் கவுடா மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு சாலைகளில், நடைபாதைகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமுல்படுத்தியது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவிற்கு மாநில அரசுகள் எவ்வித பதிலும் அளிக்க வில்லை.

இதனால், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப் போவதாக, நீதிபதிகள் 19.4.2016 அன்று அறிவித்தனர். அப்போது, சில மாநில அரசுகளின் வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று, ‘கடைசி வாய்ப்பாக, இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாநில தலைமைச் செயலாளர்கள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டி வரும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான எண்ணிக்கை யில் 77,450 சட்ட விரோத கோயில்கள் கட்டப்பட்டுள்ன. இராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 சட்டவிரோத கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேசத்தில் தான் ஒரே ஒரு கோயில்கூட சட்ட விரோதமாகக் கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் “மிகவும் நாகரிகமான மாநிலம்” என்று புகழ் வார்த்தைகளைக் கூறியது.

சட்ட விரோத கோயில்களை அகற்றாமலோ வேறு இடங்களுக்கு மாற்றாமலோ இருக்கும் மாநில அரசுகளின் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரியும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பது சாதாரணமானது தானா? இப்போது மீண்டும் இரண்டு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 2009இல் கூறியது போலவே மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மிகக் கடுமையாகவே இப்பொழுது எச்சரித்துள்ளனர். “நீதிபதிகளின் உத்தரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாப்பதற்கா? நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஏன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவில்லை என்று எலலா மாநில அரசுகளின் மாநில செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று எச்சரித்துள்ளனர். இது ஓர் உச்சகட்டமான நிலையே!

ஓரிடத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கத் தேவையில்லை என்ற நிலை உருவாகுமேயானால் நாட்டின் நான்கு தூண்களுள் ஒன்றான நீதித் துறையே செல்லரித்துப் போய் விட்டது என்ற நிலைதான் ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே, இந்த நிலையிலாவது பொது இடங்களில் ஆக்கிரமித்து சுயநலவாதிகளால் கட்டப்பட்டுள்ள எல்லா கோயில்களையும், நடைபாதை கோயில்களையும் இந்த நிலையிலாவது உச்சநீதிமன்ற ஆணைக் கிணங்க உடனடியாக அகற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

குறிப்பு: நடைபாதை கோயில்களை அகற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகம் முழுதும் போராட்டங்களை நடத்தியது.

(செய்தி அடுத்த வாரம்)

Pin It