கீற்றில் தேட...

thiruma arunthathi

ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமாவின் உரைக்கு மறுப்பு:

* அன்பு அண்ணன் திருமாவிற்கு வணக்கம். பாபாசாகேப் அம்பேட்கரின் மாணவர்களாக நாங்கள் இந்த மறுப்பினை எழுதக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் உரையில் குறிப்பிட்டது போல இது நமது அரசியலையும் மக்களையும் செழுமைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதுதானே ஒழிய சிறுமைப்படுத்துவதற்கு அல்ல.

* உரையின் ஆரம்பத்தில் கருத்துருவாக்குபவர்கள் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டு பின் மதமாற்றத்திற்கு எதிரான உங்களின் வாதங்களை வைப்பது தாங்களும் சில முன்முடிவுகளின் படியே இயங்குவதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

* மதமாற்றம் தலித் மக்களை எண்ணிக்கையில் சிறுமைப்படுத்தும் என்கின்றீர்கள். சரியே. உண்மையைச் சொல்வோமேயானால் நாங்கள் மதமாற்றம் மூலம் இந்து- தீண்டத்தகாதோர் என்று நாட்டில் யாருமே இல்லாமல் போவதை நோக்கி பயணிக்கின்றோம். அண்ணல் அம்பேட்கரின் கனவும் அதுவே. எண்ணிக்கையைக் குறைப்பது எங்கள் நோக்கமல்ல, மாறாக நாட்டில் தீண்டத்தகாதோர் என்று ஒருவர் கூட இல்லாமல் போவதே எங்கள் நோக்கம்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால் இந்து தலித்துகள் இந்து மதத்தில் சம உரிமையுடன் சுகபோகமாக வாழுகின்றனர் என்றோ அல்லது வாழ முடியும் என்றோ தான் எடுத்துக் கொள்ள இயலும்.

* நாங்கள் இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்களாக பிறந்துவிட்டோம். எங்கள் தவறல்ல. ஆனால் நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இறந்தோமேயானால் அது எங்கள் தவறு.

இந்து தலித்தாக இருந்துகொண்டு உங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டு போட்டுவிட்டு இறந்து போவதை விட தனிமனிதன் ஒருவனுக்கு தன் மீதுள்ள தீண்டாமையை அகற்றிக் கொள்வது தான் முக்கியான ஒன்றாகும்

* மதமாற்றம் மட்டுமே வழியல்ல என்று பாபாசாகேப் குறிப்பிட்டதாகக் கூறுகின்றீர்கள். வேறு என்ன வழி இருப்பதாக அவர் கூறினார் என்று தாங்கள் தான் கூற வேண்டும்?

அரசியல் அதிகாரம் தீண்டாமையிலிருந்து விடுதலை தராது என்பது சாதாரண உண்மையாகும். உத்திரப்பிரதேசத்தில் அன்னை மாயாவதி் முதல்வராக இருந்த போதே ஒரு எம்.எல்.ஏ அவரை சாதி சொல்லி விமர்சித்தார்.

மேலும் அரசியல் அதிகாரம் என்பது மாறக்கூடியது. இன்று அதிகாரம் இருக்கும். நாளை இருக்காது.

இசுலாமியர்கள் நாட்டை ஆண்டார்கள், பிறகு கிறித்துவர்கள் ஆண்டார்கள், ஆனால் இப்போது அவர்கள் இல்லை. நாடும் அரசும் அதிகாரமும் எப்படி வேண்டுமானாலும் போகும். தேசிய இனங்கள் உடைந்து துண்டாகலாம். சர்வாதிகாரம் வரலாம். மூன்றாம் உலகபோர் வரலாம். சோசலிசம் வரலாம். கம்யூனிசம் மலரலாம். ஆகவே இது மாறக்கூடியது.

மேலும் தீண்டாமை என்பதற்கும் அரசியல் அதிகாரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. திரு.மாஞ்சி முதல்வராக இருந்த போதே அவரை இந்துக்கள் இழிவு படுத்தினர். கோவிலில் அவர் நுழைந்தது தீட்டு என்றனர்.

ஆகவே தீண்டாமை என்பது அரசியல் ரீதியிலானது அல்ல என்பதும், அது (இந்து) மதரீதியிலானது என்பதும் அடிப்படையான புரிதல்.

இவ்வாறான சூழலில் அரசியல் அதிகாரத்துக்காக மதம் மாற வேண்டாம் என்பது அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை.

அரசியல் அதிகாரம் அனைத்தையும் திறக்கும் சாவி எனும் 'அண்ணல் அம்பேட்கர்' அதே கட்டுரையில் அதற்குக் கீழாகவே "ஆனால் சமூக பண்பாட்டு விடுதலை முக்கியமா அல்லது அரசியல் அதிகாரம் முக்கியமா? எனில் பண்பாட்டு சமூக விடுதலையே முக்கியம் என்று கூறுவேன்” என்று அவர் சொன்னதை நீங்களும் BSP கட்சிகாரர்கள் போலவே மறைத்துவிட்டீர்கள்.

* மதம் மாறுவதால் Merits  இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்கின்றீர்கள், ஆனால் மதம் மாற வேண்டாம் என்று 15 நிமிடம் விளக்குகின்றீர். !!

இது நியாயமா ? மதமாற்றம் ஏன் தேவை என்று அண்ணல் ஆயிரக்கணக்கான பக்கங்களில் விளக்கியுள்ளார், அதையெல்லாம் தாங்கள் சாதாரண தொண்டர்களுக்கும் அதே அளவு குறைந்தபட்சம் 15 நிமிடமாவது விளக்குவது தானே நியாயம் !

* RSS அமைப்பு 'மதமாற்றம் இந்துக்களை சிறுபான்மையாக மாற்றும் என்கிறார்கள். உங்கள் கருத்தும் அதுவே. சற்று மாற்றி அது இந்து தலித்துகளை சிறுபான்மையாக்கும் என்று கூறுகின்றீர்கள். நாங்கள் உங்களை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை!

*தமிழ்த் தேசியம் எல்லாம் சாதி தேசியமாகி ரொம்ப நாள் ஆகிறது. தமிழ்த் தேசியவழியில் சாதியை, தீண்டாமையை ஒழிக்க இயலாது என்பது பட்டவர்த்தனம்.

கோகுல்ராஜைக் கொன்ற யுவராஜ் தன் தலைவன் பிரபாகரன் என்கின்றார். !!

தமிழ்த் தேசியம் அமையுமானால் தலித் மக்களுக்காக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டமும், இட ஒதுக்கீடும் நீக்கப்பட்டுவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள இயலும்.

*மேலும் நாம் சாதி ஒழிப்பையும் தீண்டாமை ஒழிப்பையும் குழப்பி கொள்வதாகத் தெரிகிறது.

சாதி ஒழிப்பு என்பது நம் கையில் இல்லை. ஏனெனில் இந்துக்களை சாதியை கைவிடுங்கள் என்று நம்மால் கட்டளையிட முடியாது. நம்முடைய பிரச்சினை தீண்டாமை மட்டுமே.

தீண்டாமை ஒழிந்துவிட்டால் போதும்.

அதற்கு என்ன வழி?

அதற்கு அண்ணல் காட்டிய வழி பௌத்தம். நாம் இந்துக்களுக்கு எதிராக ஒரு மதத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

அது ஒன்றே வழி. ஒரு சாதி இந்து நம்மை வேற்று மதக்காரனாக பார்க்கும் நிலை வர வேண்டும். அது ஒன்றே வழி.

சாதி இந்துக்களுக்கு தங்களுக்கு கீழே யாரும் இந்து மதத்தில் இல்லை என்ற நிலை வரும் போது தீண்டாமை தானாக தகர்ந்து போகும்.

குள்ளமானவர்கள் யாரும் இல்லாவிடில் ஒருவன் தன்னை உயரமாகக் கருத இயலாது. சாதி இந்துக்கள் தங்களை உயர்வாகக் கருதுவது ஓர் ஒப்பீட்டு அலகு ஆகும் (comparative unit).

தங்களுக்கு கீழே தீண்டத்தகாதோர் என்று ஒரு கூட்டம் உள்ளது என்பதில் 'மட்டும்' தான் சாதி இந்துக்களின் உளவியல் பெருமை அடங்கியுள்ளது.

தீண்டத்தகாதோர் வெளியேறிவிட்டால் தீண்டாமையும்-சாதிக் கட்டமைப்பு வீழும். இதுவே அண்ணலின் கண்டுபிடிப்பு.

*நாம் கோகுல்ராஜையும் இளவரசனையும் தீண்டாமைக் கொடுமைகளையும் நினைத்து வருத்தப்பட்டுகொண்டே இருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. தீண்டாமை நாட்டில் இருந்தது, இருக்கிறது. அதை மீண்டும் மீண்டும் உள்ளது உள்ளது என்று கூறிக்கொண்டு இருப்பதைவிட அதற்கான இறுதித் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பதே முக்கியமாகும்.

பாபாசாகேப் கூறியது போல பூர்வீக பௌத்தர்களான நாம் நம் மதத்தை மீட்க வேண்டும். இந்துக்களுக்கு எதிராக நாம் பௌத்தத்தைக் கட்டி எழுப்பாமல் நாம் இந்து தீண்டாமையிலிருந்து விடுபட இயலாது. நம்மை அனைத்துவித மனப்பான்மைகளில் இருந்தும் மீட்பதும் அதுவே.

தொடர்ந்து தலித்தாக இருந்து கட்சிகளை வளர்ப்பதைவிட தனி ஒருவன் தீண்டாமையிலிருந்து விடுபடுவதே முக்கியம் என்ற சூழலில் தீண்டாமை குறித்து விரிவாக எப்போதும் பேசும் நீங்கள், அதை ஒழிப்பது குறித்து எப்போதும் பேசுவதில்லை என்பதை நாங்கள் நினைவுபடுத்த மீண்டும் கடமைப்பட்டுள்ளோம்.

தங்களின் குறிக்கோளின் படியே பார்த்தாலும் பண்பாட்டுப் புரட்சி இல்லாமல் அரசியலில் வெல்ல இயலாது என்பதே அண்ணலின் கருத்து. தீண்டத்தகாதோர் தங்களை விட 'தாழ்ந்தவர்கள்' என்று சாதி இந்துக்கள் தங்களின் 'மத போதனைகளின்' படியே, மத அடிப்படைகளின் படி கருதுகின்றனர். அதனாலேயே 15 வயது சிறுவர்களும் நம் மீது கல் எறிகின்றனர்.

இவ்வாறான இந்து சமூகத்தில் தலித் மக்கள் இந்துக்களால் மோசமாக நடத்தப்படுகின்றனர். தலித்துகளை அழுக்கானவர்களாக, இழிவானவர்களாக ஒரு வாந்தியுணர்வை உண்டாக்கும் நபர்களாக இந்துக்கள் தங்களுக்குள் கட்டமைத்துள்ளனர். அவர்களின் மத அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாம் கோருவதை அவர்கள் ஏற்கப்போவதில்லை. இதனையே இந்து மதத்தை புனரமைப்பது என் வேலையல்ல என்றார் அண்ணல்.

இந்தச் சூழலில் நாம் இந்து தலித்துகளாக இருந்து கொண்டு அந்த அடிப்படையிலேயே கட்சி நடத்துவது அதே அடையாளத்தை நம் மீது கொண்டு வந்து சேர்க்கிறது.

ஆகவே சாதாரண ஒரு அரசியல் அறிவு பெறாத தலித் தன்னை விசிகவிலோ, பி.எஸ்.பி் யிலோ இணைத்துக் கொள்ள ஐய்யப்படுகிறான். நம்முடைய அரசியல் கட்சிகள் தன் மீது இன்னும் தீண்டாமையைக் கொண்டு வந்து சேர்த்துவிடுமோ என்ற அச்சம் சாதாரண குடிமக்களிடம் வெகுவாக உள்ளது. அவன் திமுகவிலும் அதிமுகவிலும், பிஜேபியிலும் தன்னை நன்றாக உணர்கிறான்.

பொது நீரோட்ட அரசியல் 'இந்து தலித்' அடையாளத்துடன் சாத்தியமில்லை என்று நடைமுறையில் காணும் சாதாரண குடிமகன் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டு எளிமையாக பொது நீரோட்டத்தில் கலந்து விடுகிறான். சிக்கல் குறைவு.

இதனால் தான் நம்மால் நம் மக்களின் ஆதரவையே முழுமையாகப் பெற இயலவில்லை. தலித் அரசியல் கட்சிகள் தனக்கு முக்கியமல்ல என்றும் அவர்கள் கருதுவதும் இதனாலேயே. ஒரு கட்சியாக நம்மால் பொது நீரோட்டத்தில் கலக்க இயலாததும் தீண்டாமையினாலேயே.

ஆகவே நம் மீதான தீண்டாமையை அகற்றிக் கொள்ளாதவரை அனைத்தும் தோல்வியலேயே (futile) முடியும் என்று அண்ணல் அம்பேட்கர் சொல்லியுள்ளார். ஆகவே பௌத்தப் பண்பாட்டில் நம்மை இணைத்துக் கொண்டு அதன் வழியே அமைப்பாகத் திரளாதவரை நம்மால் ஒரு கட்டத்திற்கு பிறகு வளர இயலாது. உண்மையைச் சொல்வோமேயானால் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பொருளாதார அடிப்படையில் நம் மக்களில் பலருக்கும் ஏற்றதாக உள்ளது. நாம் அவர்களை பொருளை நோக்கிச் செல்வதை தவறு என்றும் சொல்ல இயலாது.

ஆகவே அதனையும் தாண்டி மக்கள் நம்மோடு பயணிக்க வேண்டுமாயின் அது மத-பண்பாட்டு அடிப்படையில் அவர்களை நம்மோடு இணைக்காமல் முடியாது.

பௌத்தம் என்பது நமக்கு தேர்தல் அரசியலில் இருநிலைகளில் உதவக்கூடியது

1. பட்டியல் சமூகத்தினரை ஒரே பண்பாட்டு அடையாளத்தி்ல் எந்தவித தீண்டாமை பயமும் இல்லாமல் இது ஒருங்கிணைக்கும். உட்சாதி முரண்களை நீக்கும்.

2. பொது நீரோட்டப் பதையில் நம்மை அனுமதிக்கும்.

இவ்விடத்தில் 'நாம் ஏன் பொது நீரோட்டத்தில் இணைய முடியவில்லை' என்பதற்கான பதிலும் தீண்டாமை தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதை ஏற்றதாகக் கருதுகிறேன். ஆகவே தீண்டாமையை அகற்றிக் கொள்ளாமல் நாம் பொது நீரோட்டத்தில் இணைய இயலாது.

இந்துக்களுக்கு எதிராக பௌத்தத்தைக் கட்டி எழுப்பாமல் தீண்டாமை மறையாது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விளையாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவரை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதே போலவே இந்துக்கள் நம்மைக் கருதுகின்றனர்.

இந்திய மக்கள் தொகை 30 கோடியாக இருந்த காலத்தில் பாபாசாகேப் பத்து லட்சம் மக்களைத் திரட்டி பௌத்தம் தழுவினார். புஷ்யமித்ர சுங்கன் காலத்தில் அழிக்கப்பட்ட நமது அடையாளத்தை மீட்டார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வரலாறு அவரை நினைவு கொள்ளும். அதே போலவே அண்ணன் திருமா.. நீங்களும் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்னும் 200 வருடங்களுக்குப் பிறகு நாம் M.P ஆக இருந்தோம், MLA வாக இருந்தோம் என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள்.

ஆகவே மக்கள் தொகை 120 கோடியாக இருக்கும் இந்தச் சூழலில் நீங்கள் ஒரு ஐம்பது லட்சம் பேரை பௌத்தப் பாதைக்கு அழைத்து வருவீர்களே ஆனால் வரலாற்றில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். தீண்டாமையும் மறையும், நம் மீது ஏதும் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டால் பௌத்த நாடுகளில் இருந்து கண்டனக் குரல்கள் வரும். சமூக சம மதிப்பு கிடைக்கும். எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தலித் மக்கள் நம்மை நன்றியோடு நினைவு கூறுவார்கள்.

மகாராஷ்டிராவில் பௌத்தம் ஏற்ற மகர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் என்று அப்பாவித்தனமாக சிலர் வினவி வருகின்றனர். அவர்கள் யாரும் அங்கு என்ன மாற்றம் நடந்துள்ளது என்பதை எட்டிக் கூட பார்த்திராதவர்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல இயலும். பௌத்தம் ஏற்று அண்ணலின் வழியில் நடைபோடும் லட்சக்கணக்கான அவர்கள் தங்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிக உயரத்தை அடைந்துள்ளனர்.

இன்று பாபாசாகேப்பை ஐ.நா மன்றத்தில் கொண்டாட வைத்ததும் அவர்களே. பொருளாதாரம், கல்வி என்று உலக பௌத்தர்களோடு் இணைந்து அவர்கள் பல உயரத்தை அடைந்ததை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

தீண்டாமை என்பது இந்துக்களின் வெறும் மனவிளையாட்டு. (Mind game) அது வெறும் கருத்து முதல்வாதம். அதனை அதே வழியில் பௌத்தம் எனும் கருத்தைக் கொண்டு தான் வீழ்த்த இயலும். பலரும் தீண்டாமையை பொருள்முதல்வாதமாகப் பார்ப்பது தான் குழப்பத்தைத் தருகிறது.

இவற்றை எல்லாம் புறக்கணித்து உங்களோடு் இருக்கும் சிலர் பௌத்தம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு பெரியாரையும் எதிர்த்துக் கொண்டு் நேரடியாக இந்துத்துவத்திற்கு ஆதரவாக செயல்படுவதை நீங்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.

RSS சேரிகளில் நுழைய வல்லூறு போல காத்திருக்கிறது. ஏற்கனவே தமிழின் பெயரில் உள் நுழைந்த அவர்கள் பள்ளர் – பறையர் - அருந்ததியினரை மூன்று துண்டாக உடைத்திருப்பதை காண்கிறோம். நாம் இந்து - தலித்தாக இருப்போம் என்ற உங்களின் நிலைப்பாடு அவர்களுக்கு சேரிகளில் அவர்களின் கொடியை நட ஏதுவாக அமையும். நாங்கள் இந்து தலித் ஆதரவாளர்கள் என்று அவர்கள் கூறுவது இனி அவர்களுக்கு எளிது.

ஆகவே அண்ணா ,

- தீண்டாமையிலுருந்து விடுதலை

- பௌத்த பண்பாட்டு அமைப்பாக ஒற்றுமை

- அரசியல் அதிகாரம்

என்று நாம் பாபாசாகேபின் வழியில் நடைபோடுவோம். அன்னை மாயாவதியாக அல்லாமல் கன்ஷிராம் ஐயாவாக உங்களைக் காணுவதில் தான் நாங்கள் பெருமையடைவோம். இந்து தலித்தாக இருந்தாலும் நாம் இந்து சிறுபான்மையினரே. ஏன் ஒரு இந்து தலித் விசிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் நாம் 'இந்து தலித் அடிப்படையிலான கட்சி்' என்ற பதிலை யாரும் ஏற்க மாட்டார்கள். ஏனெனில் அதில் மேற்சொன்னவாறு தீண்டாமை கலந்துள்ளது. பௌத்த பண்பாட்டு மட்டுமே தலித்துகளை மொழி, உட்சாதிப் பிரிவினைகள் கடந்து உலக பௌத்தர்களோடு் ஒன்றிணைத்து நமக்கு சம மதிப்பையும் அரசியல் அதிகாரத்தையும் வழங்கும்.

நன்றிகளுடன்

-அண்ணனின் தம்பிகளாக

டாக்டர் சட்வா சாக்யா

டாக்டர்.முத்தமிழ்செல்வன் நாகா