கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு

முழுக்க முழுக்கக் கற்பனை அடிப்படையில் எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதாவது கற்பனைக் கதைகளை எழுதுபவருக்கும், திரைப்படமாக எடுப்பவருக்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதையைக் கையாள்பவருக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரம் உண்டு. அதாவது அவர் விரும்பினால் கதையை அவர் விரும்பும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்கள், திரைக்கதையை உருவாக்குபவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஒரு உண்மைக் கதையை அதை அப்படியே சொன்னால் சுவைகரமாக இல்லாமல் அலுப்புத் தட்டும். அதனைத் தவிர்ப்பதற்காக அக்கதையைச் சொல்லும் விதத்திலேயே அதைச் சுவைகரமாக்க வேண்டும். அவ்வாறு ஆக்கும் பொறுப்பும் சிரமமும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்களுக்கும், திரைப்படம் எடுப்பவர்களுக்கும் உள்ளது.

அதிலும் ஏறக்குறைய சமகாலத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பாத்திரங்களை மையமாகக் கொண்டவையாக ஒருவர் உருவாக்கும் கலைப் படைப்பு இருக்கும் போது அவரது சுதந்திரம் இன்னும் குறுகலாகி விடும். அவருக்கு அவர் கையாளும் வரலாற்றுப் பாத்திரத்தின் வாழ்க்கையை ஒட்டி அவரது படைப்பைச் சுவாரஸ்யமாக்குவதற்காகச் சிலவற்றைப் புனைவது கூட அத்தனை எளிதானதாக இராது. கையாளப்படும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்த சில எதிர்மறை அம்சங்களும் மக்கள் மனதைவிட்டு அகன்றிருக்காது என்பதால் அவற்றில் சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுவதும் கூடப் பல சமயங்களில் சிரமமாகிவிடும். இந்நிலையில் ஒருவகை ஆவணத் தன்மை அத்தகைய படத்திற்குப் பெரும்பாலும் வந்துவிடும்.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நே­னல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரே­ன் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் சமூக நீதி அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை அதுவும் சமகால வரலாற்றுப் பாத்திரத்தை அதாவது டாக்டர்.பி.ஆர். அம்பேத்காரை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜாப்பர் பட்டேல் அதனை இயக்கியுள்ளார். பென் கிங்ஸ்லியை காந்தியாக வைத்து அட்டன் பரோ எடுத்த திரைப்படத்திற்கும் கூட இதே சிக்கல்கள் இருந்தன. ஆனால் காந்தி தலைமையேற்ற பின் காங்கிரஸ் நடத்திய அத்தனை போராட்டங்களையும் தேசிய நிகழ்வுகளையும் அக்கதையில் இடம் பெறச் செய்ய முடிந்ததால்,ஆவணத் தன்மையின்றி அக்கதையை இயக்குனரால் சொல்ல முடிந்தது. மாறாக அம்பேத்காரின் போராட்டம் சமூகத்தின் ஒரு பகுதியினரை மட்டும் மையப் படுத்தியிருந்ததால் அதனை காந்தி திரைப்படம் அளவிற்கு ஆவணத்தன்மையின்றி எடுப்பது யதார்த்தமாகவே மிகவும் சிரமமான காரியம். எனவே படத்தில் ஆவணத் தன்மை வந்துள்ளதை இயக்குனரால் முற்றாகத் தடுக்க முடியவில்லை.

முக்கியப் போக்குடன் ஒத்துப் போகாத்தன்மை

மேலும் டாக்டர்.அம்பேத்காரின் விடுதலைப் போராட்ட காலச் செயல்பாடுகள் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய போக்கோடு பல விச­யங்களில் ஒத்துப் போகாதவை. காந்தியடிகளின் விச யத்திலும் அவரது தலைமையோடு முழுவதும் ஒத்துப் போகாத போக்குகள் பல விடுதலைப் போரில் இருந்தன. சமரசமற்றுப் போராடும் தன்மை வாய்ந்த நேதாஜி, பகத்சிங் போன்றவர்களின் விடுதலை குறித்த பார்வைகளும், கண்ணோட்டங்களும் காந்தியடிகளின் அணுகுமுறையிலிருந்து பெரிதும் வேறுபட்டவைகளாக அவரது காலத்திலும் இருந்தன. இருந்த போதும் காந்தியடிகளின் தலைமையிலிருந்த காங்கிரஸ் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் நேதாஜி, பகத்சிங் ஆகியோரின் ஆதரவாளர்கள் முழுமையாகப் பங்கேற்றனர். அப்போராட்டங்கள் பலவீனப்பட அத்தலைவர்கள் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. அதனால் அட்டன் பரோவுக்குக் காந்தியடிகள் குறித்துப் படம் எடுப்பதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக காந்தியடிகள் அறிவித்த வெள்ளையரை எதிர்த்த போராட்டம் எதிலும் டாக்டர் அம்பேத்கார் பங்கேற்கவில்லை. மாறாக அப்போராட்டங்களின் போது வெள்ளை ஆட்சிக்கு ஆதரவான நிலைபாட்டினையும் எடுத்தார். இதுபோன்ற வி­சயங்களைச் சித்தரிக்கும் போது படம் எடுப்பவர் மிகவும் எச்சரிக்கையுடன் எதைச் சொல்வது, எதைச் சொல்லாதிருப்பது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் டாக்டர் அம்பேத்காரின் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் அதே சமயத்தில் காந்தியடிகள் தலைமையையும் தரம் தாழ்த்தி விடக்கூடாது என்ற எச்சரிக்கையும் இயக்குனருக்குக் கட்டாயம் இருந்திருக்கும். இவை அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சரியாகக் கையாண்டு படத்தை ஜாபர் பட்டேல் இயக்கியுள்ளார்.

அதாவது வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் இந்திய சமூகத்தின் அனைத்துப் பகுதியினரையும் ஒருமுகப்படுத்தி அதனை அதிசக்தி வாய்ந்ததாக ஆக்க காந்தியடிகள் பல முயற்சிகளை மேற்கொண்டார்; அதனால் பழமை வாதிகள், நவீன சிந்தனை கொண்டவர்கள் என அனைவரையும் அவர் ஒருங்கு திரட்டினார் அது சீர்குலைவின்றிப் இப்படத்தில் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

அதாவது டாக்டர் அம்பேத்கார் வாழ்ந்த காலத்தில்

தலைவிரித்தாடிய வருணாசிரம தர்மப் பாகுபாடும் அதற்கு எதிராக அவர் எடுத்த போராட்டங்களும் படத்தில் மிக அதிகமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் வருணாசிரம தர்மத்தின் ஆதரவாளர்களான ஹிந்து மறுமலர்ச்சி வாதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களையும் உள்ளடக்க காந்தியடிகள் விரும்பினார். அதாவது அவர்களைப் பண்டித நேரு போன்ற மதச்சார்பற்ற நவீன சிந்தனைப் போக்கு கொண்டவர்களோடு ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லவும் காந்தியடிகள் முயன்றார். இதில் எழும் முரண்பாடு பல இடங்களில் கனகச்சிதமாக இயக்குனரால் சீர்குலைவின்றிக் கொண்டுவரப் பட்டுள்ளது.

பூசி மெழுகப் படவில்லை

அதே சமயத்தில் சமூக சீர்திருத்த வி­சயத்தில் வருணாசிரம தர்ம வாதிகளுடன் காந்தியடிகள் செய்த பிற்போக்குத் தனமான சமரசம் பூசி மெழுகப்படாமல் கொண்டுவரப் பட்டுள்ளது. அரசியல் விடுதலையைக் கருத்திற் கொள்ளாது சாதிய ஒடுக்கு முறைக்கு மட்டும் எதிராக நின்ற, அதை எப்படியேனும் சாதிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவினை எடுத்தபோது கூட அதில் சென்று கலந்து கொண்ட, வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அவரையும் அறியாமல் இடம் கொடுத்த டாக்டர் அம்பேத்காரின் நடவடிக்கைகளும் மழுப்பல் ஏதுமின்றிச் சரியாக முன் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளையரின் தந்திரத்தைப் பின்னர் உணர்ந்து சாதிய ஒடுக்கு முறையை ஒழிப்பதற்கு அவர்களை நம்பியும் பயனில்லை என்ற முடிவிற்கு டாக்டர் அம்பேத்கார் வருவதும் ஒருசில வசனங்கள் மூலம் படத்தில் உணர்த்தப் பட்டுள்ளது.

தீண்டாமை ஒழிப்பில் ஒற்றுமை

அதே சமயத்தில் தீண்டாமை ஒழிப்பு விச­யத்தில் வேறுபட்ட அணுகு முறைகளைக் கொண்டிருந்த போதும் கூட காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார் ஆகிய இரு வரலாற்றுப் பாத்திரங்களும் அதில் மிக உறுதியாக இருந்ததும் சரிவரச் சித்தரிக்கப் பட்டுள்ளது. அதாவது காந்தியடிகள் இவ்விச­யத்தில் காட்டிய அணுகுமுறை உள்ளார்ந்த பலவீனத்தைக் கொண்டிருந்தாலும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் உண்மையானது என்பது சீர்குலைவின்றி வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது அவரது பலவீனம் வருணாசிரம தர்மத்தை அழிக்காமல் வைத்துக் கொண்டே தார்மீக ரீதியிலான அறை கூவல்களை வருணாசிரம வாதிகளிடம் வைப்பதன் மூலம் தீண்டாமையைப் போக்க முனைந்தது தான். அத்துடன் வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் அவர் கடைப்பிடித்த அனைவரையும் வெள்ளை அரசிற்கு எதிராகத் திரட்டி நிறுத்த வேண்டும் என்ற கொள்கையை அம்பேத்கார் வி­சயத்திலும் காந்தியடிகள் கடைப்பிடித்ததும் சரியாகக் கொண்டுவரப் பட்டு அவரது கருத்துக்களோடு எத்தனை முரண்பாடுகள் கொண்டவராக அம்பேத்கார் இருந்த போதும் அவரையும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் விடுதலைக்கு முன்பு செயல்பட்டதும், விடுதலை பெற்றபின் பண்டித நேருவிற்கே உதிக்காத ஒரு யோசனை அவருக்கு உதித்து சட்ட அமைச்சராக அம்பேத்காரை நியமிக்கக் காந்தியடிகள் பரிந்துரைத்ததும் சரியாகக் கொண்டுவரப் பட்டுள்ளன.

சாதியச் சவுக்கடியினைக் குழந்தைப் பருவத்திலிருந்து டாக்டர் அம்பேத்கார் அனுபவித்த கொடுமை, வெள்ளையர் வழங்கிய கல்வியினை அனைத்து வகைகளிலும் முயன்று பெற்று அதன்மூலம் அக்கொடுமையைத் தனிமனித ரீதியாகவே அவர் எதிர்த்துப் போராட முயன்றது, சாதியக் கொடுமை மனதில் ஆழப் பதிந்து ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக அதை மட்டுமே எதிர்க்கத் தீர்மானித்தது, சாதியத்தை எதிர்த்துத் தன்னை நிலைநாட்ட கல்வியே சரியான உபகரணம் எனக் கருதியது, எந்தச் சூழ்நிலையிலும் படிப்பிலிருந்து தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்காவில் லாலா லஜபதிராய் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அழைத்ததையும் ஏற்றுக் கொள்ள மறுத்தது ஆகிய அனைத்துமே சரியான நியாயப் படுத்துதல்களுடன் திறம்படச் சித்தரிக்கப் பட்டுள்ளன.

படித்து முடித்து வந்து பதவிகள் பெற்ற நிலையிலும் கூடப் பணியிடங்களில் தலைவிரித்தாடிய சாதி வெறி, அதனை ஆரம்பத்தில் பொறுத்துக் கொண்டு புளுங்க மட்டும் செய்த அவர், பின்னர் ஆசிரியப் பொறுப்பேற்ற பின் துணிவுடன் அதனை எதிர்த்தது ஆகிய விச­யங்களையும் அதாவது எவ்வாறு படிப்படியாக இயக்கப் பாதையில் அவர் அடியெடுத்து வைத்தார் என்பதையும் அனைவருக்கும் புலப்படும்விதத்தில் இயக்குனர் நன்கு மெருகேற்றிக் கூறியுள்ளார்.

உணர்ந்து நடிக்கக் கூடியவர்களுக்கு முன்னணிப் பாத்திரங்களை வழங்கியுள்ளது படத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். அம்பேத்கார் பாத்திரமேற்று நடித்திருக்கும் மம்முட்டி ஏறக்குறைய அப்பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று கூறினால் அது மிகையாகாது. அரசு செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பொருட் செலவு குறித்துக் கவலையின்றி அமெரிக்காவில் அவர் கல்வி கற்ற கரோலினா மற்றும் லண்டன் நகர்களிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு நேரே சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு யதார்த்தமாக அவர் வாழ்ந்த காலத்தில் அந்நகரங்கள் எப்படியிருந்திருக்குமோ அப்படிக் கொண்டுவர முயன்றதோடு நம்மையும் அக்காலகட்டத்திற்கு மானசீகமாகக் கொண்டு செல்வதிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் வாழ்ந்த கால இந்திய நகரங்களும், சமஸ்தானங்களும் கூடக் கூடுமான வரை சரியாகக் காட்டப் பட்டிருக்கின்றன. மொத்தத்தில் விமர்சிப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டதொரு திரைப்படமே ஜாபர் பட்டேலின் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் அம்பேத்கார் .

வித்தியாசமான விமர்சனம்

எவ்வாறு கற்பனைக் கதைகளை மையமாக வைத்துப் படம் எடுப்பதற்கும், வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துப் படம் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டோ அவ்வாறு கற்பனைக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை விமர்சிப்பதற்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை விமர்சிப்பதற்கும் கூட அணுகு முறையில் வேறுபாடு உண்டு.

கற்பனைக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களை விமர்சிக்கையில் அவை யதார்த்தமாக எடுக்கப் பட்டுள்ளனவா, அவற்றின் பாத்திரங்கள் சமூகத்தில் நடமாடும் மக்கட் பிரிவினரின் மாதிரித் தன்மைகளைக் கொண்டவையாக உள்ளனவா, கதையைப் படமாக்கியிருக்கும் விதத்தில் அக்கதையின் கரு பார்ப்பவரிடையே ஒரு லயிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறதா சமூக ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ சமூகத்தில் நிலவும் அல்லது அதனை ஆட்டிப் படைக்கும் ஏதாவதொரு பிரச்னையை நயத்துடன் படம் உயர்த்திப் பிடிக்கிறதா என்பனவற்றை மையமாகக் கொண்டே விமர்சனங்கள் அமையும்.

ஆனால் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாகக் கொண்டவையாக திரைப்படங்கள் இருக்கும் போது அந்த வரலாற்றுப் பாத்திரங்கள் முன்வைத்த கருத்துக்கள் முன்னிலை பெறுகின்றன. அவை அப்பாத்திரங்கள் வாழ்ந்த காலத்தில் கொண்டிருந்ததைப் போன்ற சமூகப் பொருத்தத்தை இப்போதும் கொண்டுள்ளனவா, அதாவது தற்போதைய சமூகம் முன்னேற்றத் திசைவழியில் பயணிக்க அப்பாத்திரங்கள் கொண்டிருந்த கருத்துக்கள் அப்படியே பயன்படத் தக்கவையா என்ற கோணத்தில் பார்த்து முன்வைக்கப்படும் தன்மைகொண்ட விமர்சனங்களை வேண்டுகின்றன.

காலமாறுதல்

இப்படத்தின் ஓரிடத்தில் அம்பேத்கார் கேட்பார்: பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகச் சாதி மாறச் சம்மதிப்பார்களா என்று. அதாவது ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடுஅவர் அக்கேள்வியைக் கேட்பார். ஆனால் அவ்வாறு சாதி மாற அனுமதித்தால் பல பிராமணர்களும், பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களும் இட இதுக்கீடு காரணமாகச் சாதி மாறுவார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.

வரலாற்றைத் தனிநபர் உருவாக்குவதில்லை

பொதுவாக தனிநபர்கள் அவர்கள் எத்தனை உயர்ந்தவர்களாக, அறிவாளிகளாக, தத்துவ ஞானிகளாக இருந்தாலும் அவர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. ஒன்றுக்கொன்று நேர் எதிராகப் பிளவு பட்டிருக்கும் சமூகப் பிரிவுகளே அவற்றிற்கிடையிலான போராட்டங்கள் மூலம் வரலாற்றை உருவாக்குகின்றன. மனித குலத்தின் வரலாறு அவை உருவாக்கியுள்ள சமூக அமைப்புகளைச் சார்ந்ததே அன்றித் தனிநபர்கள் சார்ந்ததல்ல.

அத்தகைய அமைப்பு ரீதியான அடிப்படைத் தன்மை வாய்ந்த வரலாற்றுபூர்வ மாற்றங்களைச் சமூகத்தின் உற்பத்தி சக்திகளும் அவற்றின் வளர்ச்சிக்கு ஒரு சமயத்தில் உதவும் மற்றொரு சமயத்தில் குறுக்கே நிற்கும் உற்பத்தி உறவுகளும் உருவாக்குகின்றன. உற்பத்தி சக்திகள் எப்போதும் வளர்ந்து கொண்டே போகும் தன்மை வாய்ந்தவை. அவை அவற்றின் வளர்ச்சிக்கு உதவ வல்ல, தேவையான உற்பத்தி உறவுகளை வேண்டுகின்றன. இதில் தனி நபர்களுக்குப் பங்கே இல்லை என்று கூற முடியாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உதவத் தகுந்த உற்பத்தி உறவைக் கொண்டு வருவதிலும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும் உற்பத்தி உறவை மாற்றி அமைப்பதிலும் அவர்கள் ஆற்றும் பங்கினை அடிப்படையாக வைத்து அவர்கள் வரலாற்றில் வகிக்கும் பாத்திரங்கள் அமைகின்றன.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு உதவும் உற்பத்தி உறவுகளில் ஆதிக்கம் செலுத்த வல்லதாக இருக்கும் வர்க்கம் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிப் பாதுகாப்பதற்காக அதற்குகந்த மேல் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. அத்தகைய மேல்கட்டுமானங்களில் மிகமுக்கியமானது கலாச்சார மேல் கட்டுமானம். எடுத்துக்காட்டாக நிலவுடைமை சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம் நிலவுடைமை வர்க்கம். அது அதற்குகந்த மேல் கட்டுமானத்தைக் கலாச்சார அரங்கில் ஏற்படுத்துகிறது. அத்தகைய நிலவுடைமை, கலாச்சார அரங்கில் வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட சாதியக் கலாச்சாத்தை அதன்ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமாக வளர்க்கிறது.

காலகட்டம் அவர்களை உருவாக்கியது

ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி சமூகத்தின் தேவையை அடிப்படையாகக் கொண்ட நவீன எந்திரத் தொழிலுற்பத்தி முறைக்கு வழி திறந்துவிட்ட போது சமூத்தின் உற்பத்தி உறவு முதலாளி தொழிலாளி உற்பத்தி உறவாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உற்பத்தி உறவு அவ்வாறு மாறிய போதிலும் வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமைச் சாதிய உற்பத்தி உறவு உருவாக்கிய சாதியக் கலாச்சாரம் அதன் ஆதிக்கத்தை எளிதில் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

அந்த நிலையில் தான் சாதியத்திற்கு எதிரான போர் உக்கிரமடைவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் ஒட்டு மொத்தத்தில் ஜனநாயக மனிதாபிமானக் கலாச்சாரத்தை மறுமலர்ச்சி யுகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி, மதப் போக்குகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பாடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மகான் புலே, டாக்டர் அம்பேத்கார் போன்றவர்கள் சாதியத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை உக்கிரப்படுத்தினர். இவ்வாறு அந்தக் காலகட்டத்தின் தேவை உருவாக்கிய மாமனிதர்களே

அவர்கள். காலகட்டம் அவர்களை உருவாக்கியதே தவிர அவர்கள் காலகட்டத்தை உருவாக்கவில்லை.

அனுமதித்தால் சாதி மாற்றமும் நடக்கும்

அதன்பின் முதலாளித்துவ எந்திரத் தொழில் உற்பத்தி முறை பணம் இருந்தால் சமூகத்தின் அனைத்து அந்தஸ்தையும் பெற முடியும் என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அத்தகைய பண வழிபாட்டுச் சீர்கேடு சமூகத்தின் ஆதிக்கம் செலுத்தும் போக்காக மாறியது. அந்தப் பணத்தை ஈட்டுவதற்கு முதலீடு செய்வதற்கு வாய்ப்பு வசதி பெற்றிருந்த முதலாளிகள் பெரிய அளவில் அதனை ஈட்டினர். அவர்களைத் தவிர பிற அனைத்துப் பகுதியினருக்கும் வேலை வாய்ப்புகளே வாழ்க்கைத் தேவையைச் சந்திப்பதற்குத் தேவையான பணத்தினை ஈட்டுவதற்கு அடிப்படையாக இருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அந்த வாய்ப்பை அம்மக்களில் ஒரு பகுதியினருக்கு வழங்கியது.

இவ்வாறு சமூகத்தில் மாறியுள்ள சூழ்நிலையே முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக வேலை வாய்ப்புகள் சுருங்கியுள்ள இன்றைய நிலையில் மதம் மாறுவதற்கு இருப்பது போன்ற உரிமை சாதிவிட்டுச் சாதி மாறுவதற்கு வழங்கப்பட்டால் பிராமணர்களும், பிற்பட்ட வகுப்பினரும் கூட இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவராக மாறத் தயங்க மாட்டார்கள் என்ற சூழ் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ரெட்டிகள் கொண்டா ரெட்டி என்ற பெயரிலும், வேளாளரில் பலர் துளுவ வேளாளர் என்ற பெயரிலும், நாயக்கர்கள் காட்டு நாயக்கர்கள் என்ற பெயரிலும் சான்றிதழ் பெற்றுப் பணியமர்வது இன்று பரவலாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் இப்படிப்பட்ட போலிச் சான்றிதழ் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.

சீர்திருத்தவாத அடிப்படை

இன்றைய காலகட்டம் தோற்றுவித்துள்ள பிரச்னைகளிலிருந்தான சமூகத்தின் விடுதலை ஒரு புரட்சி மூலமான மாறுதல் மூலமாக மட்டுமே நிகழ முடியும். ஆனால் அடிப்படையில் டாக்டர் அம்பேத்காரின் போராட்டங்கள் சீர்திருத்தவாத அடிப்படைகளைக் கொண்டவையே தவிர சமூகத்தின் அடிப்படை மாற்றத்தைக் கோரும் புரட்சிகரப் போக்கினைக் கொண்டவையல்ல. புரட்சிகரப் போக்கு என்பது ஆளும் வர்க்கத்தின் அரசு எந்திரத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தில் வேறொரு அரசு எந்திரத்தை அதாவது நிர்வாகம், நீதி அமைப்பு அனைத்திலும் நிறுவுவது. அது தாழ்த்தப்பட்டவர் என்ற சமூகத்தின் ஒரு பகுதி மக்களுக்கு தனித் தொகுதிகளையும், இட ஒதுக்கீட்டையும் வேண்டுவது போன்றதல்ல.

அத்தகைய அடிப்படை மாற்றத்திற்காக சமூகத்தின் அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களும் ரஷ்ய மண்ணில் போராடிய போது ஆளும் வர்க்கத்தால் வன்முறை உழைக்கும் மக்கள் மீது. திணிக்கப்பட்டது. அந்த உழைக்கும் வர்க்கப் புரட்சியில் வன்முறை அதன்மேல் அவ்வாறு திணிக்கப்பட்டதே தவிர அது உழைக்கும் வர்க்கத்தால் விரும்பிக் கைக் கொள்ளப் பட்டதல்ல. அதைத் தான் டாக்டர் அம்பேத்கார் ரஷ்யப் புரட்சியை வழிநடத்திய மார்க்சியத் தத்துவத்தின் மீதான விமர்சனமாக அதாவது அது வன்முறையை வேண்டுவது என்ற விமர்சனமாக முன் வைத்தார்.

மதங்களின் பிற்போக்குத் தன்மை.

நிறுவனமயமாக்கப்பட்ட மதம் அது எந்த மதமாக இருந்தாலும் ஒரு வகைக் குருட்டுத் தனத்தையும், மத மதிப்புகளை நிரந்தரமாக்கும் வேலையையுமே செய்யக் கூடியது. மாறிக் கொண்டிருக்கும் சமூகச் சூழ்நிலைகளுக்கேற்ற மாற்றங்களைத் தேவை ஏற்படும் போதெல்லாம் மதங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தான் இருக்கும் மதங்களிலெல்லாம் உயர்ந்ததாகக் கருதி அம்பேத்கார் பல்லாயிரக் கணக்கான தனது ஆதரவாளர்களோடு தழுவிய புத்த மதமும் கூட இன்று இலங்கையில் இனவெறியைப் பிரநிதித்துவப் படுத்துவதாக ஆகியுள்ளது.

கருத்துக்களின் அடிப்படையில் காந்தி ஏற்றுக் கொண்டிருந்த இந்து மதம் அல்ல நடைமுறையில் இயங்கும் நிறுவனமய மாக்கப்பட்ட இந்து மதம். அதைப்போல் அம்பேத்கார் புத்தரின் கோட்பாடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த புத்த மதமும் நிறுவனமயமாக்கப்பட்டு நடைமுறையில் இயங்கி வரும் புத்த மதமல்ல.

காந்தியடிகள் தீண்டாமையை எதிர்த்தார். ஆனால் வருணாசிரம தர்மத்தை ஆதரித்தார். அவரது வருணாசிரம தர்மத்திற்கான ஆதரவு நிலையே இன்று ஆளும் வர்க்கங்கள் மக்களைப் பிளவு படுத்துவதற்காக அமைப்பு ரீதியாக வளர்த்து விடும் இன்றைய சாதியமாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பாசிஸப் போக்காக உருவாகியுள்ளது. இவ்விரு மாபெரும் தலைவர்களும் சமூகத்திற்கு மகத்தான வழங்கல்களைச் செய்திருந்தாலும் சமூக வளர்ச்சியையும் மாற்றங்களையும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியவில்லை .

அவ்வாறு விஞ்ஞான பூர்வமான சமூக மாற்றத்தை வலியுறுத்திய ஒரே தத்துவம் மாமேதை மார்க்ஸ் முன்வைத்த இயக்கவியல் பொருள் முதல் வாதத் தத்துவமே. அது முன்வைத்த கருத்துக்களே உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் குறித்த கருத்துக்கள். அது முன் வைத்ததே அடித்தளமும் மேல் கட்டுமானமும் குறித்த கருத்துக்கள். அது முன் வைத்ததே சமூகப் பொருத்தத்தை முற்றாக இழந்து இன்று சண்டையையும் சச்சரவையும் உருவாக்கும் மதம் குறித்த மதம் ஒரு அபினி என்ற கண்ணோட்டம்.

மாறுதல் என்பதே மாறாத விதி என்ற அடிப்படையில் மாற்றங்களை அங்கீகரிக்கும் அத்தத்துவத்தின் அம்சமே சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும் சுரண்டலும் இருக்கும் வரை அவற்றைப் போக்குவதற்காக நடக்கும் இயக்கங்களுக்கு வழிகாட்டும் ஓரே தத்துவமாக அதனை உயர்த்தியுள்ளது. டாக்டர் அம்பேத்காரின் கருத்துக்கள் அவர் முன் வைத்த விதத்திலேயே இன்றைய சமூகச் சூழ்நிலையை மாற்றுவதற்கு ஏற்றவையல்ல. என்றாலும் அவரது காலத்தில் நிலவிய பிறப்பால் உயர்வு, தாழ்வு பாராட்டுவது என்ற சமூக அநீதியை எதிர்த்துப் போராடுவதில் அவர் பிரதிபலித்த உணர்வும் உத்வேகமும் இன்றைய சமூக மாற்ற சக்திகளால் கைக் கொள்ளப்பட வேண்டியவையே. ஏனெனில் அவை இன்று நிலவும் முதலாளித்துவ வர்க்க ஆட்சி என்ற அநீதியை அகற்றுவதற்குப் பயன்பட வல்லவை.