டாக்டர் அசோக் போயர், நாக்பூரைச் சேர்ந்த மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர். ஆற்றல் மிக்க எழுத்தாளர். அவர், தீண்டத்தகாத "மகர்' சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அவருடைய மருத்துவ துறைத் தலைவர், அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்தே, பல்வேறு வழிகளில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, திறம்படச் செயலாற்ற முடியாத வகையில் தடுத்திருக்கிறார். இறுதியில், இரு மாதங்களுக்கு முன்பு அசோக் போயர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தமது உள்ளக் குறலை "தலித் வாய்ஸ்' (நவம்பர் 1530, 2005) இதழில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் தமிழாக்கமே இக்கட்டுரை.

Ashok Bhoyar
“நான் அழும் குழந்தையல்ல. சாதி இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. சாதியத்தை எப்படிக் கடப்பது, அதை எப்படி நிர்மூலமாக்குவது என்பதற்காகவே எழுதுகிறேன். இதற்கான விலையைக் கொடுக்க நான் தயாராகத்தான் இருந்தேன்'' இது போயன் வாக்குமூலம். அரசுப் பணியில் 15 ஆண்டு காலம் தான் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளை "துரோணாச்சாரியுடனான என்னுடைய மோதல்' என்ற தலைப்பில் விரிவான நூலாக்கியுள்ளார்.

தலித்துகள் உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையைக் கழிப்பது, சாதி இந்துக்களை பாதிப்பதில்லை. அதை அவர்கள் இன்னும் திறம்படச் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், ஒரு மாண்புமிக்க குடிமகனாக அரசுப் பணியிலோ, உயர் தொழில்நுட்பப் பணியிலோ அவர்களுக்கு இணையாகப் பணியாற்றுவதுதான் அவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்திற்கானப் போராட்டத்தை, இந்திய சாதிய சமூகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. இதற்கு, அசோக் போயன் அனுபவங்களே சான்று பகர்கின்றன.

உண்மையைச் சொல்வதோ, உண்மையைப் பற்றி எழுதுவதோ, மிகவும் கடினமான ஒன்று. இந்நிலையில் ஒரு தலித் எழுத்தாளன், இத்தகையதொரு கடினமான பணியை மேற்கொண்டு ஏன் சிக்கலில் சிக்கித் தவிக்க வேண்டும்? நமக்கென்று ஒரு நோக்கம் இருக்க வேண்டும்; அந்த நோக்கம் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில், எந்த ஒரு எழுத்தாளனும் தன்னுடைய பணியை, தன்னுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்து எழுத மாட்டான்.

ஒரு தலித் எழுத்தாளர், மற்ற எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டவராக இருக்க வேண்டும். எழுத வேண்டும் என்பதற்காக தலித் எழுத்தாளர் எழுதுவதில்லை. அவர் தனது சமூகத்திற்கான மக்கள் தொடர்பாளராகச் செயல்பட வேண்டும். அவர் தனது சமூகத்தின் சுமைதாங்கியாகத் திகழவேண்டும். அவர், ஒரு போர்க்குதிரையின் காப்புக் கவசமாக இயங்கிட வேண்டும். மேலும், தன் மக்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கி இழுத்துச் செல்லும் தொலைநோக்குச் சிந்தனையாளராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தலித் எழுத்தாளர், முதலில் ஓர் உண்மையான மனிதனாக இருக்க வேண்டும். மனிதத்தன்மையற்ற செயல்தான் அவனைப் பிரச்சனைக்குள்ளாக்குகிறது. அவன், மனிதத் தன்மையற்ற செயலுக்கு எதிராகப் போராடுகிறான். ஒரு பார்ப்பனராக இருந்தாலும், ஒரு தலித்தாக இருந்தாலும் தவறு செய்கின்ற யாரையும் அவன் விடமாட்டான். அவனுடைய எழுத்துகளில் எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லை. தலித்துகளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, அவன் பார்ப்பனர்களைத் தாக்குவதில்லை.

இதை எழுதும் நான், உண்மையைத் தேடி அலையும் ஒரு தலித் எழுத்தாளன். ஒரு தலித் எழுத்தாளன் எல்லாவற்றையும் அதன் தன்மையிலேயே பார்க்கிறான். அவனுள் கபிர் இருக்கிறார். அவர் ஒரு துறவி. அவர் அனைவருக்கும் (உலகச் சமூகத்திற்கு) சொந்தமானவர். அதே போல, அவர் யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உண்மையில், கபிர் யாருக்குச் சொந்தமானவர்? யாரும் அவரை சொந்தம் கொண்டாடவில்லை.

பார்ப்பனியத்தை நான் எதிர்ப்பதால், பார்ப்பனர்கள் என்னை எதிர்க்கிறார்கள். ஆனால், தலித்துகள் என் மீது அன்பு செலுத்துகிறார்களா? இன்னும் சொல்லப் போனால், நாக்பூல் உள்ள தலித் மருத்துவர்களே என்னை வெறுக்கிறார்கள். நான் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். ஒரு சமூக மனிதனாக வாழ விரும்பும் ஒருவனுக்கு, இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஒரு சமூக மனிதனுக்கு அரவணைப்புத் தேவை.ஆனால், ஒரு சமூக எழுத்தாளன் தன்னைக் கொல்லும் தனிமைப்படுத்துதலுக்கு ஏன் ஆளாக்கப்படுகிறான்?

ஒரு தலித் எழுத்தாளன், இந்த அநீதியான சமூகத்தைக் கண்டு வேதனை அடைகிறான். அவனைப் பொறுத்தவரை, வேறு எந்த வலியைக் காட்டிலும் இது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவனைப் பொறுத்தவரை, தன்னுடைய எழுத்துகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறான். பார்ப்பனர்கள் மாற வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அதே போல, தலித்துகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அவன், பார்ப்பனர்களிடையேயும், தலித்துகளிடையேயும் ஒருவிதப் புத்துணர்வை உருவாக்க எண்ணுகிறான். இது, இலக்கியத்தின் மூலம் சாத்தியம் என்று நம்புகிறான். இதுதான் அவனுடைய அடிப்படைக் கொள்கை.

Ashok Bhoyar
தன்னுடைய சொந்த தலித்துகளிடம் அவன் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறான். ஏனெனில், தலித்துகள்தான் இந்தச் சமூகத்தை மாற்றப் போகிறார்கள். தலித்துகள்தான் இந்த அநீதியான சமூகத்தை நீதியும் நேர்மையும் உள்ள சமூகமாக மாற்றப் போகிறார்கள்.

உண்மை கசப்பானது. அது, நம்முள் காயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஒரு தலித், தன்னுடைய சிந்தனையளவில் ஒரு குழந்தையைப் போல, தூய்மையாகவும் எளிமையாகவும் இருக்கிறான். அவனுடைய எழுத்துகள் காயப்படுத்தினால், அவனுடைய நோக்கங்கள் தெளிவானது என்று பொருள். இத்தகைய காயங்கள்தான் ஒரு மனிதனை உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறது. இது, மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. சமூகம் இந்த உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. தலித் எழுத்தாளனைப் பொறுத்தவரை, அவன் எழுதுவதில் தீராத வேட்கை கொள்கிறான். இத்தகைய உணர்வால் நான் பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன்; ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்திருக்கிறேன்; இப்பொழுது என்னுடைய அரசுப் பணியையும் இழந்திருக்கிறேன்.

ஒரு தலித், அதிகளவு உண்மைகளை எழுத எழுத, சமூகம் அதிக அளவு காயப்படுகிறது. இதை எழுதும் எழுத்தாளனும் அதே அளவிற்குக் காயப்படுகிறான். வரலாறு நெடுகிலும் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளைக் காண முடியும். உண்மையைத் தேடி அலையும் அனைவரும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல நேரங்களில், அவர்கள் தங்கள் வாழ்க்கை தற்கொண்டு எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். பார்ப்பனியத்தின் கொடூரப் பிடியிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்க, அவர்கள் தியாகிகளாக மாறி இருக்கிறார்கள். அவர்களுடைய தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது.

பார்ப்பனியத்திற்கு எதிரானப் போரில், நான் என் வேலையை இழந்தேன். குறிப்பாக, நான் மிக உயர்ந்த பதவியில் பணியாற்றும் நிலையில்தான் என் வேலையை இழந்தேன். நான் திரும்பிப் பார்க்கும்போது, நானே எனக்கான அழிவைத் தேடிக்கொண்டதாகக் கருதுகிறேன். ஆனால், மனித உணர்வுகள் மதிப்புடையவை. சில நேரங்களில் அது மிகுந்த மதிப்புடையதாகவும் மாறுகிறது. நான் மதிப்புடனும் மாண்புடனும் நடந்து கொண்டேன். எதிரிகள் என்னைப் பார்த்து எள்ளி நகையாட நான் அனுமதிக்கவில்லை. என்னுடைய பணி, அதிலும் குறிப்பாக நான் செய்து கொண்டிருந்த இருதய அறுவை சிகிச்சைப் பணி, என்னுடைய வருமானத்திற்கானப் பணி மட்டும் அல்ல; அது அதனினினும் மேலானது. என்னுடைய பணிதான் என்னுடைய அடையாளமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களால் நான் என் பணியை இழந்தேன்; என்னுடைய அடையாளத்தை இழந்தேன். இதை என்னால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு வேலை கிடைப்பதற்காக நான் பல கதவுகளைத் தட்டினேன். சிலர் கதவைத் திறந்து அடுத்த நொடியே என் முகத்தில் அறைந்தவாறு சாத்தினார்கள். இதில் பார்ப்பனர்களும் அடக்கம்; தலித்துகளும் அடக்கம். சிலர் அவர்கள் வீட்டிற்குள் என்னை அனுமதிக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள், என்னுடைய மாண்பை இழிவுபடுத்துவதாக இருந்தது. நான் அவர்களை அணுகுவதற்கு முன்பே, என்னுடைய எழுத்துகள் அவர்களைச் சென்றடைந்திருந்தன. அவர்கள் என்னை வெளியேறச் சொல்வதற்கு முன்பே நான் வெளியேறினேன். என்னுடைய எழுத்துக்காக நான் கொடுத்த விலை இது.

நான் என்ன எழுதினேன்? நான் உண்மையை எழுதினேன். என்னுடைய 51ஆவது வயதில் நான் வேலையின்றி இருக்கிறேன். நான் இனிமேலும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவத் தொழிலை செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் இழந்திருக்கிறேனா? நான் வெற்றி பெற்ற மனிதன் இல்லையா? வெற்றிக்கு மனித வாழ்வு வைத்துள்ள அளவுகோல்தான் என்ன? நூறு ஆண்டுகள் வாழ்வதுதான் வெற்றியா? இல்லை. இல்லவே இல்லை. லாரி நிறைய பணத்தை சம்பாதிப்பதுதான் வெற்றியா? இல்லை. இல்லவே இல்லை. இத்தகைய கணக்கீடுகளில் பாபாசாகேப் அம்பேத்கரை எப்படிப் பொருத்துவது? அவர் இதில் எங்கும் பொருந்தவில்லை. ஆனால், அவர் எல்லா வழிகளிலும் தன்னுடைய மக்கள் தொண்டிற்காக மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டிய மாமனிதராவார்.

நம் பிறப்பு நம் கையில் இல்லை. இருப்பினும், ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்ள முடியும். நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆற்றல் நம்மிடம்தான் இருக்கிறது. ஆனால், இதில்கூட ஓரளவு உண்மைதான் இருக்கிறது. பல்வேறு புறக்காரணங்கள், நம்முடைய ஆற்றலையும் மீறி இயங்குகின்றன. ஒவ்வொரு ஆர்வமுள்ள தனிநபரும் தன்னுடைய ஆற்றலையும் மீறி ஏதேனும் செய்ய நினைக்கிறான். தன்னைத்தானே நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். தன்னுடைய உழைப்பின் பலன் இந்த சமூகத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான். அது உண்மைதான். ஆனால், இந்தச் சமூகம் இத்தகைய குறிப்பிட்ட மனிதர்களின் ஆற்றலின் வெளிப்பாடுகளை, அதன் பயன்களைத் தன்னளவில் வரவேற்கிறதா? வரலாறுதான் இதற்கு பதில் சொல்ல முடியும். மாமனிதர்களுடைய ஆற்றலை, இந்தச் சமூகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. டாக்டர் அம்பேத்கரையே இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய 51ஆவது வயதில் நான் விரும்பி செய்த பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன். நான் இந்தப் பணிக்காக, பார்ப்பனர்களின் காலில் விழுந்திருக்க வேண்டுமா? இந்தச் சமூகம் அதை எதிர்பார்க்கிறதா? நான் பார்ப்பனர்களின் காலில் விழுந்திருந்தால், இந்தச் சமூகம் என் மீதான நம்பிக்கையை இழந்திருக்கும்; மனித மதிப்பீடுகளின் மீது நம்பிக்கை வற்றியிருக்கும். ஓர் எழுத்தாளராக, ஒரு மருத்துவராக இத்தகையதொரு மோசமான தவறை செய்திருப்பவனாக நான் ஆகியிருப்பேன். நான் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதற்காக, நான் எதையாவது தியாகம் செய்யத்தான் வேண்டும். ஆம், அதற்காக என்னுடைய மருத்துவத் தொழிலையே தியாகம் செய்திருக்கிறேன். என்னுடைய எழுத்துகளுக்கு நான் அளிக்கும் விலை இது. நான் இழிவுபடுத்தப்படுவதிலிருந்து விடுபட, நவீன துரோணாச்சாரிகளை எதிர்பார்த்திருக்க முடியாது. அவர்கள் என் மீதான இழிவுகளை அடுக்கிக் கொண்டே போவார்கள். பார்ப்பனர்கள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். இதற்கு நான் ஆளாகவில்லை. 51 ஆண்டுகளாக நான் ஒரு சிங்கம் போல் கர்ஜித்தேன்.

நான் பிறந்ததற்கு ஏதாவது பொருள் வேண்டும். நான் ஒரு இருதய அறுவைச் சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்த்தது. நான் அதைச் செய்தேன். நான் மருத்துவத் தொழிலில் என் திறமையைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தது. ஏனெனில், நான் இடஒதுக்கீட்டால் பயன் பெற்றவன். நான் அதை நிரூபித்தும் காட்டினேன். இதற்காக நான் பதினைந்து ஆண்டுகள், ஒரு புலியின் மீது சவாரி செய்தேன். இது, உண்மையில் மிகவும் கடினமான ஒரு பணி. சமூகம் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தது. நான் ஒரு முன்மாதியாக விளங்க வேண்டும்; நான் அறிவார்ந்த வகையில் செயல்பட்டு, என்னுடைய கட்டை விரலைக் காப்பாற்றிக் கொண்டு, துரோணாச்சாரியின் தலையை வெட்ட வேண்டும் என்று கூறியது. அதை நான் செய்தேன். அதற்கு பதில், நான் என்னுடைய மருத்துவத் தொழிலைப் பாதியிலேயே வெட்டி விட்டேன்.

இதற்கு கைம்மாறாக, இந்தச் சமூகம் எனக்கு என்ன செய்தது? நான் ஒரு மருத்துவராக என் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருந்தேன். மிக மோசமான சூழலிலும் நான் பல சாதனைகளைப் புரிந்தேன். "துரோணாச்சாரியுடனான என்னுடைய மோதல்' என்ற நூலில், இதை ஒரு ஆவணமாக நான் பதிவு செய்திருக்கிறேன். செத்த மீன் மய்ய நீரோட்டத்தோடு செல்லும். ஆனால், நான் எதிர் நீச்சல் போட்டேன். என் கற்பனைகளையும் மீறி நான் பயணித்தேன். இது, எனக்கு மாபெரும் புத்துணர்வை அளித்தது. யாருக்கும் கிடைக்காத அனுபவம் இது. என்னிடம் வரும் நோயாளிகள், உறவினர்கள் என்னிடம் அளவுக்கதிகமான அன்பைப் பொழிந்தார்கள். எஞ்சிய நாட்களை நான் மாண்புடன் கழிப்பதற்கு, இந்தச் சமூகம் எனக்குப் போதிய நிதியை அளித்தது.

என்னுடைய எழுத்துகள், மிக முக்கியமானதாக கவனிக்கப்பட்டன. என்னுடைய "பாகுபாட்டின் தோற்றுவாய்' நூல், பார்ப்பனியத்தின் அறிவு மமதைக்கு ஆணி அடித்தது. அது, தலித்துகள் மற்றும் பார்ப்பனர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. பார்ப்பனர்கள் என்னைப் பழி தீர்த்துக் கொண்டனர். அது அவர்களின் மனசாட்சியைத் தொடர்ந்து தட்டும் என்று நான் நம்புகிறேன். நாடு முழுவதிலும் இருந்து வரும் கடிதங்கள், என்னை ஆற்றுப்படுத்துகின்றன. என்னுடைய எழுத்துகள், தலித் இலக்கியத்தின் முக்கிய எல்லைகளைத் தொட்டுள்ளது. "சப்தம்' மற்றும் "மாத்யமம்' போன்ற மலையாள வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரைகளாக அவை மாறியிருக்கின்றன. தலித் சகோதரர்களும், சகோதரிகளும் நான் துரோணாச்சாரியுடன் அறிவார்ந்த தளத்தில் மோதியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வர். என்னுடைய எழுத்துகளும், மருத்துவத் தொழிலை நான் தியாகம் செய்ததும் ஒருபோதும் வீண் போகாது.

Ashok Bhoyar
நான் 1989இல் நாக்பூருக்கு வந்தபோது, இருதய அறுவை சிகிச்சை குறித்து தெளிந்த அறிவைப் பெற்றேன். நான் என்னுடைய திறமையை நிரூபித்துக் காட்ட விரும்பினேன். இதை நிரூபிக்க எனக்கு நோயாளிகள் வேண்டும். ஆனால், அந்த மருத்துவமனையில் யாரும் இல்லை. ஒருவர் முன்னேற ஆரோக்கியமான சூழல் வேண்டும். ஆனால், எனக்கு அது கிட்டவில்லை. சாதி இந்துக்கள், மெத்தப் படித்தவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள், மெத்தப் படித்த மருத்துவர்கள் வெளிப்படையாகவே என் மீது இழிவான கருத்துகளைச் சுமத்தினர்.

நான் எங்கு செல்வேன்? சாதியம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நான் அதைக் கடந்தாக வேண்டும். இதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடைய அறுவை சிகிச்சைத் திறமையை நான் பரிசோதித்தாக வேண்டும். நான் நேர்மையானவன். அது எனக்கு உதவியது. மிகப் பிரபலமான மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு நான் அறுவை சிகிச்சை செய்தேன். ஆனால், எனக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. வேறு எந்த முன்னணி மருத்துவரைப் போல நானும் அப்பணியில் சிறந்து விளங்கிட விரும்பினேன். ஆனால், என்னுடைய ஆற்றல் முழுவதும் என்னுடைய வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே செலவிடப்பட்டது. மற்றவர்களுடைய தவறுகளுக்கு என்னைக் காரணம் காட்டினார்கள். என்னைக் கருப்பு ஆடாகச் சித்தரித்தார்கள்.

நான், துறை சார்ந்த விசாரணைக்கு ஆளானேன். என்னுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. என்னுடைய வேலைக்கு உலை வைக்கப்பட்டது. நான் விரட்டப்பட்டேன். எனக்கான பேரும் புகழும் திட்டமிட்டு மறுக்கப்பட்டது. வேறு ஒரு மருத்துவருக்காக நான் பலிகடா ஆக்கப்பட்டேன். நேர்மையான வழியில் சென்ற என்மீது இறுதியில் பொய்ப் பழி சுமத்தப்பட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக இத்தகைய பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் என்னுடைய நேர்மையை நான் நிரூபித்தாக வேண்டிய சூழல். நாள்தோறும் என்னைத் தணலில் இட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னுடைய பொறுமை சோதிக்கப்பட்டது. மற்றவர்களைப் போல நானும் ஒரு மனிதன்தான். ரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்டவன்தான். நான் உடைபட்ட இதயத்திற்கும், ஊனப்பட்ட உளவியலுக்கும் ஆட்பட்டேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

தலித் மருத்துவர் என்பதால், நான் அறிவில் குறைந்தவனாகக் கருதப்பட்டேன். இது, என் இதயத்தில் முள் குத்துவது போல் இருந்தது. காலம் செல்லச் செல்ல, என்னுடைய தொழில் திறமையை நான் நிரூபித்தேன். சாதியத்தைக் கடக்க முடியும். ஆனால், அதற்கான விலையைத் தந்தாக வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஒரு தலையிடம் சிக்கிய மீனின் நிலை என்னாகுமோ, அதே நிலைதான் எனக்கும் நேர்ந்தது. நான் அழிக்கப்பட்டாலும் தோற்கடிக்கப்படவில்லை.

நான் அழும் குழந்தையல்ல. சாதியம் இருக்கின்றது என்று சொல்வதற்காக நான் நூல்களை எழுதவில்லை. சாதியத்தை எப்படிக் கடப்பது; அதன் ஆதிக்கத்தை நிர்மூலமாக்குவது எப்படி என்பதைப் பற்றிதான் எழுதினேன். இதற்கான விலையைக் கொடுக்க நான் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், இதற்கான விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தலித்துகளுடைய முன்னேற்றம் ஒரே வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வருகிறது; அது நேராக முன்னேறிச் செல்லவில்லை. நான் குவித்த வெற்றிகளைப் பற்றியும், தலித்துகள் வெற்றிகளை ஈட்டவும், இதன் மூலம் தன்னுணர்வு பெறவும் நூல்களை எழுதியிருக்கிறேன். நான், என்னை ஒரு அழும் குழந்தையாகப் பார்க்கவில்லை. பார்ப்பனர்களின் பாதிப்பிற்குள்ளாகி விட்டேன் என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழவில்லை. என்னை நான் ஒரு போர் வீரனாகப் பார்க்கிறேன். கண்டிப்பாக, பார்ப்பனியத்திற்கு எதிராக நான் உறுதியாகப் போரிட்டேன்.

நான் அழிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், நான் தோல்வி அடையவில்லை. என்னுடைய "துரோணாச்சாரியுடனான மோதல்' மற்றும் "பாகுபாட்டின் தோற்றுவாய்' நூல்களைப் படித்தால், பார்ப்பனர்கள் வெட்கத்தால் தற்கொலை செய்து கொள்வர். தலித்துகள் இந்நூல்களைப் படித்தால், அதனால் உந்தப்பட்டு, அவர்கள் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போடுவார்கள். துரோணாச்சாரிகள் அறிவார்ந்த நிலையில் அழிக்கப்படுவர்.

நான் என் பணியைத் துறந்த பிறகும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நான் மாண்புடனும் முன்மாதிரியுடனும் வாழ வேண்டும் என என் சமூகம் விரும்புகிறது. நான் சொல்ல விரும்பும் செய்தி தெளிவானது : உங்களை நீங்கள் மாண்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இரப்பதுதான் துயரத்திற்கான மூலம். நாம் இரப்பதை நிறுத்துவோம். இதுதான் புத்தன் செய்தி. படித்த தலித்துகள் இது குறித்து செவிமடுக்கிறார்களா? அவர்கள் இந்தச் சமூகத்திற்காக ஏதேனும் பங்களிக்க முன்வருவார்களா? தியாகம் செய்ய முன்வருவார்களா?
Pin It