பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளான திசம்பர் 6, ஆண்டுதோறும் வருவதுபோல் இந்த ஆண்டும் வருகின்றது. எப்பொழுதும் போல அவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஒலி பெருக்கி மூலம் குரல்கொடுத்துவிட்டுச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளையும் பேச்சுகளையும் மகாராட்டிர அரசு தொகுத்து ஆங்கிலத்தில் 22 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள 17 தொகுதிகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் தனஞ்சய் கீர் எழுதியுள்ளார். அந்த ஆங்கில நூலைத் தமிழில் தோழர் க. முகிலன் மொழிபெயர்த்து அதை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான தலித்துகளோ, மார்க்சிய வாதிகளோ, பெரியாரிய வாதிகளோ, அம்பேத்கரிய வாதிகளோ அம்பேத்கரை முழுமையாகக் கற்றுத் தெளிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக உள்ளனர். அதற்குக்காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்தியச் சமூகம் என்பது அளவுமுறையிலும் குண முறையிலும் பார்த்தால் சாதியச் சமூகமாகவே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்துமதம் உடலென்றால் அதன் உயிர் சாதியாகவே இருக்கின்றது. சாதியில்லாத இந்து கிடையாது. சாதிகளின் தொகுப்பே இந்துமதம். அத்தகைய சாதியத்தின் தோற்றம்பற்றிப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அளவுக்கு ஆய்ந்தவர்கள் யாருமில்லை.
சாதியின் தோற்றத்திற்கு மூலமாக பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கருதுவது அகமணமுறைதான். அவர் கூறுகிறார்:
“சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்ந்து சரியாக மதிப்பிட்டு உரைப்பதானால், அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் வழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு எனக் கூறலாம். அதாவது, கலப்பு மணமின்மையோ அல்லது கலப்பு மணத் தடையோ சாதியின் சாராம்சமாகும், அகமண வழக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றுவதற்காக:
1. சதி அல்லது இறந்த கணவனின் உடலோடு அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுவது
2. கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்துகொள்ள முடியாமல் தடுத்து அந்தப் பெண்ணை விதவைக் கோலம் பூண வைத்துவிடுவது
3. குழந்தை மணம்
போன்ற வழிமுறைகளை உருவாக்கி அவற்றையே இலட்சியங்களாக மாற்றித் தொடர்ந்து காப்பாற்றி வருகின்றவர்கள் பார்ப்பனர்கள்.
டாக்டர் அம்பேத்கர் கூறுகின்றார் : “மேற்கூறிய பழக்க வழக்கங்களை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்து, சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் தம்மைத் தாமே அகந்தையோடு நிலை நிறுத்திக் கொண்டுள்ளதைக் கொண்டு அனைத்து பண்டை நாகரிகத்தைச் சார்ந்த புரோகித வர்க்கத்தினரே இந்த இயற்கைக்கு மாறான நிறுவனங்களை, இயற்கைக்குப் புறம்பான வழிகளில் தோற்றுவித்துப் பாதுகாத்து வருபவர்கள்”. ஆக, சாதியத்தின் மூலமான அகமணமுறையை உருவாக்கி அதைக்காப்பாற்ற சதி, விதவைத்தன்மை, குழந்தை மணம் போன்றவற்றை உருவாக்கி இன்றளவும் சாதியத்தைக் காத்து வருபவர்கள் புரோகித வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களே என்பதைப் பாபாசாகேப் அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாளன்று அமெரிக்க நாட்டு நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த டாக்டர் ஏ.ஏ. கோல்டன் வைஸ்சரின் மானுடவியல் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பித்தார். பின்னாளில் அதுவே “இந்தியாவில் சாதிகள் - அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி” என்ற நூலாக வெளிவந்தது.
“இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி
சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”
என்று மனம் நொந்து பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அந்தச் சாதியை ஒழிப்பதற்குப் பாபாசாகேப் அம்பேத்கர் கூறும் வழி இதுதான்.
“சாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் வேதங்களையும் சாத்திரங்களையும் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடங்கொடுக்காத, ஒழுக்கம் செயற்பட இடங்கொடுக்காத வேதங்களையும் சாத்திரங்களையும், நீங்கள் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்கவேண்டும். வேறு எதுவும் பயன்தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு”.
1936ஆம் ஆண்டு இலாகூரின் ஜாத்-பட்-தோடக் மண்டல் அமைப்பின் மாநாட்டிற்காக எழுதப்பட்ட உரையில்தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்க வேண்டும்’ என்றார்.
1935ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் இயோலாவில் நடைபெற்ற மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர், மதம் மாற்றம் பற்றிய தன் நிலைப்பாட்டை விளக்கும்பொழுது கூறியதை மீண்டுமொருமுறை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவர் கூறுகிறார்:
“என் போதாத காலம் நான் இந்து தீண்டப்படாதவனாகப் பிறந்துவிட்டேன். இவ்வாறு நான் பிறக்க நேர்ந்ததைத் தடுப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், இந்து மதத்தின் மரியாதை கெட்ட இழிவுபடுத்தும் சூழ்நிலையின்கீழ் நான் வாழ மறுப்பது என்பது என் சக்திக்கு உட்பட்டதேயாகும். ஆகவே, நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களிடம் உறுதி கூறுகின்றேன்”.
இவ்வாறு பாபாசாகேப் அம்பேத்கர் அறிவித்ததும் பல பேர் அவரைச் சந்தித்தனர். அவர்களுள் ஒருவர் மசூர்கர் மகராஜ் என்பவர். மசூர்கர் மகராஜ் கோவாவில் 10000 கிறித்தவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றியவர்; இந்துமதக் காப்பாளர். அவர் பாபாசாகேப் அம்பேத்கரைச் சந்தித்து நீங்கள் இந்துமதத்தை விட்டுச் செல்லக்கூடாது என்றார். அதற்கு பாபாசாகேப் அம்பேத்கர் “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீண்டாமையை அடியோடு அழித்துவிடுவோம் என்று சாதி இந்துத் தலைவர்கள் வாக்குறுதி தரவேண்டும்” என்றார். அதற்குச் சிறிதுகாலம் ஆகும் என்று மசூர்கார் மகராஜ் கூறினார். மதமாற்றத்தைத் தள்ளிப்போட வேண்டுமென்றார் மசூர்கர் மகராஜ். அதற்குப் பதிலாக “சாதி இந்துக்களின் மனமாற்றத்திற்காக நான் இன்னும் அய்ந்து முதல் பத்து ஆண்டுகள் காத்திருக்க முடியும். ஆனால் இதற்கிடையில் ‘கேசரி’ பத்திரிகை வட்டத்தாரால் மிகச் சிறந்த இந்துவாகக் கருதப்படுகின்ற தீண்டப்படாத வகுப்புத் தலைவரான கே.கே. சகத்தை மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் சங்கராச்சாரியார் பதவியில் ஓராண்டுக் காலத்திற்கு அமர்த்த வேண்டும். மனம் மாறியதற்கும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அடையாளமாக ஒரு நூறு சித்பவன் பார்ப்பனக் குடும்பங்கள் புதிய சகத் சங்கராச்சாரியாரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.” என்று கூறினார். அதோடு மகசூர் மகராஜ் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
வருணாச்சிரமம் என்னும் ஏணிப்படியாலான சதுர்வருண முறையை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தால் ஒரு தீண்டத்தகாதவனை சங்கராச்சாரியாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில், மானமுள்ள எந்தத் தீண்டாதவனும் தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ள விரும்பமாட்டான். சாதியம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற அம்பேத்கரின் இலட்சியத்தை சாதியொழிப்பு வீரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைவேற்றுவதற்கு உறுதி எடுத்துக்கொள்ள அவரின் நினைவுநாளைப் பயன்படுத்திக் கொள்வோமாக!