இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை சிங்களம் வழங்குமா என்பது அய்யத்துக்குரியதுதான். தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் இராஜபக்சே காலத்தில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டு, தமிழர்கள் பேராதரவோடு தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.ஆர். விக்னேசுவரன் மாகாண முதல்வராக உள்ளார். கடந்த 2014, நவம்பர் 9ஆம் தேதி சென்னையில் ‘பி.யு.சி.எல்.’ (மக்கள் சிவில் உரிமைக் கழகம்) ஏற்பாடு செய்திருந்த ‘கண்ணபிரான் நினைவு அறக்கட்டளை’ யின் சார்பில் ‘பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆழமான கருத்துரையை வழங்கினார். அப்போது இலங்கை அரசு வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் ஆட்சி உரிமைகளை பறித்து வைத்துள்ளதை பட்டியலிட்டார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் புதிய ஆட்சி, பறிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீண்டும் வழங்குமா? என்ற கேள்வியோடு அவர் வெளியிட்ட உரிமை பறிப்புகளை பட்டியலிடுகிறோம்.

1.            தலைமைச் செயலாளர் மாகாண முதல்வர் ஆணைகளைப் பின்பற்றத் தேவையில்லை. இதனடிப்படையில் முதல்வருக்கு நிதி தொடர்புடைய செயல்பாடுகளை நிர்வகிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

2.            முதல்வர் எடுக்கும் எந்த முடிவுக்கும் தலைமை செயலாளர் மற்றும் ஆளுநரின் அனுமதி கிடைத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பிரதிநிதிகள் என்பதால் மத்திய அரசு விருப்பத்துக்கு மாறான எந்த முடிவையும் செயல்படுத்த முடியாது.

3.            மாவட்ட தலைமை அதிகாரிகள், பிரதேச தலைமை அதிகாரிகள், மாகாண முதல்வருடன் எந்த தொடர்பும் கொள்ளாமல், மத்திய அரசு அதிகாரிகளின் ஆணைக்கு கீழே செயல்படு கிறார்கள். குறிப்பாக நிலம் தொடர்பான பிரச் சினைகளில் அவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.

4.            அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனங்கள்; பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை குறித்த அதிகாரங்கள், ஆளுநர்களுக்கே வழங்கப்பட் டுள்ளது. எனவே, மாகாண அரசு சுதந்திரமாக அதிகாரிகள் வழியாக கடமைகளை நிறைவேற்ற முடியாது.

5.            மத்தியில் உள்ள அரசியல் கட்சிகளின் விருப்பத் துக்கு மாறாக மாகாண அரசு ஏதேனும் மக்களுக்கான செயல்பாடுகளில் இறங்கினால், தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநர் அச்சுறுத்தலால் அவை முடக்கப்படுகின்றன.

6.            மத்தியில் ஆளும் கட்சி மற்றும் அதன் பிரதேச தலைவர்களின் முகவராக ஆளுநர் செயல்படு வதால் அவருக்கு அஞ்சி, மாகாண அரசின் கடமைகளை எமது அலுவலர்களால் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர். மாகாண அலுவலர்கள் நேரடியாக ஆளுநரின் ஆணைகளையே செயல்படுத்த வேண்டியிருக்கிறது.

7.            மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு, ஆளுநரின் ஆணைப்படியே செயல்படும். ஆளுநர், மத்திய அரசின் ஒரு தலைபட்ச விருப்புவெறுப்புக் குட்பட்ட முடிவுகளையே செயல்படுத்துவார். இதனால், நாங்கள் தேவையான நியமனங்களை செய்ய முடியாமல், மத்திய அரசின் கட்டளைகளை அப்படியே பின்பற்ற வேண்டியிருப்பதால் மாகாண அரசு பலவீனமாகிவிட்டது.

8.            ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த உரிமைகள்கூட வடக்கு மாகாணத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வடக்கு மாகாண முதல்வர் தமக்கென வங்கி ஒன்றைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி, தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதை விலக்கி, முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி கேட்டும் மறுத்து விட்டார்கள். ஏனைய 4 மாகாணங்களில் இதுபோல் முதலமைச்சர் கட்டுப் பாட்டில் வங்கிகள் இருக்கின்றன. இது குறித்து அதிபரிடம் (இராஜபக்சே) எடுத்துக் கூறியபோது, “அந்த வங்கிகள் நாங்கள் பதவிக்கு வருவதற்கு முன் திறக்கப்பட்டவை. நாங்கள் வந்த பிறகு, இத்தகைய உரிமைகளை அனுமதிப்பது இல்லை; அனுமதிக்கவும் மாட்டோம்” என்று பதில் கூறினார்.

9.            வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர், மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

10.          நிலங்களை இராணுவம் கைப்பற்றிக் கொண்டு அவற்றில் பயிரிட்டு அறுவடை செய்து அந்த நிலத்தின் உரிமையாளர்களான தமிழர்களிடமே தானியங்களை விற்பனை செய்கிறது.

11.          சிங்களர்கள் தெற்குப் பகுதியிலிருந்து இராணுவத்தின் உதவியுடன் தடை செய்யப்பட்ட மீன் பிடிப்பு முறைகளில் மீன் பிடிக்கிறார்கள்; தமிழர்கள் மீன் பிடித்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

12.          வலி கிராமம் பகுதியில் மட்டும் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை இராணுவம் கைப்பற்றி குடியிருப்புகள், கல்லூரிகள், கோயில்களை அழித்து அங்கு சுற்றுலா விடுதிகளையும், ‘கோல்ஃப்’ விளையாட்டு மைதானத்தையும் அமைத்துள்ளது. நிலத்துக்கு உரிமையுள்ள மக்களோ, உணவு, உடை, இருப்பிடமின்றி, தற்காலிக தங்குமிடங்களில், மாகாண அரசு அனுதாபத்துடன் காலத்தைக் கடத்தி வருகிறார்கள். இதனால், சமூக, கலாச்சார சீரழிவுகள் நடக்கின்றன.

13.          30, 40 வருடங்களுக்கு முன்னால் நிலங்களின் உரிமைகளுக்கான ஆவணங்களை வைத்திருந்த மக்கள், போரின் போது, நிலங்களை விட்டு வெளியேறி, ஆவணங்களையும் தொலைத்து விட்டார்கள். இப்போது மீண்டும் தங்கள் இடங்களுக்குச் சென்றால், அங்கு வேறு நபர்கள் இருப்பதைப் பார்க்கிறார்கள். இராணுவமோ உங்களிடம் ஆவணம் ஏதும் இல்லை; நாங்கள் இந்த இடங்களைக் கைப்பற்றி வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டோம்” என்று கூறுகிறது.

14.          போரில் பாதிக்கப்பட்டு, செயலிழந்து போனவர்கள் 18,000 பேர். ஒரு இலட்சம் இளம் பெண்கள் ‘விதவை’களாகிவிட்டனர்.

15.          வேலை வாய்ப்புகள் இல்லை; தொழில் திறன் குறைந்து போய் விட்டதால், கட்டுமானத்துக்கு தெற்கிலிருந்து சிங்களர்களை அழைக்க வேண்டியிருக்கிறது.

16.          மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்கக்கூடிய ஆலோசனை மய்யங்கள் இல்லை. குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக்கள் இல்லை.

17.          இந்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டம், ஊழல் மலிந்து நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைப்பது இல்லை. மாகாண ஆட்சி வருவதற்கு முன்பே, இதற்கான ஒதுக்கீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுவிட்டன.

- என்று பட்டியலிட்டுள்ளார் முதல்வர் விக்னேசுவரன்.

இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இப்போது இராஜபக்சே மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் புதிய ஆட்சி தமிழர்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் போகிறதா? இந்திய அரசு இந்த நியாயமான அரசியல் உரிமைகளை இலங்கையிடம் வலியுறுத்துமா?

இவையே எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்!                                          

***

Pin It