வழக்கறிஞர் அ.அருள்மொழி - நேர்காணல் - தொடர்

Ellam 450ஈழம் பற்றி வெளிவந்த பார்த்தீனியம், ஓர் கூர்வாளின் நிழலில் ஆகிய நூல்கள்  நிறைய விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் எழுதியவர்கள் பெண்கள் என்பதாலா?

இருக்கலாம். அவர்கள் பெண்கள் என்பதால் மட்டும் அல்ல, பெண்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மையான கூர்மையான கேள்விகளை எதிர்கொளள் நமது முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மனம் சங்கடப்படுகிறது என்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

எழுத்தும் இலக்கியமும் பிறந்த நாள் முதலாக பெண்கள் எல்லாக் காலங்களிலும் எழுதினார்கள்.

ஆண்களைப் போலவே காதலை, இயற்கையை, வீரத்தை, பாசத்தை, இழப்பை, நகைச்சுவையை, பக்தியை, கடவுளை, சமயத்தை, அடிமைத்தனத்தை, விடுதலை உணர்வை என எதையுமே அவர்கள் விட்டுவைக்கவில்லை. மக்கள் இலக்கியமான நாட்டுப்புறப் பாடல்களில் ஆண்களை விடப் பெண்களின் பாடல்களே அதிகம். கதையும், நாடகமும் எழுதப்பட்டக் காலங்களில்தான் பெண்களின் பங்கு குறைக்கப்பட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் மதங்களின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கிவட்டதால், பெண்கள் பிள்ளை பெற்று, அதுவும் ஆண் பிள்ளையைப் பெற்று வம்சம் விளங்க வைப்பவள் என்றும் ஒரு ஆணுக்கும் தாயாய்ப் பரிவு காட்டவும், மனைவியாகி சேவை செய்யவும், மகளாய் பாசத்துடன் பணிவிடைச் செய்யவும், பின் இன்னொரு ஆணுக்கு மனைவியாகி அவனது வம்சத்தை வளர்த்து, தியாகம் செய்யும் இன்னொரு பெண்ணையும், ஆள்வதற்கு இன்னொரு ஆணையும் பெறவேண்டியதே பெண்களின் வாழ்க்கைச் சங்கிலியாகிவிட்டது.

ஒவ்வொரு ஆணும் தான் பெற்ற மகளுக்குத் தந்தையாக இருந்து முடிவெடுப்பதைவிட ஆணாதிக்க, சாதி, மத அமைப்பை காக்கும் பொறுப்புள்ள ஆணாக மட்டுமே சிந்தித்து செயல்படத் தொடங்கியதால், பெண்களின் சிறகுகள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டன. மீறி வளர்ந்த சிந்தனைகள் வெட்டப்பட்ட. ‘அறிவு’ ஆணுக்கும் ‘அன்பு’ பெண்ணுக்கும் கட்டாய இயல்பாக்கப்பட்டது.

இந்தியாவில், இந்து மதத்தின் ஆதிக்கத்தால் எழுத்தாணியைப் பறிகொடுத்த பெண்களின் கையில் மீண்டும் எழுதுகோல் வரும்போது பல நூற்றாண்டுகள் இடையில் கரைந்துபோய்விட்டன. ஆங்கிலேயர் காலப் பள்ளியும், கல்வியும்தான் சென்ற இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்புப் புள்ளியில் பெண்களின் எழுத்தாற்றல் மீது கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சின.

அதே நிலைதான் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இலங்கையிலும், நம் தமிழ்ப் பெண்களுக்கு ஆண்கள் ‘அளித்த’ ஏட்டுக் கல்வி பல படிப்பாளிகளை எழுத்தாளர்கள் ஆக்கியது. ஆனாலும் பெண்கள் எதை எழுத வேண்டும் என்று ஆண் பத்திரிகையாளர்களே முடிவு செய்தார்கள். பெண்கள் உலக அரசியலைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, இந்த வேலை இவர்களுக்கு எதற்கு? குடும்பத்தைப் பேணுவது, குழந்தை வளர்ப்பு, இதைப் பற்றி எழுத வேண்டியதுதானே என்று ஒருபுறம் அவர்களது எழுத்துலகைச் சுருக்கிவிட்டு, இன்னொருபுறம் பெண்கள் எழுத்து குடும்பம், சமையல், கோலம் என்றுதான் கும்மியடிக்கிறது, என்று ஏளனமும் செய்தார்கள்.

ஆனால் அத்தனை உளவியல் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். இருக்கிறார்கள். போராட்டக் காலம்தான் பெண்களை மீண்டும் பொது வெளியில் செயல்பட அனுமதித்தது. இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சமூக விடுதலைப் போரில் இறங்கிய சுயமரியாதை இயக்கப் பெண்கள் என மூன்றுவகை இயக்கப் பின்புலங்களில் எழுதியவர்கள் பெண்களின் பிரச்சனைகளை மட்டும் எழுதவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்காகத்தான் எழுதினார்கள், பேசினார்கள், இயக்கம் நடத்தினார்கள், சிறைசென்றார்கள். ஆனால் அந்தத் தத்துவங்கள்/இயக்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அதுவரை பொதுவெளியில் ஒலித்த பெண்களின் உரிமைக்குரல்கள் அனைத்தும் ‘மகளிரணியில்’ மட்டும் இருக்குமாறு ஒடுக்கப்பட்டன. ஒரு சில பெண்களை மட்டும் அதிகார வரிசையில் ஒரு நாற்காலி கொடுத்து அமரவைத்துவிட்டார்கள்.

இதே நிலைதான் இலங்கையில், கல்வி சிறந்த தமிழீழப் பகுதிகளிலும் இருந்தது. எந்தப் போராட்டத்திலும் முன்நிற்கும் பெண்கள் இயக்கங்களின் தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றது அரிதினும் அரிதான நிகழ்வாகி விட்டது. ஏன் ஆண்கள் பெண்களையம் கண்டு இப்படிப் பயந்தார்கள் என்ற கேள்வி எப்போதும் எனக்கு எழுவதுண்டு.

வரலாற்றின் சுவர்களில் பதிலைத் தேடி முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான விடையாக எனக்கு கிடைத்தவை இந்த இரண்டு நூல்களும்தான். ஒன்று ‘பார்த்தீனியம்’ மற்றொன்று ‘ஒரு கூர்வாளின் நிழலி்ல்’. இரண்டுமே ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரைப் பற்றியவை. விடுதலைப் போரென்றால் வீரர்களின் சாகசங்கள், பெண்களின் தியாகங்கள் பற்றியவை அல்ல. போர்கள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றியும், ஒரு பெரும் கனவாக இருந்த விடுதலைப் போராட்டம் சிதறுண்டு போனதற்கான காரணங்களையும் அதன் உள்ளிருந்து ஆய்வு செய்யும் பார்வையுடன் எழுதப்பட்டவை.

தமிழ் இனத்தின் நன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை இந்த நூல்கள் என்று சொல்வதால் கேள்வியோ விமர்சனமோ இல்லாமல் அப்படியே படித்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருளில்லை. எனக்கும் கேள்விகளும் விமர்சனங்களும் உண்டு. ஆனால் நான் ஏன் இதைப் படிக்கச் சொல்கிறேன் என்றால் போரும், பகையும் எதிரிகை மட்டும் வெறுக்கச் செய்யாது என்பதைப் புரிந்து கொள்ளத்தான். நட்பை, உறவை, காதலை, பாசத்தை ஏன் தன்மீதான நம்பிக்கையைக் கூட கேள்விக்குறியாக்கிவிடும். ஒருவேளை போரில் வெற்றி பெற்றுவிட்டால் அவையெல்லாம் புகழ்வதற்கான காரணங்களாகக் கூட மாறிவிட்டிருக்கும்.

ஆனால் ‘‘கேட்டினும் உண்டோ ஓர் உறுதி’’ என்ற திருக்குறளின்படி, 200 ஆண்டின் கனவை இழந்து முள்வேலிக்குள் முடக்கப்பட்ட ஓர் இனத்தின் போராட்டம் அடைந்த தோல்வியும், அழிவும்  தரும் அனுபவங்களைவிட சிறந்த பாடம் வேறெது?

வெற்றி பெற்ற இனவிடுதலைப் போர்களிலும், புரட்சிகளிலும் பெறதா பாடங்களை தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் வெற்றியோ, தோல்வியோ நாம் செல்லும் பாதை சரியானதாக இருக்க வேண்டும். முடிவில் அச்சமூகத்தின் அடிப்படை மாண்பையும் தனி மனித மதிப்பையும் இழந்துவிடக் கூடாது என்ற அக்கறையுடன் எழுதப்பட்டவை. ‘பார்த்தீனியம்’ ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற நூல்கள். இவற்றில் பார்த்தீனியம் 1983 முதல் 1990 வரையிலான காலத்தில் நேரடியாகத் தான் கண்டும், கேட்டும் அறிந்த, உணர்ந்த செய்திகளை ஒரு கதைவடிவில் வானதி – பரணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட வசந்தன் என்ற இருவரின் காதல் மலர்ந்தது, வளர்ந்தது, கரைந்து போன போர்ச் சூழலையும், இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய வன்முறைகளின் கொடூர நினைவுகளையும், சொந்த மண்ணில் ஊர் ஊராக அகதிகளாக அலைந்த கதையையும் சொல்கிறது. இதை எழுதியவர்கள் ‘தமிழ்நதி’. இவர் கனடாவில் வசிக்கின்றார்.

‘ஒரு கூர்வாளின் நிழலில்’ கதையல்ல. விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்துவரும் சிறந்த எழுத்தாளருமான ‘தமிழினி்’ எழுதிய தன் வரலாற்றுப் பதிவு. அவர் உயிருடன் இல்லை. 2009-இல் ஈழப் போரின் முடிவிற்குப்பின் இலங்கை இராணுவத்தின் மறுவாழ்வு முகாமிலும், சிறைச்சாலையிலும் நான்கு ஆண்டுகள் இருந்து 2013- ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்துவிட்டார். சிறையில் இருந்து வெளியான பின்பு ஜெயக்குமரன் என்பவரைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட தன் வாழ்க்கைப் பதிவுகள் – விடுதலைப் புலிகள் மகளிர் பிரிவுத் தலைமை ஏற்றதும், இயக்கப் பயணத்தின் ஊடான அவரது சுயவிமர்சனங்கள் அனைத்தும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ‘தமிழினி அவர்களின் இறப்பிற்குப் பின் வெளியிடப்பட்டதால் இந்த நூலைப் பற்றி சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடிய காரணங்கள் ஏதும் இல்லை.

இந்த இரண்டு நூல்களுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அது எழுதிய இருவரும் பெண்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் எழுதிய காரணம், நோக்கம் ஒன்றாக அமைந்திருக்கிறது. அது என்ன? சமூகத்தின் மீதான அக்கறையும், பரிவும்தான்.

‘தமிழினியின்’ நூல் பிப்ரவரி 2016ல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளன. பார்த்தீனியத்தை தமிழ்நதி போரால் அலைக்கழிக்கப்பட்ட ‘வானதி’களுக்கும் ‘பரணி’களுக்கும் சமர்ப்பணம் செய்தார். தமிழினியோ ‘‘இலங்கைத் தீவில் நடந்து முடிந்த யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும்’’ என்று தொடங்குகிறார்.

எதற்காக இந்த நூலை எழுதினேன் என்பதை தமிழ்நதி இப்படிக் கூறுகிறார்.

Tamilandhi 450நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ எமது வாழ்வில் அரசியல், செல்வாக்கு செலுத்திக்கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழராகிய எங்களைப் பொறுத்தமட்டில் அரசியலையும் வாழ்வையும் பிரித்துப் பார்க்க இயலாது. இது இலக்கியங்களிலும் எதிரொலிக்கிறது.

எமது வரலாற்றறை புனைவின் மூலமோ வரலாற்று நூல் வழியோ முழுமையாக எழுதிவிட முடியாது. அவரவர் கண்ட சம்பவங்களையும், செவியுற்ற மற்றும் ஆராய்ந்தறிந்த செய்திகளையும் வாழ்வையும் வாதைகளையும் அவரவர் புரிதலுடனும் பார்வையுடனும் எழுதிச் செல்கிறோம். எழுதப்பட்டவற்றிலிருந்து உண்மையை பிரித்தோ கோர்த்தோ கண்டடைவது வாசகரின் ஒட்டுமொத்தமான வாசிப்பு மற்றும் தேடலைச் சார்ந்தது.

1983-1990 காலப் பகுதியில், நேர்முகமாக நாம் கண்டதை, அனுபவித்ததை, உய்த்து உணர்ந்ததை, கேட்டறிந்ததை எனது பார்வையில் நாவலாக எழுதியிருக்கிறேன். மனச்சாய்வுகளை, பக்கச் சார்பின் பள்ளங்களை உண்மையைக் கொண்டு நிரப்பும் கடமை அரசியல் வரலாற்றினைத் தொட்டெழுதும் படைப்பாளிக்கு உள்ளது எனும் பிரக்ஞையோடே இதை எழுதினேன். புனைவிலக்கியத்தில் அத்தகைய பிரக்ஞை நிலை, கலையின் இயல்பான ஓட்டத்திற்கு எதிரானது என்று சிலர் கூறக்கூடும். அரசியல் புதினங்களில் வரலாறு குறித்த பிரக்ஞையோடு இயங்கவில்லையெனில், அதுவும் கலைக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய நேர்மைக்கு எதிர்த்திசையில் செல்லக் கூடியதே.

இரண்டு தனிமனிதர்களுக்கிடையே உறவில், சமூகத்தின் அரசியல் சூழல் எங்கனம் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்நாவல் இயங்குகிறது. இந்த நாவல், தன் மண்ணையும் மக்களையும் நேசித்த ஒர போராளிக்கும், அவனை நேசித்த காரணத்தால் அலைவுகளுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்குமிடையில் நிகழ்ந்த கதை இது.

அமைதிப்படை என்ற அடைமொழியோடு உள்நுழைந்த இந்தியப்படை ஈழமண்ணில் ஆடிய கோரதாண்டவத்தை ஈழத்தமிழர்கள் மரணபரியந்தம் மறக்கமாட்டார்கள். ‘அநாதரட்சகர்கள்’ எங்கனம் ஆட்கொல்லிகளாக மாறினார்கள் என்பதை இந்தப் படைப்பு அனுமதித்த அளவுக்கு பதிவு செய்திருக்கிறேனென்றே நம்புகிறேன்.

தமிழனியின் முன்னுடையில் அவர் இப்படிச் சொல்கிறார்.

எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளையும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன். இது முழுமையான வரலாறு எனக் கூற முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்படவில்லை. இருப்பினும் நினைவழியாகத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.

எதற்காக இதனை எழத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக் கொண்டேன். ஒரே பதில் தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட போராட்டம். இலட்சோபலட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிச் பூச்சியமானது? உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.

போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன். நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம். இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது. எதையுமே நம்பாதவர்களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப் போகிறவர்களாக யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாக பின்னடித்துப் போகிறார்கள். முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது

எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை. இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன். இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக்கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக்கூடாது.   எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்து போக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவி்ல்லை.

கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கியமான, வெற்றிகாரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாக சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன். எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக் காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.

‘‘எதற்காக இதனை எழுதவேண்டும் –

‘‘எந்த ஓர் உயிரினம்…..

‘‘கடந்த காலத்தின் பாடங்கள் மீண்டும் இந்த இடத்தில் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். தமிழினி அவர்களின் மறைவுக்குப்பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்நூல் அவரது கடைசி யுத்தம் பற்றிய விமர்சனங்கள் எனக்குள் பலக் கேள்விகளை எழுப்பின. முற்று முழுதாக இது புலிகளின் யுத்த முறை மற்றும் அமைப்புச் சார்ந்த குளறுபடிகளின் வீழ்ச்சி என்பது போன்ற ஒரு சித்தரிப்பு காணப்படுகிறது. குண்டுமலையில் எரியும் ஊர்கள், மலைப் போல் குவியும் சிதறிய உடல்கள், மனித ஓலங்கள், இதழ்கள், ஆதரவற்ற அழுகுரல்கள் இவற்றுக்கிடையே நடக்கும் நம்பிக்கையற்ற போரில் அவரது சிந்தனை ஓட்டம் சுயவிமர்சனத்திலேயே நின்று, புறக்காரணிகளைப் பார்க்க வெறுத்திருக்கலாம். ஆனால் எந்த இடத்திலும் ‘கருணா’வின் செயல்பாடுகள் பற்றியும், அதுவரை நடந்த எந்த போரிலும் உள்நுழைந்து அழிப்பதற்கான வழியைக் கண்டறிய முடியாத இலங்கை இராணுவம் புலிகளின் தங்கு நிலைகளையும், காடுகளின் ஊடே ஊருக்குள் வரும் வழிகளையும் தெளிவாக கையாண்டு உள்நுழைந்த சாத்தியக்கூறு பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்படவில்லை. அதுபற்றி விளக்கம் கூற அவர் உயிருடன் இல்லை. எனவே அந்த எச்சரிக்கையுடன் தான் இந்த விமர்சனத்தை முன் வைக்கிறேன்.

‘பார்த்தீனியம்’ நூலிலும் கூட எனக்கு விமர்சனம் உண்டு. இந்த இராணுவம் நடத்திய தாக்குதல்கள் அதனால் அழைக்கழிந்த மக்கள் வாழ்வு இவற்றையெல்லாம் மனம் வலிக்கச் சொல்லும் ‘தமிழ்நதி’ அவர்கள் ஈழமண்ணில் விளைந்த பார்த்தீனியம் எனும் எழுதி பரவும் ஒரு விசச்செடி இந்தியாவிலிருந்து வந்ததுதான் என்பார். ஈழத்தமிழரின் வாழ்வியலில் மண்டிக் கிடக்கும் பார்த்தீனியச் செடிகள் இந்தியாவிலிருந்து சென்றவை அல்ல. நமது பாரம்பரியம் பெருமைகள் பண்பாட்டு வரலாறுகள் என அவற்றின் மூலங்கள் எங்கோ வேர்ப்பிடித்திருக்கின்றன என்பதே சரியாக இருக்கும். இவை என் கருத்துகள்.

இந்த இரண்டு நூல்களிலும் காணப்படும் பொதுவான அம்சங்கள் இரண்டு. முதலாவது இதை எழுதிய பெண்களின் நேர்மை. இரண்டாவது தங்கள் மண் மீதும் மக்கள் மீதும் தங்களது இயற்கை வளங்கள் மீதும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள அசைக்க முடியாத அன்பு.

நேர்காணல் தொடரும்.

Pin It