கருத்துரிமைக்கு தடை போட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய ‘பார்ப்பனிய பாசிஸ்டுகள்’ அல்ல நாம். இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்ற ஆபத்தான மக்கள் விரோத அரசியலை கருத்தியல் தளத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று நம்புகிற பெரியாரிஸ்டுகள்; ஆனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.
50 இடங்களில் தனது பேரணியை நடத்துவதற்கு காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கு உயர்நிதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதும் கருத்துரிமை என்ற எல்லைகளைத் தகர்க்கக் கூடிய அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.
காந்தி கொலையில் தங்களுக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். வாதாடலாம். ஆனால் அவர்களின் இந்துராஷ்டிர சித்தாந்தமே காந்தி கொலைக்கு அடிப்படை என்பதை அவர்களால் மறுக்க முடியாது. காந்தி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களில் ‘சட்ட விரோத அமைப்பு’ என்று அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அன்றைய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது (பிப்.4, 1948). காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டு நாட்களில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார் (பிப். 1, 1948). 6 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார் (ஆக. 5, 1948). தடை செய்யப்பட்டதற்கு அரசு முன் வைத்த காரணங்களை தடையாணை தெளிவாக்குகிறது. (1) ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல பகுதிகளில் திருட்டு, தீ வைப்பு, கொள்ளை, கொலை போன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். (2) சட்ட விரோதமாக வெடி மருந்துகளையும், ஆயுதங்களையும் சேகரித்து வருகின்றனர். (3) போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு எதிராக சதி செய்யும் தகவல்கள் வந்துள்ளன என்பதே தடைக்கான காரணம்.
இவ்வளவு குற்றச்சாட்டுக்குப் பிறகு அரசு எவ்வித நிபந்தனையுமின்றி தடையை நீக்கி விட்டார்களே (1949, ஜுலை 11) என்று ஆர்.எஸ்.எஸ். தங்களை உத்தம புத்திரர்களாக அகிம்சாவாதிகளாகக் காட்டுவதற்கு வாதங்களை அடுக்குகிறது. அது உண்மைக்கு மாறானது. ஆர்.எஸ்.எஸ். தங்கள் மீது கருணை காட்டி மன்னிக்குமாறு கடிதங்களை எழுதி தொடர்ந்து அழுத்தம் தந்ததாலும், தடை நீடிக்கும் வரை ஆர்.எஸ்.எஸ்.சைக் கலைத்து விடுகிறோம் என்று அரசுக்கு உறுதி தந்ததாலும் தான் கடும் நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. இந்தக் கடிதப் போக்குவரத்துகள் எழுத்துப்பூர்வ ஆதாரங்களுடன் இருக்கின்றன. மதவாதத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த பட்டேல், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஓரளவு சார்பாகவும் நேரு கடும் எதிர்ப்பாளராகவும் இருந்தனர். பட்டேல் கோல்வாக்கருக்கு எழுதிய கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ்.சும் அதை ஏற்றுக் கொண்டது. அதற்கு பதில் கடிதம் எழுதிய கோல்வாக்கர், காங்கிரசின் அரசியல் சேவையை விண்ணை முட்ட புகழ்ந்தார். “ஆர்.எஸ்.எஸ். எப்போதும் காங்கிரசுடன் நேசமாகவே இருக்கும். இரண்டும் புனிதமான சங்கமத்தில் இணைய வேண்டும்” என்று எழுதினார்.
பட்டேலுக்கு மோடி ஏன் சிலை வைக்கிறார் என்பதற்கும் நேருவின் குடும்பம் இவர்களுக்கு ஏன் கசக்கிறது என்பதற்கும் இதுவே அடிப்படைக் காரணம். காங்கிரஸ் எதிர்ப்பாளர்களாக வீரம் பேசும் சங்கிகளின் வரலாறு இப்படி கூனிக் குறுகிக் கிடந்ததுதான்.
காந்தி கொலை பற்றி 20 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நடத்திய நீதிபதி ஜே.எஸ்.கபூர் ஆணையம் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதாக ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். உண்மையில் ஆணையத்தின் விசாரணை வரம்புகளை நிர்ணயித்த உள்துறை அமைச்சகம் இதில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்து விசாரிக்கும் பகுதியை அதன் வரம்பிலிருந்தே நீக்கி விட்டார்கள்.
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, தாங்கள் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றும் காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லை என்று அத்வானி கூறுவது கோழைத்தனம் என்றும் வெளிப்படையாகவே நூல் எழுதினார்.
காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இவ்வளவு நெருக்கமான தொடர்புகள் வரலாற்று சாட்சியங்களாக நிற்கும்போது காந்தி பிறந்த நாளிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நீதிமன்றம் அனுமதிப்பது தேசத் தந்தைக்குக் காட்டும் மரியாதையா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது!
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் சமூக நல்லிணக்கப் பேரணியை அக்.2இல் நடத்த முன் வந்திருப்பதும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் பங்கேற்க முன் வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. திராவிடர் விடுதலைக் கழகமும் இந்தப் பேரணியில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்