பா.ஜ.க.வின் தலைவர் தமிழ் நாட்டிற்கு வந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95% முடிந்து விட்டது என்று அவர் கூறினார். அது எப்படி நடந்தது? என்று நமக்கே தெரியாமல் என்று வியப்படைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்க தாக்கூர், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சு.வெங்கடேசன் ஆகியோர் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே, வெறும் வெட்டவெளிக் காடாகத்தான் இருந்தது. இது மருத்துவமனைக்கான இடம் என்று நடப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் கூட காணாமல் போய்விட்டது. ஆனால், ஜே.பி. நட்டா 95% பணிகள் நிறைவடைந்துவிட்டது என்று கூறியவுடன் ஒரு வியப்பாக போய்விட்டது. அதற்கான திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டு நிதிக்கும், ஒன்றிய- அமைச்சரவை இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை. டென்டர்களும் கோரவில்லை. ஆனால், மருத்துவமனையில் 95% கட்டப்பட்டு விட்டது என்று கூறினால், இவர் எங்கிருந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தான் வியப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிற திமுகவினர், படிக்காதவர்கள், கல்வி யறிவு இல்லாதவர்கள் என்று அவர் பேசி யிருக்கிறார். ஆனால் படித்த ஜே.பி. நட்டாவிற்கு மட்டும் கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை 95ரூ கட்டியதாக அவரது “மாயப் புலன்களுக்குத்” தெரிந்திருக்கிறது போலும்.

வடிவேலுடைய நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. “நான் கடவுளைக் காட்டப் போகிறேன் கடவுளைப் பார்க்க ரூ.2000/-” என்று அனைவரிடமும் கல்லா கட்டுவார் வடிவேலு. பணத்தைக் கொடுத்தவர்கள் அனைவரும் கடவுளைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் போது ஒரு மலையடி வாரத்திற்கு அனைவரையும் அழைப்பார். பெரும் திரளாகக் கூட்டம் அங்கே கூடியிருக்கும். ‘கடவுள் வரப் போகிறார், வரப் போகிறார்’ என்று வடிவேலு அறிவித்துக் கொண்டே இருப்பார். கடவுள் வரமாட்டார். கடவுளைக் காணோமே என்று கூட்டத்தில் சலசலப்பு எழும்; திடீரென்று மலை உச்சியின் மேல், “அதோ பார் தெரிகிறார் கடவுள், உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று வடிவேலு கேட்பார். ஒன்றும் தெரிய வில்லையே என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு வெடியைக் கொளுத்திப் போடுவார், “பத்தினி களுக்குப் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் கடவுள் தெரிவார்” என்று சொன்னவுடன் அத்தனைக் கூட்டமும், “ஆமாம், ஆமாம் தெரிகிறார் கடவுள், கடவுள் தெரிகிறார்” என்று கூறிவிட்டு, ‘நாம் தெரியாது என்று கூறினால் நம் பிறப்பையே சந்தேகப்பட்டு விடுவார்கள் நமக்கு ஏன் வம்பு’ என்று கூறிவிட்டு கூட்டம் கலைந்து போய்விடும்.

தமிழ்நாட்டில் கல்வி கற்காதவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிற நட்டாவினுடைய அறிவாளி ஞானி கண்களுக்கு மட்டும் தான் வெற்று மைதானத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இருப்பது தெரியும் போல. இப்படி எல்லாம் கேவலமான அரசியல் நடத்தும் நிலைக்கு ‘சனாதானம்’ வந்து நிற்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It