தஞ்சை மாவட்டத்தில்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது.

ஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர் களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.

பார்ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன இந்து மதத்தையும் எதிர்க்காமல் தங்களுக்கு கிழே உள்ள பஞ்சமர்கள் எனக் கூறப்படும் எளிய உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்களின் ஜாதிய மேலாண்மையை நிலை நிறுத்த, தொடக்கூடாத ஜாதி, புலங்க கூடாத ஜாதி என அம்மக்களை அடிமைப் படுத்துவதும் பார்ப்பனீய நச்சு சிந்தனைகளை தங்களின் மூளையில் விலங்காக  போட்டிருப்பதன் விளைவாகும்.

மூளையில் போடப்பட்ட இத்தகைய அடிமை விலங்கை உடைத்து மக்களிடையே சமத்துவத்தை கொண்டு வரத்தான் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள்.  பஞ்சமர்பட்டம் ஒழியாமல் சூத்திரர் பட்டம் போகாது என்றார் பெரியார்.  சாதி ஒழிப்பு தான் நம் சமூகத்திற்கு விடுதலையை பெற்று தரும் என்றார் பெரியார்.

ஜாதிய தலைவர்கள் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஜாதிய உணர்வை தூண்டி விட்டு அதில் சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.  நவீன மனுவாதிகளான இவர்களால் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பேராபத்துகள், வன் கொடுமைகள் தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டு நிகழ்த்த படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அருகில் உள்ள உத்தமதானி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக் கிராமத்திலேயே வசிக்கும்  இடைநிலை ஜாதியினரான சில சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்திற்காக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கங்களில் பொறுப்புகளை வாங்குவதற்கு ஜாதிய ஒடுக்கு முறைகளை, தீண்டாமை வன் கொடுமைகளை, கலவரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

உத்தமதானி கிராமத்தில் மொத்தமாக 200 குடும்பங்கள் உள்ளன. அதில் 90 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலத்தெருவிலும், வடக்குத் தெருவிலும் வசிக்கின்றனர்.  110 வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்கள் குடியானவத் தெருவில் வசிக்கின்றனர்.  இரு சமூகத்து மக்களுக்கும் பொதுவாக இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் வழிபாட்டில் தான் முதலில் பிரச்சனை 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது.  தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, சேரி பகுதிக்குள் வந்த சாமி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியது என தீண்டாமை தன் கோர முகத்தை காட்ட தொடங்கியது.

பாதிக்கப்பட்ட மக்கள் அப்போது பெரியாரிய போராளி தோழர். குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலினிடம் முறையிட்டனர்.  அவரும் உத்தமதானி கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை  நடத்தினர்.

பின்பு, ஆர்.பி.எஸ். ஸ்டாலின், 1978 ஆம் ஆண்டு வழக்கறிஞர் இலட்சுமிபதி மூலம் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  நீதிமன்றம் சாமி ஊர்வலத்திற்கு தடைவிதித்துவிட்டது.  இதை மனதில் வைத்துக்கொண்டு 1990களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டது.  அப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குடந்தை ஆர்.பி.எஸ் ஸ்டாலின் களத்தில் நின்று போராடி அம்மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினர் தங்களது கோர முகத்தை காட்ட தொடங்கினர்.

கடந்த 27.03.2016 அன்று 90 வயது உடைய முதியவரான உருளாக்கு என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் மரணமடைந்துவிட்டார். உத்தமதானியிலும் இரட்டை சுடுகாடு அவலம் உள்ளது. அம்முதியவரின் இறுதி ஊர்வலத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மேளம் அடிக்க கூடாது, ஊர்வலத்தில் பூக்கள் போடக்கூடாது.  மேலும் எங்களது பகுதிவழியே உடலை எடுத்து செல்லக் கூடாது என பாமக வை சேர்ந்த தினேசு, பாலச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பிரச்சனை செய்து இடுகாட்டிற்கு சென்று திரும்பும் போது தாழ்த்தப்பட்ட மக்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இக் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் செல்லம்மாள், காந்தி உள்பட 8 பெண்கள் படுகாயமுற்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கும்பகோணம் தாலுக்கா காவல் துறையினரிடம் கலவரத்திற்கு காரணமான தினேசு, பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொன்னார்கள்.  புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்தரப்பிலும் ஒரு பொய்யான புகாரை வாங்கி இரு தரப்பு மீதும் வழக்கு போட்டு பாமக வை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மூவரை கைது செய்து ஒருதலைபட்சமாக சிறையில் அடைத்தனர்.

கலவரம் செய்தவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் வழக்கம் போல் காவல்துறை நடந்து கொண்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக உத்தமதானி கிராமத்தில் உள்ள மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுப்பது, வயல் வேலைகளுக்கு செல்லும் பெண்களிடம் தகராறு செய்வது, சோழபுரம் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவிகளான தேவி, சினேகா ஆகியோரை பள்ளிக்கு சென்று திரும்பும்  வழியில் அவர்களை ஜாதி பெயரை சொல்லித் திட்டுவது, வரம்பு மீறி நடந்துகொள்வது வேலைக்குச் செல்லும் ஆண்களிடம் தகராறு செய்வது என ஜாதிய  ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை திட்டமிட்டு அரங்கேற்ற தொடங்கினர்.  இடைநிலை ஜாதியை சார்ந்த சில சமூக விரோதிகள்.

இதனை காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் தட்டி கேட்ட போது கடந்த 04.05.2016 அன்று காலையில்  தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் ஆண்கள் இல்லாத சமயத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு அம் மக்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தினர்.

இதனை கண்டித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் தங்கள் உடல் மீது மண்ணெய் ஊற்றிக்கொண்டு மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம், காவல்துறைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.  ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே மீண்டும் வழக்குகள் போடப்பட்டது காவல் துறையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயல்பட்டது.

இதன் மூலம் ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே செயல்படுகின்றனர்.

இக்கொடுமைகள் குறித்து சம்பந்தப்பட்ட உத்தமதானி கிராமத்தில் வசிக்கும் திராவிடர் விடுதலைக்கழக ஆதர வாளர்கள் விஜயபாரதி, ஜெயபாரதி, மற்றும் முருகேசன், அன்பரசன், ஜெயராஜ் ஆகியோர் 17.10.2016 அன்று நாச்சியார் கோவில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்திற்காக கும்பகோணம் வருகை தந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை நேரில் சந்தித்து உத்தமதானி கிராமத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் 18.10.2016 அன்று காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட உத்தமதானி கிராமத்திற்கு நேரில் சென்றார்.  கழகத் தலைவருடன் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, கார்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

உத்மதானி கிராமக் கமிட்டி தலைவர் ஜெகநாதன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 200 பேர் கழக தலைவரிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டனர்.

உத்தமதானி கிராமத்திற்கு நேரில் வந்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித்  தலைவர் குடந்தை அரசன் கழகத் தலைவரை சந்தித்து பிரச்சனைகள் குறித்து கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கழகத் தலைவரிடம் வைத்தனர்.

தாழ்த்தப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை போட்ட பொய் வழக்குகளை காவல் துறை திரும்ப பெற வேண்டும்.   தங்களின் உயிருக்கும், உடமைக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் பா.ம.க.வை சார்ந்த தினேசு, பாலசந்திரன், பிரபாகரன் மீது காவல்துறை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு அரசு வழங்க  வேண்டும், இரட்டை சுடுகாடு முறையை ஒழித்து சமத்துவமயானம் அமைக்க வேண்டும், அது போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட மானிய நிலங்களை ஆக்ரமித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்நிலங்களை அம்மக்களுக்கே அளிக்க வேண்டும் என்று கூறினர்.

இக்கோரிக்கைகளுக்கும், இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும், காவல் துறையினரின் ஒரு தலைபட்சமான நியாயமற்ற நடவடிக்கைகளை தடுத்திடவும் திராவிடர் விடுதலைக் கழகம் என்றும் உங்களுக்காக போராடும் என கழகத் தலைவர்  கொளத்தூர் மணி அம்மக்களிடம் உறுதியளித்தார்.

கழகத் தலைவர் இக்கோரிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக உடனடியாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பபாளர் மகேசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக் குறித்து நேரில் சந்திக்க உங்கள் அலுவலகத்திற்கு உடனடியாக வருவதாக தகவல் தெரிவித்தார்.

பின்பு உடனடியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசனும், பாதிக்கப்பட்டட மக்களின் சார்பில் கழக ஆதரவாளர்களான விஜயபாரதி மற்றும் ஜெயபாரதி தலைமையில் 10 பேரும் தஞ்சைக்கு சென்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேசை நேரில் சென்று இப் பிரச்சினையின் தன்மை குறித்தும், சமூக விரோதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்க கோரியும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்ப பெற வலி யுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தினர்.

உண்மை நிலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேசு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பிரச்சனை குறித்து 20ந்தேதி அமைதிக் கூட்டத்தை கூட்டுவதாகவும் கழகத் தலைவரிடம் உறுதி அளித்தார்.

தந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக் களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சமரசமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி தீர்வை பெற்று தரும் என்பதற்கு உத்தமதானி கிராமமே ஒரு சாட்சி ஆகும்.

செய்தி : மன்னை காளிதாசு

Pin It