ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று தான் கூற வேண்டும். மனித உரிமையாளர்களுக்கு சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் வழியாக பல செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, பேரறிவாளன் விடுதலைக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டதோ அத்தனை காரணங்களும் ஏனைய 6 பேருக்கும் அப்படியே பொருந்தும் என்பது ஒன்றாகும். இரண்டாவது தமிழக அமைச்சரவையின் முடிவு தான் இறுதியானது. அதை ஆளுநர்கள் கிடப்பில் போடுவதால் தடுத்து விட முடியாது, என்று மாநில உரிமையும் இதில் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இது ஆளுநர் சண்டித்தனத்திற்கு கிடைத்த சரியான ஒரு பதிலடி. மூன்று, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு விட்டார். எனவே அமைச்சரவையின் முடிவும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்த வழக்கும் ஏழு பேருக்கும் தான் என்பதால் ஏனைய 6 பேருக்கும் அது பொருந்தக் கூடியது தான் என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. மற்றொன்று அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வராது என்று ஒன்றிய அரசினுடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கே வரவில்லை. நீதி மன்றத்திற்கு ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் ஒன்றிய அரசு இவர்களை விடுதலையை மறுத்த நிலையிலும் அந்த கருத்துக்களை முற்றாக புறம் தள்ளிவிட்டு உச்சநீதிமன்றம் இந்த 6 பேரையும் விடுதலை செய்து இருக்கிறது.
இறுதியாக நாம் சுட்டிக்காட்டுவது பேரறிவாளன் தனக்கான விடுதலை மட்டும் மனு போட்ட போது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது. ஏன் அனைவருக்குமான விடுதலைக்காக சேர்த்து போராடவில்லை என்பதே அந்த விமர்சனம். அப்போது பேரறிவாளன் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்து பேரறிவாளன் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிற காரணத்தினால் அதை காரணம் காட்டி அவர் விடுதலை பெற்று விட்டால் அதை வைத்து 6 பேர் விடுதலையை எளிதாக வென்று விடலாம் என்பதாகும். அந்த காரணம் எவ்வளவு சரியானது, நியாயமானது என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆக தமிழ்நாட்டு உரிமைக்கு மாநில உரிமைக்கு தமிழர்கள் உரிமைக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி. நவம்பர் 11, 2022 தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்.
- விடுதலை இராசேந்திரன்